அத்தியாயம் 3
அன்று சனிக்கிழமை. பொழுது போகாமல் மஃபீன்ஸ் செய்து கொண்டிருந்தாள், கமலி. கேக்குக்கான கலவையை அடித்து எடுத்து, சொக்லெட்ஸ் துருவல்களையும் சேர்த்து, மஃபின்ஸ் பேப்பர் கப்புகளுக்குள் ஒவ்வொரு மேசைக் கரண்டியாக இட்டு நிரப்பினாள்.
அவளுக்காக அரவிந்தன் வாங்கிக் கொடுத்த பேக் செய்யும் ஓவனுக்குள்(oven) வைத்து, ஓவனை 180 பாகையில் திருப்பி விட்டுவிட்டாள். பத்துத் தொடக்கம் பன்னிரண்டு நிமிடங்களில் பொங்கி, நன்றாக வெந்துவிடும் என்பதில், அங்கேயே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு, கிண்டில் ஈ ரீடரில் ஒரு நாவலை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாள்.
கிராம சேவையாளராக இருக்கும் அப்பா, வீட்டில் தங்குவதே இல்லை. அம்மா சுகுணா, வீட்டைத் துப்பரவு செய்கிறேன், சமைக்கிறேன், தோட்டத்தைக் கவனிக்கிறேன் என்று ஓடிக்கொண்டே இருப்பார். அவர்களுடைய காணியும் பின் பக்கமாகப் பெரிது என்பதில் முற்றம் கூட்ட, தென்னைகளைப் பராமரிக்க, கஞ்சல்களை ஒதுக்க, விழுகிற தேங்காய்களை விற்க என்று, அவரைப் பிடிக்கவே முடியாது. மிச்சம் சொச்சமாக இருக்கும் நேரத்தைக் கூட நீயா நானா, சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி எல்லாம் பிடித்துக் கொள்ளும்.
கிழமை நாட்களில் அரவிந்தனும் வேலை வேலை என்று ஓடிவிடுவான். அதில், பார்மசியில் வேலை புரிகிற அவள், சனி ஞாயிறுகளை வெகு ஆவலாக எதிர் பார்ப்பாள்.
அரவிந்தனோடு கேரம்போட் விளையாடுவது, எதையாவது சமைப்பது, பிள்ளையார்ப் பந்து விளையாடுவது, அயலட்டையில் இருக்கிற அவர்களின் நண்டும் சிண்டுமான நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு உடன் கிடைக்கிற கடல் மீன்களை பார்பிகியூ போடுவது என்று, அந்த இரண்டு நாட்களுமே, அண்ணன் தங்கை இருவருக்கும் வெகு சுவையாகக் கழியும்.
இப்போதெல்லாம் அது குறைந்து, அரவிந்தன் வீட்டில் நிற்கும் பொழுதுகள் சுருங்கிக் கொண்டே போயிற்று. காதலியைக் கட்டிக்கொண்டு அழுகிற காதலனைப் போல, அந்தப் புது நண்பனோடே தொங்கிக்கொண்டு அலைகிறான். அந்த எரிச்சலில் தனக்குப் பிடித்த பேக்கிங் வேலையைக் கையில் எடுத்திருந்தாள்.
சொல்லி வைத்தது போன்று, மஃபின்ஸ் வெளியே வருகையில் வீட்டுக்குள் நுழைந்தான், அரவிந்தன். “வாசமே மூக்கத் துளைக்குது. இண்டைக்கு என்ன செய்தனி?” என்று கொண்டு நேராகவே சமையலறைக்கு வந்தான்.
இருந்த சினத்தில், “தொட்டியோ கைய வெட்டுவன் சொல்லிப் போட்டன்! கொஞ்ச நேரமாவது வீட்டுல நிக்கிறியா நீ? எப்பப் பாத்தாலும் ஊரைச் சுத்துறது. அந்த எளியவன்ர வீட்டில விழுந்து கிடக்கிறது. திண்ணுறதுக்கு மட்டும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வா!” என்றவளின் பேச்சை, சட்டையே செய்யவில்லை, அவன்.
