கேட்பார் இன்றிக் காதல் – 12

அத்தியாயம் 12

அதன் பிறகும் பரமேஸ்வரி எவ்வளவோ ஆறுதலாய்ப் பேசியபோதும், தன் வாழ்க்கை என்று வருகையில் அவளை இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டானா அவள் தம்பி என்கிற அந்த மனவருத்தத்தை சுபாங்கியால் தவிர்க்க முடியாமல் போனது.

ஆனாலும் கூட, அன்று மாலை வீடு வந்த தந்தை குழந்தைவேலுவிடம் இதைப் பற்றிப் பேசினாள். இப்படி அவர் இதற்கு முதல் யோசித்து இராதபோதிலும் மறுக்கவில்லை. அன்பினியை அவருக்கும் பிடிக்கும் என்பதும், மகனுக்கு அவள் மீது விருப்பம் இருக்கிறது என்று அறிந்ததும் சேர்ந்து அவரையும் சம்மதிக்க வைத்தது.

“எல்லாத்தையும் மறைக்கிற இவனுக்குச் செய்யக் கூடாது எண்டுதான் நினைக்கிறன். பிறகு அவனுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாமப் போயிடும் எண்டதுக்காக மட்டும்தான் இவரோட கதைக்கப் போறன்.” என்று சுபாங்கி முறைப்புடன் சொன்னபோது அவனுக்கு ஒரு மாதிரியாயிற்று.

அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டபடி, “அக்கா, படிக்கிற காலத்திலேயே ஒருத்தியப் பிடிச்சிருக்கு எண்டு வந்து சொன்னா நல்லாவா இருக்கும்? அதவிட அவள் அத்தான்ர தங்கச்சி வேற. சும்மா விளையாட்டுத்தனமா நடக்கேலாது. அதோட வேலை கிடைச்சு, நானும் கொஞ்சம் நிலையானதும் சொல்லுவம் எண்டுதான் இருந்தனான். மற்றும்படி மறைக்கிற எண்ணம் உண்மையா இல்ல. என்ர அக்காட்ட அப்பிடி நான் நடப்பனா?” என்று அவள் முகம் பார்த்து அவன் கேட்டபோது, அவளுக்கு உள்ளம் நெகிழ்ந்து போயிற்று.

அன்று இரவு வவுனியாவிலிருந்து அழைத்த கணவனிடம் மெல்ல விடயத்தைப் பகிர்ந்துகொண்டாள்

அதுவும் அபயனுக்கு விருப்பம் என்பதை முன்னிலைப்படுத்தாமல், “அம்மாக்கும் அப்பாக்கும் தம்பிக்கு அன்பினியைக் கேக்கிற எண்ணம் இருந்திருக்குப் போல. அன்புக்குக் கலியாணத்துக்குப் பாக்கிறம் எண்டு முதலே தெரிஞ்சிருந்தா முதலே கேட்டிருப்பினமாம். தம்பிக்கும் விருப்பம் தானாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று அவன் விருப்பத்தைக் கேட்டாள்.

இதை எதிர்பாராததால் காந்தனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“என்ன ஒண்டுமே சொல்லாம இருக்கிறீங்க?”

“இல்ல, இத நான் யோசிக்கேல்ல. அதான் என்ன சொல்லுறது எண்டு யோசிக்கிறன்.”

“ஏன், பிடிக்கேல்லையா?” அவள் குரலில் மெல்லிய ஏமாற்றம்.

“பிடிக்கேல்லை எண்டு இல்ல. ருத்ரன் நல்ல வேலை, நல்ல சம்பளம். அதான்…” என்றவனை முடிக்க விடாது, “அன்பு கேக்கிற மாதிரி ஒரு ரெண்டு மூண்டு வருசம் போனபிறகு எண்டா தம்பியும் நல்ல நிலைக்கு வந்திடுவான்.” என்றாள் வேகமாக.

“உண்மைதான்…” என்றபடி நெற்றியைத் தேய்த்துவிட்டான் காந்தன். அவனுக்கும் அபயனில் அந்த நம்பிக்கை உண்டுதான்.

