கேட்பார் இன்றிக் காதல் 21 – 1

அத்தியாயம் 21

முல்லைத்தீவு டவுணுக்குள் சொந்தமாக அரிசிக்கடை வைத்திருப்பவர்தான் திருநாவுக்கரசு. அதன் மூலம்தான் அங்கேயே புடவைக்கடை வைத்திருக்கும் குழந்தைவேலுவின் அறிமுகம் கிடைத்து, காந்தனுக்குச் சுபாங்கியைப் பேசிக் கட்டி வைத்திருந்தார்.

அன்பினி அவரின் செல்லப் பெண் என்றால் காந்தன் அவரின் பெரும் நம்பிக்கைக்குரியவன். வீட்டின் பொறுப்பைக் கண்ணுக்குத் தெரியாமல் எப்போதோ அவனிடம் ஒப்படைத்திருந்தார். தனக்கு ஒன்று நடந்தாலுமே தன்னிடத்திலிருந்து இந்தக் குடும்பத்தைத் தாங்குவான் என்று மலைபோல் நம்பி, இத்தனை காலமும் கவலையற்று இருந்தவர்.

சுபாக்கு மட்டுமன்று அப்படியான தந்தைக்கும் அவன் செய்தது மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம். அதனால்தான் தன்னைப் பற்றி எல்லோருக்கும் தெரிய வர முதல் அன்பினிக்குத் திருமணத்தை முடித்து வைத்து, குறைந்த பட்சமாகத் தந்தையின் அந்த நம்பிக்கையையாவது காப்பாற்றிவிட எண்ணினான்.

கடைசியில் அதுவும் நடக்காதாம் என்று அன்னை சொன்னதில் இன்னுமே உடைந்துபோனான். நினைவு தெரிந்த காலத்திலிருந்தே தவறான எண்ணங்களினாலும், கூடாத செய்கைகளினாலும், கூடா நட்புகளோடும் அவன் வாழ்க்கை அமைந்திருக்க, இதையெல்லாம் தூசாகத் தட்டிவிட்டுப் போயிருப்பானாக இருக்கும்.

அப்படியல்லாமல் நல்ல பெற்றோரால் நற்பண்புகள் சொல்லிக்கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட அவன், எதிர்பாராமல் ஒரு பெண்ணின் மீது கொண்ட சபலத்தினாலும், அந்தச் சபலத்தை அடக்கி, உணர்வுகளைத் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் பலகீனப்பட்டுப் போனதாலும் பெரும் தப்பை இழைத்ததுமல்லாமல், போனால் போகிறது என்று அதைக் கடக்க முடியாமல் கிடந்து துடித்தான்.

இனி என்றைக்கும் சுபாங்கி தொடங்கி தளிர் வரை யாரினதும் நம்பிக்கையைப் பெறவோ, தன் தப்புகளை எல்லாம் நேராகிக்கொண்டு அவர்களின் முன்னால் சென்று நிற்கவோ அவனால் முடியவே முடியாது.

குறைந்த பட்சமாகத் தங்கையின் வாழ்க்கையையாவது அவள் ஆசைப்பட்டது போன்று அமைத்துக்கொடுக்கப் பிரியப்பட்டான். இரு வீட்டினருக்கும் தெரியாதுபோனாலும் அவளும் அபயனும் நேசிக்கிறார்கள் என்று அவனுக்குத் தெரியுமே.

வேகமாக அபயனுக்கு அழைத்தான். அவன் அழைப்பை ஏற்கவே இல்லை. அப்படியே விட மனமில்லை.
எப்படியாவது அபயனோடு கதைத்து, அன்பினியின் திருமணத்தை அவனோடு நடத்தி வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு எழுந்து, முல்லைத்தீவுக்குப் புறப்பட்டான்.

குளித்து, உடை மாற்றுவதற்குள்ளேயே எத்தனையோ முறை அம்மா என்று அலறியிருந்தான். ஒரு பிடிவாதத்துடன் வாகனத்தை எடுத்தவன் அபயனுக்கு விடாது அழைத்துக்கொண்டே இருந்தான்.

“அபயன், உனக்கு என்னோடதானே கோவம். நான் செய்தது பெரிய பிழைதான். அதுக்காக அன்புவைத் தண்டிக்க நினைக்காத. எனக்கு உன்னோட முக்கியமாக் கதைக்கோணும். ப்ளீஸ் கோல் எடு!” என்று வாயால் பேசியும் அனுப்பிப் பார்த்தான். அப்போதும் அவன் எடுக்கவில்லை.

இவனும் விடவில்லை. திரும்ப திரும்ப அழைத்துக்கொண்டேயிருந்தான். அங்கே அவர்களின் வீட்டுக்கோ இவனின் வீட்டுக்கோ இவனால் போக முடியாது. வெளியேதான் சந்தித்தாக வேண்டும். அதற்கு அவன் அழைப்பை ஏற்க வேண்டும்.

