“என்ன சத்தத்தைக் காணேல்ல? கேக்கிற ஒரு கேள்விக்குக் கூட ஒழுங்காப் பதில் சொல்லத் தெரியேல்ல. இதில நீர் டீச்சர் ஆகப்போறீர்!”
“நீங்க சும்மா சும்மா கேட்டா நான் என்ன சொல்ல? நான் போறன்.” படபடவென்று சொல்லிவிட்டு ஓடிப்போயிருந்தாள்.
போகிறவளையே பார்த்து நின்றவனின் உதட்டோரம் மெல்லிய முறுவல்.
அதன்பிறகு வந்த நாள்களில் அவளைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி அமைந்தாலும் அவனிடம் அவள் தனியாக மாட்டவில்லை. அவள் உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதில் முனைப்பாகிவிட, வவுனியா பல்கலையில் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை அறிவியல்(Bachelor of Science in Information Technology) முதல் வருடம் படிக்கும் இருபத்தியொரு வயது நிரம்பிய அபயனும் தன் படிப்பில் கவனமானான்.
சந்திரகாந்தன் சுபாங்கி இருவரினதும் இனிய இல்லறத்தின் பயனாக அடுத்த மூன்று மாதத்திலேயே சுபாங்கி கருவுற்றாள். இரு வீட்டுக்கும் மிகுந்த மகிழ்ச்சி. அன்பினியும் நல்லபடியாகவே பரீட்சைகளை எழுதி முடித்திருந்தாள்.
கருவுற்றிருந்ததால் கொஞ்ச நாள்களுக்கு அன்னை வீட்டில் இருந்துவிட்டு வருவதற்கு என்று வந்திருந்தாள் சுபாங்கி. அவளைப் பார்ப்பதற்காக அன்னையை அழைத்துக்கொண்டு வந்த அன்பினி, மீண்டும் அபயனிடம் மாட்டிக்கொண்டாள்.
சுபாங்கிக்கு என்று கொண்டு வந்த பழங்களை எடுக்க ஸ்கூட்டி அருகில் சென்றவேளை, அப்போதுதான் வெளியே சென்றுவிட்டு வந்த அபயன், தன் இருசக்கர வாகனத்தைக் கொண்டுவந்து அவளருகில் நிறுத்திவிட்டுத் தலைக்கவசத்தைக் கழற்றினான்.
மாட்டிக்கொண்டேமே என்று உள்ளூர ஓடினாலும் செயற்கைச் சிரிப்பு ஒன்றை அவனுக்கு அவசரமாகக் கொடுத்துவிட்டு, வேகமாக ஸ்கூட்டியின் இருக்கையைத் தூக்கி, உள்ளே இருந்த பையை அவள் எடுக்க, “என்ன, கிழவியாயிட்டீராம் எண்டு கேள்விப்பட்டன்.” என்றான் அவன்.
‘கிழவியா? அவளா?’ தன்னை ஒருமுறை குனிந்து பார்த்துவிட்டு, “என்ன சொல்லுறீங்க?” என்றாள் திகைப்புடன்.
“அத்தையாகப் போறீராம் எண்டா நீர் இன்னும் சின்ன பிள்ளையா? கிழவிதானே?”
‘அடப்பாவி! அப்ப நீயும்தானேடா கிழவன்.’ இதை வாயைத் திறந்து அவனிடம் கேட்கவா முடியும்?
“என்ன, பார்வை எல்லாம் பலமா இருக்கு?”
“இல்ல, ஒண்டும் இல்ல.” என்றுவிட்டு எப்படியாவது அவனிடமிருந்து தப்பித்து ஓட அவள் முயல, “எக்ஸாம் எல்லாம் வடிவா எழுதினீரா?” என்று தடுத்தான் அவன்.
அவள் வேகமாக ஆம் என்பதுபோல் தலையாட்டினாள்.
“கம்பஸ் எங்க போற பிளான்?”
“அது தெரியா. அண்ணாதான் சேர்த்துவிடுவார்.”
“எங்க எண்டாலும் போம். ஆனா எங்கட கம்பசுக்கு வரக் கூடாது!” என்றான் மிரட்டலாக.
ஏன் வரக்கூடாதாம் என்று கேள்வி உள்ளே ஓடினாலும் சரி என்று தலையாட்டினாள் அவள்.
