அத்தியாயம் 15
நிலானி பிறந்து வளர்ந்தது எல்லாமே யாழ்ப்பாணம். நாட்டுப் பிரச்சனையின்போது சொந்த ஊரை விட்டு வெளியேறி, 2009ல் நடந்த இறுதி யுத்தத்தில் தந்தையைப் பறிகொடுத்துவிட்டு, வவுனியா அகதிமுகாமில் அம்மா, தம்பியோடு அகதியாக வந்து சேர்ந்திருந்தாள்.
யுத்தத்தின்போது செல் துண்டு ஒன்று அவள் தம்பி நிசாந்தனின் தலைக்குள் புகுந்திருந்தது. அதை வெளியே எடுக்க முயன்றால், உயிருக்கே ஆபத்தாகிப் போகும் என்பதில் அவனுடைய மிகுதி வாழ்க்கை அந்த செல் துண்டுடன்தான் என்றாகிப் போயிற்று.
அதனாலேயே நன்றாக இருப்பவன் சில நாள்களில் கொதி பிடித்தவனாக மாறிவிடுவான். கோபப்படுவது, பொருள்களைத் தூக்கிப் போட்டு உடைப்பது, அன்னை தமக்கைக்கு அடிப்பது என்று அவனைச் சமாளிக்கவே முடியாமல் போய்விடும்.
கத்திக் கூச்சலிடுவான். யாரையும் தன்னருகில் நெருங்க விடமாட்டான். மண்டைக்குள் இருக்கும் அந்த செல் துண்டினால் அவன் மூளை நெருப்புப் பற்றிக்கொண்டது போன்று கொதிக்குமாம். அதன் விளைவுதான் இது என்றும், அதை முற்றிலுமாக மாற்ற முடியாது என்றும் வைத்தியர்கள் சொன்னதை அவளும் அவள் அன்னையும் கண்ணீருடன் ஏற்றுக்கொண்டிருந்தனர்.
பள்ளிக்கூடத்தில் அடிக்கடி அவன் இப்படி நடந்து, அவனோடு படித்த பிள்ளைகள் சிலர் காயப்பட்டு, கடைசியில் அவன் இருக்கும் வகுப்பில் மற்றைய மாணவர்கள் படிக்கவே பயந்ததில் படிப்பையும் நிறுத்தியிருந்தார்கள்.
கணவனை இழந்தது, மகனுக்கு இப்படியானது, வருடக் கணக்கிலான அகதிமுகாம் வாழ்க்கை, வாழ்வாதாரத்துக்கு வழியில்லாத நிலை என்று எல்லாமாய்ச் சேர்ந்து, அவர்களின் அன்னை சிவகாமியை மொத்தமாய் ஒடுக்கியிருந்தது.
வவுனியா, ஆசிக்குளத்தில் அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட காணியில், அரசாங்கம் வழங்கிய வீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு வீட்டினைக் கட்டிக்கொண்டு போனார்கள். அங்கே புல்லுப் பிடுங்குவது, நாற்று நடுவது, வீட்டு வேலைகள் என்று கிடைக்கிற வேலைகள் செய்துதான், சிவகாமி அம்மா சாப்பாட்டுக்கு என்று எதையாவது கொண்டுவருவார்.
அதுவே அரை வயிற்றுக்குத்தான் போதும் என்கையில் நிசாந்தனின் வைத்தியச் செலவுகளுக்கு எங்கே போவது? கடைசியில் அந்த வீட்டின் பொறுப்பை நிலானி எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை. அதன்படி எங்கு வேலை கிடைத்தாலும் அதைப் பார்த்து, அதன் மூலம் நிசாந்தனின் செலவுகளைப் பார்த்து என்று நகர்ந்த அவள் வாழ்க்கை, கடைசியில் தற்போது வேலை பார்த்து வரும் கேக் சென்டரில் வந்து நின்றது.
விழாக்களுக்கும் வீட்டு விசேசங்களுக்கும் கேக் செய்து கொடுப்பதுதான் அவர்களின் பிரதான வேலை. அதுவே கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து, இன்று குளிர்பான வகைகள், கோப்பி, ஐஸ், பழக்கலவைகள் என்று, வந்திருந்து அருந்திவிட்டுப் போகும் கூல்பாருடன் கூடிய கேக் சென்டராக வளர்ந்திருந்தது.
அங்கே, பாத்திரங்கள் கழுவி, வேலை நடக்கும் பின் பக்கத்தைக் கூட்டித் துடைக்கும் பெண்ணாகத்தான் முதலில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள்.
பெண் ஒருவரே அதன் முதலாளியாக இருந்ததும், அவள் நிலை அறிந்து கொடுக்கப்பட்ட நல்ல சம்பளமும், எஞ்சும் கேக்குகளை வீட்டுக்குக் கொண்டுபோகக் கொடுப்பதும் என்று அவர்களுக்கு இவளும் இவளுக்கு அவர்களும் மிக நன்றாகவே பொருந்திப் போயிருந்தனர்.
