கேட்பார் இன்றிக் காதல் 13 – 1

அத்தியாயம் 13

சுபாங்கிக்கு கொஞ்ச நாள்களாகவே மனத்தில் ஒரு நெருடல். என்ன என்று சரியாகப் பிடிபடாதபோதும் உள்ளுணர்வு எதையோ உணர்த்த முயன்றுகொண்டே இருந்தது.

அவள் கணவனுக்கு அவள் அவனோடு வவுனியாவில் வந்து இருக்காததில் அடிக்கடி கோபம் வர ஆரம்பித்திருந்தது. என்னதான் சமாதானம் செய்தாலும் எத்தனை விளக்கம் கொடுத்தாலும் அந்த நேரத்துக்கு அமைதியாகிவிடுகிறவன் பிறகு சின்னதாய் ஒரு பிரச்சனை வந்தாலும் அதையே குத்திக் காட்டினான்.

அம்மா அப்பா, மாமா மாமி, மகள் என்று எல்லோரோடும் இருக்கும் அவளுக்கே பக்கத்தில் கணவன் இல்லாமல் சில நேரங்களில் என்னடா வாழ்க்கை வாழ்கிறோம் என்று சலிப்பாகிவிடும். அப்படி இருக்கையில் வாரம் முழுவதும் அங்கே தனியாகவே இருப்பவன் நிலை இன்னும் மோசம் என்று விளங்கிக்கொண்டு, சமாளித்துப் போகத்தான் பார்ப்பாள்.

என்ன, எல்லா நேரங்களிலும் அது முடிவதில்லை. வேலை, பிள்ளை, இருவீட்டுப் பெரியவர்களையும் கவனிப்பது என்று அவளுக்கு நாள் முழுக்க வேலை இருந்துகொண்டே இருக்கும்.

இதில் வேலையில் அவள் எடுத்துக்கொண்டிருந்த மூன்று வருட இடைவெளி வேறு எல்லாவற்றையும் புதிது போலாக்கி, அளவுக்கு அதிகமாகவே அவளை வேலை வாங்கிக்கொண்டிருந்தது.

சிரமமாய் இருக்கிறது என்று சொன்னால் போதும், அத்தனை பேரும் ஒரே பாட்டாக வேலையை விட்டுவிடு என்பார்கள். அதனாலேயே எல்லாவற்றையும் தனக்குள் வைத்துக்கொள்வாள்.

இதனாலேயே சில நேரங்களில் மூச்சு முட்டிவிடும். கணவனிடம் கத்தியும் விடுவாள். பிறகு அந்த வாரம் முழுவதும் இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.

இதற்கு முதல் அப்படி இருந்ததில்லை. இப்போதெல்லாம் சண்டை பிடிப்பதும், நாள்கணக்கில் கதைக்காமல் இருப்பதும் அவர்களுக்குள் சாதாரணமாகியிருந்தன.

அது மிகுந்த கவலையைக் கொடுத்தாலும் உன் பெற்றோரையும் சேர்த்து நான் பார்த்துக்கொள்ள, நீ என்னோடு சண்டைக்கு வருவாயா என்கிற கோபம் அவளுக்குள்ளும் வளர ஆரம்பித்திருந்தது.

அதனாலேயே விட்டுக்கொடுத்துப் போவது, சமாளித்துப் போவது, ஒருவர் மற்றவரை விளங்கி நடப்பது எல்லாம் இருவருக்கிடையில் குறைய ஆரம்பித்திருந்தன. நிதானமாய் யோசிக்கையில் இனி இதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று எண்ணினாலும் சண்டை என்று வருகையில் அதைக் கடைப்பிடிக்க முடிவதில்லை.

அதில், அவனும் ஒருவித வீம்புடன் முல்லைத்தீவுக்கு வருவதைத் தவிர்க்க ஆரம்பித்தான்.

“வேணுமெண்டே செய்யாதீங்க காந்தன். தளிர் பாவம். சும்மாவே கிழமைல ரெண்டு நாள்தான் பிள்ளையோட நிப்பீங்க. இப்ப அதுவும் இல்லை எண்டா எப்பிடி?” என்றாள் மனத்தாங்கலுடன்.

“நான் வேணுமெண்டு செய்றன் எண்டு நீ பாத்தியா? என்னவோ தளிர் உனக்கு மட்டும்தான் பிள்ளை எண்டுற மாதிரிக் கதைக்காத. நேர்ல வராட்டியும் பிள்ளையோட ஒவ்வொரு நாளும் வீடியோ கோலில கதைக்கிறன்தானே?” என்று பதிலுக்குக் கோபப்பட்டான் அவன்.

