அத்தியாயம் 6
அடுத்த இரண்டு மாதங்கள், எப்படி ஓடிற்று என்று தெரியாமலேயே ஓடிப் போயிற்று. இன்னுமே, தனக்குள் சுருங்கிப் போனான், கிருபன். அவர்களின் வீட்டுப் பக்கம் போகவும் இல்லை; அவளைக் காணவும் இல்லை. இன்று வரையிலும், அரவிந்தனின் முகம் பார்க்கத் தடுமாறினான். என்ன என்ன என்று விசாரித்தவனுக்கு மாமா வீட்டுக்குப் போய் வந்ததைக் காரணமாக்கினான்.
எதையும் தூண்டித் துருவும் பழக்கம் அரவிந்தனுக்கு இல்லையாதலால் நண்பனை அப்படியே ஏற்றுக்கொண்டு, அவனுக்கு இதமாக நடக்க முயன்றான். அது, இன்னுமே அவனைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்கிற்று.
அவர்கள் வீட்டிலிருந்து வராமல் நின்று விட்ட பலகாரங்கள், அவளின் தீராத கோபத்தைச் சொல்லியது. எப்படியாவது மன்னிப்புக் கேட்க முடிந்தால்? அவனே எதிர்பாராமல் நடந்துவிட்ட பிசகு என்று சொல்லி விட முடிந்தால்? அது, தன்னால் முடியுமா என்கிற சந்தேகமும் கூடவே வந்து நின்றது.
அரவிந்தனின் அன்னை சுகுணா மட்டும், சோற்றை ரைஸ் குக்கரில் போட்டுச் சாப்பிடட்டும் என்று, அவ்வப்போது, கறி கட்டிக் கொடுத்து விடுவார். அதுவே, அவள், மற்றவர்களிடம் நடந்ததைச் சொல்லவில்லை என்று உணர்த்திற்று.
‘அண்ணான்ர பிரென்ட் எண்டு பாத்தா என்ன கேக்கிறீங்க?’ என்று கேட்டாளே ஒரு கேள்வி. இப்போது நினைக்கையிலும் மனதளவில் குன்றினான். அவளின் குறும்பை, அதட்டலை, உருட்டலை, ரசனையை, கைப்பக்குவத்தை எல்லாம் ரசித்திருக்கிறானே தவிர, அவளை ரசித்தது இல்லை. ஒரு இளம் பெண் பிள்ளையின் கண்களை நேராகப் பார்ப்பதே அவனுக்கான மிகப் பெரிய சவாலாக இருக்கையில், அவளை எப்படிப் பார்ப்பான்? எப்படி ரசிப்பான்?
ஒதுங்கி ஒதுங்கி மட்டுமே போனவன் ஏன் அப்படிக் கேட்டான்?
மாமா வீட்டுக்குப் போய் வந்ததில் ஆழமாகக் காயப்பட்டிருந்த மனது, எனக்கு யாருமே இல்லையா என்று தனக்குள் அழுது கொண்டிருந்த போது, அம்மாவைப் போலவே அக்கறையும் கோபமுமாக அவனைக் கவனித்தவளை, காலத்துக்கும் தன்னுடனேயே வைத்திருக்கும் உந்துதலில் கேட்டுவிட்டது.
அதைக் கேட்டதும் எவ்வளவு கேவலமாகப் பார்த்தாள். அல்லும் பகலும் நிம்மதியாக இருக்க விடாமல், அவளின் அந்தப் பார்வை அவனைத் துரத்தியது. இன்றைக்கும், வேலை முடிந்ததும் அரவிந்தனின் கண்ணில் படாமல் நழுவி, பைக்கை எங்கு என்றில்லாமல் விரட்டினான்.
