அத்தியாயம் 20
வீடு வந்து சேர்ந்தும் திருநாவுக்கரசின் நெஞ்சக் கொதிப்பும் கோபமும் குறைவதாய் இல்லை. எவ்வளவு பெரிய அவமானம்? மகளாய்ப் பார்த்த மருமகள் நிற்க வைத்துக் கேள்வி கேட்டது போதாது என்று துரத்தியடித்திருக்கிறாள்.
மானம் துறந்து வாழும் நிலை அவர் வாழ்க்கையில் வந்ததே இல்லை. இன்றைக்கோ அத்தனை அவமானங்களையும் தாங்கிக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறார்.
அத்தனைக்கும் காரணம் அவரின் மகன். வேகமாகச் சட்டைப் பையில் இருந்த கைப்பேசியை எடுத்து அவனுக்கு அழைத்தார்.
அங்கே எழுந்துகொள்ளவே முடியாமல் கிடந்தான் காந்தன். ஒரு பக்க உதடு கிழிந்திருந்தது. மறுபக்கக் கண்ணோடு சேர்த்து அந்த இடம் முழுவதுமே கறுத்து, பச்சை பாய்ந்திருந்தது. அந்தக் கண் இரத்த நிறத்தில் சிவந்திருந்தது. கண் மடல்களைத் திறக்க முடியவில்லை. மூக்கு உடைந்து இரத்தம் வழிந்ததால் சுவாசிக்கக் கூடச் சிரமப்பட்டான்.
உடலில் எந்தப் பாகத்தில் வலிக்கிறது என்று குறிப்பாகச் சொல்ல முடியாத அளவில் எல்லா இடமும் வலித்தது. கழுத்தைத் திருப்ப முடியவில்லை. கைகளை அசைக்க முடியவில்லை. விடிந்தும் கூட எழுந்து காலைக் கடன்களை முடிக்க முடியாமல் கிடந்தான்.
முதல்நாள் இரவு, வீட்டின் முன் கூடிவிட்ட அயலட்டை மனிதர்கள் காவல்துறைக்கு அழைக்கிறோம் என்றபோது தடுத்துவிட்டான். பட்ட அவமானமே போதும். காவல்துறைக்குச் சென்று, இன்னுமின்னும் கேவலப்பட விருப்பமில்லை.
யாரோ இரண்டு ஆண்கள்தான் அவனை எழுப்பி இருத்தியிருந்தார்கள். வைத்தியசாலைக்காவது போகலாமா என்று கேட்டவர்களிடம், ‘இல்லை, நானே பார்த்துக்கொள்கிறேன்.’ என்று சொல்லி அனுப்பி வைத்திருந்தான்.
அவர்கள் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவமானம் பிடுங்கித் தின்றது. இவ்வளவு காலமும் அரசல் புரசலாக உலாவிய செய்தி, இன்றைக்கு உறுதியாகியதில் அவர்களும் அவனை அருவருப்பாய்ப் பார்த்தபடிதான் கலைந்து போயிருந்தனர்.
இப்போது திருநாவுக்கரசுவிடமிருந்து அழைப்பு வரவும் அவன் உடலும் உள்ளமும் கிடுகிடு என்று ஆடிற்று. அவர் முகத்தை என்ன, குரலைக்கூட எதிர்கொள்ளும் தைரியமற்ற கோழையாகக் கூனிப்போய் நின்றான். மனம் அப்பா அப்பா என்று ஊமையாக அழுதது.
இதற்குள் மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு வந்தது. இதற்குமேலும் தவிர்க்க முடியாமல் அழைப்பை ஏற்றவனுக்கு அப்பா என்று சொல்லக்கூட குரல் எழும்பவில்லை.
“தம்பி…”
அந்தக் குரலில் இருந்த நடுக்கமும் கோபமும் அவன் உயிரைக் கொல்ல, “அப்…பா…” என்று நடுங்கினான்.