இப்போது கேக் கலவை தயாரித்து, பேக் பண்ணும் நிலைக்கு வளர்ந்திருந்தாள் நிலானி. கூடவே, கேசியரில் நிற்கும் அளவுக்கு நம்பிக்கையானவளாகவும் மாறியிருந்தாள். கிட்டத்தட்ட அவளை நம்பிக் கடையை ஒப்படைத்துவிட்டு, அவளுக்கு உதவிக்கு இன்னும் இருவரையும் வேலைக்கு அமர்த்தியிருந்தாள், அந்தக் கடையின் உரிமையாளினி.
இருபத்தியெட்டு வயது முடிந்தும் திருமணத்தைப் பற்றி யோசிக்கும் நிலையில் அவளும் இல்லை, அவளுக்குச் செய்து வைக்குமிடத்தில் அவளுக்கென்று யாருமில்லை. எந்த எதிர்காலக் கனவுகளும் இல்லாமல், அம்மா, தம்பியைப் பார்த்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தாள்.
இப்படி இருக்கையில்தான் அவர்கள் வீட்டையும் பக்கத்து வீட்டையும் பிரிக்கும் எல்லையில் பக்கத்து வீட்டினர் மதில் கட்ட ஆரம்பித்தனர். அதற்கான வேலைகள் ஆரம்பித்த பிறகுதான், கிட்டத்தட்ட நான்கு அடிகள் இவர்கள் காணியில் பிடித்துக்கொண்டு அவர்கள் மதிலை எழுப்ப முயல்வது தெரிந்தது.
நிலானி சொல்லிப் பார்த்தாள். ஆண் துணை இல்லாத வீடு என்பதும், யார் என்ன சொன்னாலும் அமைதியாகக் கடந்துபோகும் அவர்களின் ஏழ்மை நிலை தந்த தைரியத்திலும் அவள் சொன்னதை அவர்கள் காதில் விழுத்தவே இல்லை.
கிராம சேவையாளரிடம் அதை முறையிட்டு, அவர் வந்து பார்த்து, அவர்கள் கட்டுவது பிழை என்று சொல்லியும் நிறுத்தவில்லை. கடைசியில் கிராம சேவையாளரின் ஏற்பாட்டில் நில அளவைத் திணைக்களத்திடம் இவள் பிரச்சனை சென்றது.
அவர்கள் வந்து பார்த்து, இரு தரப்பினதும் காணி உறுதியைச் சரி பார்த்து, இரு தரப்பு நிலங்களையும் அளந்து, சரியான எல்லை எது என்பதைக் குறிக்க வேண்டும்.
ஒவ்வொரு முறையும் வருகிறோம் என்று சொல்லி, ஒரு நாளையும் நேரத்தையும் குறிப்பார்கள். இவளும் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு வந்து காத்திருப்பாள். ஆனால் வரமாட்டார்கள். எப்போது அழைத்துக் கேட்டாலும் ஏதோ ஒரு காரணம் சொல்லி, நாளைத் தள்ளி வைத்துக்கொண்டே இருந்தார்கள்.
கடைசியில், “இப்பிடி அடிக்கடி லீவு எடுக்கிறது சரியா வராது நிலானி!” என்று அவள் வேலைக்கு ஆபத்து வந்ததே தவிர்த்து வேறு எதுவும் நடந்தபாடில்லை. அவர்களுக்கு எதையாவது நீ கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று அயலட்டையினர் சொல்ல, மாதம் முழுவதற்கும் மூன்று நேர உணவுக்கே சரியாக வாழும் அவர்களால் எதைக் கொடுக்க முடியும்?
அது முடியாது என்பதால் நில அளவைத் திணைக்களத்துக்கு நேராகவே சென்று, அதன் தலைமைப் பொறுப்பாளரைச் சந்தித்தாள்.
அவளுடைய பிரச்னையை முழுமையாகக் கேட்ட சந்திரகாந்தன், தன் திணைக்கள ஊழியரின் பெயரில்தான் முழுத்தவறும் என்று கண்டு, அவள் முன்னிலையிலேயே அவருக்கு அழைத்து, அவளின் பிரச்சனையை என்ன என்று பார்த்துவிட்டு, அதன் அறிக்கையை நேரடியாகத் தன்னிடமும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தான்.
அதன்பிறகு வேலைகள் அனைத்தும் மின்னல் விரைவில் நடந்து, மதிலை இடித்திருந்தார்கள். தற்போது இவளை முறைத்தபடி சரியான எல்லையில் மதில் எழும்பும் வேலை நடந்துகொண்டிருந்தது.
