அத்தியாயம் 17
சிவகாமி அம்மா முதலில் எதையும் தவறாக நினைக்கவில்லை. முக்கியமாக அவனைப் போன்று நல்ல பதவியில் இருக்கும் நற்குணம் கொண்ட ஒருவனைத் தவறுடன் இணைத்து யோசிக்க முடியவில்லை.
ஆனாலும் கூட, யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பிய அன்று, காந்தன் புறப்பட்ட பிறகு, “நான் இல்லை எண்டு அவருக்குத் தெரியாது. ஆனா உங்களுக்குத் தெரியும் எல்லா பிள்ளை. பிறகும் ஏன் வரச் சொன்னனீங்க? மானத்தத் தவிர எங்களிட்ட வேற ஒண்டும் இல்ல. இனியாவது கவனமா இருங்கோ. பிறகு வாழுறதிலேயே அர்த்தம் இல்லாமப் போயிடும்.” என்று எச்சரித்திருந்தார்.
வெள்ளம் பாய்ந்த பிறகு அணை கட்ட முயல்கிறார் என்று அவருக்குத் தெரியாது போயிற்று. அதன் பிறகும் கூட அவர் அறியாமல் அவர்களுக்கிடையிலான பழக்கம் வளர்ந்துகொண்டேதான் போனது.
இப்போதெல்லாம் மகள் பிரத்தியேகமாகக் கவனமெடுத்துத் தயாராவதையும், புதிதாகப் பூரித்து மலர்ந்திருக்கும் அவள் முகத்தையும், கனவில் மிதக்கும் விழிகளையும், இரவுகளில் கூடக் கைப்பேசியிலேயே நேரத்தைச் செலவழிப்பதையும் சிவகாமி அம்மா கவனித்துக்கொண்டுதான் இருந்தார்.
அவர் நெஞ்சை ஒரு பயம் கவ்விப் பிடித்தது. அவள் தவறான பாதையில் செல்கிறாளோ என்று கவலைப்பட்டார். இதை எப்படிக் கண்டுபிடிப்பது என்று யோசித்தார்.
ஒருசில முறைகள் அவர் வெளியே போய்விட்டு வருகிற பொழுதுகளில் அவன் வீட்டில் இருப்பதைக் கவனித்தபோது, திக் என்றுதான் இருந்தது. நடப்பவை எதுவும் சரியாகப் படவில்லை. அவனைப் போன்று உத்தியோகத்தில் இருக்கும் ஒருவனுக்கு அவர்கள் வீட்டில் அடிக்கடி என்ன அலுவல்?
அதைவிட அவனுக்கும் மகளுக்குமிடையில் தெரியும் அந்த நெருக்கம் வேறு அவரை உறுத்தியது. இதை வளரவிடக் கூடாது என்று எண்ணி, மகளை அழைத்து நேராகவே கேட்டார்.
முதலில் அவர் முகம் பார்க்கவே தயங்கினாலும் பிறகு அவனும் தானும் நேசிப்பதாகச் சொன்னாள் நிலானி. அவள் அப்படித்தான் நம்பினாள். காதல் இல்லாமல் அந்தளவு தூரத்துக்கு அவன் தன்னை நெருங்கமாட்டான் என்று உறுதியாக எண்ணினாள்.
அவரால் நம்ப முடியவில்லை. படித்து, அவ்வளவு பெரிய பதவியில் இருப்பவன், வறிய வீட்டுப் பெண்ணை நேசிப்பானா? அவனுக்கு இணையான ஒரு நிலையில் இருப்பவளைத்தானே பார்ப்பான். முதலில் அவன் வீட்டினர் இதற்கெல்லாம் சம்மதிப்பார்களா? அவரின் பெண் இதையெல்லாம் யோசித்தது போன்று தெரியவில்லை.
அதை நேரிலேயே கேட்டுவிட எண்ணி, அவளிடம் சொல்லி அவனை வரவழைத்து, “தம்பி, மகள் என்னவோ எல்லாம் சொல்லுறா. உண்மையா அப்பு?” என்று நயமாக வினவினார்.