“சரி, போய் ஒரு தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வாரும்!” என்றபடி தானும் பைக்கிலிருந்து இறங்கினான் அவன்.
“நானா?”
“பின்ன என்ன நானா?”
அவர்கள் வீட்டில் அவள் எப்படி?
“மரியாதையா ஊத்திக்கொண்டு வாறீர். இல்லையோ இத வச்சே பெரும் பிரச்சினை எடுப்பன்!”
அவள் பயந்துபோனாள். “இல்ல இல்ல, ஊத்திக்கொண்டு வாறன்.” என்றுவிட்டுத் திரும்ப, “ஃபோன் இருக்கா உமக்கு?” என்று கேட்டான் அவன்.
“இருக்கு.”
“நம்பர் சொல்லும்!” தன் கைப்பேசியை ஜீன்ஸ் பொக்கெட்டிலிருந்து எடுத்தபடி சொன்னான்.
“ஏ…ன்?”
“ஃபோன் நம்பர் என்னத்துக்குக் கேக்கிறது?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
அப்படி, அவர்கள் இருவரும் கைப்பேசியில் பேசும் அளவுக்கு அவசியம் எதுவும் இல்லையே. அதைவிட இப்படி எல்லாம் கொடுக்கக் கூடாது என்று கைப்பேசி வாங்கிக் கொடுக்கும்போதே காந்தன் எச்சரித்திருக்கிறான். அப்படியிருக்க எப்படிக் கொடுப்பாள்?
அவன் உறவினன்தான். என்றாலும்… அவன் விடும் சேட்டைகள் அவளைத் தயங்க வைத்தன.
“சொல்லும்!” என்றான் அவன் கைப்பேசியில் அவள் பெயரைப் பதிந்தபடி.
அண்ணியின் தம்பிதானே, கொடுத்தாலும் அண்ணா ஒன்றும் சொல்லமாட்டார் என்று உள்ளே ஓடினாலும் அவள் இலக்கங்களிலிருந்து இரண்டு இலக்கங்களை மாற்றிச் சொன்னாள்.
அவன் பதிந்துவிட்டு உடனேயே அவளுக்கு அழைத்தான். அவளிடமிருந்து எந்தச் சத்தமும் வராமலிருக்க, “எங்க ஃபோன்?” என்றான்.
“அது வீட்டில வச்சிட்டு வந்தனான்.”
அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “போனதும் எனக்கு எடுக்கிறீர்!” என்றான்.
அவள் சரி என்று வேகமாகத் தலையை ஆட்டிவிட்டு நகர, “இங்கதான் நிப்பன். தேத்தண்ணி ஊத்திக்கொண்டு வந்து தந்திட்டுப் போறீர்.” என்று உத்தரவிட்டான் அவன்.
உள்ளுக்குள் புகைந்தபடி அதற்கும் தலையை ஆட்டிவிட்டுப் போனாள் அவள்.
“என்ன பிள்ளை, இதில இருக்கிற ஸ்கூட்டில இருந்து இந்த பேக்கை எடுத்துக்கொண்டு வர இவ்வளவு நேரமா?” உள்ளே வந்த அவளிடம் சலித்தார் அன்னை இந்துமதி.
“இல்ல அவர்… அண்ணின்ர தம்பி எக்ஸாம் எப்பிடி எழுதி இருக்கிறன் எண்டு கேட்டவர் அம்மா.” என்று சமாளித்துவிட்டு, கையில் இருந்த பையைச் சுபாங்கியிடம் கொடுத்தவளுக்கு எப்படித் தேநீர் ஊற்றுவது என்கிற கேள்விதான் உள்ளே சுழன்றது.
பேசாமல் அன்னையிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாமா என்று நினைத்தாள். சொன்னதுபோல ஏதும் பிரச்சனைகள் செய்துவிடுவானோ என்றும் யோசித்தாள்.
ஒரு தேநீர்தானே, அதை எதற்கு அம்மாவிடம் சொல்ல என்று தன்னையே சமாதானம் செய்துகொண்டு, “மாமி, எனக்கு இன்னுமொருக்காத் தேத்தண்ணி வேணும்.” என்று பரமேஸ்வரியிடம் மெதுவாய்க் கேட்டாள்.
