இனி இப்படி இருக்கக் கூடாது. அவனையும் விலகி இருக்க விடக் கூடாது என்றெல்லாம் எண்ணிக்கொண்டு அவனுடைய குவார்ட்டஸுக்கு சென்றாள். வீடு பூட்டியிருந்தது. அரசாங்கத்தினால் அவனுக்கென்று கொடுக்கப்பட்டிருந்த வாகனமும் இல்லை.
ஆரம்ப காலங்களில் இங்கே வந்து போனதில் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் பழக்கம்தான் என்றாலும், அங்கே போக ஒரு மாதிரி இருக்க, வீட்டு வாசலிலேயே அமர்ந்துகொண்டாள்.
கணவனுக்கு அழைப்போமா என்று கைப்பேசியை எடுத்தாலும் மனமில்லை. திடீர் என்று அவளைக் கண்டதும் என்ன செய்கிறான் என்று பார்க்கலாம் என்று எண்ணிக்கொண்டிருக்க, அந்த வழியால் நடந்துபோன பெண் இவளைக் கண்டுவிட்டு, “சுபா, சுபாதானே? ஏன் வாசல்ல இருக்கிறீங்க? சேர் இன்னும் வரேல்லையோ?” என்று கேட்டபடி, கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார்.
சுபாங்கியின் முகமும் மலர்ந்தது. “வாங்க அக்கா. இந்த நேரம் வந்திடுவார் எண்டுதான் வந்தனான். ஆனா, ஆளை இன்னும் காணேல்ல. எப்பிடியும் இப்ப வருவார்தானே எண்டுதான் இங்கயே இருந்திட்டன்.” என்று பதில் சொன்னாள்.
“ஓம், இது சேர் வாற நேரம்தான். அதுவரைக்கும் வாங்க, எங்கட வீட்டை இருக்கலாம்.” என்று அழைத்துக்கொண்டு போனார் அவர்.
என்னதான் நல்லபடியாக உபசரித்து, நலன் விசாரித்து, அது இது என்று பேச்சு நகர்ந்தாலும் அவர் இயல்பாய் இல்லை என்று தெரிந்தது. என்ன என்று விசாரிக்கவும் அவளுக்கு ஒரு மாதிரி இருக்க, “பிறகு? இங்க என்ன புதினம் அக்கா? இப்ப நானும் வேலைக்குப் போறதால இந்தப் பக்கம் வரக் கிடைக்கிறதே இல்ல.” என்று மறைமுகமாக எடுத்துக்கொடுத்தாள்.
அப்போதும் அவர் தடுமாறினார். “அது சுபா… நீங்க என்னக் குறையா நினைக்கக் கூடாது. சொல்லாம இருக்கவும் ஒரு மாதிரி இருக்கு. உங்கட நம்பர் இல்ல. இருந்திருந்தா எப்பவோ சொல்லி இருப்பன்…” என்று அவர் இழுக்கும்போதே அவளுக்கு முகம் மாற ஆரம்பித்தது.
“நான் ஒண்டும் நினைக்க மாட்டன் அக்கா. என்ன எண்டு சொல்லுங்கோ!” என்று ஊக்கினாள். உள்ளமோ காரணமே இல்லாமல் அடித்துக்கொண்டது.
“அது சுபா… நான் நேர்ல பாக்கேல்லை. இஞ்ச அயலட்டைல இருக்கிற ஆக்கள் சொல்லித்தான் தெரியும். அது… உங்கட அவருக்கு இஞ்ச வேற ஒரு பிள்ளையோட தொடர்பு இருக்குப் போல. திரும்பவும் சொல்லுறன், நான் நேர்ல பாக்கேல்லை. அதான்… இதச் சொல்லுறதா இல்லையா எண்டும் எனக்குத் தெரியேல்ல. நீங்க எதுக்கும் என்ன எண்டு விசாரிங்கோ. என்னைக் கேட்டா நீங்க இஞ்சயே வந்து இருக்கிறது நல்லம் எண்டுதான் சொல்லுவன்.” என்றதும் அவளுக்குச் சுவாசமே நின்று போயிற்று.
முதலில் அவர் சொன்னதை உள்வாங்கி விளங்கிக் கொள்வதற்கே சிலபல நொடிகள் பிடித்தன.
“இல்ல, அவர் அப்பிடி இல்ல அக்கா. வேலை விசயமா ஆரையும் சந்திச்சாரோ தெரியாது…” திக்கித் திணறிச் சொல்லிக்கொண்டு வந்தவள், அவரின் பரிதாபப் பார்வையில் அப்படியே நிறுத்திவிட்டாள்.
கணவனின் காரணமற்ற கோபம், சினம், விலகல் எல்லாம் கண்முன்னால் வந்து அவளை உலுக்கின. அவள் உள்ளம் நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையில் கிடந்து போராடியது.
