அத்தியாயம் 9
நாட்கள் அதன் பாட்டில் நகர்ந்தன. மீண்டும் நத்தையாகத் தனக்குள் சுருண்டிருந்தான், கிருபன். அன்று, மூன்று பக்கங்களும் தடுப்பினால் மறைக்கப்பட்டிருந்த, அவனுக்கே அவனுக்கான குட்டிக் கேபினுக்குள் மடிக்கணணியோடு மல்லுக் கட்டிக்கொண்டு இருந்தான். சத்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைபேசி, தெரியாத இலக்கம் ஒன்றைச் சுமந்தபடி கிறுகிறுத்தது. கைகள் தன் வேலையை நிறுத்த, யார் என்று புருவம் சுருக்கி யோசித்துவிட்டு, எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.
“நான் கமலி.” என்றது, அந்தப் பக்கம்.
ஒரு நொடி திகைத்தாலும், “ஏதாவது பிரச்சினையா?” என்று, அன்றைய நாளின் நினைவில் வேகமாக வினவினான்.
“ஏன், நீங்க எனக்குத் தந்த தலைவலி காணாதோ?”
அவன் முகம் வாடிப் போனது. “அதுதான் சொறி சொல்லிட்டனே.” என்றான், மெல்லிய குரலில்.
“உங்கட சொறி எனக்குத் தேவையில்ல. இண்டைக்குப் பின்னேரம், நாலுமணி போலச் சங்குப்பிட்டிப் பாலத்தடிக்கு வாங்கோ. கதைக்கவேணும்!” என்று சொல்லிவிட்டு, பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்து இருந்தாள், அவள்.
தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான், கிருபன். மன்னாரில் இருந்து சங்குப்பிட்டிப் பாலம் நிறையத் தூரமாயிற்றே. கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணம். இவள் எங்கு அங்குப் போனாள்? அங்கு, யாரும் உறவினர் இருக்கிறார்களோ? அதன் பிறகு, வேலையில் கவனம் செலுத்த இயலவில்லை. என்னடா என்று விசாரித்த அரவிந்தனிடமும் மழுப்பினான். அவனிடம் மறைத்துவிட்டு அவனுடைய தங்கையைச் சந்திக்கப் போகிறோமே என்று, அது வேறு குத்தியது.
*****
யாழ்ப்பாணத்தைப் பிற மாவட்டங்களுடன் இணைக்கும், இரண்டாவது தரை வழிப் பாதையாக இருக்கும் ஏ-32(A-32) நெடுஞ்சாலையில், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் மீது அமைந்திருந்தது, சங்குப்பிட்டிப் பாலம்.
இரண்டு பக்கமும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் நீல வர்ணத்தைப் போர்த்தியபடி கடல் சூழ்ந்திருந்தது. குட்டி குட்டி போட்டுக்கள் ஆங்காங்கே கடல் காற்றில் அசைந்தாடின. ஒரு சிலர் தூண்டிலை வீசிவிட்டு இடுப்பளவு ஆழத்தில் காத்திருந்தனர். நாரைகளும் கொக்குகளும் பறப்பதும் இருப்பதுமாகச் சுதந்திரமாக விளையாடின.
நெடுஞ்சாலையின் இரு பக்கமும் தூண்களைப் போன்று உயர்ந்து நின்ற சூரியகலம் பொருத்தப்பட்ட மின் விளக்குகள், அவ்விடத்தை, இன்னுமே அழகூட்டின. உன்னையும் சேர்த்துத் தூக்கிக்கொண்டு போய்விடுவேன் என்று, கடற்காற்று மிரட்டிக் கொண்டிருந்தது. பாலம் தொடங்கும் வாயிலில், சுற்றுலாப் பயணிகள் நின்று நிதானித்துப் பாலத்தின் அழகை ரசித்துவிட்டுச் செல்லும் வகையில், கடலுக்குள், அரைவட்ட வடிவில் மண் நிரப்பி, ஆங்காங்கே வாங்கில்களையும் போட்டிருந்தனர்.
