இதற்குள் இவர்களின் சத்தம் கேட்டு வீட்டுக்குப் பின்னால் நின்றிருந்த பரமேஸ்வரி அரக்கப்பரக்க ஓடி வந்தார். அவருக்கும் அன்பினியின் வரவு பிடிக்கவில்லை. “உங்களை ஆரம்மா இஞ்ச(இங்க) வரச் சொன்னது? தயவு செய்து போங்கோ!” என்றார் அடக்கப்பட்ட சினத்துடன்.
“மாமி அண்ணா…” என்றவளைப் பேசவிடாமல் இடையிட்டு, “வாய மூடிக்கொண்டு தயவுசெய்து போயிடும். கோவமா எதையாவது சொல்ல வைக்காதையும்!” என்றவரின் கோபத்தில் அவள் முகம் கன்றிப்போனது.
அதற்குமேல் எதையும் சொல்லத் திராணி இல்லாமல் திரும்பி நடந்தாள். அப்போது அபயனின் பைக் உள்ளே வந்தது. அப்படியே நின்றுவிட்டாள் அன்பினி.
அத்தனை நேரமாய் அவள் நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த எல்லா வேதனைகளும் வெடித்துக்கொண்டு கிளம்பின. ஓடிப்போய் அவன் கைகளுக்குள் புகுந்துகொண்டு கதற வேண்டும் போலிருந்தது. கண்களைக் கண்ணீர் மறைத்தபோதும் அவனையே பார்த்தபடி நின்றாள்.
மருந்துக்கும் அவள் புறம் திரும்பாதவன், “ஆரம்மா இவளை எல்லாம் உள்ளுக்க விட்டது? இனி வளவுக்கையே எடுக்காதீங்க எண்டு சொன்னனான் எல்லா!” என்று அன்னையை அதட்டினான்.
அவளால் நம்பவே முடியவில்லை. வேதனையில் விழிகள் அகல அவனையே வெறித்தாள். “அண்ணாக்கு ஆக்சிடென்ட்.” தான் வந்ததற்கான காரணத்தை மெல்ல முணுமுணுத்தாள்.
“அதுக்கு?” என்றான் அவன் புருவங்களைச் சுளித்துக்கொண்டு.
“அதச் சொல்ல வந்தனான்.”
“சொல்லி?” என்றான் அவன். “சொல்லு? சொல்லி என்ன செய்யப் போறாய்? இதச் சாட்டா வச்சு நடந்ததை எல்லாம் சமாளிக்கப் பாக்கிறியா?”
இதற்கு என்ன சொல்வது என்று தெரியாது வேதனையுடன் அவனையே பார்த்து நின்றாள் அவள்.
“நீ வேற ஏன்டா தம்பி. என்ர தலைல மண்ணை அள்ளிப் போட்டு முடிஞ்சுது. இப்ப இவளைக் காட்டி உன்ன ஏமாத்த பிளான் போடுதுகள் போல!” என்ற சுபாங்கியின் பேச்சில், சபையில் ஆடை விலக்கியதுபோல் கூசிப்போனாள் அன்பினி.
அதற்கு ஒன்றும் சொல்லாமல், “நட! இனி அவன் செத்தாக்கூட இந்தப் பக்கம் வந்திடாத!” என்றவனின் பேச்சை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
“ஏன் இப்பிடி எல்லாம் கதைக்கிறீங்க? உங்களுக்கு அவரில கோவம் இருக்கலாம். ஆனா தளிர் பாவம் எல்லா? அவளுக்கு அப்பா வேண்டாமா?” என்றதும் அவனுக்கு வெறியே பிடித்துக்கொண்டது.
“அவனை மாதிரி ஒரு ஊத்தைய அப்பா எண்டு சொல்லி வளக்கிறதுக்குப் பதிலா அப்பன் செத்திட்டான் எண்டு சொல்லி வளக்கிறம். அவளைப் பற்றி நீ கவலைப்படாத. போ இங்க இருந்து!” என்றவனையே விழியாகற்றாமல் பார்த்தவளுக்கு அதற்குமேல் அங்கே நிற்கவோ, உயிரைக் கொல்லும் அவன் வார்த்தைகளைக் கேட்கவோ தெம்பில்லை. எதுவும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டாள்.
*****
நிலானிக்கு மனமே சரியில்லை. முதல்நாள் மாலை கிளினிக்கிலிருந்து வீட்டுக்குக் கொண்டு வந்து விட்ட காந்தன், அதன் பிறகு அவளோடு கதைக்கவே இல்லை. அவள் அழைத்தபோதுகூட வேலை என்றவன் இதோ அடுத்த நாள் மாலையாகியும் அழைக்கவும் இல்லை, அவள் அழைப்பை ஏற்கவும் இல்லை. காரணமே இல்லாமல் நெஞ்சைப் போட்டு எதுவோ பிசைந்தது.
