கேட்பார் இன்றிக் காதல் – 19

அத்தியாயம் 19

கொழும்பிலிருந்து வெளிக்கிடும்போதே தகப்பனுக்கு அழைத்துத் தமக்கை சொன்னவற்றைச் சொல்லியிருந்தான் அபயன். குழந்தைவேலு இடிந்துபோனார். மகள் எந்தக் குறையும் இல்லாமல் நிறைவாக வாழ்கிறாள் என்று நிம்மதியாக இருந்தாரே.

தன்னால் முடிந்தவரையில் அவரைத் தேற்றி, யாருக்கும் எதுவும் சொல்லாமல், காந்தனின் பெற்றோரிடம் இருக்கும் தளிரை தங்கள் வீட்டுக்கு அழைத்து வரச் சொன்னான் அபயன். அப்படியே தமக்கையையும் பேருந்து நிலையம் சென்று அழைத்து வரும்படி சொல்லியிருந்தான்.

அவரும் மகள் வரும் நேரம் பார்த்துப் பேருந்து நிலையம் சென்று காத்திருந்தார்.

ஒரேயொரு மகள். அவள் பிறந்து, அவர் முகம் பார்த்துச் சிரித்து, தளிர் நடை நடந்து, வயதுக்கு வந்து, அவரைப் பார்க்கவே வெட்கப்பட்டு, நன்றாகப் படித்து, நல்ல வேலையில் அமர்ந்து, எந்தக் குறையும் இல்லாமல் கட்டிக்கொடுத்து, கணவன், குழந்தை என்று கண்ணுக்கு நிறைவாக அவள் வாழும் வாழ்க்கையைப் பார்த்து ரசித்த மனிதர் அவர்.

தளிர் பிறக்கும்போது அவள் துடித்த துடிப்பைத் தாங்க முடியாமல், வைத்தியசாலைக்கு வெளியே வந்து நின்று யாருமறியாமல் அழுதிருக்கிறார்.

ஆனால் இன்றைக்கு, ‘அப்பா, என் வாழ்க்கையில் தோற்றுப் போனேனே.’ என்று அழுவாளே. எப்படித் தாங்கப் போகிறார்? என்ன செய்து அவள் வாழ்க்கையை நேராக்கப் போகிறார்? நினைக்க நினைக்க நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது.

அவளும் வந்து இறங்கினாள். அவரைக் கண்டதும் அவள் துன்பங்கள் அத்தனையும் பல மடங்காகித் தெரிந்தன. “அப்பா!” என்று ஓடி வந்து, அவர் மார்பில் விழுந்து சத்தமே இல்லாமல் கதறினாள்.

அந்த நொடியில் குழந்தைவேலு என்கிற அந்தத் தகப்பன் ஒடிந்தே போனார். ஒரு வார்த்தை அவர் வாயிலிருந்து வரவில்லை. நெஞ்சு நடுங்க அவள் தலையை வருடி விட்டார். அவள் தேறுவதாய் இல்லை. பஸ்ஸில் ஆட்கள் இருந்ததில் அடக்கி அடக்கி வைத்ததெல்லாம் இப்போது தகப்பனின் நெஞ்சில் கண்ணீராய் இறங்கின.

*****

பேத்தியை வைத்துக்கொண்டு வாசலிலேயே நின்றிருந்தார் பரமேஸ்வரி. கசியும் கண்களை அவளறியாமல் துடைத்தவருக்கு நெஞ்சின் பதற்றம் மட்டும் அடங்குவதாக இல்லை. இதைக் கேள்விப்பட்ட கணத்திலிருந்து நம்பவே முடியவில்லை.

மருமகன் மீது அவ்வளவு நம்பிக்கை. அத்தனை பண்பானவன். ஒரு கெட்ட பழக்கம் இல்லை. அவர்களின் மகள் இதுவரையில் கண்ணீருடனோ கவலையுடனோ அவனைப் பற்றி ஒரு வார்த்தை முறையிட்டதில்லை. அப்படியானவனா இப்படி நடந்தான்? உள்ளம் ஒரு பக்கம் கொதித்தாலும் இதெல்லாம் பொய்யாக இருந்துவிடாதா என்று அவர் மனம் அரற்றியது.

