அத்தியாயம் 23
அடுத்து என்ன என்று தெரியாமலேயே அந்த வாரம் தன் இறுதியை எட்டியிருந்தது. இரு வீட்டினரும் மற்றவரிடம் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை. காந்தனைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. அன்பினி வவுனியாவுக்குப் புறப்பட்டேயாக வேண்டும். அவளுக்குப் போகவும் மனமில்லை, அங்குச் சென்று படிக்கிற மனநிலையும் இல்லை. ஆனால், படித்து முடிக்க வேண்டுமே!
அவள் தயாராகி வெளியே வந்தபோது, இந்துமதி கலங்கிச் சிவந்த முகத்துடன் நின்றிருந்தார்.
“இன்னும் ஒரு மூண்டு மாசம் அம்மா. ஸ்டடி லீவுக்கு இங்க வந்திடுவன். பிறகு எக்ஸாமுக்கு மட்டும் போனாச் சரி.” அவரைக் கட்டிக்கொண்டு கண்ணீருடன் சொல்லிவிட்டுத் திருநாவுக்கரசுடன் புறப்பட்டாள்
அவள் பேருந்தில் ஏற முதல், “அம்மாச்சி, மனதில எந்த ஆசையையும் வளக்காதீங்கோ பிள்ளை. பேசின கலியாணம் நடக்கும் எண்டுற நம்பிக்கை எனக்கு இல்ல. அப்பிடி நடக்காம இருக்கிறதுதான் நல்லம் எண்டு நானும் நினைக்கிறன். அதால படிப்பை மட்டும் பாருங்கோ.” என்றார் அவள் முகம் பார்க்க முடியாமல்.
நெஞ்சுக்குழியை ஏதோ ஒன்று வந்து அடைத்தபோதும், “எனக்கும் இப்போதைக்குப் படிப்பை முடிக்கோணும் எண்டுறது மட்டும்தான் மைண்ட்ல இருக்கு அப்பா.” என்றுவிட்டுப் புறப்பட்டாள்.
இங்கே அபயனுக்கு வீட்டினரை விட்டு நகரவே முடியாத நிலை. தகப்பனுக்காகச் சிணுங்கும் தளிர் முதற்கொண்டு, உண்ணாமல் உறங்காமல் கண்ணீர் உகுத்தபடி கிடக்கும் தமக்கையிலிருந்து, உடைந்து தளர்ந்துவிட்ட தாய் தந்தையர் வரை அனைவரையும் அவன் ஒருவனே தாங்கிக்கொண்டிருந்தான்.
அப்படி இருந்துமே தந்தையிடம் சொல்லிவிட்டு இடையில் நான்கு நாள்களுக்குக் கொழும்புக்கு ஓடிவிட்டு வந்திருந்தான்.
சுபாங்கி இன்னுமே தன்னை நிதானப்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள். ஓராயிரம் ஆசைகளோடும் கனவுகளோடும் ஆரம்பித்த வாழ்க்கை. சில வருடங்களில் ஒன்றுமே இல்லை என்றாகிப் போயிற்றே!
அவர்கள் வாங்கிப்போட்ட காணி, அதில் கட்ட நினைத்த வீடு, அதன் பிறகு பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட இன்னொரு பிள்ளை, நால்வருமாக அந்த வீட்டில் வாழ நினைத்த வாழ்க்கை என்று எல்லாமே கற்பனையாக மட்டுமே போயிற்றே!
“அம்மாச்சி, இப்பிடியே இருந்தா என்னம்மா அர்த்தம்? இனி என்ன செய்யப் போறீங்க?” அழுது, கத்தி, ஆவேசமாகத் திட்டிக்கொண்டிருந்த மகள், இப்போதெல்லாம் தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுங்குவதைப் பார்த்த பரமேஸ்வரி இதமாய் விசாரித்தார்.