போய் வருவதற்கென்று அவனுக்கு இருந்த ஒரேயொரு வீட்டைக் கூட, தன் செய்கையால் கெடுத்துக் கொண்டான். இப்போது, அநாதரவாக வீதியில் அலைந்து கொண்டிருந்தான். அமைதி வேண்டி மன்னாரில் இருக்கும் மடுமாதா ஆலயத்துக்கு வந்தவன், ஒரு மெழுகு திரியைக் கொளுத்தி வைத்துவிட்டு, அப்படியே, வாங்கிலில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டான். ஆறாத காயத்திலிருந்து வடியும் நீரினைப் போல, கண்ணோரங்கள் மெல்ல மெல்லக் கசிந்தன.
யாரிடமிருந்தும் ஆறுதல் கிடைக்காது என்கிற உண்மை, சிறு வயதிலேயே புரிந்து விட்ட படியினால், இது வரைக்கும், யாரின் அருகண்மையையும் தேடியதில்லை; இழப்பை எண்ணி வருந்தியதில்லை. அவனுடைய கட்டுப்பாட்டையும் மீறி அன்னை தந்தையின் நினைவு வந்தால் கூட, எதையாவது செய்து மாற்றி விடுவான். இன்றோ, எதுவுமே முடியாமல், என்ன காரியம் செய்துவிட்டேன் என்று, மனம் அரித்துக் கொண்டே இருந்தது.
அதட்டி உருட்டி வீட்டுக்குள் அழைத்த அவள், சாப்பிட்டு முடித்துவிட்டுத் தான் போக வேண்டும் என்று மிரட்டிய அவள், சிம்ரன் என்று அழைத்துக் கூச்சப் பட வைத்த அவள் என்று, அவனை, அவர்களின் வீட்டுக்கு உரிமையாக வந்து போகச் செய்ததில், அரவிந்தனைக் காட்டிலும் அவளின் பங்கு தானே அதிகம். அப்படியானவளிடம் போய் என்ன வேலை பார்த்துவிட்டான்?
அதற்கு மேல் யோசிக்க முடியாமல் கண்களைத் திறந்து மாதாவையே பார்த்தான். மடுவில் வீற்றிருக்கிறவள் அன்னைக்கும் மேலான அன்னையல்லவா! தன் கருணையினால் அவனை அருள் பாலித்தாள்.
மெல்ல மெல்ல மனம் அமைதி அடைந்தது. நடந்தவை அனைத்தும் முடிந்தவை தான் என்கிற உண்மை புரிந்தது. எதன் காரணத்துக்காகவும் வாழ்க்கை அதனிடத்தில் தேங்கி விடுவதில்லையே. அப்பா இல்லை என்று அறிந்த போதும் கடந்து வந்தான் தான். எல்லாமாக இருந்த அம்மா இறந்ததையும் அந்தப் பிஞ்சு வயதிலேயே தாங்கிக் கொண்டான் தான். மாமா வீட்டுக்குப் பாரமாக இருக்கிறோம் என்று தெரிந்தும் அங்கேயே இருந்து, அதையும் கடந்தான் தான். அப்படி, இதையும் கடக்க வேண்டியது தான். கடப்பான்! வாழுவான்! காலம் அதைச் செய்யும்!
ஆனால், ஆசைப்பட்ட வாழ்க்கை அமையுமா? நம்பிக்கை இல்லை அவனுக்கு! ஒரு பெருமூச்சுடன் எழுந்து அன்னையை வணங்கிவிட்டு வீடு வந்து சேர்ந்தான்.
வரும் போதே இடியப்ப பார்சல் ஒன்றையும் வாங்கி வந்து வைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்தான். இப்போதெல்லாம், அவனுடைய படுக்கை, இருப்பு, ஓய்வெடுப்பு, வேலை பார்ப்பது எல்லாமே, அந்த ஹோலின் தரையில் இருக்கும் மெத்தை தான். அதிலேயே அமர்ந்து தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு பார்சலை பிரித்தான்.
