விசயம் அறிந்த அன்பினி மாட்டவே மாட்டேன் என்றுதான் நின்றாள். ஆனால், அவளை நேராகவே சென்று பார்த்து, “அன்பு, அண்ணா உன்ர கெடுதிக்குச்(கெட்டதற்கு) சொல்லுவனா சொல்லு? உன்ர விருப்பம் தெரிஞ்சும் இப்பிடி அவசரப்படுத்திறன் எண்டா அதுக்கு ஒரு காரணம் இருக்கும். அதால ஓம் எண்டு சொல்லம்மா.” என்றான் கெஞ்சலாக.
அவளால் மறுக்கவே முடியவில்லை. ஆனாலும், “இன்னும் கொஞ்ச நாள்தானே அண்ணா. பொறுக்கேலாதா?” என்றாள் இறைஞ்சுதலாய்.
“பொறுக்கலாம் எண்டா நான் ஏன் இப்பிடி உன்ன வற்புறுத்தப்போறன்?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
“அப்பிடி என்ன அண்ணா அவசரம்?”
அதற்குப் பதில் சொல்லாமல் தலையைப் பற்றிக் கண்களை மூடினான். அவனுக்குள் என்னவெல்லாமோ ஓடின. புருவங்கள் இரண்டையும் அழுத்தி நீவிவிட்டான். தன்னைச் சற்றே நிதானப்படுத்திக்கொண்டு மீண்டும் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“அண்ணா இவ்வளவு கேட்டும் உனக்கு ஓம் எண்டு சொல்லேலாது என்ன?” என்றதும், “அண்ணா!” என்றாள் தவிப்புடன்.
“உன்ர விருப்பம் என்ன? படிச்சு முடிச்சு வேலைக்குப் போகோணும் எண்டுறதுதானே?”
அவள் ஆம் என்று தலையை அசைத்தாள்.
“இப்பவும் அதேதான் நடக்கப் போகுது. கலியாணத்தை முடிச்சுப்போட்டு எப்பவும் போல அவன் அங்க வேலையப் பாக்கட்டும். இங்க நீ வேலைக்குப் போ. எதுவும் மாறப்போறேல்ல.”
அவளுக்கு இதற்கு என்ன சொல்வது என்று மெய்யாகவே தெரியவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் அவன் சொல்வது சரிதான். ஆனால், திருமணம் என்கிற ஒன்று நடந்துவிட்டால் அவள் ஒரு வீட்டின் மருமகள், அபயனின் மனைவி.
யார் என்ன சொன்னாலும் சில கடமைகளும் பொறுப்புகளும் அவள் தோள்களில் ஏறி அமர்ந்துவிடும். அப்படி எந்தத் தளைகளும் இல்லாமல், சுதந்திரமாய் இருக்கும் வாழ்க்கை திருமணத்துக்கு முதல் மட்டும்தானே கிடைக்கும். இது தமையனுக்கு விளங்கவில்லையா என்ன?
அதே நேரம், அவள் அபயனை நேசிக்கிறாள் என்று தெரிந்தும் கோபப்படாமல், அதை அம்மா அப்பாவிடம் கூடச் சொல்லாமல், ஒரு பேச்சுத் திருமணம் போலவே நகர்த்திய அவன் பேச்சைத் தட்டவும் முடியவில்லை.
என்ன செய்வது என்று தெரியாது அவள் திணற, “ப்ளீஸ் மா. மாட்டன் எண்டு சொல்லாத.” என்றதும் அதற்குமேல் அவளால் முடியவில்லை.
“சரி அண்ணா. அவரோடயும் கதைங்க.” என்று சம்மதித்தாள்.
அவன் முகம் விளக்குப் போட்டது போன்று மலர்ந்து போயிற்று. “எல்லாம் உன்ர நல்லதுக்குத்தான் அன்பா. இப்ப விளங்காட்டியும் ஒரு காலம் விளங்கும்.” தடுமாறிக் கரகரத்த குரலில் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. நெஞ்சை ஏதோ ஒன்று தாக்கியது. போகிறவனையே பார்த்திருந்தாள்.
விடயம் அறிந்த அபயனுக்கு அத்தனை கோபம். “அத்தானுக்கு அப்பிடி என்ன அவசரமாம்?” என்று அவளிடம்தான் கோபப்பட்டான்.
“எனக்கு என்ன தெரியும்? என்ன சொன்னாலும் கலியாணத்தை முடிச்சிட்டுச் செய் எண்டு சொல்லுறார்.”
“ஆனா நான் ரெடி இல்லயே அன்பா.” என்றான் அவன் சலிப்புடன்.
