கிருபனின் கமலி – 19 ( இறுதி அத்தியாயம் )

அத்தியாயம் 19

துளசியின் திருமணம் முடிந்து இரண்டு நாட்களாயிற்று. இந்த இரண்டு நாட்களும் கமலியைப் பார்க்க கிருபன் வரவில்லை; அவளுக்கு அழைக்கவும் இல்லை. அன்றைக்கு, கூட்டிக்கொண்டு வந்து இறக்கி விட்டதோடு சரி. அவ்வளவு கோபமா? அந்தளவுக்கு அவளோடு கோபித்துக்கொண்டு இருக்க அவனால் முடிகிறதா?

கமலிக்குள் கோபம் ஒன்று மளமளவென்று வளர ஆரம்பித்திருந்தது.

அன்று, வேலை முடிந்ததும் நேராகச் சென்று, அவன் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். சற்று நேரத்தில், அவனும் வந்து திறந்தான். கைகளைக் கட்டிக்கொண்டு கதவு நிலையில் சாய்ந்து நின்று இருந்தவள், அவனையே ஒருமுறை முழுமையாகப் பார்த்தாள்.

அவ்வளவு தான். வந்தது போலவே திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

கிருபனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஏன் வந்தாள்? திரும்பி ஏன் போகிறாள்? அப்படி, அவன் குழம்பி நின்றது ஒரு நொடி தான். காரணம் பிடிபட்டதும் மனதெங்கும் மத்தாப்பு. அவள் மீதிருந்த மனச்சுணக்கம் போன இடம் தெரியவில்லை. முகம் முழுவதும் விரிந்த புன்னகையோடு ஓடிப்போய், அவளை மறித்துக்கொண்டு அவள் முன்னே நின்றான்.

அவனைச் சுற்றிக்கொண்டு போக முயன்றாள், கமலி. அவனும் விடவில்லை. அவள் நகர்கிற பக்கமெல்லாம் தானும் நகர்ந்து தடுத்தான்.

“வழிய விடுங்க!” கோபத்தை அடக்கிச் சீறினாள்.

அவளின் அந்தக் கோபம் அவனை வசீகரித்தது. “வீட்ட வந்திட்டுப் போ!” என்றான், சின்ன முறுவலோடு.

அவனுடைய அந்தச் சிரிப்பு, அவள் கோபத்தை இன்னுமே விசிறி விட்டது. “உங்கள வழிய விடச் சொன்னனான்!” என்று, வார்த்தைகளைக் கடித்துத் துப்பினாள்.

“இவ்வளவு தூரம் வந்திட்டு ஒரு தேத்தண்ணி கூடக் குடிக்காமப் போவியா? ப்ளீஸ் வா!” அவள் கையைப் பற்றிக் கெஞ்சலாக அழைத்தான்.

அவன் பற்றிய வேகத்திலேயே கையைப் பறித்துக் கொண்டு, அவன் நெஞ்சில் பிடித்துத் தள்ளிவிட்டாள், கமலி.

“என்ன, ஒண்டுமே நடக்காத மாதிரி நடிக்கிறீங்களா? ஒழுங்கு மரியாதையாத் தள்ளி நில்லுங்க. இல்ல, என்ன செய்வன் எண்டு எனக்கே தெரியாது!” விரல் நீட்டி எச்சரித்தவளின் முகம், சிவப்பு மிளகாயைப் போன்று கோபத்தில் சிவந்திருந்தது.

இரண்டு நாட்களாக எட்டியே பார்க்கவில்லை. அவளாகத் தேடி வந்த பிறகு வீட்டுக்கு வரட்டுமாம்! இதில் சிரிப்பு வேறு! அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

அதற்குமேல் யோசிக்கவில்லை, கிருபன். ஒருமுறை தங்களைச் சுற்றி விழிகளைச் சுழற்றினான். யாருமில்லை என்றதும், அவளை அப்படியே அள்ளிக்கொண்டு வீட்டுக்கு நடந்தான்.

நொடி நேரம் திகைத்து, “கிருபன்! என்ன செய்றீங்க? விடுங்க!” என்று, விடுபட முயன்றவளின் மறுப்பும் திமிறலும் அவனிடம் எடுபடவே இல்லை.