“கோபக்காரி எண்டாலும் என்ர தங்கச்சி பாசக்காரி. அவள் அண்ணனுக்குத் தராமச் சாப்பிட மாட்டாள்.” அவளை ஏமாற்றிவிட்டுப் படக்கென்று ஒன்றை எடுத்து வாயில் போட்டான்.
“உன்ன! சொல்ல சொல்லக் கேக்காம எடுக்கிறியா?” என்று கேட்டு, கோபத்தில் அவள் போட்ட அடிகளைக் கவனத்திலேயே கொள்ளவில்லை, அவன்.
சூட்டில், ‘ஆ ஊ’ என்று ஊதினாலும், “நல்லாருக்கடி! நாலு அஞ்சு எடுத்து ஒரு பெட்டில போட்டுத் தா. கிருபனுக்குக் குடுத்திட்டு வாறன்.” என்றான்.
இருந்த விசருக்கு மஃபின்ஸ் வெளியில் எடுக்கும் கரண்டியினால் படார் என்று அவன் முதுகிலேயே போட்டாள், கமலி.
“நான் இங்க கஷ்டப்பட்டுச் செய்ய, நீ சாப்பிட்டதும் இல்லாமத் தூக்கிக்கொண்டு போய் அவனுக்கும் குடுப்பியோ? அதென்ன எப்பப் பாத்தாலும் இங்க சமைக்கிறதில பாதிய அங்க கொண்டுபோறது? நீ ஏதும் அவனை லவ்வுறியா? பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில பக்கத்தில வச்சாப் பத்துமாம் எண்டு சொன்னது எல்லாம் அந்தக் காலம். இப்ப, நெருப்பையும் நெருப்பையும் வச்சாலுமே பத்துதாம். அப்பிடி ஏதும் உங்களுக்கப் பத்திட்டுதா?” என்று பாய்ந்தாள், எரிச்சலும் சினமுமாக.
நொடி நேரம், அவள் கேள்வி புரியாமல் விழித்தான், அரவிந்தன். புரிந்ததும் அதிர்ந்து அடக்க மாட்டாமல் சிரித்தான். “ஏய் லூசு! என்ன கதையெல்லாம் கதைக்கிறாய்?” என்று, அவள் தலையில் குட்டினான்.
“அவன் பாவமடி. அம்மா அப்பா இல்ல. பெருசாச் சமைக்கவும் தெரியாது. ஒவ்வொரு நாளும் கடையில தான் சாப்பிடுவான். நெடுக(எப்பவும்) கடைச் சாப்பாடு எண்டு அதுவும் பிடிக்கிறேல்ல அவனுக்கு. சில நேரம் டீயை மட்டும் போட்டுக் குடிச்சிட்டுப் படுத்திடுவானாம்.” என்று, நண்பனின் கதையைச் சொன்னான்.
கமலிக்கு இது தெரியாது. மனம் பாரமாகிப் போயிற்று. “ஓ! அதுதான் தொரை இடை மெலிஞ்சு சிம்ரன் மாதிரி இருக்கிறாரா?” என்று, கேலி செய்தாலும் அவன் மீது, ஒரு பரிதாபம் உண்டாயிற்று.
அதனால், அரவிந்தனே பிளாஸ்டிக் பொக்ஸ் ஒன்றை எடுத்து, அதில், தாராளமாக மஃபின்ஸ் எடுத்து வைப்பதைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும், அவள் தடுக்கவில்லை.
அரவிந்தன் போன பிறகும் அவளுக்கு மனது சரியாகவேயில்லை. என்ன கொடுமை இது? கடவுள் ஒருவனை இப்படியா வதைக்க வேண்டும்? உடம்புக்கு இயலாமல் போனால் என்ன செய்வான்? மனம் சரியில்லை என்றால்? மனம் விட்டு யாரோடு கதைப்பான்? முதல், தனியாக எப்படி ஒரு வீட்டில் வாழ்வது? நெஞ்சுக்குள் என்னவோ பிசைந்தது.
“கமலி, அம்மாக்கு ஒரு தேத்தண்ணியும் அந்தக் கேக்கில ரெண்டு துண்டும் கொண்டு வாம்மா!” என்ற அன்னையின் குரலில், தன் எண்ணங்களைக் களைந்து எழுந்து போனாள்.