“அப்பிடித்தான் எண்டா எனக்கும் சந்தோசம்தான் சுபா. இளங்குடும்பம் நீங்க. ஒரு பிள்ளையும் இருக்கிறா. என்ன எண்டாலும் ஒருக்கா விசாரிங்கோ, ப்ளீஸ்.” என்று அவர் சொல்கையிலேயே காந்தனின் வாகனம் பக்கத்து வீட்டில் வந்து நிற்பது தெரிந்தது.
அவர் முகத்தில் கலவரம். “சுபா, நான்தான் இதச் சொன்னனான் எண்டு சொல்லிப்போடாதீங்கோ. பிறகு இவர் என்னை உண்டு இல்லை எண்டு ஆக்கிப்போடுவார்.” என்றார் வேகமாக.
சுபாங்கிக்குப் பேச முடியவில்லை. நெஞ்சை அடைத்தது. தலை சுற்றியது. கத்தி அழ வேண்டும் போலிருந்தது. அந்தப் பெண்மணியின் முன்னே உடையவும் முடியவில்லை. ஒன்றுமே சொல்லாமல் எழுந்து கணவனின் வீட்டை நோக்கி நடந்தாள்.
வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, பின்னிருக்கையில் இருந்த பையையும் எடுத்துக்கொண்டு, வீட்டுக் கதவில் திறப்பை நுழைத்த காந்தன், தன் பின்னால் யாரோ வரும் அரவம் கேட்கவும் திரும்பிப் பார்த்தான்.
அங்கே நின்ற சுபாவைக் கண்டதும் அவன் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி.
“சுபா! நீ எங்க இஞ்ச?” என்றான் முதல் கேள்வியாக. “பிள்ளை எங்க? பிள்ளையை விட்டுப்போட்டு என்னத்துக்கு வந்தனி?” என்று அதட்டினான்.
அவள் பதில் ஒன்றும் சொல்லவில்லை. அவனையே வெறித்தாள். கைகால்கள் எல்லாம் கோபத்தில் நடுங்கின. நெஞ்சு கொந்தளித்தது. அந்த நிமிடமே அவன் சட்டையைப் பிடித்து உலுக்கும் ஆவேசம் எழுந்தது. இதில் எதையும் செய்ய முடியாமல் பிடித்துவைத்த சிலை போன்று நின்றிருந்தாள்.
அப்படி அவள் நின்ற நிலையும் அவள் பார்வையும் அவனுக்குள் திகிலைப் பரப்ப, “சரி சரி, முதல் உள்ளுக்கு வா! திடீரெண்டு உன்ன இஞ்ச பாக்கவும் பயந்துபோனன்.” என்று அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நடந்தான்.
மனத்திலோ பெரும் நடுக்கம். அவளை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்தபடி, “போய் முகம், கைகால் கழுவிக்கொண்டு வா. தேத்தண்ணி ஊத்துறன்.” என்றபடி அங்கிருந்து நகரப் பார்த்தான்.
“ஏன் இவ்வளவு லேட்?” நின்ற இடத்தை விட்டு அசையாது வினவினாள்.
“அது… வேல.”
“இல்லையே. நீங்க அந்த டைமுக்கு வேலைய முடிக்கிற ஆளே.”
“அதுக்கெண்டு எல்லா நாளும் அப்பிடியே நடக்குமா? இண்டைக்குக் கொஞ்சம் லேட்டாயிட்டுது.” என்றபடி மீண்டும் குசினிப்பக்கமாக நடந்தான்.
“என்ன அது?” என்றாள் அவன் கையிலிருந்த பையைக் காட்டி.
“சா…ப்பாடு.”
“ஏன் சமைக்கிறேல்லையா?”
“இண்டைக்கு வேலை கூட எண்டு சொன்னேனே. அதான் வரேக்க அப்பிடியே கடைல வாங்கிக்கொண்டு வந்திட்டன்.”
“ஓ! ஆனா எந்தக் கடைல சாப்பாட்டுப் பார்சலை உடுப்புக் கடை பாக்கில போட்டுத் தாறாங்கள்?”
பதற்றத்துடன் வேகமாகக் குனிந்து பார்த்தான். அவள் சொன்னது உண்மைதான். தன் களவு பிடிபட்டுக்கொண்டதில் பதில் சொல்ல முடியாமல் நிமிர்ந்து மனைவியைப் பார்த்தான்.
“என்னட்ட ஏதாவது மறைக்கிறீங்களா?” அவள் குரலில் மெல்ல மெல்ல சூடு ஏற ஆரம்பித்தது.
“…”
“சொல்லுங்க காந்தன். என்னட்ட ஏதாவது மறைக்கிறீங்களா?”
“சுபா…”
“உங்கட கோபத்துக்கு, விலகளுக்கு, காரணமே இல்லாம ஏறிப் பாயிறதுக்கு எல்லாம் வேற காரணம் இருக்கா?”