வீட்டுக்குள் சென்று தான் இறக்கி விட்டான். அதே வேகத்தோடு, வீட்டுக் கதவையும் சாற்றித் தாளிட்டான். அவள் திறக்கப் போக, அதற்கு விடாமல், அவளைப் பற்றித் தனக்குள் கொண்டு வந்து, “ஏன் இவ்வளவு கோபம்?” என்றான், இதமான குரலில்.

“கோவமா? உங்களக் கொல்லுற ஆத்திரம் எனக்கு! தள்ளுங்க!”

“தாராளமாக் கொல்லு. ஆனா, என்னோடயே இருந்து கொல்லு. விலகிப் போகாத.”

அவன் பேச்சில் கனியப் பார்த்த மனதை இறுக்கிக் பிடித்துக்கொண்டு, “இப்பிடிச் சொல்லுறவர் தான் ரெண்டு நாளாத் திரும்பியும் பாக்காம இருந்தீங்களா? அப்பிடி என்ன கோபம்? உங்களுக்குப் பின்னால என்னை அலைய வைக்கோணும் எண்டு ஆசையா?” என்றாள் கோபத்தோடு.

அவன் உதட்டில் மென் முறுவல். “அப்பிடி நினைக்கேல்ல. ஆனா, அப்பிடி நடக்கேக்க சந்தோசமா இருக்கு. இவ்வளவு காலமும் நானாத் தான் எல்லாரையும் தேடிப்போய்ப் பழகுவன். எனக்கும் நாலு பேர் வேணும் எண்டு நினைச்சுச் சமாளிச்சுப் போவன். கோவப்பட மாட்டன். ஆனா இண்டைக்கு, என்ர கோபத்துக்கும் பெறுமதி இருக்கு, என்னைத் தேடியும் ஒருத்தி வாறாள், நான் இல்லாம அவளால இருக்கேலாது, அவளுக்கு நான் முக்கியம் எண்டுறது, எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமா? அடிக்கடி இப்பிடிக் கோபப்பட்டு, உன்ன எனக்குப் பின்னால சுத்த வைக்க ஆசையா இருக்கு.” என்றான், அவள் முகம் முழுவதிலும் முத்தமிட்டபடி.

அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள், கமலி. “ஓ! அலைய வைப்பீங்களோ? அவ்வளவு தைரியம்? இனி இப்பிடிச் செய்து பாருங்க, திரும்பியும் பாக்க மாட்டன்!”

அவன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. “சரி.” என்றான் சிரிப்புடன்.

“உங்கள! நான் கோவமா இருக்கிறன். சமாதானப் படுத்துவம் எண்டு இல்ல. சிரிக்கிறீங்க?”

“நீ கிட்ட வந்தாத் தானே நான் சமாதானப் படுத்த?”
கள்ளச் சிரிப்புடன் சொன்னவனின் வாயிலேயே ஒன்று போட்டாள், கமலி.

“எனக்கு விளக்கம் வேணும். வாயால.”

“அதத்தான் தருவம் எண்டு பாக்கிறன். நீ விடுறாய் இல்லையே!” அவன் கண்கள் சிரித்தது.

“நீங்க ஒண்டும் தரவேண்டாம். கேக்கிற கேள்விக்கு மட்டும் பதிலச் சொல்லுங்க! உங்களுக்கு என்ன கோபம்? அனுப்பின மெசேஜுக்கு கூடப் பதில் போடாம இருக்கிற அளவுக்கு.”

“கோவம் எண்டுறதை விட ஒரு மாதிரிச் சங்கடமா இருந்தது. குடுத்த காச எல்லாருக்கும் முன்னால சொல்லி என்னவோ தம்பட்டம் அடிச்ச மாதிரி வெக்கமா போயிட்டுது. அதைவிட, மேடைல வச்சு மாமாட்ட அப்பிடியெல்லாம் நீ கதைச்சிருக்கக் கூடாது கமலி. ” அவ்வளவு நேரமாக, அவள் தன்னைத் தேடி வந்ததில் இருந்த குதூகலம் வடியச் சொன்னான்.

இப்போது, அவள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக, “என்னை ஆராவது கேவலப் படுத்தினா என்ன செய்வீங்க?” என்று, நிதானமாக வினவினாள்.

