கேட்பார் இன்றிக் காதல் 14 – 1

அத்தியாயம் 14

அன்று சுபாங்கி வேலையில் இருக்கையில் காந்தனிடமிருந்து குறுந்தகவல் ஒன்று வந்து விழுந்தது. எடுத்துப் பார்த்தாள். “எல்லாருக்கும் ஓகேயா எண்டு கேட்டுச் சொல்லு!” என்று திருமணத் திகதியை அனுப்பியிருந்தான் அவன்.

அதற்குள் நாள் எல்லாம் குறித்துவிட்டானா, எதற்கு இவ்வளவு வேகம் என்று எண்ணியபடி, கைப்பேசியிலேயே நாள்காட்டியை எடுத்துப் பார்த்தவள் அதிர்ந்துபோனாள்.

அன்பினியின் பரீட்சை முடிவதற்கு ஒரு மாதத்துக்கு முதலே நாளைக் குறித்திருந்தான் அவன். சுர் என்று ஒரு கோபம் முளைக்க, உடனேயே தனியாக வந்து அவனுக்கு அழைத்தாள்.

“என்ன இது? அவளுக்கு ஃபைனல் எக்ஸாம்ஸ் முடிய முதல் நாள் எடுத்திருக்கிறீங்க.” என்றாள் அவன் அழைப்பை ஏற்றதும்.

இந்தக் கேள்வி வரும் என்பதை ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தவன், “நல்ல நாள் இதுதானாம்.” என்றான் சுருக்கமாக.

அவளுக்குச் சினம்தான் வந்தது. “தெரிஞ்சு செய்றீங்களா, இல்ல தெரியாமச் செய்றீங்களா எண்டு எனக்கு ஒண்டும் விளங்கேல்ல காந்தன். நீங்களே நேரடியாக் கேட்டபிறகு எப்பிடி மாட்டன் எண்டு சொல்லுறது எண்டுதான் தம்பி கலியாணத்துக்கு ஓம் எண்டு சொன்னதே. சரி, ஆறு மாதம் கழிச்சு எண்டு பாத்தா இப்ப நாலு மாதத்தில நாள் பாத்து வச்சு இருக்கிறீங்க. அவன் சும்மாவே அடுத்த ரெண்டு வருசத்துக்கு நான் ஃபிரீ இல்ல, கலியாணத்தை சிம்பிளா வைங்க எண்டு சொல்லிக்கொண்டு இருக்கிறான். பிறகும் ஏன் இப்பிடி மாத்தி மாத்தி நடக்கிறீங்க?” என்று படபடத்தாள்.

“என்ன மாத்தி மாத்தி நடக்கிறன்? ஐயா அந்த நாள்தான் நல்ல நாள் எண்டு சொன்னவர். அதால அதையே குறிச்சிருக்கிறன். இது ஒரு பிரச்சினையா உனக்கு?” என்றான் அவன் அதட்டலாக.

“என்ன கதை இது? எந்த ஐய்யர் அப்பிடிச் சொன்னவர்? அப்பிடியே இருந்தாலும் அன்புக்கு எக்ஸாம்ஸ் எல்லாம் முடிஞ்ச பிறகு எப்ப நல்ல நாள் வருதோ அப்பயே கலியாணத்தை வைக்கிறதுதானே.”

“அப்பிடி வாற நாள்ல நான் பிரீயா இல்ல. எனக்கு வேலை இருக்கு.”

“அப்ப என்ர தம்பி மட்டும் வேலை வெட்டி இல்லாம சும்மா இருக்கிறானா, நீங்க சொல்லுற எல்லாத்துக்கும் தலையாட்ட? இது அவன்ர கலியாணம். அவனைக் கேட்டு, அவனுக்குத் தோதான நாள் பாத்துக் குறிங்க.”