ஆனால், செத்துச் சுண்ணாம்பாகிவிட்ட முகத்தோடு வந்த கணவரையும், கலைந்த தலையும், அழுது சிவந்த முகமும், கசங்கிப்போன உடையுமாக வந்து இறங்கிய மகளையும் கண்டபோது, அவரிடமிருந்த கடைசி நம்பிக்கையும் மொத்தமாய் மடிந்துபோனது.

அன்னையின் கையிலிருந்த தளிரைக் கண்டதும் சுபாங்கியின் அழுகை இன்னுமே கூடிப்போயிற்று. இந்த மகளைக்கூட மறந்து போனானே! அவளை மார்போடு அணைத்துக்கொண்டு விம்மி அழுதாள். கலக்கமும் கண்ணீருமாகக் கணவரைப் பார்த்துவிட்டு மெதுவாக அவளை நடத்தி வீட்டுக்குள் கூட்டிச் சென்றார் பரமேஸ்வரி.

“அழாத பிள்ளை.” அவரால் இதைத் தவிர்த்து வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. அவளோடு சேர்ந்து தானும் அழுதார். உள்ளம் அந்தக் கயவனைத் திட்டித் தீர்த்தது.

குழந்தைவேலுவும் வந்து அவளருகில் அமர்ந்தார். அவரிடம் பெரும் இறுக்கம். மகளின் கண்ணீரைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் இடத்தில் நிறுத்திவிட்ட விதியைச் சபித்தார். இந்தக் கணமே எழுந்துபோய், அவர்களின் வீட்டில் நாக்கைத் பிடுங்கிக்கொள்வதுபோல் நான்கு கேள்விகளைக் கேட்டுவிட்டு வந்தால் என்ன என்று இருந்தது.

ஆனால், அவர் தந்தையின் இடத்தில் இருப்பவர். ஆத்திரப்பட்டோ அவசரப்பட்டோ எதையும் செய்ய முடியாமல், அவர் கைகள் மகளின் மிகுதி வாழ்க்கை என்கிற ஒன்றினால் கட்டப்பட்டிருந்தது.

சுபாங்கி சுவரில் சாய்ந்து, தரையில் அமர்ந்திருந்தாள். தளிர் பயந்து நடுங்கியபடி அவள் மார்புக்குள் ஒடுங்கியிருந்தாள்.

சில நேரங்களில் ஆத்திரம் கொண்டு கத்தினாள் சுபாங்கி. சில நேரங்களில் நெஞ்சைத் தாக்கும் வலியைத் தாங்க முடியாமல் உடைந்து அழுதாள். சில பொழுதுகளில் அவனுக்கு நல்ல சாவே வரக் கூடாது என்று சபித்தாள். என்ன செய்தும் அவள் நெஞ்சில் பற்றி எரியும் அந்தத் தீ மட்டும் அணைவதாய் இல்லை.

அபயன் வீடு வந்து சேர நடுச்சாமமாகியிருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததுமே தமக்கையைத்தான் பார்த்தான். மடியில் உறங்கிவிட்ட மகளோடு, அழுகையில் நடுங்கும் உதடுகளும், கன்னத்தில் வழியும் கண்ணீருமாக அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.

அவளின் இந்தக் கண்ணீரைப் பார்க்கவா தம்பி என்று அவன் இருக்கிறான்? மீண்டும் அவன் உள்ளம் கொதிகலனாகக் கொதிக்க ஆரம்பித்தது. திரும்பவும் போய் மிச்சமாய் இருக்கும் அவன் உயிரைப் பறித்துவிடலாமா என்கிற அளவுக்கு வெறி வந்தது.