நிலானிக்கு அத்தனை சந்தோசம். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேலாக அவள் அலையோ அலை என்று அலைந்தும் நடக்காத காரியம், அவன் ஒருவனின் தலையீட்டில் இரண்டு வாரங்களில் நடந்து முடிந்ததில், அவர்கள் கடையின் விசேசமான ‘நட்ஸ் வித் சீஸ் கேக்’ வாங்கிக்கொண்டுபோய், அவனுக்குக் கொடுத்துத் தன் நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்திருந்தாள்.
அவர்கள் வறியவர்கள். இன்றைய நிலையில் அந்த மூன்று ஜீவன்களுக்கும் சொத்து என்று இருப்பதே அரசாங்கம் தந்த அந்தக் காணியும் வீடும்தான். அதிலும் பிடுங்கிக்கொள்ள வந்தால் எப்படி என்று மனத்தில் குமுறிக்கொண்டிருந்தவளுக்கு அவன் குணத்தாலும், நடத்தையாலும் மிகவும் உயர்ந்த மனிதனாகத் தெரிந்தான்.
இது நடந்து மூன்று மாதங்களாகியிருந்தன.
அன்றொருநாள் கடையில் செய்து முடித்த கேக்கினை அழகாய்த் தட்டு ஒன்றில் வைத்து, அதைக் கொண்டு வந்து கடையின் முன் பகுதியில் இருக்கும் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்க வந்தவள், அங்கே இன்னொரு நபருடன் அமர்ந்திருந்து, குளிர்பானம் அருந்திக்கொண்டிருந்த காந்தனைக் கண்டதும் முகம் மலர்ந்துபோனாள்.
“ஹலோ சேர், எப்பிடி இருக்கிறீங்க?” என்று ஓடிப்போய் நலன் விசாரித்தாள்.
திரும்பிப் பார்த்த அவனுக்கு இவளை யார் என்றே தெரியவில்லை. “நல்லாருக்கிறன். நீங்க?” என்றான் கேள்வியாக.
அவள் தனக்கு நடந்ததைச் சொல்லி நினைவூட்டவும், “கேக் கொண்டுவந்து தந்திட்டுப் போனது நீங்கதானா? அது நல்லாருந்தது.” என்று நினைவுபடுத்திக்கொண்டவன், மறக்காமல் அதே கேக்கில் இரண்டு துண்டுகளை வாங்கி, தன்னோடு வந்தவருக்கும் கொடுத்துச் சாப்பிட்டுவிட்டுப் போனதிலிருந்து ஆரம்பமாகியிருந்தது அவர்களுக்கிடையிலான அறிமுகம்.
உண்மையில் தரமும் சுவையும் துப்பரவும் நிறைந்த கடை என்பதில் அடிக்கடி அங்கே போக ஆரம்பித்தான் காந்தன். அங்கே நிலானியைக் காணும் பொழுதுகள் அமைந்தால் சிறு புன்னகையோடு கடந்துவிடுவான்.
இப்படி இருக்கையில்தான் ஒருநாள் அவளை அவளின் தம்பியோடு வீதியில் வைத்துக் கண்டான். அதுவும் தெருவில் நிற்கிறோம் என்று கூட அறியாமல், கத்தி, அவளை அடித்து, முடியைப் பிய்க்க முயன்றுகொண்டிருந்தான் நிசாந்தன். அவனைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தாள் நிலானி.
இருவரும் அவளுடைய சைக்கிளில் வந்திருந்தார்கள். அவனோ சைக்கிளில் ஏறமாட்டேன் என்று நின்றான். அப்போதுதான் தன் வாகனத்தைக் கொண்டுபோய் அவர்கள் அருகில் நிறுத்திவிட்டு, என்ன என்று விசாரித்தான் காந்தன்.
கலங்கிவிட்ட விழிகளும் அவமானக் கன்றலுமாக நிசாந்தனின் பிரச்சனையை அவள் சொன்னபோது, அவனுக்கும் அவள் நிலை விளங்கிற்று. பாவமாயும் இருந்தது. அருகில் இருந்த கடை வாசலில் அவள் சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டு, இருவரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டான்.
வாகனத்தில் கூட வெளியில் பாய்கிறேன் என்று நின்ற நிசாந்தனைக் கண்டு இவனே பயந்தான்.
ஒரு வழியாக அங்குப் போய் இறங்கியதுமே அவனுக்கான மாத்திரைகளைக் கொடுத்து, அவன் கோபத்தைத் தணித்ததும் இவனா வீதியில் நின்று அந்தக் கத்துக் கத்தினான் என்று நினைக்கும் அளவுக்குச் சாதுவாகியிருந்தான் நிசாந்தன். இவனோடு கூட இரண்டொரு வார்த்தைகள் வெகு இயல்பாக உரையாடினான்.