அதில் ஒற்றைக் கையால் வாகனத்தைச் செலுத்தியபடி அவனுடைய இலக்கத்தை மீண்டும் அழுத்திவிட்டு நிமிர்ந்தவன் அதிர்ந்துபோனான்.

கைப்பேசியில் கவனமாக இருந்ததில் அவன் வாகனம் தனக்கான தடத்திலிருந்து விலகி, வீதியின் அடுத்த பக்கத்துக்குப் போயிருந்தது. எதிரில் மிக வேகமாக லொறி ஒன்று வந்துகொண்டிருக்க, திடுக்கிட்டு வேகமாக ஒடித்துத் திரும்புவதற்குள் காலம் கடந்திருந்தது.

இவன் எடுத்துவிடுவான் என்கிற நம்பிக்கையில் வேகத்தைக் குறைக்காமல் வந்த லொறி, கடைசி நேரத்தில் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், படார் என்கிற பெரும் சத்தத்துடன் இவன் வாகனத்தோடு மோதியது. இவன் வாகனம் ஒரு சுற்றுச் சுழன்று, அப்படியே கரணமடித்து, எதிரில் நின்றிருந்த மரத்திலும் மோதி, ஒரு பக்கமாய்ச் சரிந்து விழுந்தது.

கடைசியாக, “அம்மா!” என்று கத்தியது மட்டுமே காந்தனின் நினைவில் இருந்தது. அதன் பிறகு மொத்தமாய்ச் சுய நினைவை இழந்திருந்தான்.

அடுத்து வந்த மணித்துளிகள் அத்தனையும் மிகுந்த களேபரத்துடனேயே கடந்து முடிந்தன.

அவனுடைய வாகனம் அவனுக்கு அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டது என்பதை வைத்து, அது எந்தத் துறை என்று கண்டுபிடித்து, ஒரு வழியாக அவன் சந்திரகாந்தன் என்று அறிந்து, அவன் வீட்டினருக்குத் தகவல் தெரிவித்தபோது, மீண்டும் ஒருமுறை அந்த வீடு அதிர்ந்து நின்றது.

அப்போதுதான் முல்லைத்தீவுக்கு வந்து இறங்கினாள் அன்பினி. திரும்பவும் அவளுக்கு அழைத்த இந்துமதி, பெரும் பதற்றமும் கண்ணீருமாகக் காந்தனுக்கு நடந்த விபத்தைச் சொன்னபோது, முற்றிலுமாக நிலைகுலைந்து, நிற்கமுடியாமல் தள்ளாடி, பேருந்து நிலையத்தின் இடையளவிலான குந்தினைப் பற்றித் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முயன்றாள் அன்பினி.

கண நேரம் என்றாலும் செய்த பாவத்துக்குத்தான் இப்படியாயிற்றோ என்று ஓடிய எண்ணத்தை அவளால் தவிர்க்க முடியவில்லை.

“எனக்கு நெஞ்செல்லாம் பதறுது பிள்ளை. காலத்துக்கும் இனி அவன்ர முகத்தில முழிக்கக் கூடாது எண்டுதான் நினைச்சனான். ஆனா, பெரிய விபத்தாம். இடுப்பில நல்ல அடியாம். கால் முறிஞ்சு போச்சுதாம். மாற்றுடுப்புகள் எடுத்துக்கொண்டு அவசரமா வாங்கோ எண்டு சொல்லி இருக்கினம். உங்கட அப்பா அவன் செத்தாலும் எட்டியும் பாக்கக் கூடாது எண்டு சொல்லிப்போட்டு, வீட்டு வாசலிலேயே குந்திக்கொண்டு இருக்கிறாரம்மா. என்ன செய்ய எண்டு எனக்கு ஒண்டுமே தெரியேல்ல பிள்ளை.” என்று அழுதார்.

அவள் விழிகளிலும் கண்ணீர். ஏன் இப்படியெல்லாம் அவர்களுக்கு நடக்கிறது என்று விளங்கமாட்டேன் என்றது. “இப்ப என்னம்மா செய்றது? அண்ணிக்குத் தெரியுமா?” என்று விசாரித்தாள்.

“தெரியிறதுக்கு ஆர் சொல்லுறது? நான் உங்கட அப்பாக்குத் தெரியாம எடுத்துப் பாத்தன். எடுக்கவே இல்ல.”

“நான்… நான் போய்ச் சொல்லவா?”

“வேண்டவே வேண்டாம். பிறகு உன்னையும் கேளாத கேள்வி எல்லாம் கேட்டு அனுப்புவீனம். நீ தாங்க மாட்டாயாம்மா.” என்றார் அவர் அவசரமாக.

“அதுக்காகச் சொல்லாம இருக்கேலாது தானேம்மா?”

“போகாம கோல் பண்ணிப் பாரம்மா. அப்பாக்குத் தெரிஞ்சாக் கத்துவார்தான். எடுக்காட்டி மெசேஜ் அனுப்பிவிடு.” என்றுவிட்டு வைத்தார் அவர்.

