கேட்பார் இன்றிக் காதல் 10 – 2

தேநீரை ஒரு கப்பில் வார்த்து, அவனைப் பாராமல் நீட்டினாள். அவன் வாங்கவில்லை. “என்ர அன்பா வெக்கப்படுறாளோ?” அவளையே குறுகுறு என்று பார்த்தபடி வினவினான்.

“அபய்!” என்று அதட்டினாலும் அவள் முகம் இலேசாய்ச் சூடானது.

விரிந்த சிரிப்புடன் தேநீரை வாங்கி உறிஞ்சியவனின் பார்வை அப்போதும் அவளில்தான். வீட்டில் தனியாக இருக்கிறோம் என்றாக்கும் நலுங்கிய உடை ஒன்றில், கலைந்த தலையோடு இருந்தவள் அவனை ஏதோ செய்தாள்.

“நல்லாருக்கு!” ரசித்துப் பருகியவன், “உனக்கு?” என்றான்.

“இல்ல, எனக்கு வேண்டாம்.”

“அப்பிடிப் பாக்க வச்சுக் குடிக்கக் கூடாதே!” என்றவன் தன் கோப்பையை அவள்புறம் நீட்டவும் அவள் விழிகள் விரிந்தன.

“ம்!” அவளை நெருங்கி வந்து, உதட்டின் மீதே கோப்பையை வைத்தான். மீண்டும் முகம் சூடாக அவனைப் பாராமல் ஒரு மிடறு பருகினாள். அவளைப் பார்த்தபடியே அவனும் பருக, அதற்குமேல் அவன் முன்னால் நிற்க முடியாமல் அங்கிருந்து ஓட முயன்றாள் அவள்.

அவளை விடவும் வேகமாய்க் கோப்பையை மேசையில் வைத்துவிட்டு, அவளைப் பிடித்து நிறுத்தியிருந்தான் அவன்.

“என்னத்துக்கு இந்த ஓட்டம்?”

“அபய் ப்ளீஸ்!” தனிமையும் இந்த நெருக்கமும் அவளுக்குள் கலவரத்தை மூட்டின.

“என்ன பயம் உனக்கு? நான் ஏதும் செய்திடுவன் எண்டா?”

அப்படித்தான் என்று எப்படிச் சொல்ல? அவள் தடுமாறி நின்றாள்.

அவனும் விளையாட்டுக்குத்தான் பிடித்து நிறுத்தினான். ஆனால், யாருமில்லா வீடும், கிடைத்த முதல் தனிமையும், அவளின் முகச் சிவப்பும் சேர்ந்து, அவள் நெற்றியில் அவனுடைய முதல் முத்தத்தைப் பதிக்க வைத்தது.

அவள் பயந்து வேகமாய் விலக முயன்றாள். அப்போதும் விடாமல் தடுத்துப் பிடித்தபடி, “ஆகமொத்தம் வாய் எல்லாம் நான் தூரத்தில இருந்தா மட்டும்தான் போல.” என்றான் அவன்.

“உண்மையாவே கைகால் எல்லாம் நடுங்குது எனக்கு.” பாவமாகச் சொன்னவளைக் கண்டு சிரித்தபடி, “சரியான பயந்த கோழியடி நீ!” என்று அவள் நெற்றி முட்டினான்.

“மாமி அங்க உங்களைத் தேடப்போறா.”

“நான் வாறது ஒருத்தருக்கும் தெரியாது.”

வேறு என்ன சொல்லி அவனை அங்கிருந்து அனுப்புவது என்று தெரியாது திகைத்தாள் அவள். அவனுக்கும் இப்படி அவர்கள் தனியாக இருப்பது நல்லதில்லை என்று தெரியாமல் இல்லை. கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவற விடவும் மனமில்லை.

“எங்க அந்தச் செயின்?”

இருந்த பதற்றத்தையும் தாண்டிக்கொண்டு அவள் உதட்டில் முறுவல் அரும்பிற்று.

“மாமனுக்குத் திரும்பவும் லவ் மூட் ஸ்டார்ட் ஆகிட்டுது. கெதியாக் கொண்டுவா!” என்று கண்ணைச் சிமிட்டினான் அவன்.