“நான் செய்ய என்னம்மா இருக்கு? அதுதான் எல்லாத்தையும் அவன் செய்திட்டானே! இனிச் சாவுக்கும் எனக்கு அவன் வேண்டாம். அவன்ர முகத்தில முழிக்கக் கூட எனக்கு விருப்பம் இல்ல.” என்றாள் அழுகையும் ஆத்திரமுமாக.
“தளிர் பாவமே பிள்ளை. நீங்க மட்டும் எண்டா அது வேற. அவாவுக்காகவும் யோசிக்கோணுமே.”
“அப்ப நான் ஒரு மனுசி இல்லையாம்மா? எனக்கு வலிக்காதா? நான் எனக்காக வாழக் கூடாதா? முதல் உங்களுக்கு விளங்குதா இல்லையா? அங்க அவள் மூண்டு மாதமாம். அந்த மூண்டு மாதமும் அவன் என்னோடயும் வாழ்ந்திருக்கிறான். எனக்கு அத நினைக்க நினைக்க என்னையே மண்ணெண்ணெய் ஊத்தி எரிக்கோணும் மாதிரி இருக்கு. ஆனா அவன்… சீ!” என்றவளின் சீற்றத்திலும் அவள் சொன்ன விடயத்திலும் விக்கித்துப்போய் அப்படியே அமர்ந்துவிட்டார் பரமேஸ்வரி.
கிட்டத்தட்ட ஒரு மாதம் இப்படியே ஓடியிருந்தது. பேத்தியைப் பாராமல், அவளைக் கொஞ்சாமல், மகளும் பக்கத்தில் இல்லாமல் பாதியாகிப் போயிருந்தார் இந்துமதி. திருநாவுக்கரசின் நிலையும் அதேதான்.
இதற்குள் கதை வெளியே கசிந்திருந்தது. இரு வீட்டுக்குமே இது சங்கடமான நிலை என்றாலும் அன்பினி குடும்பத்துக்குப் பெருத்த அவமானம். வெளியில் தலை காட்டவே முடியவில்லை. சொந்தபந்தங்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோரிடமும் முகம் கொடுக்க முடியாமல் நின்றனர்.
ஒரு கட்டத்துக்குமேல் இந்துமதியால் இந்த அழுத்தத்தைப் பொறுக்க முடியவேயில்லை. “இப்பிடியே இருந்து என்னப்பா செய்றது? அவே என்ன முடிவு எடுத்திருக்கினமாம் எண்டு கேக்க வேண்டாமோ?” என்று கணவரிடம் கேட்டார்.
அவருக்கும் அதே யோசனைதான். எந்த முடிவையும் எடுக்கும் நிலையில் அவர்கள் இல்லையே! சிலபல வேலைகளை முடித்துக்கொண்டு ஒருநாள் இந்துமதியோடு அவர்களின் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
தாம் பேச வருவதாக முதலே குழந்தைவேலுவுக்கு அழைத்துச் சொல்லியிருந்தால் அபயனிலிருந்து எல்லோரும் வீட்டில்தான் இருந்தனர்.
எல்லோர் முகத்திலும் மிகுந்த இறுக்கம். இவர்களின் வருகை பிடிக்கவில்லை என்று அப்படியே தெரிந்தது. ஆயினும் கூட வீட்டின் தலைவராக நின்று, “வாங்கோ!” என்று வீட்டுக்குள் அழைத்தார் குழந்தைவேலு.
“இல்ல, கதிரைகளை(நாற்காலிகள்) வெளில கொண்டு வாங்கோ. காத்தாட இஞ்ச முத்தத்திலயே(முற்றம்) இருப்பம்.” என்ற திருநாவுக்கரசு முற்றத்திலேயே நின்றுகொண்டார்.
குழந்தைவேலுவுக்கு முகம் கன்றிவிட, “அது அண்டைக்கு இருந்த கோவத்துல…” என்று இழுத்தார்.
“அண்டைக்கு உங்களுக்காவது என்ன நடந்தது எண்டு தெரியும். எங்களுக்கு எதுவுமே தெரியாது. என்னவோ ஏதோ எண்டு பதறியடிச்சு வந்த இடத்தில… பரவாயில்ல விடுங்கோ. நீங்க கதிரையகே கொண்டு வாங்கோ.” என்று முடித்துக்கொண்டார்.