தொலைக்காட்சியில் பாதிக் கவனமும் சாப்பாட்டில் மீதிக் கவனமுமாக இருக்கையில் அவன் வீட்டு பெல்லை யாரோ அழுத்தினார்கள். யாரோ என்ன அரவிந்தனாகத் தான் இருக்கும். இன்றைக்கு, மனம் அளவுக்கதிகமாகக் குழம்பிப் போய் இருந்ததில் அவனிடமிருந்து தப்பித்து ஓடி வந்திருந்தான். தேடி வந்திருக்கிறான் என்று விளங்கிற்று. அவனுடைய அந்த அக்கறை, காயப்பட்டிருந்த மனதுக்கு இதம் சேர்க்க, எழுந்து போய்க் கதவைத் திறந்தான்.
“வா…” என்று ஆரம்பித்தவனின் பேச்சு, அரவிந்தனின் அருகிலேயே நின்றவளைக் கண்டதும் நின்று போயிற்று. அவளைப் பார்த்து எத்தனை நாட்களாயிற்று? அன்னையின் அருகில் அமைதியடைந்திருந்த மனது, திரும்பவும் துடிக்கத் தொடங்கிற்று. தன்னை மறந்து தவிப்புடன் அவளையே பார்த்தான்.
“நந்தி மாதிரி நடுவிலேயே நிக்காமத் தள்ளடா!” அவனைத் தள்ளி விட்டுவிட்டு உள்ளே வந்தான், அரவிந்தன்.
அதிலேயே தெரிந்த அவனது கோபத்தை விட, அவளின் முன்னால் தன்னை நிலைப்படுத்துவதே பெரிய விடயமாக இருக்க, “சொறியடா. வா மச்சான். வா…ங்கோ!” என்று, அவளையும் அழைத்தான்.
வீட்டுக்குள் வந்தவளின் பார்வை அவனை ஆராய்ந்து, தரையில் பிரித்த படி கிடந்த பார்சலில் தங்கியது. வேகமாக அதைத் தூக்கிக்கொண்டு போய் உள்ளே வைத்தான். கையைக் கழுவியவனுக்குள் பெரும் போராட்டம்.
ஏன் வந்திருக்கிறாள்? ஏதாவது சொல்வாளோ? சட்டையைப் பிடிப்பாளோ? அரவிந்தன் வேறு நிற்கிறானே என்று பலதும் மண்டைக்குள் ஓட, மெலிதாக வியர்க்க ஆரம்பித்து இருந்தது.
“தேத்தண்ணி ஊத்தவாடா?” அங்கிருந்தே குரல் கொடுத்தான்.
“நீயும் உன்ரத் தேத்தண்ணியும்! இங்க வா, முதல்! ஒபீஸ்ல ஃபோனை மறந்து வச்சிட்டு வாற அளவுக்கு அவசரமா எங்க ஓடினனி?” அரவிந்தன் கேட்ட போது தான் அவனுக்கே அது உரைத்தது.
“ஓ! மறந்திட்டன் போல. மேசையில வை, வாறன்.” என்றுவிட்டு, வேகமாக கெட்டிலில் தண்ணீரை நிரப்பிக் கொதிக்க விட்டான்.
சும்மா கொறிக்க என்று வாங்கி வைத்திருந்த மிக்ஸரை இரண்டு குட்டி பிளேட்களில் போட்டான். தேக்கரண்டி இரண்டையும் அதில் ஓரமாக வைத்தான். அப்படியே, ஒரு லெமன் பஃப் பிஸ்கட் பக்கெட்டை உடைத்து, இன்னொரு தட்டில் அடுக்கினான். எல்லாவற்றையும் ஒரு ட்ரேயில் எடுத்து வைத்தான். அதைக் கொண்டு வந்து அவர்களுக்கு முன்னே இருந்த டீப்போவில் வைத்துவிட்டு, “ரெண்டு பேரும் எடுத்துச் சாப்பிடுங்கோ.” என்று, உபசரித்தான்.
