கேட்பார் இன்றிக் காதல் 16 – 1

அத்தியாயம் 16

அப்படி அவள் கொண்டுவந்து தந்த உணவுதான் அவர்களுக்குள் ஒரு பிணைப்பை உண்டாக்க ஆரம்பித்தது. “ஏன் சேர் இப்ப நீங்க கடைக்கு வாறதே இல்ல.” என்று அவள் கேட்டு, மீண்டு அவர்களின் கடைக்குச் செல்ல ஆரம்பித்தவன் அதன் பிறகு தன்னை அறியாமலேயே தினமும் மாலையில் அங்கே செல்வதை வழக்கமாக்கியிருந்தான்.

கடைசியாக வந்த அன்பினியின் பிறந்தநாளுக்குக் கூட அவளை அழைத்துச் சென்றிருந்தான். அன்பினியை அறிமுகம் செய்து வைத்து, அவளுக்குப் பிறந்தநாள் என்று அவன் சொன்னபோது, நிலானியும் வாழ்த்தியிருந்தாள்.

தமையனின் வேலை காரணமாக அவனை நிறையப் பேருக்குத் தெரியும் என்பதால் அன்பினியும் இயல்பாக அதை ஏற்றிருந்தாள்.

அடுத்த நாள் வந்தவனிடம் அவன் பிறந்தநாள் எப்போது என்று கேட்டுத் தெரிந்துகொண்டு, அடுத்து வந்த அவன் பிறந்தநாளின்போது, கைக்குக் கட்டும் மணிக்கூடு ஒன்று வாங்கிப் பரிசளித்திருந்தாள் நிலானி.

சற்றே விலையான மணிக்கூடு. பிறந்தநாளுக்கு என்று தந்ததை மறுக்கவும் முடியவில்லை. “ஏன் நிலானி இதெல்லாம்?” என்றான் சலிப்புடன்.

“சேர், இண்டைக்கு உங்களுக்குப் பிறந்தநாள். வேண்டாம் எண்டு எல்லாம் சொல்லக் கூடாது.” என்று அவள் விளையாட்டாக விரல் நீட்டி மிரட்டிச் சிரித்தபோது, முதன் முறையாக அவள் முகத்தில் அவன் பார்வை படிந்து விலகிற்று.

அன்றுதான் அவனுக்குள் மெல்லிய தடுமாற்றம் ஆரம்பித்ததும். அதுவும், என் பிறந்தநாளுக்காகவாவது இங்கே வந்துவிட்டுப் போ என்று அவன் வருந்தி அழைத்தும், அடுத்த நாள் வேலை இருக்கிறது என்று சுபாங்கி மறுத்தது மிகுந்த சினமூட்டியிருந்தது.

அவன் பதவியை, அவன் செல்வாக்கை, அவனின் உயரத்தை உணர்ந்து, யாரோ ஒரு பெண் அவனைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டாட, அவனுடைய ஆசை மனைவி அவனைத் தேடி வரமாட்டேன் என்கிறாள் என்கிற கோபத்தில், முதன் முதலாக நிலானியை அழைத்துக்கொண்டு ஒரு உணவகத்துப் போனான்.

அன்று, அவன் ஒரு அதிகாரி, அவனிடம் உதவி பெற்றவள் அவள் என்கிற நிலைகளைத் தாண்டி, அவளோடு இயல்பாக உரையாட ஆரம்பித்தான். அவள் இன்னுமே ‘சேர்’ என்பதிலேயே நிற்க, அவன் இயல்பாய் ஒருமைக்குத் தாவியிருந்தான்.

உணவை முடித்துக்கொண்டு அவளை நேராகக் கொண்டுவந்து அவர்கள் வீட்டிலேயே இறக்கிவிட்டுவிட்டு, சிவகாமி அம்மாவோடும் நிசாந்தனோடும் சற்று நேரத்தைச் செலவழித்துவிட்டு வந்தபோது, சுபாங்கி தன் பிறந்தநாளுக்கு வரவில்லை என்கிற குறை அவனை விட்டு அகன்றிருந்தது.

அதன் பிறகு நிலானியின் நினைவுகள் மெல்ல மெல்ல அவனுக்குள் அதிகரிக்க ஆரம்பித்தன. அவளையும் தான் பாதிக்கிறோமா என்று அவளறியாமல் அவளை ஆராய ஆரம்பித்தான். அப்படி எதுவும் இருப்பதாய்த் தெரியவில்லை.

