அத்தியாயம் 1
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டிசுட்டான் என்னும் ஊரில் அமைந்திருந்தது அந்தத் திருமண மண்டபம். அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் அர்ச்சதை தூவி வாழ்த்த, சுபநேர சுப முகூர்த்தத்தில் சுபாங்கியின் கழுத்தில் பொன்தாலி பூட்டி, அவளைத் தன் மனைவியாக்கிக்கொண்டான் சந்திரகாந்தன்.
அந்த நொடியிலிருந்து கணவன் மனைவியாகிப்போன இருவரின் முகங்களும் பூரித்து மகிழ்ந்திருக்க, இரு வீட்டாருக்கும் மனம் நிறைந்திருந்தது. அதன் பிறகான சடங்குகள், பகல் உணவு என்று அத்தனையும் எந்தக் குறையும் இல்லாமல் நடந்து முடிந்தன.
அவர்களுடையது பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணம். நில அளவைத் திணைக்களத்தில் சந்திரகாந்தன் நல்ல பதவியில் இருக்க, சுபாங்கியும் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கிளார்க்காக வேலை பார்த்துக்கொண்டிருந்தாள். பொருத்தம் அமோகமாகப் பொருந்தியதும், இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்கள் என்பதும் சேர இதோ திருமணம் நடந்துமாயிற்று.
மேடை ஏறி வந்து, தமக்கையை ஒற்றைக் கரத்தால் அணைத்து, மனம் நிறைந்த வாழ்த்தினைச் சொன்ன அபயன், அன்றிலிருந்து தனக்கு அத்தானாகிவிட்டவனையும் சந்தோச மிகுதியில் இறுக அணைத்துக்கொண்டு வாழ்த்தினான்.
அப்படியே அக்கா, அத்தானோடு புகைப்படத்துக்கு நின்றுவிட்டு மேடையை விட்டு இறங்க, அவனைக் கவனியாது, அணிந்திருந்த பாவாடை தாவணியின் பாவாடையை இரண்டு கைகளாலும் தூக்கிப் பிடித்துக்கொண்டு, அந்த நான்கு படிகளில் இரண்டு படிகளைக் கடகடவென்று ஏறியிருந்தாள் அன்பினி.
மூன்றாவது படியில் காலை வைக்கப் போனவள் அங்கே இன்னொரு கால் வைக்கப்படவும் தன் காலைப் பின்னிழுத்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.
அவளையே பார்த்தபடி அடுத்த படியிலும் அவன் காலை வைத்தான். ஒரு கணம் தடுமாறி, வேகமாக இறங்கி, அவள் ஒதுங்கி நின்றுகொள்ள, அவன் இறங்கிப் போனான். அதன் பிறகுதான் மேடை ஏறிப்போனாள் அன்பினி.
“என்னம்மா?” தங்கை அவசரமாக ஓடி வந்ததைக் கண்டுவிட்டு வினவினான் சந்திரகாந்தன்.
“ஆக்கள் தாற என்வலப்புகளை(Envelope) இந்தப் பைக்க போடட்டுமாம் அண்ணா. அம்மா சொல்லிவிடச் சொன்னவா.” என்று வேலைப்பாடுகள் நிறைந்த குட்டிப் பை ஒன்றைக் காட்டிச் சொன்னவள், “அண்ணி, இத உங்களுக்குப் பின்னால வைக்கிறன். சிப்பும் இருக்கு. பூட்டி வைக்கலாம்.” என்று சொல்லிவிட்டு, சொன்னது போலவே அவளுக்குப் பின்னால் இருந்த இருக்கையில் வைத்துவிட்டுக் கீழே இறங்கினாள்.
“உங்கட தங்கச்சி நல்ல வடிவு.” போகிறவளையே பார்த்திருந்த சுபாங்கி கணவனிடம் பகிர்ந்தாள்.
“என்ர தங்கச்சி எல்லா.” என்றான் அவன் சிரிப்புடன்.
“ஓ!” புருவங்களை வேண்டுமென்றே உச்சிமேட்டுக்கு உயர்த்தினாள் சுபாங்கி.
“பின்ன இல்லையா?”
புதுக் கணவன். கொஞ்ச நாள்களாகக் கைப்பேசி வழியாகப் பேசி நெஞ்சில் நேசத்தை வேறு வரவழைத்துவிட்டவன். எப்படி இல்லை என்று சொல்லுவாள்?