பதில் சொல்லாமல், இதென்ன கேள்வி என்பதுபோல் பார்த்தான், அவன்.

“அண்டைக்கு அந்த அவன், ரோட்டில வச்சுக் கதைச்ச நேரம் எனக்காக ஏன் வந்தனீங்க கிருபன்? பேசாமப் போயிருக்க வேண்டியது தானே?”

“என்ன விசர்க் கேள்வி கேக்கிறாய்? உனக்கு ஒண்டு எண்டு தெரிஞ்ச பிறகும் வராம இருப்பனா?” என்று, திருப்பிக் கேட்டான், அவன்.

“அப்ப, உங்களுக்கு ஒண்டு எண்டா நான் கதைக்காம வேற ஆர் கதைக்கிறது?”

பார்வை அவள் முகத்தில் நிலைக்க, “அப்பிடி அங்க என்ன நடந்தது?” என்று, வினவினான்.

“ஒண்டும் நடக்கேல்ல. ஆனா, அவர் கவனம் எடுத்து உங்கள ஒதுக்கினத எனக்குப் பாக்கேலாம இருந்தது.”

இதற்குத் தானா என்பதுபோல் மெலிதாகச் சிரித்தான், அவன். “இதெல்லாம் எப்பவுமே நடக்கிறது தான்.” சாதாரணமாக உரைத்தான்.

“அதுதான், நீங்க கோபப்பட்டாலும் பரவாயில்ல எண்டு சொன்னனான்.” என்றாள், அவள்.

“நான் கதைச்சது சரியா எண்டு எனக்குத் தெரியாது, கிருபன். ஆனா, வளத்து ஆளாக்கிவிட்டது அவர் எண்டுறதுக்காக நீங்க இதையெல்லாம் கடந்து வரலாம். உங்கட வலியக் காட்டாம மறைக்கலாம். என்னால ஏலாது. எனக்கு என்ர கிருபன் முக்கியம். அவரின்ர சந்தோசமும் நிம்மதியும் எனக்கு வேணும்.”

கிருபனுக்கு வார்த்தைகளே வரமாட்டேன் என்றது. அவனுடைய அன்னையும் இப்படித்தானே. எப்போதும் அவனுக்காகவே நிற்பார். அவனைப் பற்றியே தான் யோசிப்பார். ஒரு நேச முறுவலோடு, அவள் முகத்தைத் தன் கைகளில் தாங்கி, “அவே என்ன செய்தாலும் பரவாயில்ல. எனக்கு நீ இருக்கிறாய். அது போதும் கமலி!” என்றவன், ஆசையோடு அவள் முகத்தையே பார்த்தான்.

சிறு முறுவலோடு என்ன என்று புருவம் உயர்த்தினாள், அவள். உதட்டில் மலர்ந்த சின்னச் சிரிப்புடன் அவள் இதழ்கள் நோக்கிக் குனிந்தான், கிருபன்.

இந்த முறை, அவள் தடுக்கவில்லை. தானும் இசைந்தாள். அவன் பிடரிக் கேசத்துக்குள் கைகளை நுழைத்துத் தன் விருப்பத்தைத் தெரிவித்தாள்.

நான்கு விழிகளும் கிறக்கத்துடன் மூடிக்கொண்டன. நொடிகள் கழிந்தன. இதயங்கள் பேசிக்கொண்டன. உள்ளங்கள் உறவாடின.

அவளை மெல்ல விடுவித்தவனின் முகத்தில் மிகுந்த நிறைவு. அதைச் சொல்கிறவனாக நெற்றியில் அழுத்தமாக இதழ்களை ஒற்றி எடுத்துவிட்டு, அவளைத் தன் மார்போடு சேர்த்தணைத்தான்.

அவன் ஆசைப்பட்டு ஏங்கிய வாழ்வு, இப்போது அவன் கைகளுக்குள். நேசத்தோடு அவள் முகம் பார்த்தான். குறும்புடன் கண்ணைச் சிமிட்டினாள், கமலி. கிருபன் சந்தோசமாகச் சிரித்தான்.

முற்றும்.

error: Alert: Content selection is disabled!!