தேனின் நிறமும், மெல்லிய மேனியும், அடர்ந்த கூந்தலும், அவனைக் கண்டதும் மலர்ந்து மின்னும் விழிகளும், வெண் பற்கள் மின்னப் பேசும் இயல்பும் அவனைத் தடுமாற வைத்தன.

இப்போதெல்லாம் உதடுகள் ஏதோ ஒன்றை அவளோடு சிரித்துப் பேசினாலும் கண்கள் அவளை வட்டமிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

இது பிழை, கூடாது, மனத்தை அலைபாய விடாதே, மனைவிக்குத் துரோகம் செய்ய நினைக்காதே என்று தினமும் காலையில் எழுகையில் உறுதியாகத் தனக்குள் சொல்லிக்கொள்வான். அதே நேரம், மாலை வேலை முடிந்ததும் அவன் வாகனம் அவள் கடையின் முன்னால் சென்று நின்றுவிடும்.

என்ன முயன்றும் சுபாங்கியோடு மனத்தளவில் நெருக்கமான ஒரு நிலை இல்லாமல் போய்க்கொண்டு இருந்ததும், அவர்களுக்குள் அடிக்கடி வந்து போன சண்டையும் கூட அவனை இந்தப் பக்கமாக நகர்த்த ஆரம்பித்தன.

அங்கே எப்போது என்ன பேச ஆரம்பித்தாலும் சண்டை. இங்கே சந்திக்கும் ஒவ்வொரு பொழுதுகளிலும் மனத்தில் உற்சாகம் துள்ளும். அதுவும் இன்றைக்கு இது செய்தேன் என்று சொல்லி, அருகில் நின்று அவள் எதையாவது உண்ணத் தருகையில் மனத்தளவிலான ஒரு பிணைப்பு அவனுக்குள் உருவாக ஆரம்பித்திருந்தது.

அன்று அவர்களின் திருமணநாள் என்று கோவிலுக்கு வந்திருந்தான். கடவுள் முன்னே கைகைளைக் கூப்பி நின்றவனுக்கு மனம் முழுக்க ஒரு பாரம்.

சுபாங்கியை முதன் முதலாகப் பார்த்தது, அவள் மீது ஆசை கொண்டது, சிறப்பாக நடந்த திருமணம், இனிய இல்லறம், தளிர் பிறந்தது என்று அவனுக்கு அமைந்தது மிக மிக அழகான வாழ்க்கை. அப்படியிருக்க அவன் செய்துகொண்டிருப்பது என்ன?

என்னதான் ஒரு பெண்ணோடு பேசுவதும் அவளை ரசிப்பதும் அவனுக்குள் மெல்லிய கிளுகிளுப்பைக் கொடுத்திருந்தாலும் ஆழ்மனது நீ செய்வது மகா துரோகம் என்று எடுத்துரைத்துக்கொண்டேதான் இருந்தது.

அதிலிருந்து தப்பிக்க எண்ணித்தான் சுபாங்கி அங்கே இருப்பதற்குச் சொன்ன காரணங்கள் அத்தனையும் நியாயமானவை என்று தெரிந்திருந்த போதிலும், இங்கே வரச்சொல்லி சண்டை பிடித்துக்கொண்டிருந்தான். அவனுக்குள் நடக்கும் போராட்டத்தை அறியாதவளோ முற்றிலுமாக மறுத்துவிட்டிருந்தாள்.

‘கடவுளே, இனியாவது தடுமாறாத மனதைத் தா’ என்று வேண்டிவிட்டு, திருநீறு சந்தானம் பூசிக்கொண்டு வெளியே வந்தவன் அப்படியே நின்றுவிட்டான். காரணம், பீச் நிற உடலுக்கு டார்க் பிறவுன் பூக்கள் பூத்துக் கிடக்கும் சேலை ஒன்றை அணிந்து, தானும் ஒரு பூவாக மலர்ந்து விகசித்த முகத்துடன் எதிரில் வந்துகொண்டிருந்தாள் நிலானி.

அவளும் இவனைக் கண்டுவிட்டு, “குட் மோர்னிங் சேர்!” என்றாள் துள்ளலாக.

“வேலைக்குப் போகாம இங்க என்ன செய்றாய்?” அவளிடம் தடுமாறும் மனத்தைக் கட்டி வைக்க முயன்றபடி வினவினான்.

“நீங்கதானே பெர்ர்ர்ரிய ஒபீசர். என்ன எண்டு கண்டுபிடிங்க பாப்பம்.” என்று கலகலத்தாள் அவள்.