இதை எதிர்பார்த்துதான் காந்தன் வந்தான். ஆனாலும் குற்ற உணர்ச்சி அவனைக் குத்தியது. சுபாங்கியும் அவன் குடும்பத்தினரும் கண் முன்னால் வந்து போயினர். அவர்களுக்குத் துரோகம் செய்தது போதாது என்று, உலகமறியா இந்த அப்பாவித் தாய்க்கும் மகளுக்கும் பெரும் பாவம் இழைக்கிறோம் என்று தெரியாமல் இல்லை.
ஆனாலும் கூட எனக்கு ஏற்கனவே திருமணமாகிற்று என்று சொல்ல அப்போதும் தைரியமில்லை. அதில், “ஓம் அம்மா. அவா சொன்னது உண்மைதான்.” என்றான்.
அப்போதும் அவரால் இதை நம்ப முடியவில்லை. மனத்தை ஒரு பயம் கவ்வ, “என்னால இத நம்பேலாம இருக்குத் தம்பி. சந்தோசப்படுறதா இல்ல அளவுக்கதிகமா ஆசைப்படுறோம் எண்டு பயப்பிடுறதா எண்டு ஒண்டும் தெரியேல்ல. இதுக்கு உங்கட வீட்டில ஓம் எண்டு சொல்லுவினமா? எங்கட நிலைமை உங்களுக்கே தெரியும். நாங்க ஒண்டுமே இல்லாத மனுசர். நிசாந்தனும் இருக்கிறான். அவன்ர வயித்துப்பாட்டை நான் பாப்பன் எண்டாலும் வைத்தியச் செலவுக்கு அவவின்ர உதவியும் தேவை. இதையெல்லாம் யோசிச்சனீங்களா?” என்று கேட்டவரும் மருந்துக்கும் அவன் ஏற்கனவே திருமணமானவனாக இருப்பான் என்று எண்ணவேயில்லை.
தன்னை முழுமையாக நம்பும் அந்தப் பெண்மணியின் முகம் பார்த்துப் பேச அவனால் முடியவில்லை. ஆனாலும் சமாளித்து, “அதெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்லை அம்மா. ஆனா, எனக்கு ஒரு தங்கச்சி இருக்கிறா. நிலானிக்குத் தெரியும். அவளுக்குக் கலியாணம் முடிஞ்ச பிறகுதான் என்ன எண்டாலும்.” என்று அப்போதைக்கு அந்தப் பேச்சைத் தள்ளிப்போட்டான்.
அவன் இவ்வளவு காலமும் திருமணம் செய்யாமல் இருப்பதற்குக் கூட, அப்படி ஒரு தங்கை இருப்பதுதான் காரணம் என்று அவராகவே யோசித்துக்கொண்டார்.
ஆனாலும் கூட அவருக்கு மனத்தில் கலக்கம்தான். ஒரு பிரச்சனை வந்தால் கேட்டுப் பார்த்துச் செய்ய யாருமில்லாத மனிதர்கள் அவர்கள். கவனமாக இருப்பதுதானே சரி. அதே நேரம் தங்கையின் பொறுப்பை உதறிவிட்டு மகளை மணந்துகொள் என்று சொல்லவும் முடியவில்லை.
அதில், “விளங்குது தம்பி. இப்ப அவசரமாக் கலியாணம் எண்டு இல்லாட்டியும் உங்கட வீட்டில கதைச்சு வைக்கலாமே. உங்களை நம்பாம இப்பிடிச் சொல்லுறன் எண்டு நினைக்காதீங்கோ. பொம்பிளைப் பிள்ளையை வச்சிருக்கிற தாயாப் பயமா இருக்கப்பு. அதுதான்…” என்று, அவன் தன்னைப் பிழையாக நினைத்துவிடக் கூடாது என்கிற தவிப்புடன் அவர் சொன்னபோது, அவர் முன்னே தன்னைச் சாதாரணமாகக் காட்டிக்கொள்வதற்குள் படாத பாடுபட்டுப்போனான் காந்தன்.