ஆனாலும் ஒன்றும் சொல்லாமல், தானும் வந்து தமக்கையின் அருகில் தரையிலேயே அமர்ந்தான். மெல்ல அவள் மடியில் கிடந்த ஒற்றைக் கையைப் பற்றி அழுத்திக் கொடுத்தான். அந்தப் பற்றுதலில் உடைந்து, அவன் தோள் சாய்ந்தவள் இன்னுமொருமுறை அழுது தீர்த்தாள்.

அன்று அந்த வீட்டில் தளிரைத் தவிர்த்து யாருமே உறங்கவில்லை. பொழுதும் புலர்ந்தது.

நடந்தது எதுவுமே தெரியாத இந்துமதி, மருமகள் மகனிடம் சென்றிருப்பதால், தளிரை நேர்சரிக்கு அவர்களே அனுப்புகிறார்களா, இல்லை இங்கே கொண்டுவந்து விடுகிறார்களா என்று அறிவதற்காகப் பரமேஸ்வரிக்கு அழைத்தார்.

முதல் அழைப்பிலேயே மொத்த வீடும் பெரும் இறுக்கத்துக்கு ஆளாகியது. என்ன செய்வது என்று எல்லோரும் அபயனின் முகத்தைப் பார்த்தனர். அவனே அழைப்பை ஏற்று, அவர் எதுவும் பேசமுதல், “நீங்க உங்கட மனுசனையும் கூட்டிக்கொண்டு எங்கட வீட்டுக்கு ஒருக்கா வாங்க!” என்றான் உத்தரவாக.

இந்துமதி ஒருகணம் துணுக்குற்றுப்போனார். ‘மனுசனா?’ மாமி என்கிற விழிப்பு இல்லை, மாமா என்று சொல்லவில்லை. என்ன இது? “தம்பி, அபயன்?” என்றார், அவன் இப்படித் தன்னோடு கதைக்க மாட்டானே என்கிற சந்தேகத்தோடு.

“உங்கட அவரையும் கூட்டிக்கொண்டு இப்பவே இஞ்ச வாங்க. உங்களோட கதைக்கோணும்!” மீண்டும் அழுத்திச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான்.

அதற்கே இந்துமதிக்கு முகம் கன்றிப்போனது. நெஞ்சை ஏதோ ஒரு கலக்கம் சூழ, குடுகுடு என்று ஓடிப்போய்க் கணவருக்கு விடயத்தைச் சொன்னார்.

திருநாவுக்கரசுக்கும் ஒன்றும் விளங்கவில்லை. நேற்று மருமகள் மகனிடம் போனதில் ஏதும் பிரச்சனையோ என்று யோசித்தபடி அடுத்த அரை மணி நேரத்தில் மனைவியோடு அவர்கள் வீட்டில் நின்றார்.

எப்போதும் வாசலுக்கே வந்து வரவேற்கிறவர்கள் இன்று இவர்கள் வீட்டுக்குள் வந்த பிறகும் கூட, இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருப்பதே இருவர் நெஞ்சிலும் நடுக்கத்தை விதைத்தது.

“என்ன அண்ணா? ஏதும் பிரச்சினையா?” இந்துமதிதான் குழந்தைவேலுவிடம் நடுங்கும் குரலில் வினவினார். அவருக்கு என்னவோ, ஏதோ என்று நெஞ்சு பதறியது.

அப்போதுதான் அன்னையின் தூண்டுதலில் கிணற்றடிக்குச் சென்று, முகத்தைக் கழுவித் துடைத்துவிட்டு, அவிழ்ந்து கிடந்த முடியை எல்லாம் ஒன்றாக்கிக் கொண்டையிட்டுக்கொண்டே வீட்டுக்குள் வந்த சுபாங்கி, இவர்களைக் கண்டதும் ஒருகணம் அப்படியே நின்றாள். அடுத்த நொடியே அவளுக்குள் இருந்து பெரும் ஆங்காரம் ஒன்று வெடித்துக்கொண்டு கிளம்பிற்று.

