கேட்பார் இன்றிக் காதல் – 18

அத்தியாயம் 18

கொஞ்சம் கூட எதிர்பாராத நேரத்தில் யாராவது தலையில் நெருப்பை அள்ளிக் கொட்டினால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது சுபாங்கியின் நிலை. நெஞ்செல்லாம் பற்றி எரிந்தது. ஆத்திரம், ஆவேசம், அழுகை என்று அவள் தேகம் மொத்தமும் உக்கிரம் கொண்டு நடுங்கிற்று.

ஒருத்தியைத் தொட்டு, அவளுக்குக் குழந்தையைக் கொடுத்துவிட்டேன் என்று அவள் முகம் பார்த்துச் சொல்ல எவ்வளவு தைரியம்? சீ! அசிங்கம் பிடித்தவன்!

அவளும்தானே அங்கே தனியாக இருந்தாள். தினம் தினம் எத்தனை ஆண்களைக் கடந்திருப்பாள்? என்றாவது ஒரு நாள் அவள் உள்ளம் தடுமாறி இருக்குமா? எண்ணத்தில் கூடத் தவறாது அவள் இருக்க, இங்கே அவன் ஊர் மேய்ந்திருக்கிறான்.

கடந்த மூன்று மாதங்களில் இவளோடு எத்தனை தடவைகள்… மேலே யோசிக்கக் கூட முடியவேயில்லை. சீச்சீ! அவள் உடல் ஆத்திரத்திலும் அருவருப்பிலும் நடுங்கியது. என்னவோ அவளே அழுக்காகிவிட்டதுபோல் உடல் கூசியது.

கோபம் விடுத்துக் கனிவாக ஒற்றை வார்த்தை கதைத்தான் என்று, மகளைக் கூட விட்டுவிட்டுப் புறப்பட்டு வந்தாளே. அவனோடு சமாதானமாக வேண்டும், மெதுவாக என்ன பிரச்சனை என்று அறிய வேண்டும், அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அவனுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்று எத்தனை எத்தனை யோசனைகள்?

இதில், மகள் இல்லாமல் அவனுக்கும் அவளுக்குமான ஒரு பொழுது அமையப் போகிறது என்று இரகசியச் சந்தோசம் வேறு! சீ!

ஆணுக்குப் பெண் நிகர் என்று வாய் கிழியக் கத்துகிறார்கள். பச்சைத் துரோகத்தைச் செய்துவிட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கிறான் அவன். அவளால் ஆத்திரம் தீர அவனை அடிக்கக் கூட முடியவில்லை. அவன் தள்ளிவிட்டதற்குப் பயந்து வாயை மூடி நின்றுவிட்டு வந்திருக்கிறாள்.

அப்படி அவனை விடக் கூடாது. விடவே கூடாது! மனம் ஆங்காரம் கொள்ள வேகமாக அபயனுக்கு அழைத்தாள்.

*****

இங்கே அசையவே மறந்தவனாக அப்படியே தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்திருந்தான் காந்தன். சுபாங்கி காறித் துப்பிவிட்டுப் போனதை நினைக்கையில் விழிகளை இறுக்கி மூடிக்கொண்டான்.

அத்தனை காரியங்களும் அவன் கையை மீறிவிட்டது புரிந்தது. இனி என்னாகுமோ என்று நினைக்கவே நெஞ்சு நடுங்கிற்று.

திடீரென்று கைப்பேசி சத்தமிட, திடுக்கிட்டு நிமிர்ந்து அமர்ந்தவன் வீட்டினரோ என்று ஒரு கணம் நடுங்கிப் போனான். அழைத்தது நிலானி. “நான் அலுவலா நிக்கிறன் நிலானி. வை, பிறகு கதைக்கிறன்.” அவளைப் பேச விடாமல் சொல்லிவிட்டு வைத்தான்.

நேரத்தைப் பார்த்தான். சுபாங்கி நிச்சயமாக வீடு போய்ச் சேர்ந்திருப்பாள். ஆனாலும் யாரும் அவனுக்கு அழைக்கவில்லை. அவள் யாரிடமும் சொல்லவில்லையோ? அப்படி விடமாட்டாளே!

சுற்றுப் புறம் எல்லாம் மெல்ல மெல்ல அடங்கி, இருள் கவிந்து, ஊரே அடங்கிப் போயிற்று. ஆனாலும் அவன் இதயம் தாறுமாறாகத் துடித்துக்கொண்டே இருந்தது. ஒரு பொட்டுக்குக் கண்ணை மூட முடியவில்லை. இருள் கவிந்துகிடந்த வீட்டுக்குள் முகட்டை வெறிக்க வெறிக்கப் பார்த்தபடி அப்படியே இருந்தான்.

