கிருபனின் கமலி – 8

அத்தியாயம் 8

அன்று, வேலை முடிந்த பிறகு, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான், கிருபன். இனிமேல் தான் வீட்டுக்குச் சென்று சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று நினைக்கவே அலுப்பாக இருந்தது. இரவு உணவையும் வாங்கிக் கொண்டே செல்வோமா என்று யோசித்தபடி விழிகளைச் சுழற்றிய போது, கமலி பட்டாள்.

கூடவே, இன்னொரு ஆண். இருவரின் உடல் மொழியும் சரியாய் இல்லை. அவன் என்னவோ வற்புறுத்துவது போலவும் அவள் விலக முயல்வது போலவும் தெரிய, எதைப் பற்றியும் யோசிக்காமல், அவர்களின் அருகே கொண்டு போய் பைக்கை நிறுத்தி, “ஏறுங்க!” என்றான், கமலியிடம்.

அந்த மற்றவனின் முகம், நந்தியாக வந்த இவனைக் கண்டு கடுத்தது. “என்ன பொஸ்! நீங்களா வந்தீங்க, ஏறு எண்டுறீங்க. நாங்க கதைச்சுக்கொண்டு நிக்கிறது உங்கட கண்ணுக்குத் தெரியேல்லயா? முதல் ஆரு நீங்க?” என்றான், அதட்டலாக.

“நான் அரவிந்தன்ர பிரென்ட். நீங்க?”

“நான் ஆர் எண்டுறது உங்களுக்குத் தேவையில்ல. நடவுங்க! எங்களுக்கு பிரைவசி வேணும்.”

அவனும் அவனின் அதட்டல் தொனியும் சரியாகப் படவில்லை. கமலியைத் திரும்பிப் பார்த்தான். அவள் முகத்தில் பதட்டம் இல்லை; ஆனால், கோபம் தெரிந்தது.

“நீங்க ஏறுங்க.” அவனைப் பொருட்டில் கொள்ளாமல் மீண்டும் கமலியிடம் சொன்னான்.

அவளும் பேசாமல் அவன் பின்னால் ஏறப் போனாள். அது, அந்த அவனுக்குப் பிடிக்கவில்லை. “அவர் தான் பெருசா ஹீரோயிசம் காட்டுறார் எண்டா நீயும் போற. எனக்கு உன்னோட கதைக்கோணும் கமலி. நில்லு!” என்றபடி, கமலியை நெருங்கினான்.

அதற்கு விடாமல், அவனுக்கும் அவளுக்குமிடையில் பைக்கை குறுக்கே விட்டான், கிருபன். அவன் பார்வையில் இப்போது அழுத்தம் ஏறி இருந்தது. மற்றவனின் முறைப்பையும் சினத்தையும் பொருட்டில் கொள்ளவில்லை.

“பொது இடத்தில வச்சு, ஒரு பொம்பிளைப் பிள்ளையிட்ட அநாகரீகமா நடக்கக் கூடாது எண்டு தெரியாதா? அவவுக்கு உங்களோட கதைக்க விருப்பம் இருந்தா என்னப் போகச் சொல்லியிருப்பா. அத விட்டுட்டு, என்னோட வர வெளிக்கிடுறா எண்டால் உங்களோட கதைக்க விருப்பம் இல்லை எண்டு அர்த்தம். அத விளங்கி நடக்கிறது தான் ஒழுங்கு. சும்மா குரலை உயர்த்தாம, நடங்க!”

அவன் கோபப் பாடவும் இல்லை; குரலை உயர்த்தவும் இல்லை. நிறுத்தி நிதானமாகச் சொன்னான். அதுவே எச்சரித்தது.

அதில், இவனை விட்டுவிட்டு, “எனக்கு உன்னோட கதைக்கோணும் கமலி.” என்றான் அவன், கமலியிடம்.

“எனக்கு உங்களோட கதைக்க ஒண்டுமில்ல.” எரிச்சலும் சினமுமாக வெடுக்கென்று சொன்னாள், கமலி.

“அவர் சொன்ன மாதிரி, பொது இடத்தில வச்சு என்ர கோபத்தைக் காட்ட எனக்கு விருப்பம் இல்ல. அதால தான் இவ்வளவு நேரமும் உங்களோட பொறுமையாகக் கதைச்சனான். அத வச்சு வேற யோசிக்காதீங்க. இனியும் இப்பிடிப் போற வாற இடத்தில மறிச்சுக் கதைச்சீங்களோ அப்பாட்டச் சொல்லி உங்கட வீட்டு ஆக்களோட கதைக்க வைப்பன்.” என்றுவிட்டு, கிருபனின் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

பயணத்தின் போது இருவரிடமும் அமைதி. ஏதும் கேட்பானோ என்று அவனைப் பார்த்தாள், கமலி. அப்படி எதுவுமற்று நிதானமான வேகத்தில் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான், அவன்.