அப்படி அவள் உத்தரவு போடுவது போன்ற குரலில் சொல்லவும் சட்டென்று கோபம் மூண்டது அவனுக்கு. “நான் என்ன செய்யோணும் எண்டு எனக்கு நீ சொல்லாத சுபா. எனக்குத் தெரியும் என்ர வேலையப் பாக்க!” என்றான் முகத்தில் அடித்தாற்போன்று.

அவளுக்கு முகம் கன்றியது. ஏன் இப்படி அளவுக்கதிகமாகக் கடுமை காட்டுகிறான்? அவளை எதற்கு இந்தளவில் நோகடிக்கிறான்? அதற்குமேல் அவளால் அவனிடம் எதையும் கேட்கவோ பேசவோ முடியவில்லை.

ஆனால், அப்படி அவளின் வாயை அடைக்கத்தான் இப்படிக் கடுமை காட்டுகிறானோ என்று தோன்றிவிட, ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுத் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு, “என்ன பிரச்சினை காந்தன் உங்களுக்கு? நீங்க இப்ப முந்தி மாதிரி இல்ல. எல்லாத்துக்கும் கோவப்படுறீங்க, சினக்கிறீங்க, எரிஞ்சுவிழுறீங்க. ஏன் காந்தன் இப்பிடி? உண்மையச் சொல்லுங்க, ப்ளீஸ்!” என்றாள் கெஞ்சலாக.

மனைவி இப்படி இறங்கி வந்து பேசுவாள் என்று எதிர்பாராதவன் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான்.

“நீங்க சொன்னதக் கேட்டு நான் அங்க வராதது உங்களுக்குக் கோவமா இருக்கலாம். அதுக்கெண்டு இப்பிடியா?” என்றபோது அவள் குரல் உடைந்தது.

ஒருவிதத் தவிப்புடன், “அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல. ஏதாவது வேலை டென்சன்ல கத்தி இருப்பன். நீயும் சும்மா சும்மா என்ன பிரச்சினை எண்டு கேக்கிறதை நிப்பாட்டு சுபா!” என்று வேகமாய்ச் சொன்னான் அவன்.

அவள் விடவில்லை. “இல்ல காந்தன். நீங்க சொல்லுறது உண்மை இல்லை. நான் உங்கட மனுசி. உங்களிட்டச் சின்ன மாற்றம் தெரிஞ்சாலே கண்டு பிடிப்பன். முந்தி மாதிரி நீங்க என்னோட சந்தோசமாச் சிரிச்சுக் கதைக்கிறேல்ல, என்ன சொன்னாலும் கோவம்தான் வருது. என்னப்பா இதெல்லாம்? நீங்க என்னத்தையோ மறைக்கிறீங்க. அது மட்டும் எனக்கு வடிவாத் தெரியும். என்ன எண்டு சொல்ல மாட்டீங்களா? எனக்குப் பயமா இருக்கு. உங்களுக்கு உடம்புக்கு ஏதுமா? சொன்னா நாங்க எல்லாரும் கவலைப்படுவம் எண்டு மறைக்கிறீங்களா?” என்று அவள் தழுதழுத்தபோது காந்தனிடம் சத்தமே இல்லாது போயிற்று.

இதற்குள், “காந்தன்?” என்றாள் அவள் திரும்பவும் தவிப்புடன்.

வேகமாகத் தன்னைச் சமாளிக்க முயன்றபடி, “உண்மையா எனக்கு அப்பிடி ஒண்டும் இல்ல சுபா. நீயா எதையாவது யோசிச்சுக் கவலைப் படாத, ப்ளீஸ்!” என்றான் தன்மையாக.

“உண்மையா ஒண்டும் இல்லையா?” அப்போதும் தவிப்புடன் அவள் வினவ, அவன் நிலைகுலைந்தான்.