“இப்பிடி இழுத்தா நான் என்ன நினைக்க? அம்மா அப்பாக்கு என்ன சொல்லுறது?”

“இதெல்லாம் அவசரப்பட்டுப் பதில் சொல்லுற விசயம் இல்ல சுபா. அம்மா அப்பாவோட கதைக்கோணும். முதல் அன்போட கதைக்கோணும்.” என்றவனுக்குக் காரணமே இல்லாமல் அன்று அவர்கள் இருவரும் ஒன்றாக பஸ்ஸில் வந்தது நினைவில் வந்து போனது.

“மாமா மாமிட்டக் கேக்கிறது, அன்புவோட கதைக்கிறது எல்லாம் பிறகு. இப்ப நீங்க என்ன நினைக்கிறீங்க எண்டு சொல்லுங்கோவன்.” என்று தூண்டி, அவன் மனத்தை அறிய முயன்றாள்.

“சுபா என்ன இது? அபயன் உன்ர தம்பி. நான் பாக்க வளந்த பிள்ளை. அன்புக்கு விருப்பம் எண்டால் எனக்கும் ஓகேதான். மறுக்கக் காரணம் ஒண்டும் இல்லையே.”

அவள் முகம் மலர்ந்துபோயிற்று. “சரி, அப்ப வீட்டில கதைச்சுப்போட்டுச் சொல்லுங்க.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

விடயம் அறிந்த திருநாவுக்கரசு இந்துமதிக்கு இது ஒருவிதமான சந்தோச அதிர்ச்சிதான். வேண்டாம் என்று மறுப்பதற்கு எந்தக் காரணங்களும் இல்லை. புது இடம், புது மனிதர்களோடு மகள் வாழ்க்கை எப்படி அமையுமோ என்கிற கவலைக்கே இடமில்லை என்பதில், “முதல் உங்கட தங்கச்சியக் கேளுங்கோ தம்பி. ருத்ரன் வீட்டில மாதிரி அவசரப்பட்டு எதையும் நாங்களாச் சொல்ல வேண்டாம். அவாட்டக் கேட்டு, அவான்ர விருப்பம் அறிஞ்ச பிறகு அங்க கதைங்கோ.” என்று சொல்லி வைத்தார் திருநாவுக்கரசு.

அந்த வாரத்திலேயே ஒரு நாள் அவளை அழைத்துக்கொண்டு உணவகம் ஒன்றுக்கு வந்திருந்தான் காந்தன். அபயன் மூலம் அனைத்தையும் அறிந்திருந்தவளுக்கு மெல்லிய உதறல்தான்.

“படிப்பு எப்பிடிப் போகுது?” உணவை உண்டபடி எதிரில் அமர்ந்திருந்தவளிடம் பேச்சை ஆரம்பித்தான் காந்தன்.

“நல்லாப் போகுது அண்ணா.”

“இன்னும் ஒண்டரை வருசம் இருக்கு என்ன?”

“ஓம், அது கெதியாப் போயிடும்.”

“ம்ம்…” என்று இழுத்துவிட்டு, “அபயனைப் பற்றி என்னம்மா நினைக்கிறாய்?” என்று விடயத்துக்கு வந்தான் அவன்.

எதிர்பார்த்த கேள்விதான் என்றாலும் நெஞ்சு தடதடத்தது. உண்பதை நிறுத்திவிட்டுத் தமையனை நிமிர்ந்து பார்த்தாள்.

“அது, உன்ர அண்ணி வீட்டில அவனுக்கு உன்னைக் கேக்கினம்.”

அவளுக்கு உள்ளுக்குள் அத்தனை சந்தோசம். ஆனாலும் சம்மதம் என்று சொல்ல வாய் வரவில்லை. இப்போதைக்குக் கலியாணப் பேச்சே வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாளே!

அதில், “நீங்க என்ன அண்ணா நினைக்கிறீங்க?” என்று நல்ல பிள்ளையாக விசாரித்தாள்.

