கேட்பார் இன்றிக் காதல் – 22

அத்தியாயம் 22

நிலானிக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து அவர்கள் வீட்டில் வறுமைதான். ஆனாலும் கூட ஒருவர் ஒரு வார்த்தை சொல்லும்படி வாழ்ந்ததில்லை. ஒரு நாளுக்கு ஒரு பொழுது மட்டுமே வயிற்றைக் கழுவிய நாள்களில் கூட, அடுத்தவரிடம் சென்று ஒரு ரூபாய் இரந்ததில்லை.

இந்தக் காணி கிடைத்து, வீட்டுத் திட்டம் மூலம் வீடு கட்டிக்கொண்டு இங்கே வந்து, அவளும் கேக் சென்டரில் வேலைக்குச் சேர்ந்த பிறகு, அதுவரையில் அவர்கள் இருந்த நிலைக்கு இப்போது எவ்வளவோ பரவாயில்லை என்கிற நிலையில்தான் வாழ்ந்தார்கள்.

ஆனாலும் கூட, அவள் வாழ்வில் திருமணம் எல்லாம் எட்டாக்கனி என்று எண்ணி, அம்மாவையும் தம்பியையும் நல்லபடியாகப் பார்த்துக்கொண்டால் போதும் என்று வாழ்ந்த அவள், அவனைப் போன்ற ஒருவன் தன் வாழ்வில் வருவான் என்று நினைத்துப் பார்த்ததே இல்லை.

அவளும் இருபத்தியெட்டு வயது நிரம்பிய முழுமையான பெண் என்பதா, என்னதான் வீட்டின் நிலை அறிந்து மனத்தை அலைபாய விடாமல் வைத்திருந்தாலும், எனக்கும் ஒரு நல்லவன் துணையாக அமைந்துவிட மாட்டானா, நானும் மற்றவர்களைப் போன்று குடும்பம், குட்டி என்று ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட மாட்டேனா என்கிற ஆசைகள் ஆழ்மனத்தில் ஏக்கமாய் இருந்ததாலோ என்னவோ, கண்ணியமாய், நாணயமாய்த் தெரிந்த ஒருவன், ஆர்வமாய்ப் பார்த்து ஆசையாய்ப் பேசவும் வேகமாய் விழுந்துவிட்டாள் போலும்!

இல்லாமல் எப்படி இத்தனை காலம் கட்டுக்கோப்பாக இருந்துவிட்டு அவனிடம் மட்டும் சறுக்கினாள்?

பக்கத்து வீட்டினர் நான்கடி நிலத்தை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று போனவள் கடைசியில் அவளே ஏமாந்து நிற்கிறாள்!

அந்த வீதியில் வைத்துச் சிவகாமி அம்மா விறுவிறு என்று நிசாந்தனோடு நடக்க ஆரம்பித்திருந்தாலும் அவளால் அப்படி அங்கிருந்து வந்துவிட முடியவில்லை. ஒருவர் ஒன்று சொல்லிவிட்டார் என்றதும் நம்பிக்கொண்டு ஓடிவந்து மூலையில் குந்தியிருந்து அழுவதற்கு இது ஒன்றும் சாதாரண விடயம் இல்லையே! உறுதியாய் உண்மைதானா என்று அறியவேண்டியிருந்தது.

அவன் வீட்டுக்கு ஓடிப்போய்ப் பார்த்தாள். அந்த மனிதர் சொன்னது போன்று அவன் வாகனமும் இல்லை, வீடும் பூட்டியிருந்தது.

நடந்த பிரச்சனைகளால் பக்கத்து வீட்டுப் பெண்மணி இங்கே ஒரு கண்ணை வைத்துக்கொண்டே இருந்தார் போலும். இவளைக் கண்டுவிட்டு, “நீங்க ஆரம்மா? இங்க என்ன செய்றீங்க?” என்று கேட்டுக்கொண்டு வந்தார்.

