கேட்பார் இன்றிக் காதல் 11 – 1

அத்தியாயம் 11

அபயன் புறப்பட்டுச் சென்ற பின்னும் கூட ஒருவித மயக்க நிலையிலேயே நடமாடிக்கொண்டிருந்தாள் அன்பினி. அவன் தந்த நெருக்கம், அவன் பார்வை, அவன் அணைப்பு, அவன் முத்தம் என்று அவள் எண்ணங்கள் முழுவதிலும் அவனே நிறைந்து நின்றான். கவனத்தை வேறு எதிலும் பதிக்க முடியவில்லை.

கை அடிக்கடி அவன் அணிவித்துவிட்ட செயினை வருடிப் பார்த்தது. கண்ணாடி முன்னே நின்று தன்னைத் தானே அழகு பார்த்தாள். அவள் முகத்துக்குப் புதுப் பொலிவு வந்திருந்தது.

வீட்டினர் வரும் நேரமானதும் ஓடிப்போய் ஷேர்ட் வகையிலான சட்டை ஒன்றை அணிந்து, செயினை மறைத்துக்கொண்டாள்.

வந்தவர்களின் முகங்களில் அன்றைய நாளின் களைப்பையும் தாண்டிய பூரிப்பு. அவளுக்குப் பார்த்த அவனின் பெயர் ருத்ரனாம். வாட்ட சாட்டமாகவும் கண்ணுக்கு நிறைவாகவும் இருக்கிறானாம். பழக நல்ல மாதிரியாம். முக்கியமாக இந்தத் திருமணப் பேச்சுச் சரியாக வந்தால் அவள் படித்து முடித்து, வேலைக்குச் செல்லும் வரையிலும் காத்திருப்பதில் அவனுக்கு ஒன்றுமில்லையாம் என்று கதை கதையாகச் சொன்னார்கள்.

அதிலிருந்தே அவள் வீட்டினருக்கு அவனை மிகவும் பிடித்திருப்பது தெரிந்தது.

என்ன செய்து இதை நிறுத்தலாம் என்று அவள் தவித்துக்கொண்டிருக்க, “ஃபோட்டோ இருக்கு எல்லா. அதை அன்புக்குக் காட்டுங்கோவன். அவளும் பாக்கட்டும்.” என்று சொன்னாள் சுபாங்கி.

காந்தனும் அவளருகில் வந்து அமர்ந்து, கைப்பேசியில் இருந்த புகைப்படங்களைக் காட்டினான். இரண்டு தமக்கைகளுக்குத் திருமணமாகிவிட்டதாம். இவனும் ஒரு தம்பியும் இன்னும் இருக்கிறார்களாம். அந்த ருத்ரன் குறை என்று சொல்ல முடியாத தோற்றத்தில் பார்க்க நன்றாகத்தான் இருந்தான்.

“என்னம்மா, பிடிச்சிருக்கா?” ஆவலாகக் கேட்டார் இந்துமதி.

“இப்பவே ஏன் அம்மா இதெல்லாம்?” அவரின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் ஒருவித இயலாமையுடன் தன் அதிருப்தியை வெளிப்படுத்தினாள் அவள்.

“அந்தத் தம்பி உங்கட படிப்பு முடியிற வரைக்கும் பொறுத்திருக்கிறன் எண்டுதானே சொல்லுறார். அப்ப பாக்கிறதுல என்ன இருக்கு?”

“அப்பிடி அவர் ஏன் பொறுத்து இருக்கோணும்? எனக்கு இப்ப ஒண்டும் வேண்டாம். வேலைக்குப் போக ஆரம்பிச்ச பிறகே பாருங்க.” என்றாள் சற்றே பிடிவாதமாக.

“அந்த நேரம் இப்பிடி நல்ல சம்மந்தம் வரவும் வேணுமே பிள்ளை.”

“அம்மா சொல்லுறது சரிதானே அன்பு. தானா வந்து அமையிற நல்ல பெடியனை ஏன் விட? அதுவும் நீ சொல்லுற எல்லாத்துக்கும் அவன் ஓம் எண்டுதான் சொல்லுறான். அரசாங்க உத்தியோகம் வேற.” என்று, அன்னையின் பேச்சுக்கு வலுச் சேர்த்தான் காந்தன்.

