கேட்பார் இன்றிக் காதல் 10 – 1

அத்தியாயம் 10

தாலி கட்டுகிறேன் என்று சொல்லிக்கொண்டு, அபயன் எப்போது தன் முன்னால் வந்து குதிப்பானோ என்கிற பயத்திலேயே அந்த வார இறுதியைக் கழித்திருந்தாள் அன்பினி.

அவனோ அப்படி எதுவும் செய்யாமல் வேலைக்காகக் கொழும்பு சென்று சேர்ந்திருந்தான். அதில் அவனை நன்றாகவே கேலி செய்து, சீண்ட ஆரம்பித்திருந்தாள் அன்பினி.

“உயிரா விரும்பிற பெட்டையின்ர கழுத்தில ஒரு செயின் போடத் தைரியமில்லை. ஆனா, இவருக்கு லவ் மூட் வந்திட்டுதாம். இதுக்கு அந்தப் பருத்தி மூட்ட கொடவுணுக்கையே இருந்திருக்கலாம்.” என்றாள் வேண்டுமென்றே.

அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “அடியேய் என்னடி இந்தளவுக்குக் கேவலப்படுத்திறாய்?” என்று கேட்டுச் சிரித்தான்.

“பின்ன என்ன? மாமனுக்கு லவ் மூட் வந்திட்டுதாமே. கொழும்புக்கு ஓடுறதுக்கு அந்த மூட் வந்தா என்ன, வராட்டி என்ன?”

“ஆக மொத்தம் எனக்குத் தைரியம் இல்ல?”

“ஓம் இல்லத்தான். இந்தா பாருங்க, என்ர கழுத்து வெறுமையாவே இருக்கு. ஆனா நான், எதைப் பற்றியும் யோசிக்காம உங்கட கைல செயினை போட்டுவிட்டனா, இல்லையா?”

“ஓ! அவ்வளவு பெரிய தைரியசாலி நீ! ஓகே, என்ர கண்ண ஒரு நிமிசத்துக்கு விடாமப் பார் பாப்பம்!” என்று சவால் விட்டான் அவன்.

“ஏன் பாக்க மாட்டனா? இவர் பெரிய காதல் மன்னன், வந்திட்டார் கண்ணைப் பார், மூக்கைப் பார் எண்டு சொல்லிக்கொண்டு.” என்று வாயடித்தபடி அவன் பார்வையைச் சந்தித்தவளால் சில கணங்களுக்கு மேல் முடியவே இல்லை.

கண்ணோரங்கள் சிரிப்பில் சுருங்க, அவளையே பார்த்திருந்தவன் அவளை என்னவோ செய்தான். அப்போதும் விடாமல் பார்க்க முயன்றாள். முடியவில்லை. வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டவளால் உதட்டில் மலர்ந்த சிரிப்பை மறைக்க முடியாமல் போயிற்று.

அவன் வாய் விட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பு மாட்டியிருந்த ஹெட்போன்களின் வழியே செவிக்குள் நேரடியாக நுழைந்து, தேகம் முழுவதும் பரவி, இசை மீட்ட, “நான் வைக்கிறன்!” என்று வேகமாகக் கைப்பேசியைத் துண்டித்தாள்.

அவனும் திருப்பி அழைக்கவில்லை. அழைக்கத் தோன்றவில்லை. சற்று முன்னர் நிகழ்ந்த அந்த அழகான நிகழ்விலேயே திளைத்தபடி அமர்ந்திருந்தான்.

பக்கத்தில் அவன் இல்லை என்றதும் எப்படியெல்லாம் வாயடிக்கிறாள்? அவனைக் கண்டாலே எந்தப் பக்கத்தால் ஓடலாம் என்று பார்க்கும் அன்பினியா இவள் என்று நினைக்குமளவில் இருந்தாள். அந்த அன்பினி ஒரு வகையாக அவனை ஈரத்தாள் என்றால், இந்த அன்பினி அவன் உலகத்தை மிக மிக அழகாக்கினாள்.

அதன் பிறகு வந்த நாள்களிலும் அவனும் அவளும் ஆசையாக எதிர்பார்த்திருந்த அந்த ஒரு தருணம் மட்டும் அமையவேயில்லை. ஒருசில முறைகள் அவளைப் பார்க்க வவுனியாவுக்கு அவன் வந்து போனாலும் செயின் அணிவிக்கும் அளவுக்கான தனிமை வாய்க்கவில்லை.