‘பெரிய லவ் மூட்!’ உள்ளே சிரித்தாலும் அவனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு வாயை விடுவது பெரும் ஆபத்து என்பதில் வெளியே சொல்லவில்லை அவள்.

“உண்மையாப் போட்டுவிடப் போறீங்களா?”

“அடிப்பாவி! நான் அங்க இருந்து வந்ததே அதுக்குத்தான். பிறகும் இப்பிடி ஒரு கேள்வி கேக்கிறியே!” என்றான் அவன்.

அவளுக்குமே அந்தச் செயினை அவனே போட்டுவிட வேண்டும் என்கிற ஆசை உள்ளூர இருந்ததில் ஒன்றும் சொல்லவில்லை. அறைக்குச் சென்று அதை எடுத்துக்கொண்டு திரும்பியவள் பின்னால் நின்றவனைக் கண்டு அதிர்ந்துபோனாள்

“கடவுளே, உங்களை ஆரு அறைக்க எல்லாம் வரச் சொன்னது?”

“ஏன் வந்தா என்ன? உன்ர அறைதானே?” என்றவன் விழிகளைச் சுழற்றி அந்த அறையை நன்றாகப் பார்த்துவிட்டு, “பரவாயில்ல, நால்லாத்தான் வச்சிருக்கிறாய்.” என்று சிலாகித்தான்.

“பாத்தாச்சுத்தானே. வாங்க வெளில போவம்!” என்று நகர முயன்றவளை விடாமல் பற்றி நிறுத்தி, அவள் கையில் இருந்த செயினை வாங்கினான் அவன்.

அவளுக்கு அப்போதே பயத்தில் தொண்டை ஏறி இறங்கிற்று.

இருவரும் விளையாட்டாக ஆரம்பித்த ஒன்றுதான். ஆனாலும் தாலியாக அந்தச் செயினை நினைத்துவிட்டதில் அதை அவன் அவள் கழுத்தில் அணிவித்துவிட்டபோது, உணர்வுகளின் தளம்பலில் அவள் விழிகள் இலேசாகக் கலங்கிப் போயின. உள்ளம் தன்னிச்சையாய்த் தம்மிருவர் வாழ்வும் நன்றாக அமைந்துவிட வேண்டும் என்று இறைவனை வேண்டிற்று.

அவன் கைகளிலும் மெல்லிய நடுக்கம். அவளையே பார்த்தபடி அதை அணிவித்துவிட்டு அவள் முகம் பற்றி, நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டான். முதல் முறை போன்று விலகி ஓடமுடியாமல் நின்றாள் அன்பினி.

அவளை உணர்ந்தவனாக மிக மென்மையாய் அவளை அணைத்துக்கொண்டு, “அன்பா!” என்றான் மெல்ல.

“ம்?”

“உண்மையா எங்களுக்குக் கலியாணம் நடந்திட்டா?”

அவளுக்கு அப்படித்தான் தோன்றிற்று.

“எனக்கு என்னவோ உண்மையாவே கலியாணம் நடந்த மாதிரியே இருக்கு.”

அவள் இன்னுமே அவனுக்குள் ஒன்றினாள். அவன் அணைப்பும் இறுக, “அப்பிடியே முதலிரவையும் கொண்டாடிவிட்டுடுவமா?” என்று காதோரமாகக் கிசுகிசுத்தான்.

கணநேரம் புரியாமல் யோசித்தவள் புரிந்ததும் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டுவிட்டு முறைத்தாள்.

சிரித்தபடி பின்னால் போனவன் மீண்டும் வந்து அவளுடன் மோதி நின்றான். அவள் விலக்கித் தள்ள முயன்றும் விடவில்லை. “இனி எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. சும்மா சும்மா தள்ளி நில்லு, வெளில போ எண்டு சொன்னியோ தெரியும்!” என்று மிரட்டினான் அவன்.

அவளுக்குப் பயம் பிடித்துக்கொண்டது. அந்தச் செயினைப் போட்டுவிட்டதிலிருந்து அவன் காட்டும் நெருக்கம் அதிகமாய் இருக்க, “அபய் வேண்டாம்!” என்றாள் எச்சரிப்பாக.

“என்ன வேண்டாம்?”

“போதும், நடவுங்க உங்கட வீட்டை!”