என்னதான் அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்த போதிலும், முறையாகத் திருமணம் நடக்க முதல் குழந்தையைத் தாங்கி நிற்கிறோமே என்று உள்ளே உறுத்தியது. இப்போதெல்லாம் இப்படி அவசரப்பட்டிருக்க வேண்டாமோ என்கிற கேள்வி அடிக்கடி எழுந்தது.
என்னதான் அன்று அன்னையிடம் நான் சமாளிப்பேன் என்று அவனுக்காகச் சொன்னாலும் கூட, அவரின் சதா கவலை தோய்ந்த முகம், கேக் சென்டரில் யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியா நிலை, யாராவது இதையறிந்து விசாரித்தால் என்ன சொல்வது என்கிற பதற்றம் என்று இப்போதெல்லாம் அவள் இயல்பாய் இல்லை.
நிம்மதியையும் சந்தோசத்தையும் தொலைத்துவிட்டு ஒருவிதப் பயத்துடனேயே நாள்களைக் கழித்துக்கொண்டிருந்தாள்.
யாரும் அறியாமல், தற்போதைக்குக் கோயிலில் வைத்து ஒரு தாலியைக் கட்டுகிறீர்களா என்று காந்தனிடம் கேட்கலாமா என்று யோசிக்க ஆரம்பித்திருந்தாள். குறைந்த பட்சமாக மனத்தின் இந்த உறுத்தலாவது அடங்குமே! வயிறு வெளியே தெரிய வருகையில் கேட்கிறவர்களுக்கு மரியாதைக்காகக் காட்ட அதாவது அவள் கழுத்தில் கிடக்குமே!
இரவிரவாக அவளுக்கு உறக்கமே இல்லை. அடுத்தநாள் காலை எழுந்தும் அவனுக்கு அழைத்தாள். அவன் ஏற்கவில்லை. இப்படி இருக்க மாட்டானே. அவளிடம் ஒரு கலக்கம்.
“என்ன பிள்ளை முகம் சரியில்லாம இருக்கு. ஏலாம இருந்தா இண்டைக்கு வீட்டில நில்லுங்கோவன்.” என்றார் சிவகாமி அம்மா.
அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனாலும் அவனையும் ஒருமுறை பார்த்துக்கொண்டு வருவோம் என்று எழுந்து, முகம் கழுவிக்கொண்டு வந்தவளுக்கு அதற்குமேல் முடியவே இல்லை. காலை உணவுடன் சேர்ந்து அருந்திய தேநீரும் வெளியில் வந்துவிட, அப்படியே சுருண்டிருந்தாள்.
கேக் சென்டருக்கு அழைத்து இன்றைக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டு, நன்றாக உறங்கி எழுந்தாள். ஆனாலும் உள்ளத்தின் அந்த அந்தரிப்பு மட்டும் போவதாக இல்லை. காந்தனுக்கு மீண்டும் அழைத்தாள். அப்போதும் அவன் எடுக்கவில்லை.
அவளையே கவனித்துக்கொண்டிருந்த சிவகாமி, “என்ன பிள்ளை, தம்பியோட ஏதும் சண்டையா?” என்று விசாரித்தார்.
“சேச்சே! அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்லை அம்மா. ஆனா, முந்தநாள்(நேற்றைக்கு முதல் நாள்) இங்க வந்திட்டுப் போனதில இருந்து அவர் கதைக்கவே இல்லை. அதான் என்னவோ எண்டு யோசினையா இருக்கு. நான் ஒருக்கா போய்ப் பாத்துக்கொண்டு வரட்டோ?”
“என்ன எண்டு போய்க் கேப்பீங்க? அங்க எல்லாம் வர வேண்டாம் எண்டு சொல்லி இருக்கிறார் எல்லா.”
“அதுக்காக இப்பிடியே இருக்கேலுமா அம்மா. எனக்கு என்னவோ மனம் சரியில்லை. இவ்வளவு நாளும் அவர் இப்பிடி எடுக்காம இருந்ததே இல்ல. பிசியா இருந்தாலோ ஊருக்குப் போனாலோ மெசேஜாவது போடுவார். இது…” என்றவளுக்கும் என்ன என்று சொல்லத் தெரியவில்லை.
இப்போது சிவகாமி அம்மாவையும் காரணமரியாக் கலக்கம் தொற்றிக்கொண்டது. அவளைத் தனியே விடமுடியாமல் மூவருமாகப் புறப்பட்டு, அவனுடைய குவார்டஸுக்கு சென்றார்கள்.