“அம்மா, எனக்கு உங்கட பயம் விளங்குது. ஆனா, தங்கச்சிக்குக் கலியாணம் பேசியாச்சு. அவளின்ர படிப்பு முடிஞ்சதும் கலியாணம்தான். இன்னும் ஒரு ஆறேழு மாதம்தான். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கோ.”
எதற்கு அவர் பொறுக்க வேண்டும் என்றில்லாமல் சொன்னான். அவன் வீட்டில் அவர்களைப் பற்றிச் சொல்வதற்கும், அவர்களின் திருமணத்துக்கும் என்று பொருள் எடுத்துக்கொண்டார் அவர். ஆனால், அதுவரையிலான இவர்களின் பழக்கம்? அதை என்ன செய்வது?
“நீங்க படிச்ச பிள்ளை. உங்களுக்குத் தெரியாதது எண்டு ஒண்டும் இல்ல. கலியாணம் எண்டு ஒண்டு நடக்கிற வரைக்கும் ரெண்டு பேரும் கவனமா இருங்கோ. அடிக்கடி சந்திக்கிறது, பாக்கிறது எல்லாம் வேண்டாமே அப்பு.” என்றார் கெஞ்சலாக.
முகம் கன்ற, “விளங்குது அம்மா. இனிப் பாத்து நடக்கிறன்.” என்று சொல்லிவிட்டு அந்த நிமிடமே அங்கிருந்து புறப்பட்டிருந்தான்.
ஒரு கட்டத்துக்கு மேல் அவனால் வாகனத்தைச் செலுத்த முடியவில்லை. வீதியோரமாக நிறுத்தினான். நெஞ்சில் யாரோ பாறாங்கல்லைத் தூக்கி வைத்தது போன்ற நிலை.
இப்போது எதையோ சொல்லிச் சமாளித்துவிட்டு வந்துவிட்டான். இப்படி இன்னும் எத்தனை தரம் சமாளிக்க முடியும்?
அவன் வாழும் சமூகத்தில், வேலை பார்க்கும் இடத்தில் எல்லாம் இது தெரியவந்தால் என்னாகும்? எவ்வளவு அவமானம்? சுபாங்கி அறிந்தால் என்ன சொல்லுவாள்? காறித் துப்பிவிட மாட்டாளா? வீட்டினரின் முகத்தில் எப்படி விழிப்பான்? தங்கை, மகள்… மேலே யோசிக்க முடியவில்லை.
எங்கோ ஒரு மூலையில் இன்னுமே ஒட்டிக்கொண்டிருந்த நேர்மையும் நியாயமான மனதும் சேர்ந்து நிலானியையும் ஏமாற்றிவிடாதே என்று எச்சரித்தது. நீ சபலப்பட்டு அவள் வாழ்க்கைய நாசமாக்கிவிட்டு, உன் சுயநலத்துக்காக அவளைக் கைகழுவுவாயா என்று கேட்டது.
இன்று வரையில் அவள் அவனைச் சந்தேகித்ததே இல்லை. மனத்தளவில் அவனைக் கணவனாகவே வரித்திருந்தாள். இதற்கு முதல் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா என்று கேட்டவள் உங்களுக்குத் திருமணமாகிவிட்டதா என்று கேட்டதே இல்லை. அவ்வளவு நம்பிக்கை.
அவர்கள் நெருக்கமாக இருந்துவிட்டு ஓய்ந்திருந்த ஒரு தருணத்தில், குற்றவுணர்ச்சியின் கொடூரத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், “கலியாணத்துக்கு முதல் இப்பிடி இருக்கிறது உனக்குப் பயமா இல்லையா? நான் ஏமாத்திப்போட்டு ஓடிப்போயிட்டா என்ன செய்வாய்?” என்று கேட்டிருந்தான்.