“என்ன கதைக்கிறீங்க? பிள்ளைக்கு அது காணுமா? உங்களோட இருக்க, உங்களோட விளையாட, உங்களோட நேசரிக்கு போக எல்லாம் ஆசைப்பட மாட்டாவா?”

“உண்மையாவே உனக்குப் பிள்ளையில இவ்வளவு அக்கறை இருந்தா இஞ்ச வந்திருப்பாய். உனக்கு உன்ர பிடிவாதம் பெருசு. நீ நினைச்சதைச் செய்யோணும். பிறகு வந்து என்னைக் குறை சொல்லுவியா?” என்றுவிட்டு வைத்திருந்தான் அவன்.

இப்படி அந்த வார இறுதியில் வராமல் இருந்தவன்தான் திடீரென்று வார நாளில் வந்து நின்றான்.

அதுவும் அன்பினியின் திருமணப் பேச்சோடு. எல்லோருக்குமே அதிர்ச்சி.

“ஏன் இப்ப அவசரமா? அன்பு வேலைக்குப் போனபிறகு கலியாணம் எண்டுதானே எல்லாருமே கதைச்சு முடிவு செய்தது?” என்று கேள்வி எழுப்பினாள் சுபாங்கி.

“அதுதான் படிப்பு முடியுதே. கலியாணத்தை முடிச்சுப்போட்டு வேலைக்குப் போகட்டும். ஆரு வேண்டாம் எண்டு சொன்னது?” என்றான் அவன்.

“நீங்க சொல்லுறது சரிதான் தம்பி. ஆனா, திடீரெண்டு ஏன் இவ்வளவு அவசரம்?” என்று வினவினார் திருநாவுக்கரசு.

ஒரு கணம் பதில் சொல்ல இயலாமல் தடுமாறினாலும் வேகமாகச் சமாளித்துக்கொண்டு, “என்னவோ தெரியா அப்பா. எப்பயோ நடக்கப்போற கலியாணத்தை இப்பவே முடிச்சிட்டா நல்லம் எண்டு மனதில பட்டுக்கொண்டே இருக்கு. அதுதான். அதைவிட அவளுக்கு வயதும் வந்திட்டுது தானேப்பா. இதுல இவ்வளவு யோசிக்க என்ன இருக்கு?” என்று கேள்வி எழுப்பினான் அவன்.

மகன் பொறுப்பை முடிக்க நினைக்கிறானோ என்று தோன்றியது. திருநாவுக்கரசு இந்துமதி இருவருக்கும் அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களும் மகளின் திருமணத்தைப் பார்க்க ஆசைப்பட்டுக்கொண்டுதான் இருந்தார்கள். அன்பினி என்ன சொல்வாளோ என்றுதான் யோசித்தனர்.

கூடவே அபயனும் இருக்கிறானே! அதில் சுபாங்கியின் முகம் பார்த்தனர்.

“வீட்டில கேட்டுப் பாக்கிறன் மாமா. ஆனா அபயன் கலியாணத்துக்கு ரெடி இல்லை எண்டு எனக்கே தெரியும்.”
என்றவள், “முதல் உங்கட தங்கச்சியோட கதைச்சீங்களா?” என்றாள் கணவனிடம்.

“நான் சொன்னா அவள் கேப்பாள்.”

“ருத்ரனையும் நீங்கதான் கொண்டு வந்தனீங்க. ஓம் எண்டு கேட்டவளா?” என்று திருப்பிக் கேட்டாள் சுபாங்கி.

காந்தனின் முகம் சற்றே மாறவும், “என்னம்மா இது, நீங்க ரெண்டு பேரும் என்னத்துக்கு வாக்குவாதப்படுறீங்க?” என்ற இந்துமதி, “தம்பி, பிள்ளை சொல்லுற மாதிரி முதல் உங்கட தங்கச்சியோட கதைங்கோ. அவா ஓம் எண்டு சொன்னா அதுக்குப் பிறகு சுபா வீட்டுல கதைக்கலாம்.” என்றார் மகனிடம்.

அப்போதும் அவன் முக இறுக்கம் மாறாமல் இருக்கக்கண்டு, “வேற ஏதும் பிரச்சினை இல்லையே தம்பி?” என்று விசாரித்தார் திருநாவுக்கரசு.

“சேச்சே! அப்பிடி ஒண்டும் இல்லை அப்பா. என்னவோ கொஞ்ச நாளா எனக்கு இதே யோசனைதான். அபயனுக்கு அவள் அவளுக்கு அபயன் எண்டுறது முடிவானதுதானே. அத முடிச்சுவிட்டா நல்லமே எண்டு பாத்தன்.” என்று சமாளித்தான்.