அதற்குமேல் குழந்தைவேலுவும் ஒன்றும் சொல்லவில்லை. அபயன் நாற்காலிகளை எடுத்துப்போட்டான். இந்துமதி, திருநாவுக்கரசு, குழந்தைவேலு மூவரும் அமர்ந்துகொள்ள, அபயன் தந்தையின் அருகில் நின்றுகொண்டான். பெண்கள் இருவரும் வீட்டு வாசல் நிலையில் நின்றிருந்தனர்.
இந்துமதிக்குச் சுபாங்கியின் கையில் இருந்த பேத்தியிலேயே கண் போயிற்று. அவரின் சொந்தப் பேத்தி. ஆசையாகத் தூக்கிக் கொஞ்ச உரிமையற்று நிற்கிறார். உள்ளம் அழுதது.
திருநாவுக்கரசின் நிலையும் அதேதான். எத்தனை நாள்களுக்குப் பிறகு பேத்தியைப் பார்க்கிறார். அவர் மடியிலேயே விளையாடி, அவர் கையிலேயே உறங்கிப் போகிற குழந்தை.
பகலில் தவறாமல் அவர் வீட்டுக்கு வருவதே சாப்பிட்டுவிட்டு அவளோடு கொஞ்ச நேரம் விளையாடிக்கொண்டு இருந்துவிட்டுப் போகலாம் என்கிற ஆசையில்தான். ஆனால் இன்று?
அவள் வேறு, “அப்பப்பா…” என்று சிணுங்கியபடி இவரிடம் ஓடி வரத் துடித்துக்கொண்டு இருக்கவும், “பேத்தியை வாங்குங்கோ.” என்றார் இந்துமதியிடம்.
அதற்குமேல் தாமதிக்காமல் அவருமே ஓடிப்போய் வாங்கிக்கொண்டார். அவளைத் தூக்கியதுமே அவரால் அழுகையை அடக்க முடியவில்லை. அவளை மார்போடு அணைத்தபடி விம்மினார். ஆசை தீரக் கொஞ்சினார். திருநாவுக்கரசுவும் ஆசையாய் வாங்கி மடியில் வைத்துக்கொண்டார்.
பழக்கதோசத்தில் அவள் அவரின் கையைப் பார்க்க, அவரும் ஏமாற்றாமல் வாங்கி வந்த இனிப்புப் பண்டத்தை எடுத்துக்கொடுத்தார்.
சற்று நேரம் அவள் அதைச் சாப்பிடும் அழகையே பார்த்திருந்தவர் மீண்டும் பேத்தியை மனைவியிடம் கொடுத்துவிட்டு, நிமிர்ந்து அமர்ந்தார்.
ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டுவிட்டு, “நல்லதைச் சொல்லிக் குடுத்துத்தான் வளத்தம். ஆனாலும் அவன் இப்பிடி எல்லாம் செய்வான் எண்டு கனவில கூட நினைக்கேல்ல. எங்கட மகனா எண்டு நம்பவே ஏலாம இருந்தது. நான்தான் இந்தக் கலியாணப் பேச்சை முதல் முதல் எடுத்தனான். உங்கட மகளைச் சந்தோசமா வச்சிருப்பான் எண்டு நம்பித்தான் கட்டியும் வச்சனான். அதால உங்கட மகளின்ர இந்த நிலைக்கு நானும் ஒரு காரணம். அதால நீங்க எல்லாரும் முதல் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ.”
நெஞ்சில் கையை வைத்து அவர் சொல்லவும் அழுகையை அடக்க முடியாமல் சத்தமாக விம்மி இருந்தார் இந்துமதி.
யாருக்கு என்ன பேசுவது என்று தெரியாத நிலை. ‘பரவாயில்லை விடுங்கோ’ என்று சொல்லக்கூட முடியாமல் நின்றனர்.