மலரத் துடித்த முறுவலை அடக்கியபடி அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். உள்ளம் இனிய உணர்வுகளில் உற்சாகமாகத் திளைத்தது.
அங்கே நண்பனின் அருகில் அமர்ந்திருந்த அபயனின் பார்வை, மேடையிலிருந்து இறங்கிப் போனவளையே தொடர்ந்தது.
“என்ன மச்சான், பார்வை பலமா இருக்கு?” பக்கத்தில் அமர்ந்திருந்த நண்பன், அவன் பார்வையைக் கவனித்துவிட்டு வினவினான்.
“அத்தான்ர தங்கச்சியடா.”
“அது தெரியுது. நீ ஏன் பாக்கிறாய்?”
“தனியா அம்பிடுறாள்(அகப்படுகிறாள்) இல்ல. அதான்.”
“ஓ!” வேண்டுமென்றே அவன் முகத்தைக் குறுகுறு என்று பார்த்தபடி அவன் இழுக்க, அவன் முகத்தைப் பற்றித் தள்ளிவிட்டான் அபயன். “என்னைக் கண்டாலே ஓடுறாளடா. அதான்.” என்றான் சிரிப்புடன்.
அவன் தாடையைப் பற்றித் தன் புறமாகத் திருப்பி, “உனக்குள்ள என்ன நடக்குது? சொல்லு சொல்லு சொல்லு!” என்றான் நண்பன்.
“ஒண்டும் நடக்கேல்ல. நீ தள்ளு தள்ளு தள்ளு!” என்றவன் அவள் மண்டபத்தை விட்டு வெளியே செல்வதைக் கண்டுவிட்டுத் தானும் நடந்தான்.
அங்கே யாருக்கோ பலகாரப் பையைக் கொடுக்க மறந்துவிட்டாள் போலும். ஓடிப்போய்க் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தாள் அன்பினி.
அவனைக் கவனிக்காமல் அவள் உள்ளே செல்ல முயல, “ஒய்!” என்றான் சத்தமாக.
அன்பினியின் கால்கள் அப்படியே நின்றுவிட்டன. குரலை வைத்தே யார் என்று இனங்கண்டுகொண்ட அவள் நெஞ்சு மெலிதான பயத்தில் தடதடத்தது.
அவளுடைய அண்ணாவுக்கும் அவனுடைய அக்காவுக்கும் திருமணம் நிச்சயமானதிலிருந்து இவர்கள் அவர்கள் வீட்டுக்கும் அவர்கள் இவர்கள் வீட்டுக்கும் என்று அடிக்கடி போய்வருவார்கள். அப்போதெல்லாம் அண்ணியாகப் போகிறவரின் தம்பி என்று அவனோடு பிரியத்தோடுதான் பழகியிருக்கிறாள்.
ஒருமுறை ஏதோ கொடுத்துவிட்டுப் போவதற்காக அவர்கள் வீட்டுக்கு அவன் வந்திருந்தபொழுது, இவள்தான் தேநீர் ஊற்றிக் கொடுத்தாள்.
அருந்தியவனுக்கு இனிப்புக் குறைவாக இருந்துவிட்டது போலும், “என்ன, இப்பவே சீதனத்துக்குக் காசு சேர்க்கிறீரோ?” என்று அதட்டியிருந்தான் அவன்.
அவள் புரியாது விழிக்க, “போம், போய்ச் சீனி போட்டுக்கொண்டு வாரும்!” என்று தேநீர்க் கோப்பையைக் கொடுத்து விரட்டியிருந்தான்.
அன்றைக்குப் பிறகு அவள் அவன் பக்கமே போவதில்லை. ஆனாலுமே கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் அவளை அரட்டி உருட்டிவிடுவான் அவன்.
இதோ திரும்பவும் மாட்டிக்கொண்டாள். இப்படியே அவன் கூப்பிட்டது கேட்காதது போன்று மண்டபத்துக்குள் ஓடிவிடலாமா என்று அவள் யோசிக்கையில், “என்ன? பாத்தும் பாக்காத மாதிரிப் போறீர்? மாப்பிள்ளை வீட்டுத் திமிரக் காட்டுறீரோ?” என்றதும் அரண்டுவிட்டாள்.
“ஐயோ இல்ல இல்ல. உங்கள நான் பாக்கேல்லை. அதான்.” என்றபடி அவன் முன்னால் வேகமாக வந்து நின்றாள்.
