“என்னம்மா, தம்பி வவுனியாவுக்கு வெளிக்கிட்டுட்டாரா?” உள்ளே வேலையாக இருந்த பரமேஸ்வரி, இவர்களின் குரல் கேட்டதும் வாசலுக்கு வந்தபடி வினவினார்.
“ஓம் அம்மா. அண்ணனும் தங்கச்சியும் அந்தப் பக்கத்தால போக, இவனும் நிக்கிறான் எண்டு நான் இந்தப் பக்கத்தால இஞ்ச வந்திட்டன்.” என்றபடி இருவரும் அங்கே விறாந்தையிலேயே அமர்ந்து, பேசிக்கொண்டு இருந்தனர்.
அபயனும் தளிரோடு அங்கேயே அமர்ந்து டீவியில் கேம் விளையாட ஆரம்பித்தான். கவனம் மட்டும் நேற்று அங்கே நடந்தவற்றைப் பற்றித் தமக்கை ஏதும் சொல்கிறாளா என்பதில் இருந்தது.
தளிரை நேர்சரிக்கு சேர்ப்பதில் ஆரம்பித்த அவர்கள் பேச்சு, நேற்றைய தினம் சென்று வந்த திருமணத்தைத் தொட்டு, அங்கே அன்பினிக்குப் பார்த்த மாப்பிள்ளை ருத்ரனைப் பற்றி வரவும், “என்ன பிள்ளை சொல்லுறாய்? எங்களிட்ட ஒரு வார்த்தை கேக்கேல்லை?” என்றார் பரமேஸ்வரி உடனே.
அன்னையின் கேள்வி சுபாங்கிக்கு விளங்கவில்லை. “உங்களிட்ட என்ன சொல்லக் கிடக்கு? இன்னும் ஒண்டும் சரி வரேல்லை அம்மா. அன்பும் தனக்கு இப்ப அதெல்லாம் வேண்டாம் எண்டு சொல்லிட்டாள்.” என்றாள்.
“நல்லதாப் போச்சு. அன்பு படிப்பை முடிச்சதும் தம்பிக்குக் கேப்பம் எண்டு நினைச்சிருந்தனான்.” என்று அவர் தன் ஆசையைச் சொல்ல, வேகமாகத் திரும்பித் தாயைப் பார்த்தான் அபயன். இப்படி ஒரு திருப்பத்தை அவன் எதிர்பார்க்கவே இல்லை!
தமக்கையின் பார்வை அளவிடுவது போன்று அவனில் நிலைத்தது.
“என்னக்கா?” என்றான் எதையும் காட்டிக்கொள்ளாமல்.
அவனிடம் ஒன்றும் இல்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “இதை ஏன் நீங்க முதலே என்னட்டச் சொல்லேல்ல? அப்பாக்குத் தெரியுமா?” என்று விசாரித்தாள் சுபாங்கி.
“இப்ப கொஞ்ச நாளாத்தான் இந்த ஆசை எனக்கு வந்தது. படிக்கிற பிள்ளைகள், அதைவிட ஒரே இடத்தில படிக்கினம், இப்பவே அதைப் பற்றிக் கதைச்சு, ரெண்டு பேரின்ர மனதையும் கெடுக்க வேண்டாம் எண்டு நினைச்சன்.”
“அப்பிடி நீங்க நினைச்சாக் காணுமா அம்மா. உங்களுக்குத் தெரியாம என்ன எல்லாம் நடக்குதோ ஆருக்குத் தெரியும்.” என்ற தமக்கையின் பேச்சில் அவனுக்கு இரத்த அழுத்தம் அதிகரித்த நிலை.
ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், “என்ன, சாடை மாடையாக் கதைக்கிற மாதிரி இருக்கு?” என்று அவளோடு சண்டைக்குப் போனான்.
“எனக்கு என்ன பயமா மறைச்சுக் கதைக்க? நீயே சொல்லு, அவளுக்கும் உனக்கும் எந்தப் பழக்கமும் இல்லையா?” என்று நேரடியாகவே அவள் கேட்டுவிட, அவனால் சட்டென்று பதில் சொல்ல இயலாமல் போயிற்று.
“என்ன கேள்வி இது? அவா எனக்கு மச்சாள். பழக்கம் இல்லாம எப்பிடி இருக்கும்?”