மெலிதாக விழிகள் கலங்க, அவன் நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டவள் அவன் விழிகளோடு தன் விழிகளைக் கலந்து, “எனக்கு உங்களைத் தெரியும். நீங்க என்னைக் கைவிட மாட்டீங்க எண்டும் தெரியும்.” என்று சொன்னபோது, அவனுக்குப் பேச்சற்றுப்போனது.
“ஒழுக்கம் கெட்டுப் போயிட்டனோ எண்டு அப்பப்ப மனம் குத்தும்தான். ஆனா உங்களிட்டத்தானே, நீங்கதானே எண்டு என்னை நானே சமாதானம் செய்திடுவன்.” என்று சொல்லி அவள் புன்னகைத்தபோது, விருட்டென்று அவளை விலக்கி எழுந்து, வெளியே வந்திருந்தான் அவன்.
அடுத்து வந்த நாள்களில் அங்கே செல்வதை முற்றிலுமாக நிறுத்தியிருந்தான்.
ஆனால், அவனைப் பாராமல், அவனோடு நேரம் செலவழிக்காமல் நிலானிதான் மழையைக் காணாத மண்ணாக வாடிப்போனாள். அன்னை சொன்னதால்தான் வராமல் இருக்கிறான் என்றெண்ணி அவளாகவே அவனை வெளியில் சென்று சந்திக்க ஆரம்பித்தாள்.
இப்படி இருக்கையில்தான் நிலானி கருவுற்றாள். சிவகாமி அம்மா இடிந்தே போனார். தன் மகள் இத்தனை தூரத்துக்குத் துணிவாள் என்று அவர் யோசிக்கவேயில்லை. காந்தன் மீதிருந்த மதிப்பின் அளவு கூடக் குறைந்து போனது. அவசரமாக அவனை வரவழைத்துப் பேசினார்.
காந்தனுமே இதை எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்பாகத்தான் இருந்தார்கள். அதையும் தாண்டி விதி விளையாடிவிட்டதில் அவன் தலையிலும் இடி விழுந்திருந்தது.
நிலானிக்கும் இது எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை. பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்ததே அவன்தான். பிறகும் எப்படி? அன்னையை வைத்துக்கொண்டு அதைப் பற்றிப் பேச முடியாமல் தவிப்புடன் அவனைப் பார்த்தாள்.
“இனியும் பொறுக்கேலாது தம்பி. பொறுக்கிற விசயம் இல்ல இது.” என்றார் சிவகாமி குரலில் இறுக்கத்துடன்.
அவனுக்கு முகம் கன்றிப் போனது. அவரை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அமர்ந்திருந்தான்.
“வளந்த பிள்ளைகள், பொறுப்பா இருப்பீங்க எண்டு நினைச்சன். இனி ஒண்டும் செய்யேலாது. அவசரமாக் கலியாணம் நடந்தே ஆகோணும்.”
அது முடியாதே! அதைச் சொல்ல அவனுக்கு வார்த்தைகளே வரவில்லை.
சிவகாமி அம்மாவால் அவனுடைய அந்த அமைதியைப் பொறுக்க முடியவில்லை. “என்ன தம்பி, இப்பிடி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்று மெல்லிய கோபத்துடன் வினவினார்.
“அம்மா, எவ்வளவு பெரிய பிழை செய்திருக்கிறம் எண்டு விளங்குது. ஆனா, தங்கச்சின்ர கலியாணம் முடியாம என்னால ஒண்டுமே செய்யேலாது. இது தெரிய வந்தா அவளின்ர வாழ்க்கையே கேள்விக்குறியாகும். பிள்ளை பிறக்க முதல் அவளின்ர கலியாணத்தை முடிச்சுப்போட்டு வாறன். அதுவரைக்கும் எனக்காகப் பொறுத்து இருங்கோ.” என்றவன் அவர் முகத்தைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் நிலானியைக் கெஞ்சலாக ஏறிட்டான்.