அவர்களின் வீட்டுக்குப் போனால் அவளும் இப்படித் தானே பார்த்து பார்த்துக் கவனிப்பாள். அதெல்லாம் இனிக் கிடைக்காது. இயலாமையோடு அவளைப் பார்த்தான். அவளும் இவனைத் தான் கவனித்துக்கொண்டு இருந்தாள். வேகமாகப் பார்வையை அகற்றிக் கொண்டு, ஃபோனை எடுத்து சார்ஜில் போடுவது போலச் சமாளித்துவிட்டு வந்து, தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தான்.
மிக்ஸர் தட்டை எடுத்துக்கொண்டாள், கமலி. விழிகள், அவன் வீட்டை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்தன.
“பிறகு? ரெண்டு பேரும் எங்க போயிட்டு வாறீங்க?” ஒன்றுமே நடவாதது போல் காட்டிக்கொள்ள முயன்றான், கிருபன்.
“கமலி கேக்குக்கு சாமான் வாங்கோணும் எண்டு சொன்னவள். அதுதான் கூட்டிக்கொண்டு போயிட்டு வாறன். வேல முடிஞ்சும் ஃபோன தர வந்தனான். நீ இல்ல. அதுதான் இப்ப திரும்ப வந்தனான். சொல்லாமக் கொள்ளாமப் போற அளவுக்கு உனக்கு என்ன அலுவல்?” அப்போதும் தீராத கோபத்துடன் கேட்டான், அரவிந்தன்.
“இல்ல மச்சான், அது வேலை முடியிற நேரம் தான், கடைக்குச் சாமான் வாங்க மாமா மன்னார் வந்திருக்கிறார் எண்டு தெரிய வந்தது. அதுதான் அவசரமாப் போயிட்டன்.” ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, அரவிந்தனிடம் இருந்து தொடர்ந்து வரப்போகிற கேள்விகளைத் தவிர்க்க அவசரமாக எழுந்து, “இருங்கோ, தேத்தண்ணி கொண்டு வாறன்!” என்று, உள்ளே நடந்தான்.
அவள் தன்னோடு ஏதாவது பேசமாட்டாளா என்று மனம் ஏங்கிற்று. அவளின் குறு குறு பார்வைக்கான அர்த்தத்தை உள்ளம் தேடிற்று. முதன் முதலாக அவனைப் பார்த்தபோது கூட என்ன விசயம் என்று அதட்டியவள், இன்று, அமைதியாக இருந்து, அவனைத் தடுமாற வைத்துக் கொண்டிருந்தாள்.
சிந்தனை அவளிடம் இருக்க, கைகள் தேநீரை ஊற்றியது. சிங்குக்குள் டொங் என்று பாத்திரம் விழுந்த சத்தத்தில் வேகமாகத் திரும்பிப் பார்த்தான். அவள் தான் நின்றிருந்தாள். மிக்ஸர் சாப்பிட்டு முடித்த தட்டும் தேக்கரண்டியும் சிங்குக்குள் விழுந்த வேகமே அவளின் கோபத்தைச் சொன்னது. அவன் விழிகள், அவனே உணராமல் அவளில் நிலைத்தன.
“என்ன பார்வை?”
“இல்ல. ஒண்டும் இல்ல.”
“பயந்தவன் மாதிரிப் பம்முறது. ஆனா, கதைக்கிறது எல்லாம் தேவையில்லாத கதைகள், என்ன?”
அவன் முகம் கருத்துப் போனது. “சொறி… அது…” என்ற போதே, அவனை நெருங்கி வந்தாள், அவள்.
பதட்டத்துடன் வேகமாக விலகினான், அவன். அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவன் ஊற்றி வைத்திருந்த தேநீர்க் கோப்பைகளில் ஒன்றை எடுத்து, ஒரு வாய் பருகிப் பார்த்தாள்.
ஏதாவது சொல்வாளாக்கும் என்று தன்னை மீறிய ஆவலோடு பார்த்தான். அவளோ கோப்பையை எடுத்துக்கொண்டு சமையலறையை விழிகளால் ஒரு சுழற்றுச் சுழற்றினாள். அப்படியே வந்து, மூடியிருந்த பாத்ரூம் கதவைத் திறந்து பார்த்தாள். படுக்கையறை திறந்தே இருக்க விறாந்தையில் நின்று எட்டிப் பார்த்தாள்.