அவர் உள்ளம் அப்போதே துணுக்குற்றது. ஆனாலும் தன் வளர்ப்பின்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, “இங்க மருமகள் என்னவெல்லாமோ சொல்லுறாவே தம்பி. அபயன் வேற உனக்கு வந்து அடிச்சவனாமே. என்னப்பு நடந்தது? நீ சொல்லு. எனக்கு இன்னும் உன்னில நம்பிக்கை இருக்கு. நீ அப்பிடி இல்ல. என்ர பிள்ளையை நான் அப்பிடி வளக்கேல்ல. எனக்குத் தெரியும். என்ன நடந்தது எண்டு நீ சொல்லு, நான் அவேயோட கதைக்கிறன்.” என்றார் வேக வேகமாக.
எத்தனை நம்பிக்கை இருந்தால் இத்தனைக்குப் பிறகும் இப்படிக் கேட்பார்? அப்படியான அப்பாவின் முன் ‘நான் உங்கட மகனப்பா’ என்று சொல்ல முடியாமல் போய்விட்டதே! “அப்பா…” என்று அழுதான்.
அந்தளவும் போதுமே! திருநாவுக்கரசின் மொத்த நம்பிக்கையும் சுக்கு நூறாக உடைந்துபோயிற்று. உள்ளம் நடுங்கியது. உடல் தடுமாறியது. இருந்த இருக்கையின் கைப்பிடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார்.
“சுபா சொன்னதெல்லாம் உண்மையா?” இப்போது அவர் குரலில் உக்கிரம் ஏறியிருந்தது.
“அப்…பா”
“கேட்ட கேள்விக்குப் பதிலச் சொல்லு! சுபா சொன்னதெல்லாம் உண்மையா?”
“அ…ப்பா!”
“சொல்லித் துலை! அங்க ஒருத்தியப் பிடிச்சு வச்சிருக்கிறியா நீ?” அவர் குரலில் அடக்க முடியா ஆவேசமும் ஆத்திரமும்.
“அப்பா, சொறி அப்பா.”
“கேடு கெட்டவனே! எப்பிடியடா ஒரு பொம்பிளைப் பிள்ளைக்குத் துரோகம் செய்ய உனக்கு மனம் வந்தது? நீ எல்லாம் என்ன மனுசன்? வெக்கமா இல்லையா உனக்கு? இனிமேல் இந்த வீட்டுப் பக்கம் நீ வரக் கூடாது. இந்த நிமிசத்தில இருந்து உன்னத் தலை முழுகிட்டன் நான். இனி நீ எங்களுக்குப் பிள்ளையும் இல்ல, நாங்க உனக்கு அம்மா அப்பாவும் இல்ல.” என்றுவிட்டுப் பட்டென்று அழைப்பைத் துண்டித்தவருக்கு ஆத்திரத்தில் இன்னும் அதிகமாக உடல் நடுங்கியது.
அமைதியாக ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை. எழுந்து அங்குமிங்குமாய் நடந்தார். நேராகப் போய் அவனை வெட்டிப் போட்டுவிட்டு ஜெயிலுக்குப் போகலாமா என்கிற அளவுக்கு இரத்தம் கொதித்தது.
அதுவரை நேரமும் மிச்சம் சொச்சமாக இருந்த நம்பிக்கையும் தொலைந்துவிட சத்தமாய் அழுதார் இந்துமதி.
திருநாவுக்கரசுக்கு அதற்கும் கோபம்தான் வந்தது. “என்னத்துக்கு அழுறாய்? அவனைப் பெத்த பாவத்துக்கு அனுபவிக்க வேண்டாமா? பாத்து பாத்து வளத்து, படிப்பிச்சு, நல்ல வேலை வாங்கிக் குடுத்து, ஒரு குறை இல்லாமக் கலியாணம் எல்லாம் செஞ்சு வச்சமே, அதுக்குப் பலன் வேண்டாமா? பொறுப்பா இருப்பான், வயதான காலத்தில எங்களைப் பாப்பான் எண்டு நம்பினமே, அதுக்குப் பரிசு வேண்டாமா? மருமகள் வீட்டில கேவலப்பட்டது எல்லாம் ஒண்டுமே இல்ல. இனித்தான் நிறையப் பாக்கப் போறம். ஊரே காறித் துப்பும். ஒரு சனம் மதிக்காது. எங்களுக்குப் பின்னால சிரிக்கும். அதையெல்லாம் தாங்கி வாழோணும். அதால அழாத. தைரியமா இரு! ” என்றவரின் நெஞ்சின் கொதிப்பு மட்டும் அடங்குவதாய் இல்லை.