“சுபா…”

“ப்ளீஸ் காந்தன். என்ர பயம் உங்களுக்கு விளங்கேல்லையா? என்ன எண்டாலும் சொல்லுங்க. ரெண்டு பேரும் சேர்ந்து சமாளிக்கலாம். எந்த நிலையிலையும் உங்கள நான் தனியா விடமாட்டன். என்னதான் கோபப்பட்டுச் சண்டை பிடிச்சாலும் நீங்க எனக்கு முக்கியம் காந்தன். இப்பிடி நீங்க மட்டும் தனியா நிக்காதீங்க. சும்மாவே நீங்க அங்க, நான் இங்க எண்டு பிரிஞ்சு இருக்கிறோம். இப்ப இப்ப மனதளவிலையும் தூரமா இருக்கிற மாதிரி இருக்கப்பா.”

அவன் நொருங்கிப் போனான். மனைவி தவிக்கும் தவிப்பைத் தாங்க முடியவில்லை. இனி என்னடா செய்யப் போகிறாய் என்று மனம் அரற்றியது. அதில், “உண்மையா சொறி சுபா. எனக்கு ஒண்டும் இல்ல. உன்ன இப்பிடி அழ வசத்துக்கு சொறியடி!” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.

இப்போது அவளால் பேச முடியவில்லை. எத்தனை நாள்களுக்குப் பிறகு இப்படி உள்ளத்திலிருந்து பேசுகிறான்? அதற்கே அவளுக்குத் தொண்டை அடைத்து, விழிகள் கலங்கிப் போயின.

“அப்பிடி ஏதும் எண்டால் நானும் உன்னட்டத்தான் வருவன் சுபா. வேலை கூட. அதோட என்னவோ ஒரு டென்சன். முதல் இந்தக் கலியாணம் முடியட்டும். பிறகு எல்லாம் கதைக்கலாம், சரியா?” என்று இதமாய்க் கதைத்துவிட்டு வைத்தவனுக்கு தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது.

நெஞ்சினில் இனி என்றைக்கும் இறக்கி வைக்கவே முடியாத ஒரு பாரம். அது தொண்டைக்குழியை வந்து நசுக்கியது. இன்றைய நிலையில் அவனுடைய ஒரே இலக்கு, எப்படியாவது அன்பினியின் திருமணத்தை விரைந்து முடித்துவிட வேண்டும் என்பது மட்டுமே! அதற்காக மொத்தக் குடும்பத்தையும் சமாளித்துத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

ஆனாலும் கூட அபயனை எண்ணிச் சற்றே பயந்தான். சுபாங்கி சொன்னது போன்று, அத்தான் என்கிற இடத்தில் அவன் இருப்பதால் மட்டுமே சமாளித்துப் போகிறான் என்று அவனுக்கே தெரியும். அதற்காக அவனை எடுப்பார் கைப்பிள்ளையாக வளைக்க முடியாது என்றும் தெரியும். ஆனால், இந்த முறை மட்டும் அவனோடு பேசி, இதற்குச் சம்மதிக்க வைக்கத்தான் வேண்டும்.

ஒரு நெடிய மூச்சுடன் எழுந்து வேலைகளைப் பார்த்தான்.

இங்கே சுபாங்கியால் வேலையில் கவனத்தைச் செலுத்தவே முடியவில்லை. நிறைய நாள்களுக்குப் பிறகு கணவன் இறங்கி வந்து மன்னிப்புக் கேட்டதும், தளைந்து பேசியதும் நெஞ்சிலேயே நின்றது. என்னவோ உயிராக ஒன்றி வாழ்ந்த ஆரம்ப காலத்துக்கே சென்றுவிட்ட ஒரு உணர்வு.

பதிலுக்குப் பதில் என்று தானும் கோபப்படாமல், இன்று போன்று அவனைச் சற்று இதமாகக் கையாண்டிருக்க வேண்டுமோ என்று தோன்றியது.

தளிர் பிறந்ததில் இருந்தே அவர்களுக்குள் இருந்த அன்னியோன்யம் குறைந்துதான் போனது. வவுனியாவில் வேலை என்றானபிறகு அவன் வருவதே வார இறுதிகளில்தான். அதில், கணவன் மனைவிக்கு மட்டுமேயான பொழுதுகள் மிக மிக அரிதாகியிருந்தது.