அதன் பின், என்ன செய்தாலும் அவளாகவே அதில் கொஞ்சத்தை அவனுக்கும் கொடுத்துவிட்டாள். “இனி அங்கப் போறதா இருந்தா முதலே சொல்லு, அண்ணா! ஏதாவது செய்து தாறன்.” என்று, அரவிந்தனிடம் சொல்லியும் வைத்தாள்.
அன்றும் ஒரு சனிக்கிழமை. அரவிந்தன் வேக வேகமாகத் தயாராகிக்கொண்டு இருந்தான். கிருபன் வெளியே நிற்கிறான் என்று புரிந்தது. அன்றைக்குக் கொடுத்தப் பேச்சுக்குப் பிறகு, அவன், கோர்னை அழுத்துவது இல்லை. வந்ததும் மெசேஜ் போடுவான் போலும். இல்லாமல், அதுவரை சோம்பிக் கிடக்கிற அரவிந்தன், காலில் சுடு தண்ணீர் கொட்டியவன் போன்று, வேகவேகமாகப் புறப்பட மாட்டான்.
வாசலுக்குச் சென்று எட்டிப் பார்த்தாள். எப்போதும் போல, பைக்கில் அமர்ந்து இருந்து ஃபோனில் கவனமாக இருந்தான், அவன்.
“சிம்ரன்!” சத்தமாக அழைத்தாள்.
வேகமாகத் திரும்பிப் பார்த்தான், கிருபன்.
“அதென்ன எப்ப வந்தாலும் வாசல்லையே நிக்கிறது? எங்கட வீட்டுக்கு எல்லாம் வர மாட்டீங்களோ? அவ்வளவு திமிர்?”
கிருபன் அரண்டு போனான். சிவனே என்று நின்றவனைச் சண்டைக்கு இழுக்கிறாளே. அதைவிட, அது என்ன சிம்ரன்? முகம் சிவக்கும் போலிருந்தது அவனுக்கு. “இல்ல அப்பிடி இல்ல.” என்றான், என்ன சொல்வது என்று தெரியாமல்.
“அப்ப வர வேண்டியது தானே!” அவள் விடுவதாக இல்லை.
உண்மையிலேயே கிருபனுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. மாட்டேன் என்று எப்படிச் சொல்வது? சொன்னால் வந்து அடித்து விடுவாள் போல் முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள், அவள். உள்ளே போகவும் ஒரு மாதிரி இருந்தது.
“இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லாம் நீங்க வரத் தேவை இல்ல. நடவுங்க! இனிமேல் எங்கட வீட்டுக்கு முன்னால உங்களப் பாத்தன், சானியக் கரைச்சு முகத்திலேயே அடிப்பன். அண்ணா எங்கயும் வர மாட்டன்!” அவளின் அதட்டலில் அவனுக்கு முகம் கருத்துப் போயிற்று.
என்ன சொல்வது என்று தெரியாமல் வேகமாக இறங்கி ஸ்டான்ட் போடும் போதே, “ஏய் லூசு! அவனை என்னத்துக்கு அதட்டுறாய்.” என்றபடி, அங்கு ஓடி வந்தான், அரவிந்தன்.
“உன்ர நண்பர் என்ன பெரிய கொம்பரே? அவர் வந்து வாசல்ல நிப்பாராம். நீ போவியாம். என்ன நினைச்சுக் கொண்டு இருக்கிறார், எங்களைப் பற்றி? உள்ளுக்கு வரச் சொல்லு. இல்லையோ, நீ போகக் கூடாது! நான் சொன்னதை மீறிப் போனியோ மண்டைய உடைப்பன்!” விரல் நீட்டி எச்சரித்தாள், அவள்.
இதற்குள், விறுவிறு என்று வாசலுக்கு வந்து சேர்ந்திருந்தான், கிருபன். அவனை ஒரு முறைப்பு முறைத்துவிட்டுப் போனாள், கமலி. இப்போது, உள்ளே போவதா இல்லையா? கிருபன் பரிதாபமாகப் பார்க்க, அரவிந்தன் சிரித்தான்.