அவருமே எப்படியாவது அவர்களுக்குத் தெரிவித்துவிடத்தான் விரும்பினார். இதனாலேயே சுபாங்கி அவனைப் பார்க்கச் சென்று, அதனாலேயே சற்று மனம் மாறி, நிரந்தரப் பிரிவு என்கிற நிலைக்குப் போகாமல் இருந்துவிட மாட்டார்களா என்கிற நப்பாசை.

தன் எதிர்பார்ப்பில் நியாயமே இல்லை என்று தெரிந்தாலுமே ஒற்றைக் குருத்தாய் இருக்கும் பேத்தியின் எதிர்காலத்துக்காய் அப்படி யோசித்தார்.

ஒன்றுக்கு மேல் ஒன்று என்று நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகள் அன்பினியைப் பெரும் அதிர்வுக்கு உள்ளாக்கின. அதில் வேகமாக அபயனுக்கு அழைத்தாள். அழைப்புப் போகவில்லை. அப்போதுதான் அவன் தன்னைத் தடை செய்து வைத்திருக்கிறான் என்பதையே பெரும் அதிர்வுடன் உள்வாங்கினாள்.

தொண்டைக்குள் எதுவோ சிக்கிக்கொண்ட உணர்வு. கைகள் நடுங்க நம்பிக்கையே இல்லாமல் சுபாங்கிக்கு அழைத்தாள். அவளுக்கும் அழைப்புப் போகவில்லை. குறுந்தகவல் அனுப்பவும் வழியில்லை.

இப்படியே வீட்டுக்குப் போனால் அதன்பிறகு அவளால் வெளியில் வர முடியாது. அம்மாவையே விடாத அப்பா அவளையா விடப்போகிறார்? எதுவாயினும் வீடு செல்வதற்கு முதல் செய்தாக வேண்டும். அவர்களுக்குத் தெரிந்த ஆட்டோவைப் பிடித்து அபயனின் வீட்டுக்குச் சென்றாள்.

“நான் வாற வரைக்கும் வெய்ட் பண்ணுங்கோ அண்ணா.” என்றுவிட்டு இறங்கி நடந்தவளுக்குக் கால்கள் பின்னின.

இத்தனை நாள்களும் பாசமாகவும் உரிமையாகவும் பழகிய மனிதர்கள். இன்றைக்கு அந்த உணர்வு வரமாட்டேன் என்றது. என்னவோ தானே தவறு செய்தவள் போன்று, அவர்களை எதிர்கொள்ள மிகவுமே பயந்தாள்.

“அண்…ணி” மெல்ல வாசலில் சென்று நின்று குரல் கொடுத்தாள். யாரும் வரவில்லை. “அண்ணி!” இந்தமுறை கொஞ்சம் சத்தமாக அழைத்தாள்.

யாருக்குக் கேட்டதோ இல்லையோ தளிருக்குக் கேட்டிருந்தது. “அத்த!” என்கிற கூவலோடு ஓடி வந்து, அவளிடம் தாவினாள்.

“தளிர்க் குட்டி!” அள்ளி அணைத்துத் தூக்கிக்கொண்டவளுக்கு ஏன் என்றில்லாமல் கண்ணீர் பெருகி வழிந்தது.

இந்தக் குழந்தையைக்கூட அவள் தமையன் மறந்து போனானே. இனி இவள் நிலை? கண்ணீருடன் அவள் முகமெங்கும் முத்தமிட்டாள்.

அதற்குள் ஆவேசமாக வந்த சுபாங்கி, “இங்க எங்க வந்தனி?” என்று சீறியபடி அவள் கையில் இருந்த மகளைப் பிடுங்கினாள்.

“அண்ணா செய்தது எவ்வளவு பெரிய துரோகம் எண்டு தெரியும் அண்ணி. அதாலையோ என்னவோ அவருக்கு ஆக்சிடென்ட்டாம். கால் உடைஞ்சிட்டுதாம். பெரிய அடி போல. ஆஸ்பத்திரில கிடக்கிறாராம். எனக்கு என்ன செய்றது எண்டு தெரியேல்ல. அதான் உங்களிட்டச் சொல்லிட்டுப் போவம் எண்டு வந்தனான்.” என்று அவள் சொல்லி முடிக்க முதலே, “அதை ஏன் என்னட்டச் சொல்லுறாய். அவன் ஆர் எனக்கு? அவன் இருந்தா என்ன, செத்தா எனக்கு என்ன?” என்று சீறினாள் சுபாங்கி.

“ஐயோ அண்ணி, இப்பிடியெல்லாம் கதைக்காதீங்கோ, ப்ளீஸ்!” உயிருக்கு ஆபத்தாய் அவன் கிடக்கும் இந்த நேரத்தில் அந்த வார்த்தைகளை அவளால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

error: Alert: Content selection is disabled!!