அத்தியாயம் 2
அன்றைய மீட்டிங் முடிந்து வெளியே வந்த போது, என்னவோ சிறையிலிருந்து தப்பிய உணர்வு தான் இருவருக்கும். அந்தளவுக்கு மூளை சூடாகிப் போயிருந்தது. இரண்டு கோல்ட் கோப்பி வாங்கிக்கொண்டு வந்து, ஒன்றை அரவிந்தனிடம் நீட்டினான், கிருபன்.
“வெளில எங்கயும் போவமா மச்சி? மண்டை எல்லாம் காஞ்சு போச்சு. இவங்களுக்கு எல்லாம் ஏன் சொட்டை எண்டு இப்ப விளங்குதடா. என்ன அறுவ!” நாளைய நாளும் விடுமுறை என்பதில் அதைக் கொண்டாடும் மன நிலைக்கு வந்திருந்தான், அரவிந்தன்.
கிருபனின் எண்ணமும் அது தான். வீட்டுக்குப் போவதை நினைத்தாலே அலுப்படித்தது. “போட்டிங் போகலாம். ஆனா, மழை வரும் போல இருக்கேடா.” மெல்லிய கருமையைச் சுமந்திருந்த வானத்தைப் பார்த்தபடி சொன்னான்.
“தியேட்டருக்கு ஏதாவது புதுப் படம் வந்திருக்கா?”
அப்போது, அரவிந்தனின் கைபேசி, குறுஞ்செய்தி வந்திருப்பதை ஒலியெழுப்பி அறிவித்தது. எடுத்துப் பார்த்தான்.
‘டேய் அண்ணா, வரேக்க கோழிக் கொத்து வாங்கிக்கொண்டு வா! மறந்தியோ மண்டையிலேயே குட்டுவன்!’ என்று அனுப்பியிருந்தாள், கமலி.
“இவளுக்கு இருக்கிற திமிருக்கு!” அரவிந்தன் பல்லைக் கடிக்க, சிறு சிரிப்புடன் பார்த்தான், கிருபன்.
“ஒரே ஒரு தங்கச்சி தான்டா எனக்கு. ஆனா, அந்த ஒருத்தி ஒரு ஊருக்குச் சமன். பார், என்ன எழுதி இருக்கிறாள் எண்டு!” என்று, கைபேசியைக் காட்டினான்.
கைப்பிடிச் சுவரில் இலகுவாகச் சாய்ந்த படி, கோப்பியைப் பருகிக்கொண்டு இருந்த கிருபன், இலேசாக எட்டிப் பார்த்தான். அதில் இருப்பதைக் கண்டு, உதட்டு முறுவல் நன்றாகவே விரிந்து போயிற்று.
யார் என்றே தெரியாத அவனை, முதல் சந்திப்பிலேயே அந்த அரட்டு அரட்டியவள் கூடப் பிறந்தவனை விட்டு வைப்பாளா?
உணவையும் வெளியிலேயே முடித்தனர். அங்கிருந்து புறப்படுவதற்கு முதல், “உன்ர தங்கச்சிக்கு?” என்றான், கிருபன்.
“அவளின்ர வாய்க்குக் கொத்துத் தான் இல்லாத குறை. நான் இண்டைக்கு இரவு தான் வீட்டுக்குப் போவன். அப்ப பாப்பம். நீ உன்ர வீட்டுக்கு விடுடா. நெட்பிளிக்ஸ்ல ஏதாவது படம் பாப்பம்.” பைக்கில், கிருபனுக்குப் பின்னால் எறியபடி சொன்னான், அரவிந்தன்.
இருவரும் கிருபனின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். இப்போது, இன் பண்ணியிருந்த இருவரின் சேர்ட்டுகளும் வெளியே வந்திருந்தது. முழுக்கை அரைக் கையாக மாறியிருந்தது. விறாந்தையின் தரையில் கிடந்த மெத்தையில் ஆளுக்கொரு கோக் டின்களுடன் சரிந்து கொண்டனர். திரில், சஸ்பென்ஸ் என்று கலந்து கட்டி, வெகு சுவாரசியமாக நகர்ந்து கொண்டிருந்தது, ஆங்கிலத் திரைப்படம் ஒன்றின் திரைக்கதை. அதில் மூழ்க விடாமல் டொங்கு டொங்கு என்று, அரவிந்தனின் கைபேசியில் குறுந்தகவல்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.
“இவளோட நான் படுற பாடு இருக்கே!” பல்லைக் கடித்தபடி எடுத்துப் பார்த்தான், அரவிந்தன்.
‘அண்ணா பசிக்குது. எப்ப வருவாய்?’ என்று அனுப்பியிருந்தாள், கமலி.
இவன் பார்க்கிறான் என்று தெரிந்ததும் முகத்தைக் கையில் தாங்கி, கண்ணீர் சொட்ட சொட்டக் காத்திருக்கும் பெண் குழந்தையின் இமோஜி வந்து விழுந்தது.
கிருபனுக்குச் சிரிப்பை அடக்குவது சிரமமாயிற்று. எல்லோரையும் அழ வைக்கிற இவள் கண்ணீர் வடிக்கிறாளாமா? காரியம் சாதிக்க நாடகமாடுகிறாள் என்று நன்றாகவே புரிந்தது.
“பாரடா எப்பிடி நடிக்கிறாள் எண்டு. வீட்டுக்குப் போனன் எண்டு வை, இவ்வளவு நேரமா என்ன செய்தனி எண்டு கேட்டு, என்ர முடியைப் போட்டு ஆட்டு ஆட்டு எண்டு ஆட்டுவாள்.” என்றபடி, எழுந்து கொண்டான், அரவிந்தன்.