திக்கித் திணறி, அந்த மனிதரிடம் சொன்னது போலவே அவரிடமும் காணிக் கதையைச் சொல்லி விசாரித்தபோது, இவள் மீது சந்தேகப் பார்வையைப் பதித்தாலும் அவரும் அந்த மனிதர் சொன்னதைத்தான் உறுதிப்படுத்தியிருந்தார். கூடவே, சுபாங்கி வந்து, நேராகக் கேட்டுச் சண்டை பிடித்துவிட்டுப் போனதையும் சேர்த்தே சொன்னவர், அவளைப் பற்றியும் அவள் குடும்பத்தினரைப் பற்றியும் சொல்ல அதற்குமேல் அவள் அங்கே நிற்கவில்லை.

அந்தப் பெண்ணுக்காவது தட்டிக் கேட்கத் தம்பி என்று ஒருவன் இருந்தான். அவளுக்கு?

மெல்லத் திரும்பி அன்னையைப் பார்த்தாள். வீட்டுக்கு வந்த கணத்திலிருந்து ஒரு மூலையில் முடங்கி அமர்ந்தவர்தான். தற்போது வரை அசையவே இல்லை. வெயிலில் அலைந்து வந்ததாக்கும் அவர் மடியில் படுத்து உறங்கியிருந்தான் நிசாந்தன்.

அவரிடம் எதைப் பேசவும் பயந்தாள். எத்தனை புத்திமதிகளைச் சொல்லியிருப்பார்? கேட்டாளா? இல்லையே!

அந்தளவில் ஆசை! நல்லவன் ஒருவன் எனக்கும் கிடைத்துவிட்டான், அவனைத் தவற விட்டுவிடக் கூடாது என்கிற பேராசை! இல்லாமல் இத்தனை அவசரமாக உள்ளத்தோடு சேர்த்து உடலையும் கொடுத்திருப்பாளா என்ன?

தான் ஏமாந்து தன் வாழ்க்கையைத் தொலைத்ததுமல்லாமல் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையையும் குலைத்துவிட்டாளே! அந்தப் பாவம் அவளைச் சும்மா விடுமா?

இரவு முழுக்க நிலானியால் உறங்க முடியவில்லை. அடுத்த நாள் காலையில் இருள் விலகும் முன்னேயே எழுந்து, அவள் அறையை விட்டு வெளியே வந்தபோது, நேற்று எந்த இடத்தில் எப்படி அமர்ந்திருந்தாரோ அப்படியே இன்னும் அமர்ந்திருந்தார் சிவகாமி அம்மா.

பார்த்ததும் பயந்துபோனாள்.

“அம்மா, என்னம்மா உடம்புக்கு ஏதும் செய்யுதா?” என்றபடி அவள் நெருங்க, விருட்டென்று எழுந்து வெளியே நடந்தார் அவர்.

அவள் விழிகள் கலங்கிப் போயின. எதுவுமே பேசாமல் தயாராகி வந்து, வெளி முற்றத்தில் அமர்ந்திருந்தவரிடம் சென்று, “அம்மா, நான் ஒருக்கா முல்லைத்தீவுக்குப் போயிற்று வாறன்.” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.

*****

அன்பினி வளர்ந்த பெண்தான். என்றாலும் பாதுகாப்பான கூட்டில் எந்த ஆபத்துகளும் அண்டாமல் அரவணைப்புடன் வளர்க்கப்பட்ட குஞ்சு அவள்.

அப்படியானவளின் உள்ளம் தமையனின் நடத்தையிலேயே சுக்கு நூறாக நொருங்கிப் போயிருந்தது. அப்படியிருக்க அவள் உயிராய் நேசித்தவனும் அவளைக் காயப்படுத்திவிட்டானே!

அவன் பார்த்த பார்வைகளும் வீசிய வார்த்தைகளும் அவளைக் கூறுபோட்டுக்கொண்டே இருந்தன. அவள் என்ன தவறு செய்தாள்? அவளிடம் ஏன் கோபத்தைக் காட்டினான்? அவளுக்கும் இதெல்லாம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்று தெரியாதா அவனுக்கு? எத்தனை மோசமாய் அவளைத் துரத்தியடித்தான்?