அந்த அவனைச் சமாளிப்பதெல்லாம் அவளுக்கு ஒரு விடயமே இல்லை. ஆனால், பொது வெளியில், மற்றவர்களுக்குக் காட்சிப் பொருளாகாமல், எப்படி அவனிடமிருந்து விடுபடுவது என்று யோசித்துக்கொண்டு இருக்கையில் தான், கிருபன் வந்தான். உண்மையில், மிகுந்த ஆசுவாசமாக உணர்ந்தாள்.

கூடவே, தன்னிடம் திருமணத்துக்குக் கேட்டவன், கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அந்த அவனோடு சண்டையிட்டு, நாயக விம்பத்தை உருவாக்க முயலாமல், அவளுக்குச் சங்கடத்தையும் உண்டாக்காமல், சமயோசிதமாக நடந்த விதம் அவளைக் கவர்ந்தது.

அவனைப் பார்த்தாள். அவள் இருக்கிறாள் என்று வேகத்தைக் கூட்டி வீரத்தைக் காட்டவும் இல்லை; அளவுக்கதிகமாக மெதுவாகச் சென்று பாதுகாக்கிறேன் என்று செயற்கைத் தனமாக நடக்கவும் இல்லை.

அவன் அவனாக இருந்தான். அதனாலோ என்னவோ, அவனைப் பேச வைக்க வேண்டும் போலொரு உந்துதல் அவளிடம். கூடவே, தனியாக மாட்டியவனை விடவும் மனமில்லை. அதில், “எனக்குப் பசிக்குது.” என்றாள்.

கிருபனிடம் மெல்லிய தடுமாற்றம். அவளை அவன் உண்பதற்கு அழைத்துப் போகலாமா? அது சரியாக இருக்குமா? எப்படி மறுப்பது? யோசனையோடு கண்ணாடி வழியே அவளைப் பார்த்தான்.

அந்தப் பார்வையில் தெரிந்த தயக்கத்தைக் கமலியும் கண்டு கொண்டாள். கோபம் வந்தது. “ஒரு சாப்பாடு வாங்கித் தாறதுக்கு இந்தளவுக்கு யோசிக்கிறீங்க? என்ன மாதிரியான கஞ்சன் நீங்க? சேச்சே!” என்று, முகத்தைச் சுழித்தாள்.

அவளின் செய்கையில் அவன் உதட்டோரம் சிரிப்பில் துடித்தது.

“சாப்பிட்டே போவம்.” என்றபடி, பைக்கை ஒரு உணவகத்தின் முன்னே நிறுத்தினான்.

உணவுக்குச் சொல்லிவிட்டுக் காத்திருந்தனர். அவள் பார்வை அவனிடமே இருந்தது.

அவனுக்குக் குறுகுறுத்தது. ‘என்ன இவள் இப்பிடிப் பாக்கிறாள்.’ இயல்பாக இருக்கத் திணறினான். வேடிக்கை பார்ப்பது போல் முகத்தைத் இருப்பிக்கொண்டான்.

இப்போது, கமலிக்குச் சிரிப்பு வரும் போல் இருந்தது.

“உங்களுக்கு வடிவே உங்கட இந்த வெக்கம் தான்.”

அதிர்ந்து திரும்பினான், கிருபன். உண்மையில் முகம் சிவக்கும் நிலை அவனுக்கு. “நான் ஒண்டும் வெக்கப் படேல்ல.” என்றான் வேகமாக.

“ஓ!”

அந்த ஓவிலேயே எவ்வளவு சீண்டல்? ‘இவளோட…’ முறைக்க முயன்று முடியாமல், “உங்கட ஸ்கூட்டி எங்க?” என்று, பேச்சை மாற்றினான்.

“அது ஸ்டார்ட் வரேல்ல எண்டு பஸ்ல வந்தனான். பாத்தா, அந்த எரும முன்னால வந்து நிக்குது.” சினத்துடன் சிடுசிடுத்தாள்.

“அரவிந்தனிட்டச் சொல்லியிருக்க வந்து கூட்டிக்கொண்டு போயிருப்பான்.” சிறு சிரிப்புடன் சொன்னான்.