என்ன தான் கோபமாகப் பேசினாலும் அவள் பசி என்று சொன்னதிலேயே அவனுக்கு மனம் கசிந்து போயிற்று. உண்மையிலேயே சாப்பிடாமல் காத்திருப்பாள் என்றும் தெரியும். திரைப்படத்தை நிறுத்திவிட்டு கிருபனும் எழுந்து புறப்பட்டான்.
அவள் கேட்ட கோழிக்கொத்தோடு அவளுக்குப் பிடித்த ஐஸ்கிறீமும் வாங்கிக் கொண்டான், அரவிந்தன். அவனைக் கொண்டு போய் அவன் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு வந்தான், கிருபன். மீண்டும், படத்தைப் போட்டுக்கொண்டு மெத்தையில் விழுந்தான். மனம், அதில் லயிக்க மாட்டேன் என்றது.
ஒரு காலத்தில் அம்மா, அப்பா, அவன் என்று, அவர்களின் வாழ்க்கையும் நல்ல மாதிரித் தான் இருந்தது. ஒரு நாள், யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்குப் போன அப்பா திரும்பி வரவேயில்லை. என்ன ஆயிற்று, எங்கே போனார் என்று இவர்கள் பயந்து கொண்டு இருக்க, வீடு தேடி வந்த காவல்துறையினர், அவர் விபத்தில் காலமாகிவிட்ட செய்தியைத் தெரிவித்தனர்.
வீட்டுக்குத் திரும்பிக்கொண்டு இருந்த போது டிப்பர் மோதி, வண்டியோடு பற்றைகளுக்குள் தூக்கி எறியப்பட்டதில், அந்த விபத்து மற்றவர்களின் பார்வைக்கு வராமலேயே போயிற்று. டிப்பரும் நில்லாமல் தப்பித்து ஓடியிருக்கிறது. அவனது தந்தை காப்பாற்ற யாருமற்று, உயிருக்குப் போராடி, மரணத்தைத் தழுவியிருக்கிறார். அவர் இருந்த இடத்தைச் சுற்றி, நாய் விடாமல் குலைத்ததில் யாரோ பார்த்துத் தான் அவரைக் கண்டு பிடித்தார்களாம்.
இவனின் அன்னை பாக்கியவதிக்கு ஐந்து வயது மகனை வைத்துக் கொண்டு மறுமணம் புரிய மனமில்லை. அதில், கூடப் பிறந்த அண்ணா வசித்து வந்த கிளிநொச்சிக்கே வந்து சேர்ந்தார். அவர் தாதி என்பதில், யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி அரச வைத்தியசாலைக்கு வேலை மாற்றலையும் பெற்றுக் கொண்டார். அவர்கள் இருவரினதும் வாழ்வாதாரத்தை, தான் பார்க்கத் தேவையில்லை என்பதில், இவனது மாமாவான சோமசுந்தரமும் அவர்களை ஏற்றுக்கொண்டார்.
கணவரை இழந்திருந்த அந்த நிலையிலும் கூடப்பிறந்த தமையனின் பாதுகாப்பு மட்டுமே போதும் என்பதில் தெளிவாக இருந்தார், பாக்கியவதி. தன்னுடைய ஒற்றைக் காப்பை விற்று, சோமசுந்தரத்தின் காணியிலேயே கொட்டில் வீடு ஒன்றைப் போட்டுக்கொண்டு, தனியாகவே இருந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் இருந்த அவர்களின் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு, அதை, மகனின் பெயருக்கு சேமிப்பாகவும் மாற்றிவிட்டார். காலம் இப்படியே நகர்ந்திருந்தால் கூட, அப்பா இல்லை என்கிற ஒற்றைக் குறையோடு, அவன் வாழ்க்கை சந்தோசமாக அமைந்திருக்கும்.
அவனுடைய பதின் மூன்றாவது வயதில் பாக்கியவதிக்கு மார்புப் புற்றுநோய், அதுவும், முற்றிய நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டு, பதினான்காவது வயதில் அவரும் அவனைப் பிரிந்ததைத் தான், அவனால் தாங்கவே இயலாமல் போயிற்று.
அதன் பிறகு, மாமா வீட்டினரோடு இருந்து வளர்ந்தவனுக்குத் தினமுமே மனதில் படுவது, அந்த வீட்டுக்குத் தான் சுமை என்பது தான்.
மாமா நல்லவரா கெட்டவரா? இன்று வரை அவனுக்குத் தெரியாது. அவனை வைத்துப் பார்த்தார், உணவு தந்தார், படிக்க வைத்தார், வேலை கிடைக்கும் வரை தன்னுடனேயே வைத்துக் கொண்டார். கிடைத்த பின்னும் வெளியே போ என்று சொன்னதில்லை. ஆனாலும், தன்னைச் சுற்றி இறுக்கமான வட்டம் ஒன்றைப் போட்டுக்கொண்டு, அவனை வெளியே தான் நிறுத்தி வைத்திருந்தார்.
எதற்கும் அவரை அணுக முடியாது. அவனைப் பார்த்து எப்போதாவது சிரித்திருக்கிறாரா என்றெல்லாம் யோசித்து இருக்கிறான். நினைவே இல்லை. அவரின் இறுக்கமான நடமாட்டமே அவனது நடமாட்டத்தை அந்த வீட்டில் குறுக்கியது.