“இப்ப இதக் கேக்கிறது சரியா எண்டு எனக்குத் தெரியேல்ல. எண்டாலும் கேக்கிறன். இனி என்ன செய்யப்போறீங்க எண்டு ஏதும் யோசிச்சனீங்களா?” அவர்கள் எல்லோரையும் பொதுவாகப் பார்த்து வினவினார்.
குழந்தைவேலு மகளைத் திரும்பிப் பார்த்தார். அவளும், “கட்டின மனுசி நான் இருக்கேக்கையே இன்னொருத்திக்குப் பின்னால போன ஒருத்தனோட வாழோணும் எண்டு எனக்குத் தலை எழுத்தா அப்பா? எனக்கு என்ன குறை எண்டு அப்பிடியான ஒருத்தன நான் சகிச்சு வாழ? அவன் எல்லாம் என்ர கால் தூசுக்கும் வரமாட்டான். அவன் எனக்கு வேண்டவே வேண்டாம்.” என்றாள் தெளிவாய்.
குழந்தைவேலு இப்போது திரும்பித் திருநாவுக்கரசைப் பார்த்தார்.
“நீங்க என்ன முடிவை எடுத்தாலும் எனக்கு அதில முழுமையான சம்மதம்தான்.” என்றுவிட்டுக் கையோடு கொண்டுவந்திருந்த பையிலிருந்து சில ஆவணங்களை வெளியில் எடுத்தார்.
“இதில இருக்கிறது எல்லாம் காந்தனுக்குக் குடுக்கிறதுக்கு எண்டு பிரிச்சு வச்ச சொத்துப் பத்திரங்கள். அதை எல்லாம் பேத்தின்ர பெயருக்கு மாத்தி இருக்கிறன். நான் பெத்த மகன் தன்ர கடமைல இருந்து தவறி இருக்கலாம். ஆனா நான் என்னால முடிஞ்சதைச் செய்ய நினைக்கிறன். வாங்குங்கோ.” என்று குழந்தைவேலுவிடம் நீட்டினார்.
அவர் மறுக்க முதல், “நாங்க என்ன இஞ்ச சாப்பாட்டுக்கு வழியில்லாம இருக்கிறம் எண்டு நினைச்சீங்களா? இல்ல, சொத்துப்பத்தத் தந்து அவன் செய்ததை மறைக்க நினைக்கிறீங்களோ? அந்தக் கேடுகெட்டவனின்ர எதுவும் எங்களுக்குத் தேவை இல்ல!” என்று கொதித்தான் அபயன்.
“அதைச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்ல தம்பி.” என்றார் திருநாவுக்கரசு நிதானமாக. “இடையில என்ன வேணுமெண்டாலும் நடந்திருக்கலாம். ஆனா காந்தன் என்ர மகன் எண்டுறதோ, தளிருக்கு அவன்தான் அப்பா எண்டுறதோ எப்பிடி மாறாதோ, அதே மாதிரி அவா என்ர பேத்தி எண்டுறதும் மாறாது. அவாக்கு நான் செய்றதச் செய்யக் கூடாது எண்டு சொல்லுற உரிமை உங்கட அக்காக்குக் கூட இல்ல.” என்று தெளிவாய்ச் சொன்னவர், எட்டிக் குழந்தைவேலுவின் மடியில் பத்திரங்களை எல்லாம் வைத்தார்.
“இல்லை. எங்களுக்கு இதில உடன்பாடு இல்ல. இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம்.” என்று அவருமே அதைத் திருப்பிக் கொடுக்கத்தான் முயன்றார்.
திருநாவுக்கரசு வாங்கவில்லை. “இதில உடன்பாடு இருக்கா இல்லையா எண்டுற கேள்விக்கே இடமில்லை. உங்கட மகனுக்குச் சொன்னதுதான். உங்களுக்கு அவா எப்பிடிப் பேத்தியோ அப்பிடித்தான் எங்களுக்கும். நீங்க உங்கட பேத்திக்குச் செய்ற மாதிரி நானும் செய்றன். அவ்வளவுதான்.” என்றார் முடிவாக.