“இன்னும் என்ன பிரச்சினை வரக்கிடக்கு? ஒரு பொம்பிளைப் பொறுக்கியப் பெத்துப்போட்டிருக்கிறீங்களே, அத விடவுமா ஒரு பிரச்சினை வரப்போகுது?” என்று ஆத்திரமாய்ச் சீறினாள்.

திருநாவுக்கரசினால் அவள் சொன்னதை உள்வாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

“சுபா, என்னம்மா கதை பேச்சு இது? எனக்கு நெஞ்செல்லாம் பதறுது. என்ன எண்டு நிதானமாச் சொல்லுங்கோ.” இந்துமதிதான் தவிப்புடன் வினவினார்.

“பதறுதா? இங்க எனக்கு உயிரே போயிற்றுது. உங்க எல்லாரையும் பாக்கோணும் எண்டு நான் இங்க இருந்தா அவனுக்கு அங்க தனியா இருக்கேலாதாம். களவா இன்னொருத்தியைப் பிடிச்சு, அவளுக்கு இப்ப வயித்தில மூண்டு மாதமாம்.” என்றதும், “சுபா!” என்று அதட்டியிருந்தார் திருநாவுக்கரசு. அவரின் உடல் மொத்தமும் ஆத்திரத்தில் நடுங்கியது.

“என்னம்மா இதெல்லாம் கதை பேச்சு? சும்மா வாய்க்கு வந்ததைக் கதைக்கிறேல்ல! எங்கட மகன் அப்பிடி இல்ல. நாங்க அவனை அப்படி வளக்கவும் இல்ல.” என்று அதட்டினார்.

“அப்பிடி வளக்கேல்லையோ? அந்த நாய்க்கே எடுத்துக் கேளுங்கோ, என்ன செய்து வச்சிருக்கிறான் எண்டு அவனே சொல்லுவான்!” என்றவளுக்கு மனம் அடங்கவே மாட்டேன் என்றது.

“நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா? நாசமாத்தான் போவீங்க. அழிஞ்சுதான் போவீங்க. நல்ல குடும்பம், நல்ல மனுசர் எண்டு நம்பித்தானே என்ர அம்மா அப்பா உங்கட மகனுக்கு என்னைக் கட்டி வச்சவே. ஆனா அந்தக் கழிசடை எனக்குத் துரோகம் செஞ்சிட்டான். இன்னொருத்திக்குப் பின்னால போக அவனுக்கு நான் என்ன குறை வச்சனானாம்? ” என்றவளின் சீற்றத்தில் இருவருமே துடித்துப் போயினர்.

“சுபா, அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதீங்கோம்மா. என்ன எண்டு நான் விசாரிக்கிறன். அப்பிடி எதுவும் இருக்காது. எங்கட மகன் அப்பிடி நடக்கிறவன் இல்ல.” மருமகளே அவ்வளவு சொல்லியும் கொஞ்சமும் நம்ப மறுத்தார் இந்துமதி.

“என்ன இருக்காது? அவனை அடிச்சு முறிச்சு எழும்பவே ஏலாத அளவுக்குப் போட்டுட்டுத்தான் வந்திருக்கிறன். போய் அவனையே கேளுங்க!” என்று அபயன் சொன்னதும் நிற்கக்கூட முடியாமல் தள்ளாடி, கணவரின் கையைப் பற்றினார் இந்துமதி.

திருநாவுக்கரசுவுக்கு வார்த்தைகளே வரமறுத்தன. தன் சம்மந்தியைப் பார்த்தார்.

“என்ன அண்ணா நடக்குது இங்க? பிள்ளைகள் ரெண்டு பேரும் என்ன எல்லாமோ கதைக்கினம். நீங்களும் அமைதியா இருக்கிறீங்க. என்ன நடந்தது எண்டு சொல்லுங்கோ?” முடியாமல் அழுதார் இந்துமதி.