“இப்ப அப்பிடித்தான் அண்ணா சொல்லுவினம். பிறகு பிறகுதான் எல்லாம் மாறும்.”

“என்ன கதைக்கிறாய் நீ? அப்பிடி அவே மாற நாங்க விடுவமா?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், “எனக்கு இப்ப எதுவும் வேண்டாம். அவ்வளவுதான்!” என்றாள் ஒருவிதப் பிடிவாதத்தோடு.

“என்னம்மா இது வீம்புப் பிடிவாதம்? உங்கட விருப்பத்துக்கு எல்லாம் நாங்க ஓம் எண்டு சொல்லி, அதுக்கு ஏற்ற மாதிரி அமைஞ்சு வாற சம்மந்தத்தை வேண்டாம் எண்டு சொல்லுறதுக்கு முறையான காரணம் சொல்லோணும்தானே?” இவ்வளவு நேரமாக அவர்கள் எல்லோரும் பேசுவதை அமைதியாக இருந்து கவனித்த திருநாவுக்கரசு கேட்டார்.

அவளுக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. மனத்தில் உள்ளதைச் சொல்லவும் தைரியம் இல்லை. என்னவோ எல்லோருமாகச் சேர்ந்து திருமணத்துக்கு அவளை நெருக்குவது போலிருக்க, “பிடிக்கேல்லை எண்டா பிடிக்கேல்லை அப்பா. வேற என்ன காரணம் சொல்லச் சொல்லுறீங்க? நான் மனதளவில இந்தக் கலியாணப் பேச்சுக்கு ரெடியா இல்ல. என்னை முதல் படிக்க விடுங்க.” என்றுவிட்டு அறைக்குள் ஓடி வந்தவளுக்குக் கைகால்கள் எல்லாம் கிடுகிடு என்று நடுங்கின.

நெஞ்சு வேறு படபடவென்று அடித்துக்கொண்டது. இத்தனைக்குப் பிறகும் கூட உண்மையைச் சொல்லத் தைரியம் வரவில்லை. இனி என்ன செய்வது என்று தெரியாது பொத்தென்று கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.

இங்கே, “என்ன எண்டு மெதுவா விசாரி!” என்று சுபாங்கிக்குக் கண்ணைக் காட்டினான் காந்தன்.

சுபாங்கி உள்ளே சென்றபோது பெரும் பதற்றத்தோடு அமர்ந்திருந்தாள் அன்பினி. முகமெல்லாம் சிவந்துபோயிருந்தது.

சுபாங்கியின் புருவங்கள் சுருங்கின. விருப்பம் இல்லை என்பது வேறு. ஒரு திருமணத்தை ஏற்கும் அளவுக்கு அவள் மனநிலை தற்போது இல்லாமலும் இருக்கலாம். அதற்காக இந்தளவில் பதற்றம் ஏன் என்கிற கேள்வி உள்ளே ஓட, அவள் அருகில் சென்று அமர்ந்தாள்.

அவள் எந்தக் கேள்வியும் கேட்கத் தேவை இல்லை என்பது போன்று, “எனக்கு நிம்மதியாப் படிக்கோணும் அண்ணி. கொஞ்சக் காலத்துக்கு எண்டாலும் வேலைக்குப் போகோணும். என்னதான் இப்ப எல்லாத்துக்கும் ஓம் எண்டு சொன்னாலும் பிறகு ஏதாவது ஒரு முறையான காரணத்தோட வருவீனம். அந்த நேரம் இந்தக் கலியாணம் வேண்டாம் எண்டு சொல்லேலுமா, அப்பிடிச் சொன்னாலும் அம்மா அப்பா விடுவினமா? முதல் எனக்கு அவரைப் பிடிக்கவும் இல்ல.” என்று படபடத்தாள்.

எல்லாவற்றையும் விட அவனைப் பிடிக்கவில்லை என்கிறவளை வற்புறுத்த இப்போது சுபாங்கிக்குமே விருப்பம் இல்லை. அதில், “உண்மையாவே வேற ஒண்டும் இல்லையா?” என்றாள் பார்வையில் கூர்மை ஏற.

தடுமாறி முகம் கவிழ்ந்தபடி, “இல்லை அண்ணி.” என்றாள் நடுங்கும் குரலில்.