“அபயனும் நல்ல பிள்ளைதான். என்ன கொஞ்சம் கோவக்காரன். நீ சமாளிப்பியா எண்டு யோசிக்கோணும். இண்டைய நிலைல பெரிய சம்பளம் எண்டு சொல்லுறதுக்கு இல்ல. ஆனா, நீ ஆசைப்பட்ட மாதிரி ரெண்டு மூண்டு வருசம் போனபிறகு அவனும் நல்ல நிலைக்கு வந்திடுவான் எண்டு நினைக்கிறன். மாமா மாமியும் நல்ல மனுசர். போற வீடு எப்பிடி இருக்குமோ எண்டு பயப்பிடவும் தேவை இல்ல. அவனுக்கு நீ ஓம் எண்டு சொன்னா உன்ர அண்ணி சந்தோசப்படுவாள். என்ன எண்டாலும் உன்ர விருப்பம்தான்.” என்றான் அவன் தெளிவாக.

“அம்மா அப்பாக்கும் விருப்பமா?”

“அவே ஓம் எண்டு சொல்லாம உன்னட்ட வந்து கதைப்பனா?”

அப்போதும் உடனேயே பதில் சொல்லத் தயங்கி உணவை அளைந்தாள்.

“என்னம்மா? ஏதாவது சொல்லு. இல்ல, வேண்டாம் எண்டு சொல்லி விடவா?”

“இல்ல இல்ல அப்பிடிச் சொல்லாதீங்க.” விழுந்தடித்துக்கொண்டு தடுத்தாள் அவள்.

“பின்ன?”

“அது… எனக்கும் ஓம்தான் அண்ணா.” அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி சொன்னாள்.

“கலியாணப் பேச்சே இப்ப வேண்டாம் எண்டு சொன்னாய்?”

“அண்ணா!” பிடிபட்டுவிட்டதில் தடுமாறினாள்.

“அண்டைக்கு நீங்க ரெண்டு பேரும் ஒண்டா பஸ்ஸில வந்த நேரமே எனக்குச் சந்தேகம்தான்.” என்றதும் பதறிப்போனாள்.

“ஐயோ அண்ணா, கடவுள் சத்தியமா அதுக்கு முதல் அவரோட நான் எங்கயும் போனதே இல்ல. அண்டைக்குத்தான் முதல் தரம்.”

“அப்ப எங்களுக்குத் தெரியாம உங்களுக்க பழக்கம் இருந்திருக்கு. அதுதான் ருத்ரனை வேண்டாம் எண்டு சொல்லியிருக்கிறாய்.” என்றதும் பயமும் பதற்றமுமாகத் தமையனைப் பார்த்தாள்.

“படிக்க அனுப்பினா இப்பிடியா நடக்கிறது?”

“அண்ணா…”

“அப்ப உனக்கு நான் என்ன கதைக்க வந்திருக்கிறன் எண்டு முதலே தெரியும். அபயன் சொல்லி இருக்கிறான்.” என்றதும் தடுமாற்றத்துடன் தலை குனிந்தாள் அவள்.

“சொறி அண்ணா. அது பயமா இருந்தது.”

“எவ்வளவு காலத்துக்குப் பயந்து மறைக்கிறதா இருந்தனி?”

“அது அவர் கதைக்கிறன் எண்டு சொன்னவர்.”

“ஓ!”

“அது அண்ணா…” என்று தவிப்புடன் நிமிர்ந்தவளிடம், “விளங்குது விடு. இனியும் ஆருட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம். ரெண்டு வீடும் பேசிச் செய்ற கலியாணமாவே இது இருக்கட்டும். சரியா?” என்று சொன்னான் காந்தன்.

சரி என்று தலையை ஆட்டினாள் அன்பினி.

“சந்தோசமா?”

“தேங்க்ஸ் அண்ணா. சொறி அண்ணா!” உண்மையில் தன் காதல் இத்தனை இலகுவாய் வீட்டினரால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பாராதவளுக்கு விழிகள் கலங்கி, குரல் நெகிழ்ந்திருந்தது.

“அது பரவாயில்ல. ஆனா, வீட்டில கலியாணத்துக்கு ஓம் எண்டு சொல்லிப்போட்டினம், அண்ணாக்கு எல்லாம் தெரியும் எண்டு படிப்பில கவனம் இல்லாமல இருக்கிறேல்ல. அவன் அங்க வேலையப் பாக்கட்டும். நீ இஞ்ச நல்லபடியாப் படிப்பை முடிக்கோணும். சரியா?”