அவன் அப்படிப் பார்ப்பதை அவளால் தாங்க முடியவில்லை. அதில், “அம்மா, இத்தின வருசம் அவர் கட்டாம இருந்ததே அவரின்ர தங்கச்சிக்காகத்தான். இப்ப போய் அவாக்கு முதல் கட்டு எண்டா எப்பிடி அம்மா? அவர் அவரின்ர கடமையை முடிச்சுப்போட்டு வரட்டும். நான் சமாளிக்கிறன்.” என்று அவளே அவனை அவரிடமிருந்து காப்பாற்றிவிட்டாள்.
சிவகாமி அம்மாவுக்கு மகள் மீது அப்படி ஒரு கோபம் உண்டாயிற்று. தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டதுமல்லாமல் இப்போதும் இப்படிப் பேசுகிறவளை பார்வையாலேயே எரித்தார்.
“நீங்க சமாளிக்கலாம் பிள்ளை. வயித்தில இருக்கிற பிள்ளை சமாளிக்காது. வெளில தெரிய வந்தா என்ன செய்வீங்க?” என்றார் கோபமாக.
“உண்மையா என்ன செய்யப்போறன் எண்டு தெரியாம்மா. ஆனா, அவர்தான் பிள்ளை பிறக்க முதல் கடமையை முடிச்சுப்போட்டு வாறன் எண்டு சொல்லுறாரே. அது வரைக்கும் என்னவாவது சொல்லிச் சமாளிக்கிறன்.”
அதன் பிறகு வந்த நாள்களில் கொஞ்ச நஞ்சமாக இருந்த அவன் நிம்மதியும் தொலைந்து போயிற்று. குற்ற உணர்ச்சியோடு சேர்ந்து பெரும் பயமும் பிடித்துக்கொண்டது.
அவன் வாழ்க்கையும் அதன் முடிவுகளும் அவன் கையை மீறிப் போய்விட்டது நன்றாகப் புரிந்தது.
அன்பினியின் திருமணத்தையாவது நல்லபடியாக முடித்து, அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அவளுக்கு அமைத்துக்கொடுத்துவிடுவோம் என்று எண்ணித்தான் அத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் திருமண நாளைக் குறித்திருந்தான்.
அன்று நிலானிக்கு கிளினிக் இருந்தது. அதற்கு அவளைக் கூட்டிக்கொண்டு போய்விட்டு, அப்படியே வீட்டுக்கு அழைத்துப்போய் விட்டுவிட்டுத் திரும்பி வந்தபோதுதான், அவனுக்காய் அவன் வீட்டு வாசலில் சுபாங்கி காத்திருந்தாள்.
முகக் கன்றலோடு அவளுக்கு இழைத்த பெரும் துரோகத்தைச் சொல்லிவிட்டு, “ப்ளீஸ் சுபா, உனக்கு நான் செய்தது பெரிய துரோகம்தான். எனக்கே தெரியும். உன்ர முகம் பாக்கிற தகுதியே எனக்கு இல்ல. இனி நீ என்ன சொன்னாலும் கேக்கிறன். ஆனா, அதுக்கு முதல் அன்புன்ர கலியாணம் நடக்கட்டும். அவள் பாவம். உனக்கே தெரியும், ப்ளீஸ்!” என்று கெஞ்சியவனின் முகத்திலேயே தூ என்று துப்பியிருந்தாள் அவள்.
அவ்வளவு ஆவேசம் அவளுக்கு. “ஊரான் வீட்டுச் சுபாங்கிக்குத் துரோகம் செய்த உனக்கு, சொந்தத் தங்கச்சி எண்டதும் துடிக்குதோ? நான் ஒரு பொம்பிளை எண்டுதானே தள்ளிவிட்டனி? இன்னொருத்திக்குப் பிள்ளையக் குடுத்திட்டன் எண்டு என்னட்டையே தைரியமாச் சொல்லுறாய். பொறடா என்ர தம்பி வருவான். நீ ஒரு ஆம்பிளையா இருந்தா அவனோட கதை!” என்றுவிட்டுப் புயலென அங்கிருந்து வெளியேறி இருந்தாள் சுபாங்கி.