“நான் நம்ப மாட்டன்!”
“இல்ல. உண்மையாவே உங்கள நான் பாக்கேல்ல.”
“அப்ப பாத்தா வந்து கதைப்பீரா?”
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் அன்பினி.
“சொல்லும். வந்து கதைப்பீரா இல்லையா?”
“கதைப்பன்.”
“எங்க இப்ப கதையும் பாப்பம்!”
இப்படிச் சொன்னால் என்ன கதைப்பது? அவள் அவனையே பார்த்து விழித்தாள்.
அவனுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலாயிற்று. அதை உதட்டுக்குள் ஒளித்துக்கொண்டு, “என்ன கதைக்க மாட்டீரோ? இப்பவே போய் அத்தானிட்ட நியாயம் கேக்கிறன்.” என்று அவன் திரும்ப, “இல்ல இல்ல. நான் கதைப்பன்.” என்றாள் அவசரமாக.
“அப்ப கதையும்.”
“அது… எப்பிடி இருக்கிறீங்க?”
“நல்லாவே இல்ல.”
‘நல்லா இல்லையா?’ விழித்துவிட்டு, “ஏன்?” என்றாள்.
“நீர் என்னோட கதைக்கவே இல்ல. அதால நான் நல்லாவே இல்ல.”
“சாப்பிட்டீங்களா?”
“நான் சாப்பிட்டதை நீர் பாக்கேல்லையோ?”
பார்த்தாள்தான். கதை என்பவனிடம் வேறு என்னதான் கதைப்பது?
“இவ்வளவுதானா உம்மட கதை?”
“அது… படிப்பெல்லாம் எப்பிடிப் போகுது?”
“நல்லாப் போகாட்டி நீர் சொல்லித் தரப்போறீரா?”
அப்போதுதான் அவன் தன்னைச் சீண்டுகிறான் என்று மெல்ல விளங்க, “அம்மா தேடப்போறா.” என்றாள், மண்டப வாசலையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தபடி.
“என்னோட கதைப்பன் எண்டு சொன்னீர்.”
“அதான் கதைச்சிட்டனே.” விடுகிறான் இல்லையே என்கிற அல்லாட்டத்துடன் சொன்னாள்.
“எது, எப்பிடி இருக்கிறீங்க எண்டு கேட்டதா?”
அவள் பதில் சொல்லாமல் நின்றாள். அவனுக்கும் அவளைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் விடவும் மனமில்லை. ஏதோ ஒரு ஈர்ப்பு இன்னும் சீண்டச் சொன்னது.
“சரி, நான் கேக்கிறதுக்காவது பதில் சொல்லும்.”
“ம்!” என்று தலையை ஆட்டினாள் அவள்.
“ஏ எல் எக்ஸாமுக்கு ரெடியாகியாச்சோ?”
“ஆகிக்கொண்டு இருக்கிறன்.”
“இன்னும் மூண்டு மாதம் இருக்கு என்ன?”
ஆம் என்று தலையை அசைத்தாள்.
“பாசாகிடுவீரா?”
அவளுக்குக் கோபம் வந்தது. நல்ல மார்க்ஸ் எடுப்பாயா என்று கேட்டிருந்தால் வேறு. அதென்ன சித்தியடைவாயா என்பது? அவள் என்ன அந்தளவுக்கு மக்கா? பார்வையால் அவனை வெட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“சொல்லும். பாசாகிடுவீரா?”
“நல்ல ரிசெல்ஸ் எடுப்பன்!” என்றாள் ரோசத்தோடு.
“பிறகு என்ன படிக்க விருப்பம்?
“BA முடிக்க விருப்பம்.”
“முடிச்சு?”
“டீச்சராக விருப்பம்.”
“ஆகி?”
அவளுக்குக் கொஞ்சம் கடுப்பாயிற்று. “படிப்பிக்கப் போறன்.” என்றாள் வெடுக்கென்று.
“படிப்பிச்சு?” என்றான் அதற்கும் அசையாமல்.
அவளுக்குக் கோபத்தில் முகம் சிவந்து போயிற்று. இனி அவனுக்குப் பதிலே சொல்லக் கூடாது என்கிற பிடிவாதத்துடன் உதட்டை அழுத்தி மூடிக்கொண்டு நின்றாள்.