“சுபா…”
அவளால் அதற்குமேல் நிதானத்தைக் கைப்பிடிக்க முடியவில்லை. “சொல்லடா ராஸ்கல்! உனக்கு என்னைப் பாத்தா எப்பிடித் தெரியுது? அரை லூசு மாதிரியா? அதான் என்ர தலைல மிளகாய் அரைக்க நினைச்சியா? சொல்லு!” என்று பாய்ந்து வந்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.
அவன் அதிர்ந்துபோனான். “சுபா என்ன இது? நான் சொல்லுறதைக் கொஞ்சம் பொறுமையாக் கேளு.” என்று அவளைத் தன்னிடமிருந்து பிரிக்க முயன்றான்.
“இவ்வளவு நாளும் நீ சொன்னதத் தானேடா நம்பினனான். உன்ன நல்லவன் எண்டு நினைச்சேனே. அதான் என்னை ஏமாத்தினியா? முதல் அதைக் காட்டு! காட்டு!” என்றவள் அவன் கையில் இருந்த பையைப் பறித்து, உள்ளே இருந்ததை எல்லாம் வேகமாக வெளியே எடுத்தாள்.
மூன்று டப்பாக்களில் இடியப்பம், சொதி, கறி என்று தனித்தனியாக இருந்தன. கூடவே இரண்டு வாழைப் பழங்களும். அவள் விழிகளில் நெருப்புப் பறந்தது.
“இப்பிடித்தான் உனக்குக் கடைல கட்டித் தருவினமா? சொல்லு, எவளோ ஒருத்தியோட இங்க சுத்துறியாமே. ஆரு அது?” அந்தப் பையைத் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் அவன் சட்டையைப் பற்றி உலுக்கினாள்.
அவனால் அவளின் ஆவேசத்தின் முன்னே ஈடுகொடுக்க முடியவில்லை. “சுபா ப்ளீஸ். கத்தாத. வெளில கேக்கப் போகுது. பொறுமையா நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளு.” என்று கெஞ்சினான்.
“வெளில கேட்டா என்ன? மானம் போயிடுமா உனக்கு? அந்தளவுக்கு நல்ல மனுசனா நீ? சொல்லு, அந்தளவுக்கு ஒழுக்கமானவனா நீ? உன்ன நம்பினனேடா. உன்ன நம்பி ஒரு பிள்ளையையும் பெத்தனேடா. எனக்குத் துரோகம் செய்ய உனக்கு எப்பிடி மனம் வந்தது?” அழுகையும் ஆத்திரமுமாய் அவனுக்கு அடித்தாள்.
அதையெல்லாம் வாங்கிக்கொண்டு அவளைச் சமாதானம் செய்ய முயன்றவனால் ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை. வலித்தது.
அதைவிட, வர வர அவள் சத்தம் உயர்ந்துகொண்டு போகவும், “இப்ப நீ வாய மூடப்போறியா இல்லையாடி?” என்று இரைந்தபடி அவளைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.
படார் என்று தரையில் போய் விழுந்தாள் சுபாங்கி. “அம்மா!” என்று அலறியவளை வாயில் விரல் வைத்து, “மூச்!” என்று அடக்கினான் அவன்.
“மூச்சு விடுற சத்தத்தைவிட வேற ஏதாவது சத்தம் வந்ததோ இந்த இடத்திலேயே உன்னக் கொன்டுடுவன்!” என்று உறுமியவனை நம்ப முடியாத பெரும் திகைப்புடன் பார்த்தாள் சுபாங்கி.
அவள் அசைவுகள் அத்தனையும் நின்று போயின. கண்ணீர் கூட வரவில்லை. எப்படி விழுந்தாளோ அப்படியே கிடந்தாள்.
அவனும் அங்கிருந்த நாற்காலியில் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். எதை, எப்படிச் சொல்லி விளங்க வைப்பது என்று அவனுக்குத் தெரியவே இல்லை. நெஞ்சு அடித்துக்கொண்டது.
அப்படியே எவ்வளவு நேரம் கடந்ததோ! தலையைக் கோதி, கண்களை இறுக்கி மூடிவிட்டுத் திறந்து அவளைப் பார்த்தான்.
இன்னும் அவள் அவன் தள்ளிவிட்டது போலவே கிடந்தாள்.
“ப்ளீஸ் சுபா. நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளு. உனக்குத் துரோகம் செய்ய நினைக்கவே இல்ல. ஆனா… ஆனா எல்லாம் என்னை மீறியே நடந்து போச்சு. அவள் இப்ப சுகமில்லாம(கர்ப்பமாக) இருக்கிறாள். எனக்கு இனி என்ன செய்றது எண்டு தெரியவே இல்ல.” என்றான் தொண்டை அடைக்க.
இடியென அவன் இறக்கிய செய்தியில் மூச்சு விடக்கூட மறந்துபோனாள் சுபாங்கி.

