கிருபனின் கமலி 2 – 2

அவன் உயர்தரம் வந்த போது டியூசன் போகிறாயா என்று கேட்கவில்லை. அவனும் போகப் போகிறேன் என்று சொல்லவில்லை. ஆரம்பம் வெகு சிரமமாக இருந்தாலும், பள்ளி ஆசிரியர்களைப் பிடித்துப் படித்துக் கொண்டான். மிகுதிக்குத் தன் வகுப்பிலேயே நன்றாகக் கற்பவர்களின் உதவியோடு விளங்கிக்கொண்டான்.

அதுவே, அவர்களது இரண்டு மகள்களும் உயர்தரம் வந்த போது டியூசன் சேர்த்துவிட்டனர். இதுவே, நானும் ஒரு மகனாக இருந்திருந்தால் எப்பாடு பட்டேனும் சேர்த்துத் தானே இருப்பார்கள் என்று, அந்த இளம் பிராயத்தில், நினைக்காமல் இருக்க முடிந்ததில்லை. ஆனால், தெருவில் விடாமல், தங்க ஒரு இடம், சாப்பிட உணவு, உடுக்க உடை தருவதே பெரிது என்று தேற்றிக் கொண்டான். எனக்கான படிப்பை நான் தானே படிக்கவேண்டும், எனக்கான தகுதியை நான் தானே தேடிக்கொள்ள வேண்டும் என்று, மனதில் உறுதியாக எண்ணிக் கொண்டான்.

கடைசி நாட்களில், “தம்பி, என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது. நல்லாப் படிச்சிடு. படிச்சு உன்ன நீயே பாக்கிற மாதிரி நல்ல உத்தியோகத்துக்குப் போயிடு. நல்ல நிலமையில நீ இருந்தாத் தான் உன்ன நம்பி ஒருத்தி வருவாள். சொத்துச் சேர்த்து வைக்க அப்பா இல்ல. நல்லது கெட்டது சொல்லித் தந்து வளக்க அம்மாவும் இல்லாமப் போகப்போறன். நீ நல்லவனா கெட்டவனா எண்டுறதை, நீ நடந்து கொள்ளுற முறையும் உன்ர நிலமையும் மட்டும் தான் சொல்லும். அதால, மற்றப் பிள்ளைகளை விடவும் நீ பத்து மடங்கு கவனமா இருக்கோணும், ஐயா. நீ எண்டைக்கும் நல்லா இருக்கவேணும். இது தான் என்ரயும் உன்ர அப்பான்ரையும் ஆசை. அதை நீ நிறைவேத்த வேணும்.” என்று, அன்னை சொன்னதை மந்திரமாகப் பற்றிக் கொண்டான்.

மாமாவின் பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து, அந்த வீட்டில், மீண்டும் ஒரு மாற்றம். என்ன செய்கிறான், தம் பெண்களோடு வளவளக்கிறானா என்று, அவனுடைய மாமி, நோட்டம் விடத் தொடங்கவும் கூசிப் போனான். தப்பித் தவறி அவர்கள் மூவரும் ஒரு இடத்தில் இருந்துவிட்டால் போதும். உடனேயே அகற்றி விடுவார்; பிள்ளைகளோடு வள் என்று விழுவார். சின்னவள் சற்றே குறும்புக்காரி. மச்சான் என்று அழைத்து ஏதாவது சொன்னால் போதும், இரண்டு நாட்களுக்குச் சிடுசிடுத்தே அவளை உண்டு இல்லை என்று ஆகிவிடுவார், மாமா.

எதற்கு இதெல்லாம் என்று அவர்களோடு கதைப்பதையே நிறுத்திவிட்டான், கிருபன். கூட வளர்ந்தவர்கள், ஆசையாக ஆவலாக எதையாவது சொல்ல வரும் போது, கல்லைப் போல முகத்தை வைத்துக் கொண்டு விலகிப் போவது, அவனுக்கே வருத்தத்தைத் தான் கொடுத்தது. நாளடைவில், அவர்களும் இவனை ஒதுக்க ஆரம்பித்த போது, மனதில் பெரும் துயரம். சாப்பாடு கூடக் கசக்கத் துவங்கிற்று! அதுவே, அவனை அந்த வீட்டிலிருந்து இன்னும் ஒதுக்கியது.

ஒரு வழியாகப் பள்ளி, கல்லூரி என்று முடித்து, கடவுளின் கருணையா அல்லது, அவனது அன்னை கடவுளோடு இருந்து புரியும் கருணையா தெரியாது, வேலையும் உடனேயே கிடைத்தது. வெளி உலகம் பற்றிய தெளிவும், பக்குவமும் கிடைக்க ஆரம்பித்த பிறகு, மாமா மாமி மீது, அவனுக்கு எந்தக் குறையும் இல்லை. மனவருத்தமும் இல்லை. அவர்கள் அவனுக்காற்றியது மிகப் பெரிய உதவி என்பதை மாத்திரம் பற்றிக் கொண்டான்.