இப்படி அவள் தனக்குள் எல்லாவற்றையும் போட்டுத் துடித்துக்கொண்டு இருக்கையில்தான் அவர்கள் வீட்டு வாசலில் தயக்கத்துடன் வந்து நின்றாள் நிலானி.

நில அளவைத் திணைக்களத்தில் உயர் பதவியில் இருக்கும் சந்திரகாந்தனின் வீட்டைக் கண்டு பிடிப்பது அவளுக்கு அத்தனை சிரமமாய் இல்லை.

அவளின் நல்ல காலமோ என்னவோ வீட்டில் திருநாவுக்கரசு இல்லை.

அன்பினிக்கு அவளை எங்கேயோ பார்த்தது போலிருந்தாலும் இனம் காண முடியவில்லை. ஆனால், காந்தனின் தங்கை என்று ஆசையாகப் பார்த்த பெண்ணை நிலானி மறக்கவில்லை. தானாக விழிகள் கலங்க, “நீங்க அன்பினிதானே?” என்று வினவினாள்.

“ஓம் நீங்க?”

“நான் நிலானி.” என்றாள் மெல்ல. “அது நான்…சந்திரகாந்தன்… அவர் அது…” என்று தன்னை எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியாமல் தடுமாறினாள். அந்த மனிதர் சொன்னது போன்று அவனின் கள்ளத் தொடர்பு என்றா சொல்ல முடியும்?

ஆனால், அவ்வளவு நேரமாக மகளுக்குத் தெரிந்த பெண்ணோ என்று பார்த்திருந்த இந்துமதி, அவள் முழுமையாகச் சொல்லும் அவசியமே இல்லாமல் அவளை யார் என்று கண்டுபிடித்திருந்தார்.

உள்ளத்தில் வெறுப்பு மூழ, “எங்க இருந்து வாறீர்?” என்றார் அதட்டலாக.

“வ…வவுனியா.” என்றதுமே அவருக்கு நெஞ்சு கொதிக்க ஆரம்பித்தது. “பிள்ளை உள்ளுக்கு போ!” என்று முதல் வேலையாக அன்பினியை உள்ளே அனுப்ப முயன்றார்.

அவளுக்கும் புரிந்துபோயிற்று. அதிர்ச்சியோடு தாயையும் அவளையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு அறைக்கு ஓடி வந்திருந்தாள். காரணமே இல்லாமல் அவளுக்குக் கைகால்கள் எல்லாம் நடுங்கின.

அடுத்த கணமே, “வீடு வரைக்கும் தேடி வாறதுக்கு எவ்வளவு தைரியம் உமக்கு? முதல், கலியாணம் கட்டிப் பிள்ளையோட இருக்கிற ஒருத்தனைப் பிடிக்க வெக்கமா இல்லையோ?” என்று நிலானியிடம் சீறினார் இந்துமதி.

அவள் துடித்துப்போனாள். “அப்பிடிச் சொல்லாதீங்கோ அம்மா. கடவுள் சத்தியமா எனக்கு அவர் ஏற்கனவே கட்டினது தெரியாது. அவர் சொல்லவே இல்ல.” என்றாள் கண்ணீருடன்.

இந்துமதிக்கு முகம் கன்றிப் போயிற்று. ஆக, இந்தப் பெண்ணையும் ஏமாற்றி இருக்கிறான். எவ்வளவு கேவலம்! விபத்தினால் அவர் மனத்தில் உண்டாகியிருந்த மெல்லிய ஈரமும் காய்ந்து போயிற்று. ஒன்றுக்கு இரண்டு பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கியவனை இன்னுமே வெறுத்தார்.

“அவன் ஏமாத்தினா நீரும் வயித்தில பிள்ளை வாற அளவுக்கு இடம் குடுப்பீரா? முதல் என்னத்துக்கு இங்க வந்து நிக்கிறீர்?” என்று அதட்டினார்.