“நீங்க சொல்லுறது எல்லாம் சரிதான். ஆனா, தயவு செய்து எங்களையும் கொஞ்சம் விளங்கிக் கொள்ளுங்கோ. ஏற்கனவே நிறைய நொந்து போயிட்டம். ஆனாலும் எல்லாத்தையும் கடந்து வரத்தான் நினைக்கிறம். அதுக்கு விடாம இப்பிடி நீங்க செய்றது சரி இல்ல.” என்றார் குழந்தைவேலு.
“உங்கட நிலமைலதான் நாங்களும் இருக்கிறம். உங்களுக்காவது மகள், மகன் எண்டு பிள்ளைகள் எல்லாரும் பக்கத்தில இருக்கினம். ஆறுதலுக்குப் பேத்தி இருக்கிறா. எங்களுக்கு? கடைசி காலத்தில பாப்பான் எண்டு நம்பின மகன் இனி இல்ல. முகம் பாத்து ஆறுறதுக்குக் கூட வீட்டில ஒரு ஆள் இல்ல. ஆனாலும், உங்கட நிலைமை விளங்கினதாலதான் பேத்தியைப் பாக்கிற ஆசை இருந்தாலும் இந்தப் பக்கம் நாங்க வரவே இல்ல.” என்றுவிட்டு எழுந்துகொண்டார் திருநாவுக்கரசு.
இந்துமதிக்குத் தளிரைக் கொடுக்க மனமேயில்லை. அவள் அவர் மார்பிலேயே உறங்கியிருந்தாள். இனி எப்போது பார்க்கக் கிடைக்குமோ என்கிற தவிப்பில் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டார். கண்ணீர் தானாய் வழிந்தது. மீண்டும் மீண்டும் முத்தமிட்டார்.
“கவனமாப் பாத்துக்கொள்ளுங்கோ.” என்றபடி மனமேயில்லாமல் பரமேஸ்வரியிடம் அவளைக் கொடுத்தார்.
கடைசியாக, “இதக் கேக்கிறதில அர்த்தம் இல்லை எண்டு தெரியும். எண்டாலும் உறுதியான முடிவு தெரிஞ்சாத்தான் நானும் அடுத்தது என்ன எண்டு பாக்கலாம். அதாலதான் கேக்கிறன். அண்டைக்கு உங்கட மகள் உங்கட மகனுக்கும் எங்கட மகளுக்கும் பேசின கலியாணம் நடக்காது எண்டு சொன்னவா. அது கோவத்துல சொன்னதா, இல்ல, உறுதியான முடிவா?” என்று கேட்டார் திருநாவுக்கரசு.
குழந்தைவேலு மகன் முகத்தைப் பார்த்தார். அவன் பதில் சொல்ல எடுத்துக்கொண்ட நொடி நேரத் தாமதிப்பில், “அதுதான் கேக்கிறாரே, நீயே சொல்லு தம்பி!” என்றாள் சுபாங்கி.
“உறுதியான முடிவுதான். இனி அந்தக் கலியாணம் நடக்காது.” என்றான் அபயன்.
இப்படித்தான் சொல்வார்கள் என்று திருநாவுக்கரசுக்குத் தெரியாமல் இல்லை. அன்று ‘மனதில் ஆசையை வளர்க்காதே’ என்று அவர் சொன்னபோது, கலங்கிவிட்ட விழிகளோடு ‘எனக்கு இப்ப படிப்புத்தான் அப்பா முக்கியம்’ என்று சொன்ன மகளுக்காகத்தான் கேட்டிருந்தார்.
அவன் சொன்னதைச் சரி என்று தலையசைத்துக் கேட்டுக்கொண்டு, நொறுங்கிப்போன மனத்தோடு அங்கிருந்து நடந்தார். கண்ணீரைக் கண்களுக்குள் தேக்கியபடி அவரைப் பின் தொடர்ந்தார் இந்துமதி.