அவள் தயங்கி தயங்கிக் கேட்ட விதத்தில் அவருக்குச் சிரிப்பாயிற்று. “அதுக்கு ஏனம்மா இவ்வளவு மெல்லக் கேக்கிறீங்க? இருங்கோ ஊத்திக்கொண்டு வாறன்!” என்று அவர் எழவும், “இல்ல இல்ல. நீங்க இருந்து அம்மாவோட கதைங்கோ. நானே எனக்குப் பிடிச்ச மாதிரி ஊத்துறன்.” என்று அவசரமாகத் தடுத்தாள் அவள்.
முகம் மலர, “அதுக்கு என்ன? இதுவும் உங்கட வீடுதான். போய் ஊத்திக் குடியுங்கோ. சிங்குக்கு நேர மேல இருக்கிற கப்போர்ட்டுக்க எல்லாம் இருக்கு. சுபாங்கி ஒருக்கா காட்டிவிடம்மா.” என்றார் சுபாங்கியிடம்.
சுபாங்கியும் அவளுடன் வந்து தேயிலை, மா, சீனி(சர்க்கரை) எல்லாவற்றையும் காட்டிவிட்டு, “நான் ஊத்தித் தரட்டா?” என்று கேட்டாள்.
“இல்ல அண்ணி. நீங்க போய் இருங்கோ. நானே ஊத்துவன்.” உண்மையை மறைப்பதில் உண்டான உறுத்தலில் முகம் பாராமல் சொல்லி, சுபாங்கியை அனுப்பி வைத்தாள்.
தேநீரை ஊற்றி எடுத்துக்கொண்டு பின் பக்கத்தாலேயே அவனைத் தேடிக்கொண்டு போனவளுக்கு யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள், முதலில் என்ன விளக்கம் சொல்வது என்று நினைக்கவே உதறியது.
அங்கே அவன் எதிர்ப்படவும் அவனைப் பாராமல் தேநீரை நீட்டினாள்.
“நீரா ஊத்தினனீர்?” வாங்கியபடி வினவினான்.
அவள் ஆம் என்று தலையை அசைத்தாள்.
“கடவுள் சத்தியமா எண்டு சொல்லும்!”
இதற்கெல்லாமா சத்தியம் செய்வது என்று உள்ளே நொந்துகொண்டாலும், “கடவுள் சத்தியமா நான்தான் ஊத்தினான். வேணுமெண்டா உங்கட அம்மாட்டக் கேட்டுப் பாருங்கோ.” என்றாள் மெல்லிய கோபத்தோடு.
“ம்ம் கோபம் எல்லாம் வருது.” அவளைப் பார்த்தபடியே ஒரு மிடறு பருகிப் பார்த்துவிட்டு, “அதென்ன உங்கட வீட்டுச் சொத்து எண்டதும் மிச்சம் பிடிப்பீர். எங்கட வீட்டுச் சொத்து எண்டா மட்டும் தண்ணியாச் சிலவழிப்பீரோ?” என்று கேட்டான்.
ஒரு நொடி விழித்தாலும், “சீனி(சக்கரை) கூடிட்டுதா?” என்றாள் யோசனையோடு. அவள் சுவை பார்த்தபோது நன்றாகத்தானே இருந்தது.
“நான் என்ன பொய்யா சொல்லுறன்? நீரே குடிச்சுப் பாரும்!” என்றதும் அரண்டு போனவள், “இல்ல, நீங்களே குடிங்க!” என்றுவிட்டு ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் ஓடி வந்திருந்தாள்.
உதட்டோரம் குட்டியாகச் சிரிப்பு மலர, வெகு சுவையாக இருந்த தேநீரை இரசித்துப் பருகினான் அபயன்.
அன்று மாலை முழுக்க அவள் அழைப்பாள் என்று காத்திருந்து ஏமாந்துபோனான். அடுத்தடுத்த நாள்களில் அவன் அழைத்தும் அவள் ஏற்காமல் இருக்க, சுபாங்கி அறியாமல் அவளின் கைப்பேசியை ஆராய்ந்தான். அப்போதுதான் அவள் இலக்கத்தை மாற்றித் தந்து, தன்னை முட்டாளாக்கியிருக்கிறாள் என்று அவனுக்குத் தெரியவந்தது.