“நான் என்ன பேபியா? தொட்டதுக்கெல்லாம் அண்ணா, அப்பா எண்டு போய் நிக்க? எனக்கு மற்றவேற்ற உதவி கேக்கிறதெல்லாம் பிடிக்காது!”

‘ஓ! இப்போது நடந்துகொண்டு இருப்பது என்னவாம்?’ மீண்டும் உதட்டோரம் சிரிப்பில் துடித்தது. வேகமாக மறைத்துக்கொண்டான். ஆனால் என்ன, அவன் கண்களின் பளிச்சிடல் அவளிடம் அவனைக் காட்டிக் கொடுத்திருந்தது.

“ஹல்லோ! என்ன நக்கலா? சிரிக்கிறீங்க? பசிக்குது எண்டு கேட்டதுக்கு என்ன எல்லாம் செய்றீங்க? நீங்க ஒண்டும் வாங்கித் தரத் தேவையில்ல. நான் போயிட்டு வாறன்.” என்று, அவள் எழுந்துகொள்ளவும் அவனுக்கு ஒருமாதிரி ஆகிற்று.

“இருங்க இருங்க பிளீஸ்! நான் சிரிக்கேல்ல. அது சும்மா!” என்றான் அவசரமாக.

“நடிக்காதீங்க நீங்க! நான் போறன்! ஒரு சாப்பாடு கேட்டதுக்கு எவ்வளவு கேவலப் படுத்துறீங்க?”

“ப்ளீஸ், நான் தான் சிரிக்க மாட்டன் எண்டு சொல்லிட்டனே. சாப்பாடு வரப்போகுது. சாப்பிட்டே போவம்.” என்று, கெஞ்சிய பிறகு தான் மீண்டும் அமர்ந்தாள், அவள்.

இதற்குள் இருவருக்குமான உணவு வந்திருந்தது. அவளோடு ஒரு உணவு வேளை. கிருபன் இரகசியமாக மகிழ்ந்தான். அவளுக்கானதைப் பார்த்து பார்த்துக் கவனித்தான்.

“அவன் ஆர் எண்டெல்லாம் கேக்க மாட்டீங்களா?” உணவிற்கிடையே வினவினாள், கமலி.

“ஏன் கேக்க?” என்று, திருப்பிக் கேட்டான், அவன்.

ஒன்றும் சொல்லாமல் அவனைக் கவனித்தாள், கமலி.

“நீங்க ரெண்டு பேரும் நிண்ட விதம் என்னவோ சரியில்லை எண்டு சொன்னது. அது தான் வந்தனான். சாதாரணமாத் தெரிஞ்சிருந்தா வந்திருக்க மாட்டன். நான் வந்ததாலேயே அவன் ஆரு, நீங்க என்ன கதைச்சீங்க எண்டெல்லாம் சொல்லத் தேவை இல்ல. ஆனா, இனி இப்பிடி ஏதும் எண்டால் அரவிந்தனை உடனேயே கூப்பிடுங்க.” என்றவன், சற்றுத் தயங்கிவிட்டு, “என்னைக் கூப்பிட்டாலும் ஓகே தான்.” என்றான்.

அவன் அப்படிச் சொன்னது கமலிக்கு இதமாக இருந்தது. அந்த அவனையும் கோபப்படாமல், வெகு நிதானமாகக் கையாண்டானே.

“என்ர நம்பர் தரவா?” கொஞ்சம் தயங்கிவிட்டுக் கேட்டான்.

“அதெல்லாம் இருக்கு.”

வியப்பில் விரிந்தன, அவன் விழிகள். எப்படிக் கிடைத்தது? முதலில், எதற்காக எடுத்தாள்?

“என்ன பார்வை?”

“இல்ல. ஒண்டும் இல்ல.”

வேகமாகச் சொன்னவனைச் சீண்டும் ஆசை எழுந்தது அவளுக்கு.

“என்ர நம்பர் இருக்கா உங்களிட்ட?”

இல்லை என்று தலையை அசைத்தான்.

“கலியாணத்துக்குக் கேப்பீங்க. ஆனா, என்ர நம்பர் இல்ல. இத நான் நம்போணுமா? அந்தளவுக்கு நல்லவனா நீங்க?” என்றதும் வேகமாக நிமிர்ந்தவனின் விழிகளில், பெரும் பரிதவிப்பு. முகம் அப்படியே சிறுத்துப் போனது.

“உண்மையா உங்கட நம்பர் என்னட்ட இல்ல.” உயிர்ப்பே இல்லாத குரலில் சொன்னவனுக்கு அவ்வளவு நேரமாக இருந்த சந்தோசம் வடிந்து போனது.