புதிதாக அணிந்திருக்கும் சேலை, தலைக்குக் குளித்து விரித்து விட்டிருந்தது, முகத்தில் தெரிந்த மலர்ச்சி அத்தனையும் இன்றைக்கு அவளுக்குப் பிறந்தநாளோ என்கிற ஊகத்தைக் கொடுத்தாலும், “என்ன கலியாணமா?” என்றான் வேண்டுமென்றே.

“சேர்ர்ர்!” என்று பொய்யாகக் கண்களை உருட்டி மிரட்டிவிட்டு, “சும்மாதானே கேக்கிறீங்க? நீங்க கண்டுபிடிச்சிருப்பீங்க எண்டு எனக்குத் தெரியும்.” என்றாள் அவள் சிரிப்போடு.

அவனும் முறுவலோடு, “பிறந்தநாளா?” என்று கேட்டு, அவள் கரம் பற்றி வாழ்த்தினான்.

அவர்களுக்குள் நிகழ்ந்த முதல் தொடுகை அதுதான்.

“தேங்க்ஸ் சேர்!” என்றவளுக்கு அவன் கரத்தின் அழுத்தமான பற்றுதலில் என்னவோ குறுகுறுத்தது. அவன் பார்வையைச் சந்திக்க இயலாமல் தடுமாறி, “சுவாமி கும்பிட்டுட்டு வாறன் சேர்.” என்றுவிட்டுக் கோயிலுக்குள் ஓடிப்போனாள்.

போகிறவளையே பார்த்திருந்த அவன், அவன் வசத்திலேயே இல்லை. சற்று முன்னர் கடவுளிடம் வேண்டியது எல்லாம் மறந்துபோனது. அவள் சிரித்தது, பார்த்தது, அவன் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் பார்வையை அகற்றிக்கொண்டது, முகம் சிவந்தது என்று அத்தனையும் மனக்கண்ணில் மின்னி மறைய, வானில் பறந்துகொண்டிருந்தான்.

அவள் சுவாமி கும்பிட்டுவிட்டு வந்தாள்.

“இண்டைக்கு லீவா, இல்ல வேலை இருக்கா?” கோயிலை விட்டு வெளியே நடந்தபடி அவளிடம் வினவினான்.

“வேலை இருக்கு சேர்.” என்றவள், “உங்களுக்கு இண்டைக்கு பிறந்தநாள் இல்லையே. நீங்க ஏன் கோயிலுக்கு வந்து இருக்கிறீங்க?” என்று விசாரித்தாள்.

“இண்டைக்கு எனக்குக் கலியாண நாள்.” உண்மையா பொய்யா என்று பிரித்தறிய முடியாத வகையில் சிரித்துக்கொண்டு சொன்னான் அவன்.

சற்று முன்னர் அவன் அவள் கையைப் பற்றிய விதமும், பார்த்த பார்வையும், திருமணமா என்று கேட்டு விளையாடியதும் நினைவில் வந்து போக, “விட்டா பிள்ளையும் இருக்கு எண்டு சொல்லுவீங்க போல சேர். ஆனாலும் வர வர உங்களுக்கு விளையாட்டுக் கூடிப்போச்சு.” என்றவள் விழிகள், திருமண மோதிரம் இல்லா அவன் கையைத் தொட்டு வந்தது.

ஏதோ வீட்டு வேலையின் போது கம்பி ஒன்று மோதிரத்தில் மாட்டி, அது ஒரு பக்கமாக இழுத்துக்கொண்டதில் சரி செய்து வைக்கும்படி சுபாங்கியிடம் கொடுத்திருந்தான். அவர்களுக்குள் நடந்துகொண்டிருந்த பிணக்கில் அதை அப்படியே மறந்துபோயிருந்தான். அதுவே இன்று அவன் திருமணமாகாதவன்தான் என்று அவள் நம்புவதற்கு இன்னுமே காரணமாயிற்று.

அவனிடம் விடைபெற்றுத் தன் சைக்கிளில் ஏறி அமர்ந்தவள், நினைவு வந்தவளாக, “சேர், இண்டைக்கு இரவுச் சாப்பாட்டுக்கு எங்கட வீட்டுக்கு வாறீங்களா? உங்களை மாதிரிக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போய்ச் சாப்பாடு வாங்கித் தர எல்லாம் எனக்கு வசதி இல்ல.” என்றாள் ஆசையாக.

அவனுக்கு அன்று வேறு வேலைகள் இருந்தன. அதில், “இண்டைக்கு கஷ்டம் நிலானி. சனி ஓகேயா உனக்கு? ஆனா பகல் சாப்பாடு.” என்று கேட்டான்.

error: Alert: Content selection is disabled!!