அப்போதும் சுபாங்கியால் அவளை முழுமையாக நம்ப முடியவில்லை. ஆனாலும் ஒரு அளவுக்குமேல் குடைய விரும்பாமல், “சரி விடு. நான் உன்ர அண்ணாட்டச் சொல்லி விடுறன்.” என்று அவள் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு எழுந்துபோனாள்.

அங்கே விறாந்தையில் அமர்ந்திருந்த மூவரும் இவள் வெளியே வரவும் இவள் முகம் பார்த்தனர்.

“அவாக்கு ருத்ரனைப் பிடிக்கேல்லையாம்.”

இந்தளவு பிடிவாதமாக அவள் மறுக்கையில் அந்தப் பேச்சை மேலே முன்னெடுக்க வீட்டினரும் யோசித்தனர்.

அடுத்த சில நிமிடங்கள் மௌனத்திலேயே கழிய, “திடீரெண்டு கலியாணப் பேச்சை எடுத்ததும் பிள்ளைக்கு யோசிக்க ஏலாம இருக்குப் போல. கொஞ்ச நாள் போகட்டும், திரும்பவும் ஒருக்காக் கேட்டுப் பாப்பம். இப்போதைக்கு ருத்ரன் வீட்டிலயும் கொஞ்சம் யோசிக்கிறம் எண்டு சொல்லி வைங்கோ தம்பி. வேற சம்மந்தங்கள் அவேக்கு வந்தாலும் பாக்கட்டாம் எண்டும் சொல்லி விடுங்க.” என்றுவிட்டுப் போனார் திருநாவுக்கரசு.

சற்றே நிதானமானதும் கிடுகிடு என்று இங்கே நடந்தவற்றை எல்லாம் அபயனுக்குக் குறுந்தகவலாகத் தட்டிவிட்டாள் அன்பினி. அதை வாசித்த அவனும் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

சாதாரண மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை. ஆரம்ப நிலையிலான சம்பளம். எதிர்காலத் திட்டங்கள் ஓராயிரம் நெஞ்சில் திட்டங்களாகவே இருக்க, இந்த நிலையில் திருமணத்துக்கு அவன் தயாராகவே இல்லை. ஆனால், அந்த நிலை வந்தால் அதையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

அதில், “நீ எதையும் யோசிக்காத. ஏதும் எண்டால் நான் கதைக்கிறன். கவலைப்படாத!” என்று ஆறுதலாக அவளுக்குப் பதில் அனுப்பிவிட்டான்.

அவ்வளவு நேரமும் சந்தர்ப்பம் அமைந்தும் ஏன் உண்மையைச் சொல்லாமல் விட்டாய் என்று கோபப்படுவானோ என்கிற பயம் அவளுக்கு இருந்தது. அப்படி இல்லாமல், அவளைப் புரிந்துகொண்டு அவன் தேற்றியது உள்ளத்தைத் தொட, “நான் சொல்லி இருக்கலாம். ஆனா, எனக்குத் தைரியம் வரவே இல்ல. அண்ணி கேட்டும் இல்லை எண்டு சொல்லிட்டன். சொறி!” என்று அனுப்பி வைத்தாள்.

அதைப் பார்த்த அவன் உதட்டில் மெல்லிய புன்னகை. “நீ ஒரு பயந்த கோழி எண்டு எனக்குத் தெரியும்தானே. அதால பரவாயில்ல விடு. நானே பாக்கிறன்.” என்று பதில் அனுப்பினான் அவன்.

தானாகவே ஒரு ஆசுவாசம் பிறக்க, “தேங்க்ஸ்!” என்றதற்கு ஒரு முத்தமிடும் எமோஜி பறந்து வந்தது. ‘இவன் ஒருத்தன்!’ என்று செல்லமாய்ச் சலித்துக்கொண்டாலும் அவள் உதட்டில் முறுவல் மலர்ந்தது.

அடுத்தநாள் மாலை காந்தனுடனேயே அன்பினி வவுனியாவுக்குப் புறப்பட்ட பிறகு மகளோடு தாய் வீட்டுக்கு வந்தாள் சுபாங்கி.

“மாமா!” என்று ஓடி வந்த தளிரைத் தானும் இரண்டெட்டில் வந்து அள்ளிக்கொண்டு, “வாங்க அக்கா!” என்று தமக்கையையும் வரவேற்றான் அபயன்.

error: Alert: Content selection is disabled!!