இவ்வளவு நேரமாக அதை மறந்திருந்தான். கூடவே, மோதகம் கொடுத்துவிட்டதன் பிறகு, தொடர்ந்து வரத் தொடங்கிய உணவு, தன்னை மன்னித்துவிட்டாள் போலும் என்று நினைக்க வைத்திருந்தது.

அப்படி இல்லை என்று காட்டிவிட்டாள். அதோடு, அவள் நம்பரை எடுத்து வைத்து கைபேசியில் தொல்லை செய்வான் என்று எண்ணினாளோ என்கிற கேள்வி தோன்றியதும் அவனால் அவள் முன்னே அமர்ந்திருக்கக் கூட முடியவில்லை. அந்தளவில் மோசமாக நினைக்கும் படியாகிற்றா அவன் கேட்ட ஒற்றைக் கேள்வி? அவன் முகம் செத்துச் சுண்ணாம்பாகிற்று.

அதன் பிறகு, அவளை நிமிர்ந்து பார்க்கவே இல்லை, அவன். இரகசியமாக மகிழ்ந்து, ரசித்து உண்ண ஆரம்பித்த அவளோடான உணவு வேளை கசந்து போனது. ஒரு பருக்கையைக் கூட உண்ண முடியாமல் அமர்ந்திருந்தான்.

கமலிக்குத் தன் தவறு புரிந்தது. கூடவே, அவனின் இந்தக் குணமும் பிடிக்கவில்லை.

அதில், “நீங்க என்ன தொட்டாச் சிணுங்கியா, தொட்டதுக்கும் முகத்தைச் சுருக்க? பகிடியப் பகிடியா எடுக்க மாட்டீங்களா?” என்று அதட்டினாள்.

ஒருகணம் தட்டையே வெறித்த கிருபன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அந்த விழிகளில் தெரிந்த அடிபட்ட வலியைக் கண்டு கமலி திகைக்கையில், “அண்டைக்குக் கேட்டது பிழை தான். அது எனக்கே தெரியும். அதுக்காக உங்கட நம்பரை எடுத்து, போன்ல தொந்தரவு தாற அளவுக்குக் கேவலமானவன் இல்ல.” என்றான், மரத்த குரலில்.

கமலிக்கே வாயடைத்துப்போன நிலை. உடனேயே இயல்பான துடுக்குத்தனம் கைகொடுக்க, “உங்களுக்கு என்ன விசரா? நான் எங்க அப்பிடி…” எனும்போதே இடை மறித்து, “சாப்பிட்டு முடிச்சிட்டீங்க எண்டா வாங்க போவம்.” என்றான், அவன்.

என்ன சொல்ல வருகிறாள் என்று கூடக் கேட்காமல் என்ன இது? கமலிக்கு உண்ணும் தட்டைத் தூக்கி அவன் தலையிலேயே அடிக்கும் அளவிற்குக் கோபம் வந்தது. வாயைத் திறந்தால் இன்னும் அவனைக் காயப்படுத்திவிடுவோம் என்று, உணவை மட்டும் கவனித்தாள்.

வெளியே வந்து அவன் பைக்கை எடுக்கச் செல்ல, அவள், அங்கே நின்றிருந்த ஆட்டோவை நோக்கி நடந்தாள்.

வேகமாக பைக்கை அவளருகில் கொண்டு சென்று நிறுத்து, “ப்ளீஸ் ஏறுங்க!” என்றான், அவன்.

“தேவையில்லை போடா!” என்றவள், அந்த ஆட்டோவிலேயே புறப்பட்டிருந்தாள்.

ஒரு சில கணங்களுக்கு அப்படியே நின்றுவிட்டான், கிருபன். பெரிய மூச்சு ஒன்றை எடுத்துத் தன்னை நிதானப் படுத்திக்கொண்டு, அந்த ஆட்டோவைப் பின் தொடர்ந்தான். அவள் வீட்டுக்குள் செல்லும் வரை நின்று பார்த்துட்டே தன் வீடு வந்து சேர்ந்தான்.

மனமோ, அவளின் கோபத்தில் சுருண்டிருந்தது.

கமலிக்கு நினைக்க நினைக்கக் கோபம் தான் வந்தது.

“என்னம்மா?” அவள் முகம் சரியில்லை என்று கண்டு கேட்ட அன்னைக்குப் பதில் கூடச் சொல்லாமல் அறைக்குள் புகுந்தவள், கையில் இருந்த ஹாண்ட்பாக்கை கழற்றி கட்டிலில் எறிந்தாள்.

error: Alert: Content selection is disabled!!