“சாகக்கூட வழி இல்ல. இன்னும் ஒரு பொம்பிளைப் பிள்ளையை வச்சிருக்கிறனே. அவாவைக் கரையேத்திர வரைக்குமாவது இந்த உயிர் இந்த உடம்பில இருந்துதானே ஆகோணும்!” என்றுவிட்டு அவர் புறப்பட்டுவிட, விக்கித்துப்போய் அமர்ந்துவிட்டார் இந்துமதி.
அடுத்த கணமே ஆவேசம் மிகுந்துவிட காந்தனுக்கு அழைத்தார்.
“அம்மா…” என்றவனை அவர் பேச விடவில்லை.
“சீ! இனிமேல் என்னை அப்பிடிக் கூப்பிடாத! உன்னை மாதிரி ஒருத்தனுக்கு அம்மாவா இருக்கிறதுக்கு நான் மலடியாவே இருந்திட்டுப் போவன். ஒரு பொம்பிளைப் பிள்ளையையும் பெத்து வச்சுப்போட்டு இந்த வேலை பாத்திருக்கிறியே, வெக்கமா இல்லையா உனக்கு? எந்த மூஞ்சிய வச்சுக்கொண்டு இவ்வளவு நாளும் இந்த வீட்டுக்கு வந்து போனனீ? எங்கட முகம் பாக்கேக்க எல்லாம் உனக்கு நெஞ்சு குத்தவே இல்லையா? நீ செய்த பாவம் இந்த வீட்டையே அழிக்கப் போகுது. சந்தோசமா இருந்து பார். உன்ர வாழ்க்கையைக் கெடுத்ததும் இல்லாம, தங்கச்சின்ர வாழ்க்கையையும் கெடுத்திட்டியேடா படுபாவி! உன்னைப் பெத்த வயிறு எரிஞ்சு சொல்லுறன். நீ நல்லாவே இருக்க மாட்டாய். நாசமாத்தான் போவாய்!” என்று தன் ஆத்திரம் தீருகிற வரை திட்டு திட்டு என்று திட்டிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தார்.
*****
அழுகையும் ஆத்திரமுமாக அன்னை கொட்டித் தீர்த்தவற்றை எல்லாம் கேட்ட அன்பினி, சுவாசிக்கக்கூட மறந்தவளாக அமர்ந்திருந்தாள்.
அவளால் எதையும் யோசிக்கக் கூட முடியவில்லை. இனி அண்ணியின் நிலை? தளிர், அவளுக்கு என்ன தெரியும்? அப்பா பாவமே.
அந்த நிமிடமே அபயனைப் பார்க்க நினைத்தாள். அவனுக்கு அழைப்போமா, வேண்டாமா என்று இரு மனமாகத் தடுமாறினாள்.
சும்மாவே கோபக்காரன். இதற்கு என்ன சொல்லுவான்? அண்ணியைப் போன்று அவனும் அவளைத் தமையனோடு ஒப்பிட்டுவிடுவானா?
இல்லை, அப்படி எல்லாம் சொல்லமாட்டான். திருமணம் நடக்காது என்று சொன்னதுகூட அந்த நேரத்தில் அவன் தமக்கையை ஆற்றுப்படுத்துவதற்குச் சொன்னதாய்த்தான் இருக்கும்.
ஊர் உலகத்துக்கு வேண்டுமானால் அவர்கள் திருமணத்துக்கு நிச்சயிக்கப்பட்டவர்களாகத் தெரியலாம். அவர்களுக்குத் திருமணம் முடிந்துவிட்டதும், அவள் கழுத்தில் கிடப்பது அவன் கட்டிய தாலி என்பதும் அவனுக்கும் அவளுக்கும் தெரியும். அப்படி இருக்கையில் அவளைக் கைவிடுவானா? அதுவும் அப்படித் துரத்தி துரத்தி நேசித்துவிட்டு!