“ஓ! அதாவது சொந்தம் எண்டுற அளவில மட்டும்தான் பழக்கம். அப்ப அவளுக்கு வேற எங்கயும் கலியாணம் பேசினா உனக்கு ஒண்டும் இல்ல?” என்றதும் உள்ளுக்குள் பல்லைக் கடித்தான் அவன்.
“இப்ப என்ன தெரியோணும் உங்களுக்கு?”
“நீங்க ரெண்டு பேரும் விரும்புறீங்களோ எண்டுற டவுட் எனக்கு இருக்கு. ஓமா இல்லையா எண்டு சொல்லு நீ.” தான் அவனுக்குத் தமக்கை என்று நிரூபித்தாள் சுபாங்கி.
சட்டென்று நிதானித்தான் அபயன். இனியும் சொல்லாமல் இருப்பது சரியாக வராது. அதே நேரம் ஆம், நேசிக்கிறோம் என்று சொன்னால், இதைப் பற்றி அன்பினி தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்று நிச்சயம் தமக்கை குறை நினைப்பாள். அதுவும் அவள் தனியாகச் சென்று விசாரித்தும் அன்பினி வாயைத் திறக்காதது நிச்சயம் பெரிய பிரச்சனையாகும்.
அதில், “எனக்கு அவளைப் பிடிக்கும்தான். இப்ப என்ன அதுக்கு?” என்றான் கோபம் போன்று.
“பிடிக்கும் எண்டா?”
“பிடிக்கும் எண்டா பிடிக்கும்.”
“வேற ஒண்டும் இல்ல?”
“இல்ல.”
“அப்ப ஃபோன தா, செக் பண்ணுவம்.” என்று கையை நீட்டினாள் அவள்.
அபயன் சற்று அரண்டுதான் போனான். “நான் என்ன பதினெட்டு வயசுப் பிள்ளையா? என்ர ஃபோன வாங்கி நீங்க செக் பண்ண? உங்கட மச்சாள் கொஞ்சம் பாக்கிற மாதிரி இருக்கிறாவே எண்டு சொன்னா, ஆகத்தான் சேட்டை விடுறீங்க.” என்று முறுக்கியவன் முதல் வேலையாகக் கைப்பேசியை ஜீன்ஸ் பொக்கெட்டினுள் திணித்துக்கொண்டான்.
“விளையாடாத அபய். நீ என்ன நினைக்கிறாய் எண்டு உண்மையச் சொல்லு. அவள் பிடிக்கேல்லை எண்டு சொன்னாலும் மாமா மாமிக்கு ருத்ரனைத் தவற விட விருப்பம் இல்லை. அங்க பொருத்தம் பாக்கக் குடுக்கப் போயினம். நீ இப்பவே சொன்னாத்தான் நான் ஏதும் கதைக்கிறது எண்டாலும் கதைக்கலாம். இல்லையோ பிறகு இருந்து நீதான் கவலைப்படுவாய்.” என்றதும் உண்மையில் அவன் கொஞ்சம் பயந்துதான் போனான்.
“அக்கா நானும் விளையாடேல்ல. உண்மையாவே எனக்கு அவளைப் பிடிக்கும். அவள் படிச்சு முடிச்சு வேலைக்குப் போகட்டும், அதுக்கிடையில நானும் இந்தப் பக்கம் என்ர வேலைல கொஞ்சம் திடமாயிடுவன், அதுக்குப் பிறகு உங்க எல்லாரிட்டையும் சொல்லலாம் எண்டு நினைச்சன்.” என்று ஒரு வழியாகத் தன் மனத்தைச் சொன்னான்.
“எல்லாம் சரி. அவள் உன்னப் பிடிக்கேல்ல எண்டு சொன்னா?”
“அப்பிடி எல்லாம் சொல்லமாட்டாள்!” என்றான் வேகமாக.
“அது எப்பிடி உனக்குத் தெரியும். நீதான் நீங்க ரெண்டு பேரும் விரும்பேல்லை எண்டு சொல்லுறியே.”