“சரி அண்ணா!” என்று தலையைப் பெரிதாய் ஆட்டிச் சம்மதித்தவளின் முகத்தில் அத்தனை சந்தோசம்.

அவள் முகத்தையே பார்த்தான் காந்தன். ருத்ரனைப் பற்றிப் பேசிய அன்று அவள் அழுதது தானாய் நினைவில் வந்து போனது. அவளுக்குப் பிடித்த வாழ்க்கையையே அமைத்துக்கொடுக்கப் போகிறோம் என்பதில் அவன் மனமும் நிறைந்து போயிற்று.

விடயம் அறிந்த இருதரப்பு வீட்டினருக்கும் அத்தனை சந்தோசம். அவள் படிப்பு முடிந்து, ஒரு வருடம் வேலைக்குப் போனபிறகு திருமணம் என்று முடிவு செய்துகொண்டார்கள்.

அந்த வார இறுதியில் கொழும்பிலிருந்து வவுனியா வந்து, அங்கிருந்து அவளுடனேயே முல்லைத்தீவுக்கு வந்தான் அபயன். அவள் அணிந்திருக்கும் செயின், அவன் அப்போதுதான் பரிசளித்ததாக வீட்டினருக்குச் சொல்லப்பட்டது.

காலம் வேகமாக ஓட ஆரம்பித்தது. தளிருக்கு இரண்டரை வயதாகியிருந்ததில் நேர்சரிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். மகளுக்காக என்று இத்தனை காலமும் வீட்டில் இருந்த சுபாங்கியும் தன் வேலையில் சேர்ந்துகொண்டாள்.

அதில் காந்தனுக்கு மிகுந்த மனக்குறை. அவனுக்கு வவுனியாவில்தான் தொடர்ந்து வேலை இருந்தது. அதில் சுபாங்கியையும் தன்னுடனேயே வந்திருக்குமாறு வற்புறுத்திக்கொண்டிருந்தான்.

சுபாங்கிக்கு அதில் உடன்பாடு இல்லை. ஏற்கனவே அபயன், அன்பினி, காந்தன் மூவரும் இரு வீட்டினரோடும் இல்லை. இதில் அவளும் மகளோடு வவுனியாவுக்குச் சென்றுவிட்டால் இரு வீட்டுப் பெற்றோரும் தனித்துப் போவார்கள்.

அடுத்தது அவள் வேலை. மகளுக்காக இத்தனை காலமும் வீட்டில் இருந்ததே அவளுக்குக் கவலை. இதில் வவுனியாவுக்கு என்றால் வேலை மாற்றிக் கிடைக்குமா தெரியாது. அப்படியே மாற்றிக் கேட்டாலும் எப்போது கிடைக்கும் என்றும் தெரியாது. அப்படி வேலை கிடைக்காமல் தொடர்ந்து வீட்டில் இருப்பதில் விருப்பமில்லை.

அடுத்ததாய் அவன் வேலையில் மாற்றல் என்பது அடிக்கடி நிகழ்ந்துகொண்டே இருக்கும். இவள் அங்குப் போக, அவனுக்கு வேறு எங்காவது மாற்றல் வந்தால் என்ன செய்வது? அதில் அவனை வேலையை மாற்றி எடுத்துக்கொண்டு இங்கே முல்லைத்தீவுக்கே வரச் சொன்னாள் அவள்.

அவனும் முயலாமல் இல்லை. ஆனாலும் கிடைத்த பாடில்லை. இதற்குள் கடைசி வருடத்தில் காலடி எடுத்து வைத்து, முதல் செமஸ்டரையும் முடித்திருந்தாள் அன்பினி.

அங்கே அபயனும் தன் வேலையில் சற்றே அனுபவம் பெற்றவனாக முன்னேற்றப் பாதையில் பயணித்துக்கொண்டு இருக்கையில், அன்பினியின் படிப்பு முடிந்ததுமே திருமணத்தை வைக்க வேண்டும் என்று வந்து நின்றான் காந்தன்.

error: Alert: Content selection is disabled!!