என்ன, அவர்கள் சேர்வதற்கு இன்னும் காலமெடுக்கும். அதுவரையில் அவள் பொறுமையாக இருக்க வேண்டும். இருப்பாள். அவன் கோபித்தாலும் தாங்கிக்கொள்வாள். காந்தனுக்குத் தங்கையாகிப்போனாளே! அவளின் அபயனுக்காக அதைக்கூடச் செய்யமாட்டாளா என்ன?
அவளுக்குள்ளேயே ஒரு தெளிவு கிடைத்ததும் அவனுக்கு அழைத்தாள். அவன் ஏற்கவில்லை. தெளிந்த மனம் மீண்டும் கலங்கிப் போனது.
சற்று நேரம் அமைதியாய் இருந்துவிட்டு, “அபய், என்ன நடக்குது அங்க? அம்மா என்னவெல்லாமோ சொல்லுறா. நீங்களும் எடுக்கிறீங்க இல்ல. எனக்குப் பயமா இருக்கு. உங்களால முடிஞ்சா ஒரு நிமிசம் எடுத்து என்னோட கதைங்க பிளீஸ். எனக்கு என்ன சொல்லுறது, என்ன செய்றது எண்டு ஒண்டும் தெரியேல்ல அபய். அண்ணி பாவம், அவாவைக் கவனமாப் பாத்துக்கொள்ளுங்கோ. தளிர்… தளிர் கவனம் அபய்.” என்று முதலில் அனுப்பிவிட்டாள்.
அவர்களைப் பற்றி இந்த நேரத்தில் பேசுவதா என்று அவளுக்குத் தெரியவில்லை. பேசாமல் இருக்கவும் முடியாமல், “அபய்… அது அண்ணி சொன்ன மாதிரி எல்லாம் நடக்காதுதானே? ஆர் என்ன சொன்னாலும் உங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும் எல்லா? என்ர அபய் எண்டைக்கும் என்ர அபய்தான் எண்டு எனக்கும் தெரியும். எண்டாலும்… எண்டாலும் என்ன நடந்தாலும், எவ்வளவு காலம் ஆனாலும் உங்கட அன்பா உங்களுக்காக இருப்பா அபய். அத மட்டும் மறந்துடாதீங்க ப்ளீஸ்!” என்று தழுதழுத்த குரலில் பேசி, அதையும் அனுப்பிவைத்தாள்.
அவன் ஏதும் பதில் போடுவானா என்று காத்திருந்து பார்த்தாள். ஒரு பதிலும் இல்லை என்றதும் கண்களில் கண்ணீர் பெருகிற்று. முகத்தைத் தண்ணீரால் அடித்துக் கழுவிக்கொண்டு முல்லைத்தீவுக்குப் புறப்பட்டாள்.
காரணம் கேட்ட நிர்மலாவிடம் ஏதோ பொய்யைச் சொல்லிச் சமாளித்தாள்.
இங்கே தன் அறைக்குள்தான் அமர்ந்திருந்தான் அபயன். அவள் அழைத்தபோது அவன் கைப்பேசி அவன் முன்னால்தான் இருந்தது. அவள் பெயரைப் பார்த்ததுமே அவன் கண்கள் சிவந்தன. அழைப்பை ஏற்காமல் கைப்பேசியையே வெறித்தபடி அமர்ந்திருந்தான்.
அப்போதுதான் அழைப்பு நின்று அவளிடமிருந்து இரண்டு குறுந்தகவல்கள் வந்து விழுந்தன. ஒரு முறை அவன் தொண்டை ஏறி இறங்கிற்று. சில வினாடிகளுக்கு விழிகளை மூடி யோசித்தான்.
அடுத்த கணமே எதைப்பற்றியும் யோசிக்காமல், அவள் அனுப்பிய குறுந்தகவல்களைக் கேட்காமலேயே அழித்துவிட்டு, அவளையும் தன் கைப்பேசியில் தடை செய்துவிட்டான்.