“இல்ல. எனக்குப் போதாது. தாலி கட்டி இருக்கிறன். அதுக்கு இன்னும் ஏதாவது வேணும்.”

“அபய் ப்ளீஸ்…”

“என்ன ப்ளீஸ்? ஒரு கிஸ் கூடக் கிடைக்காதா?”

“எனக்குப் பயமா இருக்கு.”

“என்ன உனக்கு எப்ப பாத்தாலும் பயம்? சும்மா ஒரு விளையாட்டைக் கூட விளையாட்டா எடுக்க மாட்டியா நீ? உன்னைப் பாக்கோணும், உன்னோட கொஞ்ச நேரம் இருக்கோணும் எண்டு ஆசையா வந்தா, பயமா இருக்குப் போ எண்டுதான் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்!” என்றவனுக்கு இருந்த நல்ல மனநிலையே மாறிவிட, அறையை விட்டு வெளியேறப்போனான்.

அவளுக்கே ஒரு மாதிரியாகிப் போயிற்று.

ஓடிப்போய் அவன் கரம் பற்ற நிறுத்தி, “சொறி!” என்றாள் தவிப்புடன்.

“ப்ச்! நீ விடு!” தன் கையை உருவ முயன்றான் அவன். அதற்கு விடாமல் பற்றியபடி, “அதான் சொறி சொல்லிட்டேனே. இன்னும் என்ன?” என்றாள் கெஞ்சலாக.

“ஒண்டும் வேண்டாம். நீ விடு! நான் போகோணும்!”

“ஓகே! ஒரே ஒரு கிஸ் மட்டும் சரியா?” என்றதும் சரக்கென்று திரும்பி அவளை நன்றாக முறைத்தான். “என்னைப் பாக்க உனக்கு எப்பிடி இருக்கு?”

அவளுக்கு அவனை எப்படி மலை இறக்குவது என்று தெரியவே இல்லை. “எல்லாத்துக்கும் இப்பிடிக் கோவப்பட்டா நான் என்ன செய்ய?” என்றவள் பற்றியிருந்த அவன் கரத்தை எடுத்து, அதில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, “இப்ப சந்தோசமா?” என்று கேட்கவும் கடுப்பாகிப்போனது அவனுக்கு.

அவள் என்ன என்று ஊகிக்க முதலே, அவள் பற்றியிருந்த கையாலேயே அவளை ஒரு சுழற்றுச் சுழற்றித் தன்னிடம் கொண்டு வந்து, தாடையைத் தாங்கி, “கிஸ் எப்பிடித் தாறது எண்டு இப்ப சொல்லித் தாறன்.” என்றுவிட்டு அவள் இதழ்களைச் சிறை செய்தான்.

அவள் விழிகள் இரண்டும் வெளியே வந்துவிடும் அளவுக்கு விரிந்து போயின. இமைக்கவும் மறந்து அவனையே பார்த்தாள். அவனுக்கும் வெட்கம் வந்தது. “அடியேய், என்னையே பாக்காம கண்ணை மூடி அனுபவி!” என்றான் செல்ல அதட்டலாக.

படக்கென்று விழிகளை அவள் மூடிக்கொள்ள, அவள் நெற்றியோடு நெற்றி முட்டிச் சிரித்தான் அவன். “உன்னை எல்லாம் வச்சுக்கொண்டு ஒரு கிஸ் கூட அனுபவிக்கேலாது. இதுல முதல் இரவப் பற்றி எல்லாம் கனவு காணுறன் நான்.” என்றதும் அவளுக்கும் வெட்கமாயிற்று.

மெல்ல அவனிடமிருந்து விலக முயன்றாள். அவன் விடவில்லை. முதல் போன்று அல்லாமல், மிக மென்மையாய் அவளை அணைத்து, முகம் தாங்கி, இதமாய் அவள் இதழ்களில் மூழ்கினான். அவள் விழிகளும் தானாய் மூடிக்கொண்டன.

நொடிகள் சில கடந்தபின் நிறைவுடன் மெல்ல விலகி, “தேங்க்ஸ்!” என்றான் அவள் முகத்தையே ஆசையாகப் பார்த்து.

ஒன்றும் சொல்லாமல் தானாக அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள் அன்பினி.

error: Alert: Content selection is disabled!!