வேலை கிடைத்ததும் அவர்களுக்குப் பாரமாக இராமல் வெளியே போய்விடுவோமா என்று பல முறை நினைத்திருக்கிறான். ஆனால், அவர்களின் தயவிலேயே வளர்ந்து, படித்து விட்டு, நல்ல உத்தியோகமும் சம்பளமும் கிடைத்ததும் தனியாகப் போவது சுயநலம் இல்லையா? நன்றி கெட்ட தனமாகிவிடாதா என்று, அங்கேயே இருந்தான்.

ஆனால், அவனின் அந்தத் தயக்கமும் உடையும் நாள் வந்தது.

“உனக்கு மூத்தவளுக்கு வெளில பாக்கத் தேவையில்லை. நல்ல வேலையோட இருக்கிற நல்ல பெடியன் வீட்டுலையே இருக்கிறான்.” என்று, ஒரு நாள், வீட்டுக்கு வந்த யாரோ ஒருவர் சொல்லிவிட்டார்.

“இதென்ன கதை? அதெல்லாம் நடக்காது. சொந்தத்துக்கக் கட்டிக் குடுக்கிறதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு. சேர்ந்து வளர்ந்தா சகோதரமெல்லா.” என்று, மாமா குரலை உயர்த்திச் சொன்ன விதம், அவருக்கான பதிலாக அல்லாமல் அவனுக்கான செய்தி போலிருந்ததில் குறுகிப் போனான்.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வானா? அவனை வளர்த்த அவர்களுக்கு அவனைப் பற்றித் தெரியாமல் போனதா? உறவு முறைப்படி இவன் மச்சான் என்றாலும் கூடவே வளர்ந்த சின்னப் பெண்களை, அவனால் எப்படி அப்படிப் பார்க்க முடியும்?

ஏற்கனவே ஒட்டாமல் இருந்த உறவு, அதற்குப் பிறகு, பெரும் விரிசலாகவே மாறிப் போயிற்று. இருந்தாலும், பல்லைக் கடித்தபடி இரண்டு வருடங்களாக வேலை செய்து சேமித்த பணத்தை, “துளசி, பிரியா ரெண்டு பேரின்ர கலியாணத்துக்கு இருக்கட்டும், மாமா.” என்று, அவன் கொடுத்த போது, உக்கிர மூர்த்தியாகவே மாறிப் போனார், அவர்.

“உன்ர காசுக்காகத் தான் உன்ன வச்சுப் பாத்தது எண்டு நினைச்சியோ? உன்ர வீட்டு வாடகையில கூட ஒரு ரூபா நான் தொட்டது இல்ல, பார்!” என்று, அவர் அவனது பாஸ்புக்கை கொண்டு வந்து முகத்தில் அடித்தாற்போல் போட்ட போது, அவனுக்கு மனதே விட்டுப் போயிற்று.

இனி, முடியவே முடியாது என்று ஆகிப்போனது. முழு மூச்சாக நின்று வேலையில் மாற்றலை வாங்கிக் கொண்டு, மன்னாருக்கு வந்து சேர்ந்துவிட்டான்.

ஆரம்பம் என்னவோ, அடைத்து வைத்திருந்த காற்றை எல்லாம் திறந்து விட்டது போன்று, இந்தப் பரந்த உலகில் சுதந்திரமாக உலவுவது நன்றாகத் தான் இருந்தது. நாளடைவில், ஒரு பாதுகாப்பற்ற தன்மையை மனம் உணர ஆரம்பித்தது. வெறுமை, அலுப்பு, சலிப்பு என்று ஒன்றிலும் பற்றில்லாத நிலை. ஏன் விடிகிறது? ஏன் இருள்கிறது? ஏன் வேலைக்குப் போகிறான்? ஏன் சம்பாதிக்கிறான்? எதற்குமே அர்த்தம் அற்றது போன்ற மரத்த உணர்வு.

அப்போது தான், திருமணம் செய்வோமா என்று யோசித்தான். இனி, அவனுக்கு என்று வரக் கூடிய துணை அது ஒன்று தானே.

நினைவு தெரிந்த காலம் முழுக்கத் தனித்தே வாழ்ந்துவிட்டவனின் மனது, மிகுதிக் காலம் முழுக்கத் துணையாக வரக் கூடிய ஒருத்தியைத் தேடத் தொடங்கியிருந்தது.

இதை யாரிடம் போய்ச் சொல்லுவான்? அவனே அவனுக்குப் பெண் பார்ப்பானா? மாமா அதையெல்லாம் செய்வார் என்கிற நம்பிக்கை இல்லை. அவனே அவனுக்குப் பார்ப்பது என்றாலும் எப்படி?

இப்படி, என்னென்னவோ எண்ணங்களும் சிந்தனைகளும் இலக்கற்று அலைய, அவனை அறியாமலேயே அவன் விழிகள், உறக்கத்தில் மூடிக் கொண்டன.

error: Alert: Content selection is disabled!!