மூன்றாம் வருடத்தின் முதல் செமஸ்டர் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்தாள் அன்பினி. அந்த நேரத்தில் காந்தன் அவளின் திருமணப் பேச்சை எடுக்கவும் பயந்துபோனாள்.

“அண்ணா, எனக்குப் படிச்சு முடிச்சு வேலைக்குப் போகோணும். அதுக்குப் பிறகுதான் என்ன எண்டாலும்.” என்றாள் அவசரமாக.

“பிள்ளை சொல்லுற மாதிரி ஒரு வேலை கைல இருக்கிறது நல்லதுதானேப்பு. அதவிட இப்ப என்ன அவசரம்? வயது இருக்குத்தானே.” திருநாவுக்கரசுக்கும் அவசரமாக அவளுக்குத் திருமணம் செய்ய விருப்பமில்லை என்பதில் சொன்னார்.

“இப்பயே கட்டி வைக்க நானும் நினைக்கேல்ல அப்பா. பெடி நல்ல பெடி. சுகாதாரத்திணைக்களத்தில வேல. அதான் பேசி வைக்கலாம் எண்டு நினைச்சன்.”

“எல்லாம் சரியப்பு. பிள்ளைக்கு விருப்பம் இல்லாட்டி என்ன செய்றது?” என்று கேட்டார் இந்துமதி.

“சனிக்கிழமை போற கலியாணத்துக்கு அவரும் குடும்பத்தோட வருவார் அம்மா. சும்மா கதைச்சுப் பாப்பம். நானும் பெருசா எந்த நம்பிக்கையும் குடுக்கேல்ல. கலியாணத்துக்கு நாங்களும் வருவம், அங்க வச்சுக் கதைப்பம் எண்டுதான் சொல்லி இருக்கிறன். எங்கட எதிர்பார்ப்புகளுக்கு அவே பொருந்தி வராட்டி வேற பாக்கிறதுதானே.” என்று சொன்னான் காந்தன்.

அதுவும் சரியாகப்பட, திருநாவுக்கரசும் இந்துமதியும் அதன் பிறகு ஒன்றும் சொல்லவில்லை.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சுபாங்கி, அன்பினியைப் பார்த்தாளே தவிர நடுவில் வரவில்லை.

சனிக்கிழமை காலையே மொத்தக் குடும்பமும் திருமணத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். அந்த மாப்பிள்ளை வீட்டினரும் வருவதில் அன்பினியை அழைத்துச் செல்லவில்லை. இதையெல்லாம் அன்றே அபயனுக்கு அழைத்துச் சொல்லியிருந்தாள் அன்பினி.

இப்படித் திடீரென்று திருமணப் பேச்சை ஆரம்பிப்பார்கள் என்று அவனும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், “நீ யோசிக்காத. என்ன நடக்குது எண்டு பாப்பம். இந்தப் பேச்சு அடுத்த கட்டத்துக்கு நகருற மாதிரி இருந்தா நான் வீட்டில கதைக்கிறன்.” என்று சொல்லியிருந்தான் அவன்.

அன்பினிக்கோ அடிவயிறு கலங்கும் நிலை. ‘கடவுளே, இவர்கள் சொல்வதற்கு அந்த அவனின் குடும்பம் சம்மதிக்கக் கூடாது’ என்று கடவுளை வேண்டியபடி அமர்ந்திருந்தாள்.

பரமேஸ்வரி அழைத்து உணவு கொடுத்துவிடுவதாகச் சொன்னபோது, “இல்ல மாமி வேண்டாம். அம்மா சமைச்சு வச்சிட்டுத்தான் போனவா.” என்று சொல்லிவிட்டு, சோபாவில் விழுந்து, “ஃபிரீயா?” என்று கேட்டு அபயனுக்குக் குறுந்தகவல் தட்டிவிட்டாள்.

அவன் அழும் எமோஜி ஒன்றை அனுப்பிவிட்டான்.