குழந்தைவேலுவும் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தவர்தானே! “இன்னும் என்ன சொல்லச் சொல்லுறீங்க? உங்கட மகன் எங்க எல்லாரின்ர தலைலையும் மண்ணை அள்ளிக் கொட்டிட்டான் எண்டா? ஆத்திரப்பட்டுத் தரம் குறைஞ்ச வார்த்தைகளை விட்டுடக் கூடாது எண்டு என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டு இருக்கிறன். என்னைக் கதைக்க வைக்காதீங்க!” என்றார் சினத்துடன்.

அதுவே ஆயிரம் வார்த்தைகளை விட்டதற்கு ஒப்பாய் அவர்கள் இருவரையும் தாக்கிற்று. ஆனாலும் இது மகன் விடயமாயிற்றே.

“இதெல்லாம் ஆர் உங்களுக்குச் சொன்னது? ஆராவது பிழையாச் சொல்லி இருப்பினம். இத நான் எங்கட மகன் எண்டதுக்காகச் சொல்லேல்ல. உங்களுக்கே இத்தின வருசத்தில அவரைப் பற்றித் தெரிஞ்சிருக்கும். அதாலதான் சொல்லுறன்.” தன்மையாகவே பேச முயன்றார் திருநாவுக்கரசு.

“என்ன தெரிஞ்சிருக்கும்? இப்பவும் நான் அவனைத் தேடிக்கொண்டு வவுனியாவுக்குப் போனதாலதான் தெரிய வந்தது. இல்லாட்டி கெட்டித்தனமா இங்க ஒரு குடும்பம், அங்க ஒரு குடும்பம் எண்டு இருந்திருப்பான். நாங்களும் அவனை நல்ல மனுசன் எண்டு நம்பிக்கொண்டு இருந்திருப்பம். இதில அவன்ர தங்கச்சின்ர கலியாணம் முடியிற வரைக்கும் வெளில சொல்ல வேண்டாமாம். என்னட்டையே சொல்லுறான். அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கோணும்? அவன்ர தங்கச்சி என்ர தம்பியக் கட்டி நல்லா வாழோணும். நான் இங்க கிடந்து அழோணுமா?” என்றவள் விறுவிறு என்று அபயனின் முன்னால் வந்து நின்றாள்.

“சொல்லு தம்பி, அக்கா சொல்லுறதக் கேப்பாய்தானே?”

எந்த யோசனையும் இல்லாமல், “கேப்பன்!” என்றான் அவன் அவள் கண்களையே பார்த்து.

“நீயாவது என்ர நம்பிக்கையைக் காப்பாத்துவாய்தானே?”

“காப்பாத்துவன்.” என்று அவன் சொன்னதும் அவர்களின் புறம் ஆவேசமாகத் திரும்பினாள்.

“இப்ப சொல்லுறன் கேளுங்க. எனக்கு நம்பிக்கைத் துரோகம் செஞ்சவன்ர தங்கச்சிக்கும் என்ர தம்பிக்கும் இனிக் கலியாணம் நடக்காது. இவனுக்கு இன்னும் நல்ல இடமாப் பாத்து நான் கட்டி வைப்பன். அவன்ர தங்கச்சியும் அவனை மாதிரித்தான் இருப்பாள். இண்டைக்கு நான் அழுற மாதிரி நாளைக்கு என்ர தம்பியும் அழ நான் விடமாட்டன்!” என்றவளுக்கு அப்போதும் நெஞ்சின் தகிப்பு அடங்குவதாய் இல்லை.

“வெளில போங்க. இனிமேல் நீங்க ஆரும் இங்க வரக் கூடாது. பேத்தியைப் பாக்க வாறன், அது இது எண்டு சொல்லிக்கொண்டு இந்த வளவுக்க(காணி) கால் எடுத்து வைக்கக் கூடாது! நடவுங்க வெளில!” என்று அவர்களைத் துரத்தி அடித்தாள்.

error: Alert: Content selection is disabled!!