“சரி, அப்ப பிள்ளையோட கதைங்கோ.” என்று முடித்துக்கொண்டார் அவர்.

சுபாங்கிக்கு இன்னுமே இதில் உடன்பாடு இல்லை. அறைக்குள் சென்ற கணவனின் பின்னாலேயே வந்து, “அப்பிடி என்ன அவசரம்? அதுவும் திடீரெண்டு?” என்றாள் மீண்டும்.

அவன் வந்த நிமிடத்திலிருந்து அவன் கையிலேயே இருந்த மகளோடு கொஞ்சிக்கொண்டு இருந்தவனுக்கு மனைவியின் விடாத விசாரணையில் சட்டென்று கோபம் வந்தது.

“இப்ப என்னத்துக்கு நோண்டி நோண்டிக் கேட்டுக்கொண்டு இருக்கிறாய் சுபா? நான் அவளுக்கு அண்ணன். அவளின்ர கலியாணம் என்ர கடமை. அதை நல்லபடியாச் செய்ய ஆசைப்படுறன். அது பிழை எண்டு சொல்லுறியா?” என்றான் சற்றே குரலுயர்த்தி.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. சாதாரண ஒரு கேள்விக்கு அவன் கோபம் சற்றே அதிகமாய்த் தோன்றிற்று. அதில், “இப்ப என்னத்துக்குக் கத்துறீங்க? என்னட்டக் கூட இதுவரைக்கும் இதைப் பற்றி நீங்க ஒரு வார்த்தை சொல்லேல்ல எண்டுதான் கேட்டனான்.” என்று தன்னை அவனுக்கு விளக்கினாள்.

“அப்பிடிச் சொல்லுற அளவுக்கு நானும் நீயும் நல்லமாதிரிக் கதைச்சுக்கொண்டா இருக்கிறம். எப்ப பாத்தாலும் சண்டை.” என்று அவன் முகத்தைச் சுளிக்க, அவளுக்கும் கோபம் வந்தது.

“அதுக்கு நான் மட்டுமே காரணம் இல்ல காந்தன்.”

“சரி, முழுக் காரணமும் நானாவே இருந்திட்டுப் போறன். அவ்வளவு தூரத்தில இருந்து வந்திருக்கிறன் சுபா. திரும்பவும் ஒரு சண்டையை ஆரம்பிக்காம என்னைக் கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு!” என்றதும் விருட்டென்று வெளியே வந்திருந்தாள் சுபா.

காயப்போட்டிருந்த உடைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்கே வந்தாள். தகப்பனும் மகளும் அவளைக் கவனிக்காமல் தமக்கான உலகில் மூழ்கியிருந்தனர். மகளுக்கு ஏற்றாற்போல் சிரித்து விளையாடும் கணவனின் இளகிய குரல், அவளையும் சற்றே ஆற்றுப்படுத்தியது. உடைகளை எல்லாம் மடித்து வைத்துவிட்டு எழுந்து, சமையல்கட்டுக்கு வந்தாள்.

“என்னம்மா, என்னவாம் தம்பி?” திடீர் என்று வந்த மகனுக்கான சமையலைக் கவனித்துக்கொண்டிருந்த இந்துமதி வினவினார்.

“ஒண்டும் ஒழுங்காச் சொல்லுறார் இல்ல மாமி. கலியாணத்தை முடிக்கிறதிலதான் குறியா இருக்கிறார்.”

“சரி விடுங்கோ. அவர் சொன்ன மாதிரி எப்ப எண்டாலும் நடக்கிறதுதானே. எல்லாரும் ஓம் எண்டு சொன்னா நடத்தட்டும்.”

அவளுக்கும் இதில் பெரிதாய் மறுப்பில்லை. அபயன் என்ன சொல்வானோ என்றுதான் ஓடிற்று. அவனுடைய சீனியரின் அந்த மென்பொருள் நிறுவனத்தில் இவனும் ஒரு பங்குதாரராக மாறும் வேலையில் மும்முரமாகியிருந்தான் அவன். அதைவிட அந்த ப்ராஜெக்ட், இந்த ப்ராஜெக்ட் என்று ஆயிரம் கதை சொல்லுவான்.

அதைப்பற்றியெல்லாம் முழுமையாக அவளுக்குத் தெரியாத போதிலும், வேலையில் முழுமையாக மூழ்கிவிட்டவன் இப்போதெல்லாம் மாதத்துக்கு ஒரு முறை முல்லைத்தீவுக்கு வருவதே அரிதாகியிருந்தது.

அப்படி இருக்கையில் அடுத்த ஆறு மாதத்தில் திருமணம் என்று சொன்னால் எப்படிச் சம்மதிப்பான்?

error: Alert: Content selection is disabled!!