அங்கே, தன் பைக்கினை கொண்டு வந்து ஒரு கரையாக நிறுத்தினான், கிருபன். கமலி வந்துவிட்டாளா என்று விழிகளைச் சுழற்றித் தேடினான். அவளைக் காணவில்லை. அலுவலகத்தில் இருந்து புறப்படுவதற்கு முதல், அவ்வளவு தூரம் ஏன் என்று கேட்க அழைத்திருந்தான். அந்தப் பிடிவாதக்காரி அழைப்பை ஏற்கவில்லை. வேறு வழியற்றுத் தான் வந்திருந்தான். அவள் வரும் வரைக்கும் பைக்கிலேயே அமர்ந்திருந்தான்.
நீ தவறு செய்கிறாய் என்று மனது குத்திக்கொண்டே இருந்தது. அடிக்கடி சந்தித்ததில்லை என்றாலும், பார்க்கிற பொழுதுகளில் எல்லாம், “சுகமா இருக்கிறீரோ? நீர் நல்ல கெட்டிக்காரனாம் எண்டு தம்பி சொல்லுவான். இன்னுமின்னும் மேல போகவேணும், சரியோ!” என்று தட்டிக்கொடுக்கும் பரந்தாமன், அவர்களின் வீட்டில் இறைச்சிக்கறி சமைத்தால் அவனுக்கென்று ஒரு பங்கினை மறக்காமல் கொடுத்து விடும் சுகுணா, இவன் ஒதுங்கியே போனாலும் விடாமல் நட்புப் பாராட்டும் அரவிந்தன் என்று, இவர்களுக்கெல்லாம் அவன் செய்கிற பிரதியுபகாரம் என்ன? இதுவா?
யாருமே இல்லாமல் இருக்கிறவன் உறவுபோல் கிடைத்த இந்த நல்லுள்ளங்களுக்குச் செய்வது சரியா?
யோசிக்காமல் புரிந்துவிட்ட பிசகு, பேசாமல் தீராது என்று தெரிந்ததால் தான் வந்திருந்தான். இன்றோடு, இதைப் பேசி முடித்துவிட்டு முற்றிலுமாக ஒதுங்கிவிட வேண்டும் என்கிற முடிவோடு, அவளுக்காகக் காத்திருந்தான்.
சற்று நேரத்திலேயே அவளின் ஸ்கூட்டியும் வந்து இவனருகில் கரை ஒதுங்கிற்று. இதயத்தின் தடதடப்புச் சற்றே அதிகரித்தது. ஹெல்மெட்டை கழற்றி வைத்துவிட்டு அங்கிருந்த வாங்கிலில் சென்று அமர்ந்துகொண்டாள், கமலி. அதே வாங்கிலின் அடுத்த முனையில் கூட, அவனால் அமர முடியவில்லை. அவளோடு பேசுவதற்கு ஏதுவாக, அளவான இடைவெளியில், அவளைப் பார்த்தபடி நின்றான்.
இடைவெளி விட்டு இருவர் அமர்வதால் தவறாகப் படச் சாத்தியமில்லாத நீண்ட வாங்கு. இருந்தும் அமராமல் நிற்கிறான். சினம் துளிர்க்க, “பக்கத்தில இருந்தா உங்கட கற்புக் கரைஞ்சு போயிடும் எண்டு பயமா?” என்றாள் எரிச்சலோடு.
பதட்டம் போய்ச் சிரிப்பு வந்து விடும் போலாயிற்று கிருபனுக்கு. அவளின் வாய்த்துடுக்கு அவன் அறியாததா? சிரிப்பை வேகமாக மறைத்துக் கொண்டு, அதை விட வேகமாக, மற்ற முனையில் அமர்ந்து கொண்டான்.
“கவனம்! காத்து அடிச்சுக்கொண்டு போயிடும்!” என்றாள் கடுப்புடன்.
அவன் பேசாமல் பார்த்தான்.
“பக்கத்தில இருக்கிறதுக்கே இவ்வளவு யோசிக்கிற நீங்க, அண்டைக்கு ஏன் அப்பிடிக் கேட்டீங்க?” என்று, எந்த முன்னுரையும் இல்லாமல் ஆரம்பித்தாள், கமலி.