கண் முன்னால் அவன் மகள் தொடங்கி, மனைவி, தங்கை, அன்னை, மாமி என்று ஒவ்வொருவராக வலம் வந்தனர். எப்படி அவர்களை எல்லாம் நிமிர்ந்து பார்ப்பான்? அம்மா, அவருக்கு எப்போதுமே அவன் பெருமை மிகு மகன். இனி?

அப்பா? ஆண்பிள்ளை, தனக்குத் தோள் கொடுக்கும் பெரும் துணை என்று இத்தனை காலமும் அவனை நம்பியவர். அவன் தலையெடுத்த பிறகு, அவன் ஒன்று சொல்லி அவர் மறுத்ததே இல்லை. அவன் மீது அத்தனை நம்பிக்கை. சீச்சீ, நீயா இப்படி என்று அவர் ஒரு பார்வை பார்த்தாலே கூனிக் குறுகிவிடுவானே.

திடீர் என்று வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. விருட்டென்று நிமிர்ந்து அமர்ந்தவனுக்கு நெஞ்சு பலமாக அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. கைகால்கள் எல்லாம் நடுங்கின. சிரமப்பட்டு மிடறு விழுங்கினான்.

இதற்குள் பலமுறை ஒலிப்பான் அழுத்தப்பட்டிருந்தது.

வேறு வழியில்லை. நகரவே மாட்டேன் என்ற கால்களை நகர்த்திக் சென்று திறந்தான்.

திறந்தவன் கண்டது, கண்கள் சிவக்க, வேட்டையாடப்போகும் புலியின் சீற்றத்துடன் நின்றிருந்த அபயனைத்தான்!

“அப…ய்…”

“அக்கா சொன்னது எல்லாம் உண்மையா?” பார்வையைச் சிறிதும் அவனிடமிருந்து அகற்றாமல், வீட்டுக்குள் வந்தபடி வெகு நிதானமாய் வினவினான் அவன்.

“அபய்”

“அக்கா… சொன்னது… எல்லாம்… உண்மையா?” ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்துக் கேட்டான்.

“அபய் சொறியடா. ப்ளீஸ்…”

அவ்வளவுதான். அவ்வளவு நேரமாய் அவன் அடக்கி வைத்திருந்த வெறி எல்லாம் வீறு கொண்டு பாய்ந்தது. நொடியில் காந்தனின் முகத்தைப் பெயர்த்து எடுத்திருந்தான்.

இருவரும் சம பலம் கொண்ட ஆண்கள்தான். கேவலமான வேலை பார்த்துவிட்டோம் என்கிற குன்றலும், எதிரில் நிற்கிறவனின் முகத்தைப் பார்க்க முடியாமல் கூனிப் போனதுமாகச் சேர்ந்து காந்தனை நிலைகுலைய வைத்திருந்தது. அபயனும் அவனை நிதானிக்க விடவில்லை. நெஞ்சின் கொதிப்பை எல்லாம் அவன் உடம்பில் இறக்கினான்.

“ஏனடா நாயே, அக்காவைத் தள்ளி விட்டியாமே, எந்தக் கை தள்ளிவிட்டது? சொல்லு எந்தக் கை தள்ளி விட்டது? இதா, இல்ல இதா?” என்று கேட்டு, அவன் கைகள் இரண்டையும் முறுக்கினான்.

அவ்வளவு நேரமும் கத்தினால் வெளியே கேட்டுவிடும் என்று பல்லைக் கடித்தபடி சத்தம் போடாமல் இருந்தவன் அதற்குமேல் முடியாமல் வாய்விட்டுக் கத்தினான்.

“அபய் போதும் விடு. ப்ளீஸ் அபய்!” என்று கெஞ்சிய எதையும் அவன் கேட்கவே இல்லை. அவனுக்கு அழைத்துக் கதறிய தமக்கையின் கண்ணீர் அவனை மிருகமாய் மாற்றியிருந்தன.

அவன் மிதித்த மிதியைத் தாங்க முடியாமல், வாய்விட்டுக் கத்தினான் காந்தன்.

அந்தச் சத்தத்துக்குத் திடுக்கிட்டு எழுந்த அயலட்டைச் சனம்தான் ஓடிவந்து, வெறி கொண்டு நின்றவனைக் காந்தனிடமிருந்து பிரித்து எடுத்திருந்தார்கள்.

error: Alert: Content selection is disabled!!