ஏமாற்றத்துடன் அவனோடு பேசியவற்றைத் திரும்பவும் எடுத்துப் பார்த்தாள் அன்பினி. ஒவ்வொன்றாய் வாசிக்க வாசிக்க அவள் உதட்டில் முறுவல் அரும்பியது. அதுவும் கழுவாத பிளாஸ்கில் அவள் தேநீர் ஊற்றிக் கொடுத்ததற்கு அவன் காய்ச்சி எடுத்திருந்ததை வாசிக்கையில் அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

அப்போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. ‘வேண்டாம் எண்டு சொன்னதையும் கேக்காம மாமி சாப்பாடு குடுத்துவிட்டுட்டாவோ?’ என்று யோசித்தபடி வந்து எட்டிப் பார்த்தவள் விழிகள், வெளியே நின்றிருந்த அபயனைக் கண்டதும் விரிந்து போயின.

“அபய்! வாறன் எண்டு சொல்லவே இலை.” குரலில் ஆச்சரியம் அப்பட்டமாய்த் தெறிக்க ஓடிவந்து கதவைத் திறந்தாள்.

“உனக்குத் தைரியம் இருக்காடா எண்டு ஒருத்தி கேட்டா. அதான் அவளின்ர வீட்டுக்கே வந்து, அவளின்ர கழுத்தில தாலி கட்டுற அளவுக்குத் தைரியம் இருக்கு எண்டு சொல்லுறதுக்காகச் சொல்லாமக் கொள்ளாம வந்தனான்.” என்றபடி வீட்டுக்குள் நுழைந்து, பெரும் வில்லனின் உடல் மொழியோடு காலாலேயே வீட்டின் கதவை அடித்துச் சாற்றினான் அவன்.

அதில் சிரிப்பு மூண்டாலும் அடக்கி, “அபய் விளையாடாதீங்க. அதெல்லாம் சும்மா கதைக்கிறது.” என்று சமாளிக்க முயன்றாள்.

“எது? இதுக்குப் பருத்திமூட்ட கொடவுனுக்கையே இருந்திருக்கலாம் எண்டு சொன்னது சும்மா கதைக்கிறதோ?”

அவளுக்குத் திரும்பவும் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. காட்டிக்கொள்ளாமல், “வீட்டில ஒருத்தரும் இல்ல அபய்!” என்று எச்சரித்தாள்.

“அது தெரிஞ்சுதானே கொழும்பில இருந்து ஓடி வந்தனான்.”
அவன் வந்து சோபாவில் அமர்ந்துகொள்ள அவளுக்கு இன்னும் உதறியது.

“வீட்டுக்குப் போகேல்லையா?”

“அப்ப இது வீடு இல்லையா?”

“அம்மா அப்பா திரும்பி வந்தா பிரச்சினையாகிடும் அபய்.”

“அத அவே வந்த பிறகு பாப்பம். இப்ப எனக்கு ஒரு தேத்தண்ணி ஊத்தித் தா. உன்ர கையால குடிச்சு நிறைய நாளாயிட்டுது…” என்றவன் வேகமாக நிமிர்ந்து அமர்ந்து, “அம்மா தாயே, தயவு செய்து கப்பைக் கழுவிப்போட்டு ஊத்து!” என்றான் அவசரமாக.

இருந்த பதற்றமெல்லாம் மறைந்துவிட கலகல என்று சிரித்தாள் அவள். கூடவே, அவன் முகத்தில் தெரிந்த சோர்வில் சமையலறைக்கு நடந்தாள்.

பின்னாலேயே வந்து, அங்கிருந்த இருக்கையை இழுத்துப்போட்டுக்கொண்டு அங்கேயே அமர்ந்தான் அபயன்.

உள்ளுக்குள் அலறினாலும், “ஊத்தித் தாற தேத்தண்ணியை டக்கெண்டு குடிச்சுப்போட்டு அப்பிடியே ஓடிப் போறீங்க!” என்றபடி வேகமாய்த் தேநீர் ஊற்றும் வேலையைப் பார்த்தாள்.

“அதப் பிறகு பாப்பம். முதல் நீ தேத்தண்ணியத் தா. அப்பிடியே சாப்பிடவும் ஏதாவது தா. பசிக்குது.” என்றவனைக் கலவரத்துடன் திரும்பிப் பார்த்தாள்.

“என்ன?”

“இஞ்ச இருந்து போற ஐடியாவே இல்லையா?”

“போறதுக்கா அங்க இருந்து வந்தனான்?” என்று திருப்பிக் கேட்டவன் பார்த்த பார்வையில் பதறி, வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

error: Alert: Content selection is disabled!!