அவன் முகம் சுருங்கிப் போயிற்று. ‘நீ வேணும் எண்டு நினைச்சன். அதால கேட்டன்!’ என்பதைச் சொல்ல முடியவில்லை. இப்போதெல்லாம் இரவுகள் எல்லாம் உன் நினைவுகளோடே கழிகிறது என்பானா? இல்லை, உன்னைத் தாண்டிய உலகம் ஒன்று என்னிடம் இல்லை என்பானா? விழிகள் தவிப்புடன் அவளில் படிந்து மீண்டது.
மனத்தைத் திறக்கிற சாவி எல்லோரிடமும் இருந்துவிடுவதில்லையே.
“சொல்லுங்கோ! என்ன பிரச்சினை உங்களுக்கு? இந்த சொறி எனக்குச் சொல்ல வேண்டாம். நீங்க பாக்கிற, சந்திக்கிற எல்லாப் பெட்டைகளிட்டயும் போய் என்னக் கலியாணம் கட்டுறியா எண்டு கேக்க மாட்டீங்க தானே? பிறகு ஏன் என்னட்ட மட்டும் அப்பிடிக் கேட்டீங்க? உங்களச் சலனப் படுத்திற மாதிரியோ இல்ல, அப்பிடி யோசிக்கத் தூண்டுற மாதிரியோ நான் நடந்தேனா?”
அவளின் கேள்வியில் அவன் பதறிப் போனான். “என்ன இது? நீ அப்பிடியான பிள்ளை இல்ல. நான் ஏதோ யோசிக்காமப் பாத்த வேலைக்கு…” அவளை ஒருமையில் அழைக்கிறோம் என்பதைக் கூட உணராமல் அவசரமாகச் சொன்னான், அவன்.
அவள் அவனை முழுமையாகப் பேசி முடிக்க விடவில்லை. நடுவில் இடையிட்டு, “இல்ல! நீங்க யோசிக்காமக் கதைக்க இல்ல!” என்று, அடித்துச் சொன்னாள்.
அவன் திகைப்புடன் பார்த்தான்.
“அண்டைக்கு நீங்க உடனேயே சொன்ன சொறிய வச்சு இவ்வளவு நாளும் நானும் அப்பிடித் தான் நினைச்சனான். ஆனா, அப்பிடி இல்லை எண்டு உங்கட வீட்டை வந்து உங்களைப் பாத்த பிறகு தான் தெரிஞ்சது. எங்கட வீட்டை வாறேல்ல. அண்ணாவோட முந்தி மாதிரிப் பழகிறேல்ல. அதுக்காவது நீங்க என்னட்ட அப்பிடிக் கேட்டது காரணம் எண்டு சொல்லலாம். என்னவோ வாழ்க்கையே முடிஞ்சு போன ஆள் மாதிரி உங்கட இந்த மெலிவுக்கு என்ன காரணம்? நானே அதைப் பெருசா எடுக்கேல்ல. நீங்க மட்டும் ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்து, இப்பிடி மாறிப்போய் இருக்கிறீங்க? அண்டைக்கும் பகிடிக்குத்தான் என்ர நம்பர் இல்லையா எண்டு கேட்டனான். அதுக்கு என்ன எல்லாம் கேக்கிறீங்க?”
அவளின் கேள்விகளில் இருந்த உண்மையில் நெஞ்சமெங்கும் மிகப்பெரிய அந்தரிப்பு(தவிப்பு). பதிலைச் சொல்ல முடியாமல் பார்வையைக் கடலின் மீது அலையவிட்டான். அங்கே, ஆடிக்கொண்டிருந்த படகுகளைப் போலவே அவன் மனமும், நிலை குலைந்து தள்ளாடிக் கொண்டிருந்தது.
“நான் எப்பவுமே மெலிவு தான்.” அவன் சமாளிக்க நினைக்க, “டேய் சிம்ரன்! எனக்கு உங்களக் கிட்டத் தட்ட ஆறு மாதமாத் தெரியும்!” என்றாள் அவள், பல்லைக் கடித்துக்கொண்டு.