அந்த வீதியில் தொடராய் ஒரே மாதிரியான வீடுகள் அமைந்திருந்தன. அதில் எது அவன் வீடு என்று தெரியாமல் எதிர்ப்பட்ட மனிதர் ஒருவரிடம், “சந்திரகாந்தன் சேர்… அவரின்ர வீடு எது அண்ணா?” என்று விசாரித்தாள் நிலானி.
“அந்த ஆளின்ர வீடா? அங்க பாருங்க, ஒரு வீட்டுக்கு முன்னால சிவப்புக் கடதாசிப்பூ மரம் நிக்குது எல்லா. அந்த வீடுதான். ஆனா நேற்று மச்சானாரிட்ட நல்லா வாங்கிக் கட்டிப்போட்டு இண்டைக்கு விடிய வரைக்கும் வீட்டுலதான் கிடந்தவர். இப்ப அவரின்ர வாகனத்தைக் காணேல்ல. எங்க போனார் எண்டு தெரியாது.” என்று அவர் சொன்னதும் திடுக்கிட்டுப் போனார்கள்.
“வாங்கிக் கட்டினவரோ? அப்பிடி என்ன நடந்தது?” உள்ளம் பதற அவசரமாகக் கேட்டாள் நிலானி.
“அதுக்கு ஏன் நீங்க பதறுறீங்க? நீங்க ஆரு?” திடீரென்று தொற்றிக்கொண்ட சந்தேகத்தில் அவளை அளவிட்டபடி வினவினார் அவர்.
அவள் பயந்துபோனாள். பதற்றத்துடன் பார்வை தாயிடம் செல்ல, அவர் நிலையும் அதேதான்.
வேகமாகச் சமாளித்து, “இல்ல அது… பறிபோக இருந்த எங்கட காணியக் கிட்டத்தட்ட எங்களுக்கு வாங்கித் தந்ததே அவர்தான். அவ்வளவு நல்ல மனுசன். இவர் என்ர மகன். கொஞ்சம் ஏலாத பிள்ளை. இவருக்கு உதவித்தொகை வாங்கித் தந்ததும் அவர்தான். அதான் நேராப் பாத்து, நன்றி சொல்லிப்போட்டுப் போவம் எண்டு வந்தனாங்க தம்பி. அப்பிடியான நல்ல மனுசன ஏன் அடிக்கோணும்? அதான் அதிர்ந்து போனோம்.” என்றார் சிவகாமி.
“கட்டின மனுசி இருக்கத் தக்கன இன்னொருத்தியோட கள்ளத் தொடர்பு வச்சா மச்சான்காரன் விடுவானா? ஒரு பொம்பிளைப் பிள்ளை வேற இருக்கு. இப்ப பாத்தா அந்தச் சின்ன வீட்டுக்கும் வயித்தில பிள்ளையாம்.” என்றதும் அன்னை மகள் இருவருமே தலையில் இடி விழுந்தவர்கள் போன்று உறைந்துபோய் நின்றனர்.
அவள் ‘கள்ளத்தொடர்பா?’ நிலானியின் நெஞ்சம் ஒருமுறை குலுங்கிற்று.
“முந்தநாள் இரவு அந்தப் பெடியன் அடிச்ச அடியப் பாக்க மாட்டீங்க. நாங்க எல்லாருமாச் சேர்ந்து இழுத்துப் பிடிச்சதாலதான் அந்த ஆள் உயிரோடையாவது இருக்கிறார். இல்லையோ கொன்டே போட்டிருப்பான். இந்தப் பொம்பிளைப் பிள்ளைகளும் இவனை மாதிரி ஆக்களிட்டத்தானே போய் மாட்டுதுகள். அந்தளவுக்கு என்ன அலைச்சல் குணமோ தெரியேல்ல.” என்றுவிட்டு நடையைக் கட்டினார் அவர்.
சிவகாமி அம்மா மகளை வெறித்துப் பார்த்தார். தன்னைச் சமாளித்துக்கொள்ள முடியாமல் அவ்வளவு நேரமாக வேலியைப் பற்றிக்கொண்டு நின்ற நிலானி, அன்னையின் பார்வையில் பலமாய் அடி வாங்கினாள்.
“கடவுள் சத்தியமா எனக்கு இதெல்லாம் தெரியாம்மா. அவர் ஒருக்காக் கூட என்னட்டச் சொல்லவே இல்ல.” என்றவளுக்கு நெஞ்சுக்கூடெல்லாம் நடுங்கிற்று.
அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. நிசாந்தனின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு விறுவிறு என்று நடக்க ஆரம்பித்தார்.