“நானும்தான். ஆனா பிடிவாதமா நிக்கிறவரிட்ட ஒரு அளவுக்கு மேல என்னால ஒண்டும் சொல்லேலாமா இருக்கு அபய்.”
“ப்ச் என்னடி இது? கலியாணம் என்ன சின்ன விசயமா? கைல என்னட்டக் காசும் இல்ல. இங்க முக்கியமான ப்ராஜெக்ட் வேற போய்க்கொண்டு இருக்கு. இதக் கவனிப்பனா, கலியாணத்தைப் பாப்பனா?” என்று புலம்பிவிட்டு, “இது சரியே வராது அன்பா. கடைசி வந்தாலும் இப்ப ஏலாது எண்டு அத்தானிட்ட முடிவாச் சொல்லப் போறன். அவர் நினைச்சு நினைச்சுச் செய்றதுக்கு எல்லாம் நான் மாட்டி முழிக்கேலாது.” என்றதும் அன்பினிக்கு அவளிடம் விடாது கெஞ்சிய தமையன்தான் கண்முன்னே வந்து போனான்.
அதில், “அபய் ப்ளீஸ், கலியாணச் செலவை ரெண்டு வீடும் பாப்பினம்தானே. நீங்கதான் போடோணும் எண்டு இல்லையே. அண்ணா சொன்ன மாதிரிக் கலியாணத்தை முடிச்சுப்போட்டு நீங்க அங்க வேலையப் பாருங்க, நான் இங்க பாக்கிறன். அம்மா அப்பாக்கும் இதுதான் விருப்பம் எண்டு இண்டைக்கு என்னோட கதைக்கேக்க சொன்னவே. மாமா மாமியும் எங்களுக்காகத்தான் பொறுத்து இருக்கினம் எண்டு எங்களுக்கு ஏற்கனவே தெரியும். அதால ஓம் எண்டு சொல்லுங்கோ.” என்றாள் கெஞ்சலாக.
அவளுக்கு இதனால் தமையனும் அவனும் முட்டிக்கொண்டுவிடுவார்களோ என்கிற பயம் வந்திருந்தது.
“என்னடியப்பா, என்னைவிட நீதான் பிடிவாதமா நிண்டு வேண்டாம் எண்டு சொல்லுவாய் எண்டு பாத்தா இப்பிடிச் சொல்லுறாய்?” என்றான் அவன் மெல்லிய கோபத்துடன்.
“என்ன செய்ய? ஆளாளுக்கு எடுத்து மண்டையக் கழுவினா ஓம் எண்டுதானே சொல்ல வேண்டியிருக்கு.” அவள் சலிக்க, அவ்வளவு நேரமாக இருந்த சினம் போய் அவனுக்குச் சிரிப்பு வந்தது.
“கலியாணம் முடிஞ்ச கையோட உன்ன அம்மா ஆக்கிவிட்டுடுவன், பரவாயில்லையா?” என்றான் வேண்டுமென்றே.
“அபய்!” என்று அதட்டியவளுக்கு உண்மையாகவே பயம் பிடித்துக்கொண்டது. “அதெல்லாம் இப்ப இல்ல. கலியாணம் மட்டும்தான்.” என்று அவசரமாக அறிவித்தாள்.
“நல்ல கதையா இருக்கே இது! கலியாணத்தை முடிச்சுப்போட்டு உன்னத் தள்ளி வச்சு வடிவு பாக்க நான் என்ன விசரனா?”
அவள் அரண்டுபோனாள். “அப்ப கலியாணமும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். அண்ணாட்ட என்னவாவது சொல்லி இந்தக் கலியாணத்தைத் தள்ளிப் போடுங்க. என்னால அவரோட கதைக்கேலாது.” என்றாள் வேக வேகமாக.
அவன் நிலையும் அதேதானே. அவனோடு கதைக்கும்போதும் முறையான காரணத்தைச் சொல்லாமல், இந்தத் திருமணத்தை நடத்துவதில்தான் குறியாக இருந்தான் காந்தன்.
அத்தான் என்று பெருமதிப்புக் கொண்டவனிடம் ஒரு அளவுக்கு மேல் இவனால் தன் மறுப்பைத் தெரிவிக்கவும் முடியவில்லை. “ஏன் இவ்வளவு அவசரப்படுறாராம்? உனக்கு ஏதும் தெரியுமா?” என்று விசாரித்தான்.
“உண்மையா எனக்குத் தெரியேல்ல அபய். கேட்டா உன்ர நல்லதுக்குத்தான் சொல்லுறன் எண்டு மட்டும்தான் சொல்லுறார்.”