அதன் பிறகு வேலையைக் காரணம் காட்டி அவள் இங்கேயே அமர்ந்துகொண்டதில் அடிக்கடி வரத் தொடங்கிய சண்டைகள், இருவரிடையே மெல்லிய வெறுப்பையும் கசப்பையும் விதைக்க ஆரம்பித்திருந்ததும் மெய்.

வாழ்க்கையின் ஓட்டத்தில் ஆற அமர்ந்திருந்து அவர்களுக்கிடையில் நடந்துகொண்டிருப்பது என்ன என்று நிதானமாக யோசிக்கத் தவறியிருந்தாள். ஆழ்மனது அடிக்கடி கொடுத்த எச்சரிக்கையைக் கூடப் பொருட்படுத்தவில்லை.

இன்றைக்கும் அவளால் அப்படி இருக்க முடியவில்லை. கணவனின் இதம் தரும் சின்ன பேச்சு அவளைத் தலைகீழாக மாற்றியிருந்தது. இன்னுமே அவன் உண்மையைச் சொல்லவில்லை என்பதும் சேர, அதன் பிறகு அவள் நிறைய யோசிக்கவில்லை. “மாமி, இண்டைக்கு நான் வரக் கொஞ்சம் லேட் ஆகும். தளிரைப் பாத்துக்கொள்ளுங்கோ.” என்று இந்துமதிக்கு அழைத்துச் சொல்லிவிட்டு, வவுனியா செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்துகொண்டாள்.

மகளும் இல்லாமல் அவள் மட்டுமாகப் போவது சற்றே வித்தியாசமாக இருந்தது. அதே நேரம், அவர்கள் இருவருக்கும் மட்டுமாகக் கிடைக்கப்போகும் அந்தத் தனிமை குறுகுறுப்பை மூட்டி, மெல்லிய முறுவலை அவள் முகத்தில் படரவிட்டது.

மாமா மாமி இருக்கிறார்கள், அன்பினி இருக்கிறாள், மகள் இருக்கிறாள் என்று பார்த்து பார்த்துக் கதைக்கும் தேவை இல்லாது, மனம் விட்டுப் பேசி, இன்றைக்கு எப்படியாவது அவனிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கிவிடுவது என்கிற முடிவில் இருந்தாள்.

இதை அவள் முதலே செய்திருக்கலாம். செய்திருக்க இந்த இடைவெளி அவர்களுக்குள் விழுந்திராது. எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வர வேண்டும் போலும்.

ஒரே ஊர்தான். ஆனாலும் அவனை அவள் பார்த்ததில்லை. திருமணத்துக்கென்று புகைப்படத்தில் முதல் முதல் பார்த்தபோது மிகவுமே பிடித்திருந்தது. அவளும் அவள் வீட்டில் மூத்தவள் என்பதால் குடும்பத்தின் மீதான அவன் அக்கறையும் பொறுப்பும் அவளை மெச்ச வைத்ததே தவிர, குறை கண்டதில்லை.

அதன் பிறகும் அவள் மனத்தில் இருந்த அவன் பற்றிய அந்த நல்ல பிம்பம் கலைந்ததே இல்லை. தன் குணத்தாலும் பேச்சாலும் நடத்தையாலும் அவளை அப்படிக் கவர்ந்திருந்தான்.

மகள் பிறந்த பிறகு இருவரின் கவனமும் அவள் புறம் திரும்பியதும், அவர்களுக்கான குட்டி குட்டி நேரங்கள் கூடக் காணாமல் போனதும், ஒருவர் மற்றவர் மீது செலுத்திய பிரத்தியேக கவனங்கள் குறைந்ததும் போதாது என்று, அவனுக்கு வேலை வவுனியாவில் என்றானதும்தான் எல்லாமே மாற ஆரம்பித்திருந்தது.

error: Alert: Content selection is disabled!!