“இல்ல பயப்பிடாதீங்கோ. உங்களிட்ட எதைக் கேட்டும் நான் வரேல்ல. அவருக்கு இடம் குடுத்தது என்ர பிழைதான். அதுக்காக நான் கேவலமானவள் இல்லை அம்மா. ஆனாலும் பரவாயில்ல. ஒருத்தரைப் பற்றி முழுசாத் தெரியாம, கண்ணை மூடிக்கொண்டு நம்பினதுக்குத் தண்டனையா இத நான் ஏற்கிறன். இனி நான் அவரின்ர வாழ்க்கைல இல்ல. உங்கட மருமகளை அவரோட சேர்ந்து வாழச் சொல்லுங்கோ. எனக்கு ஒரு குடும்பத்தைக் குலச்ச பாவம் வேண்டாம். இதைச் சொல்லத்தான் வந்தனான். வாறன் போயிற்று.” அடக்கிய கண்ணீரும் நடுங்கிய குரலுமாகச் சொல்லிவிட்டு அவள் போக, அப்படியே அமர்ந்துவிட்டார் இந்துமதி.

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அன்பினிக்கு இரண்டு பெண்களின் வாழ்வோடு விளையாடிய அவள் தமையன் எத்தனை பெரிய கயவன் என்று அப்போதுதான் முழுமையாகப் புரிந்தது.

*****

நிலானி வீடு திரும்பியபோது மாலையாகியிருந்தது. வீட்டுக்குள் நுழைகையிலேயே வித்தியாசமாய் ஒரு உணர்வு. என்ன என்று பிரித்தறிய முடியாமல், “அம்மா!” என்று அழைத்தாள்.

யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லை. இந்த நேரம் எங்கே போனார்? கோயிலுக்கோ? வீடு முழுவதும் சுற்றி வந்தவளுக்கு வீட்டுப் பொருள்கள் குறைந்திருப்பது போலொரு தோற்றம்.

நெஞ்சம் பதற ஓடிப்போய் அலமாரியைத் திறந்து பார்த்தாள். அன்னையினதும் நிசாந்தனினதும் உடைகள் காணாமல் போயிருந்தன. நிசாந்தனின் கிளினிக் சம்மந்தமான ஆவணங்களும் இல்லை.

அவளைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டார்களா என்ன? கைகள் நடுங்க அவருக்கு அழைத்தாள். அழைப்புப் போனது. என்ன, அவர் அழைப்பை ஏற்கவே இல்லை.

ஓடிப்போய் அவர்களின் தெருவில் இருக்கும் பெட்டிக் கடையில் விசாரித்தாள். அந்தக் கடைக்காரரும் ஒரு பெரிய பையும் நிசாந்தனுமாகச் சிவகாமி அம்மா பஸ் ஏறியதை உறுதிப்படுத்தினார்.

“அம்மா, எங்க அம்மா என்னை விட்டுட்டுப் போயிட்டீங்க? நான் செஞ்சது பிழைதான். அதுக்கு இப்பிடியாம்மா செய்வீங்க? திரும்பி வாங்கம்மா பிளீஸ். நீங்களும் தம்பியும் இல்லாம எப்பிடி அம்மா இருப்பன்?” என்று கேட்டு அவருக்குச் செய்தி அனுப்பி வைத்தாள்.

பதில் எதுவும் வருவதாய் இல்லை. திரும்ப திரும்ப அழைத்தாள். கடைசியில் கைப்பேசி அணைத்துவைக்கப்பட்டிருந்தது.

அவ்வளவுதான். இடிந்துபோய் அமர்ந்துவிட்டாள். தன் உதவி இல்லாமல், தன் சம்பளப் பணம் இல்லாமல் நிசாந்தனை அவரால் பார்த்துக்கொள்ளவே முடியாது என்று நன்கு தெரிந்திருந்தும் அவனோடு போயிருக்கிறார் என்றால், அந்தளவில் அவளை வெறுத்துவிட்டார் என்றுதானே அர்த்தம்?

பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை, ஒழுக்கம் கெட்டுப் போன நீயும் வேண்டாம், உன் பணமும் வேண்டாம் என்று நினைத்தாரோ? உள்ளம் அழுது தீர்த்தது. இனி வயிற்றில் இருக்கும் குழந்தையும் இந்தக் கண்ணீரும்தான் அவளுக்கு மிச்சம் போலும்.

error: Alert: Content selection is disabled!!