“என்னை எதுக்கும் சந்தேகப்படுறாரோ?” என்று அவன் கேட்க அவளுக்குச் சிரிப்பு வந்தது.
“அப்பிடி உங்களில சந்தேகம் வந்தா கலியாணத்துக்கா அவசரப்படுவார்? அந்தச் சந்தேகம் உண்மையா இல்லையா எண்டுதான் விசாரிப்பார்.”
“என்னடி சும்மா கேட்டா அதையே உண்மை ஆக்கிடுவாய் போல!” என்று அதட்டினான் அவன்.
“இல்ல, இவ்வளவு நாளும் இப்பிடி ஒரு கோணத்தில நான் யோசிக்கேல்ல. ஆனா இப்ப டவுட்டாத்தான் இருக்கு. அங்க ஆரையும் பாத்திட்டீங்களோ? அது அண்ணாக்குத் தெரிஞ்சு, தங்கச்சி ஆசைப்பட்டுட்டாளே எண்டு நீங்க அந்தப் பக்கம் முழுசா சாயிறதுக்கிடையில இங்க கட்டிப்போடுவம் எண்டு நினைக்கிறாரோ?” என்று அவள் அடக்கிய சிரிப்புடன் கேட்கவும், அவனுக்குக் கோபமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது.
“என்னட்டையே இப்பிடிச் சொல்ல எவ்வளவு தைரியம் உனக்கு? உன்ர இந்த வாய்க்கே இங்கயும் ஒருத்தியப் பிடிச்சுக் காட்டுறனா இல்லையா எண்டு பார்!” என்று சவால் விட்டான் அவன்.
அவள் அசரவே இல்லை. “இந்த மூஞ்சிக்கு ஒரு லட்டுக் கிடைச்சதே பெரிய விசயம். இதுல கண்ணா ரெண்டு லட்டுத் தின்ன ஆசையாவா?” என்றதும் சத்தமாய் நகைத்தான் அவன்.
“வரவர உனக்கு நல்லா வாய் கூடிட்டுது.” சிரிப்பினூடு சொன்னான்.
“பின்ன! கிட்டத்தட்ட ரெண்டு வருசமா ஊருக்குத் தெரியாம உங்களுக்கு மனுசியா இருக்கிறனே.” என்றதும் அவன் எண்ணங்கள் சட்டென்று அந்த ஒரு நாளில் சென்று நின்றது.
அவர்களுக்குக் கிடைத்த முதல் தனிமை, முதல் அணைப்பு, அவன் அனுபவித்த அவளின் முதல் அண்மை, அவர்கள் பரிமாறிக்கொண்ட முத்தம் என்று நினைக்க நினைக்க உள்ளத்தில் உணர்வுகளின் எழுச்சி.
“இப்பவும் செயின் போட்டு இருக்கிறியா?” தன் ஆழ்ந்த குரலில் வினவினான்.
“கழட்டுவன் எண்டு நினைக்கிறீங்களா?” அவள் குரலும் அந்த நாளின் நினைவில் குழைந்து வந்தது.
“எனக்குக் கிடைச்சது அந்த ஒரேயொரு நாள்தான். அதுக்குப் பிறகு விடவே இல்ல நீ!” என்றான் ஏக்கமாய்.
அவளுக்கும் அந்த ஆசை இல்லாமல் இல்லை. ஆனால், அவர்களை முழுமையாக நம்பும் இரு வீட்டினரையும் ஏமாற்றத் தைரியமில்லை. அதில், அவன் எத்தனையோ முறை கேட்டும் அவர்களுக்கான தனிமையை அவள் உருவாக்கியதே இல்லை. அதனாலேயே அவளோடு சிலபல முறைகள் அவன் முறுக்கிக்கொண்டிருக்கிறான்.
ஆனால், வாழ்வதற்கு நிறைய நாள்கள் தேவையா என்ன? அல்லது உயிருடன் இருக்கும் நாள்கள் முழுக்க வாழ்கிறோமா என்ன? அதில், “அந்த ஒரு நாள் போதாதா உங்களுக்கு?” என்று இதமாய் வினவினாள் அவள்.
ஒருகணம் அவனிடம் சத்தமே இல்லாமல் போயிற்று. அடுத்த கணம் முத்தம் ஒன்று பறந்து வந்தது.
“அபய்!” என்று அவள் அதட்ட, “அத்தான் சொல்லுற மாதிரியே கலியாணத்தைச் செய்வம். ஆனா, உன்னட்ட இருந்து தள்ளி எல்லாம் இருக்கேலாது. பாதுகாப்பா எல்லாத்தையும் பாக்கலாம்.” என்றுவிட்டு வைத்தான் அவன்.