அவன் வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“நல்ல சம்பளத்தோட அரசாங்க உத்தியோகம் பாக்கிற அந்தப் பெடியனையே வேண்டாம் எண்டு சொன்னவள், இப்ப வேலைக்குச் சேர்ந்த உன்ன மட்டும் எப்பிடி ஓம் எண்டு சொல்லுவாள்? இதுல அவளுக்கு உன்னக் கண்டாலே நடுங்கும்.”
“அதெல்லாம் சொல்லமாட்டாள். நீங்க அவளையே கேட்டுப் பாருங்க.” என்றான் அவன் அப்போதும்.
“இவ்வளவு உறுதியாச் சொல்லுறாய் எண்டா உங்களுக்க என்னவோ இருக்கு. அப்ப, தாய் சகோதரம் எண்டு இருக்கிற நாங்க எல்லாம் அரை லூசுகள். நீங்க எங்களுக்கே தெரியாம எல்லா வேலையும் பாப்பீங்க!” என்றாள் சுபாங்கி கோபத்தோடு.
இதனால்தானே சொல்லாமல் இருந்தான். எப்படியாவது அவளைச் சமாளிக்க எண்ணி, “அக்கா…” என்று ஆரம்பித்தவனை இடை மறித்து, “அவாக்கும் விருப்பம் இருந்து, தம்பி மாதிரி அவாவும் ஆசைய மனதுக்க வச்சிருக்கிறா போல. தம்பிக்கு அது எப்பிடியோ தெரிஞ்சிருக்கு. அதான் இவ்வளவு உறுதியாச் சொல்லுறான்.” என்று மகனுக்காகப் பரிந்துகொண்டு வந்தார் பரமேஸ்வரி.
“இப்பிடியே இருங்க அம்மா. அவனும் நல்லா உங்களை ஏமாத்தட்டும்.” என்றாள் சுபாங்கி சினத்துடன்.
“சரி விடுங்கோம்மா. தம்பிதானே. அப்பா வரட்டும், அவரோடயும் கதைச்சுப்போட்டு இப்பவே கேப்பம்.” என்று பரபரத்தார் பரமேஸ்வரி.
அப்படித்தான் செய்ய வேண்டும் என்று சுபாங்கியும் எண்ணினாள். அதே நேரம், இவ்வளவு கேட்டும் உண்மை சொல்லாத தம்பி மீது அத்தனை கோபம் வந்தது அவளுக்கு.
தளிரையும் தூக்கிக்கொண்டு, “கடைக்குப் போயிட்டு வாறன் அம்மா.” என்று அவர்களிடமிருந்து நழுவி, வீட்டை விட்டு வெளியே வந்த அபயன், வாயால் காற்றை ஊதி வெளியேற்றி, தலையை உலுக்கிக்கொண்டான்.
அவனுக்கே இப்படி என்றால் நேற்று அவள் என்ன பாடு பட்டிருப்பாள் என்று இப்போது நன்றாகவே விளங்கிற்று.
மகளின் முகம் இன்னும் தெளியாமல் இருக்கவும், “என்னம்மா?” என்றார் பரமேஸ்வரி.
“எனக்கும் வடிவாத் தெரியேல்ல அம்மா. ஆனா கொஞ்ச நாளா ஒரு டவுட் இருக்கு. ஆரம்ப காலம் இவன் அவளை விடமாட்டான். சும்மா சொறிஞ்சுகொண்டே இருப்பான். ஆனா இப்ப அவள் இருக்கிற பக்கமே திரும்பிறேல்ல. அது என்னவோ கவனம் எடுத்துப் பாக்காம இருக்கிற மாதிரி இருக்கிறது. அண்டைக்கு ரெண்டு பேரும் ஒண்டா வந்தவே. ஒரு நாளைக்கு எத்தின பஸ் வவுனியாவிலிருந்து முல்லைத்தீவுக்கு வருது சொல்லுங்க. பார்ட்டி முடிச்சு அப்பிடியே விடியக்காலம பஸ்ஸில இவன் வந்தான் எண்டா அவளும் ஏன் அவ்வளவு நேரத்துக்கே வரோணும்? இப்பவும் பாருங்க, ஃபோன தராம எழும்பி ஓடிட்டான்.” என்று அவள் சொன்னவைகளை அவரால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
“சரி விடுங்கோம்மா. தம்பிதானே.” என்று சமாளித்தார்.