அப்போதும், தொடர்ந்த அவள் மௌனத்தில், அவன் மனது, ஏமாற்றத்தில் சுருண்டு போயிற்று! காட்டிக் கொள்ளாமல் அவனுக்கும் அரவிந்தனுக்குமான கோப்பைகளை எடுத்துக்கொண்டு முன்னறைக்கு வந்தான்.
சிறுவயதில் இருந்து தன்னுடைய வேலைகளைத் தானே செய்து பழகியவன், அவன். அதில், வீடு எப்போதுமே ஒழுங்கு குலையாமல் இருக்கும் என்பதில் அவனுக்குள் ஒரு நிம்மதி. இல்லையோ, அதற்கும் அவனை எப்படியெல்லாம் நினைப்பாளோ யாருக்குத் தெரியும்?
அரவிந்தனுக்கு ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டுத் தன்னுடையதைப் பருக ஆரம்பித்தான். அவள் மீண்டும் கிச்சனுக்குள் சென்று ஆராய்வது தெரிந்தது.
‘என்னத்தப் பாக்கிறாள்? அப்பிடி என்ன கிடக்கு அங்க?’ அரவிந்தனோடு பேசிக் கொண்டிருந்தாலும் கவனம் முழுவதும் அவளிடமே இருந்தது.
இங்கே, அரவிந்தனும் ஏன் வீட்டுக்கு வருவதில்லை, விளையாட ஏன் வருவதில்லை, முன்னரைப் போன்று தன்னோடு ஏன் பழகுவதில்லை என்று, கேள்விகளாகக் கேட்டுத் தாளித்துக்கொண்டு இருந்தான். அவனைச் சமாளிப்பது பெரும் பாடாக இருந்தது.
“உன்ர போக்கு வரவரச் சரியில்ல, மச்சி. எண்டைக்கு என்னட்ட மாட்டுறியோ அண்டைக்கு முதுகில டின் கட்டுவன்!” நன்றாக முறைத்துவிட்டு எழுந்தான், அரவிந்தன்.
“போவமா கமலி? இருட்டிட்டுது.” அவன் குரல் கொடுக்க, தன் கோப்பையை அங்கேயே வைத்துவிட்டு வந்து, கைப்பையை எடுத்துக் கொண்டாள், கமலி.
கிருபனின் மனதில் ஒருவிதத் தவிப்பு. போகிற போதாவது போய் வருகிறேன் என்பது போல் ஒரு பார்வையையேனும் வீசமாட்டாளா என்று பார்த்தான்.
அவள் திரும்பியும் பாராமல் அரவிந்தனின் பைக் அருகே சென்று நின்று கொண்டாள்.
மனதில் பாரத்துடன் அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டுக்குள் வந்தான். வெறிச்சோடிப் போயிருந்தது, வீடு. அவள் நின்றது, நடந்தது, பார்த்தது எல்லாம் காட்சிகளாக விரிந்தன. சமையலறைக்குச் சென்று பார்த்தான். அவள் பயன்படுத்திய மிக்ஸர் தட்டையும் தேநீர்க் கோப்பையையும் கழுவி வைத்திருந்தாள். நெஞ்சுக்குள் என்னவோ அடைத்துக் கொண்டது. சாப்பிடப் பிடிக்காமல் வந்து மெத்தையில் விழுந்தான்.
மூடிய விழிகளுக்குள் வந்து நின்று முறைத்தாள், கமலி.
திருமணத்துக்குக் கேட்ட போது அவன் மனதில் அவள் இருக்கவில்லை. ஆனால் இன்றைக்கு? அவளைப் பற்றி நினைத்து நினைத்தே அவனின் நெஞ்சமெங்கும் நிறைந்து போயிருந்தாள், அவள்.

