அத்தியாயம் 24
முழுதாக இரண்டு மாதங்கள் வைத்தியசாலையில் படுத்துக் கிடந்தான் காந்தன். இடுப்பில் விழுந்த பாரிய அடியும், கால் முறிந்ததும் சேர்ந்து காலத்துக்கும் இனி ஊன்றுகோலின் துணையுடன்தான் நடமாட வேண்டும் என்கிற நிலை.
இத்தனை நாள்களில் வீட்டினர் யாரும் திரும்பியே பார்க்கவில்லை என்பது, இதைவிடவும் மிகப் பெரிய அடியாகிப்போனது. தப்பித்தவறி உயிர் போயிருந்தாலும் இப்படித்தான் விட்டிருப்பார்களா?
வீட்டிலிருந்து எந்த உதவிகளும் வராததினால் அவனுக்கு நினைவு திரும்புகிற வரைக்கும் வைத்தியசாலையினர்தான் எப்படியோ சமாளித்தனர். அதன் பின்னர் அவன் நிலையை அறிந்த அவனே தாதியரிடம் சொல்லி, தன்னைக் கவனித்துக்கொள்வதற்கு ஒருவரை வேலைக்கு அமர்த்தி, தனக்கான உடைகள் முதற்கொண்டு அத்தனை உதவிகளையும் பெற்றுக்கொண்டான்.
இப்போது, பத்து நாள்களுக்கு ஒரு முறை வந்து கால் கட்டினைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி, அவனை வீட்டுக்குப் போகச் சொன்னார்கள்.
வாகனம் ஒன்றை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு வவுனியாவுக்கு வந்து சேர்ந்தான். பக்கத்துவீட்டுப் பெண்மணி விருப்பமே இல்லாமல் ஒரு பெண் வந்து விசாரித்துவிட்டுப் போனதைச் சொல்லிவிட்டுப் போனார். அது நிலானிதான் என்று விளங்கிற்று. முகம் மாறாமல் தலையாட்டிக் கேட்டுக்கொண்டான்.
இந்த இரண்டு மாதமும் அனாதையைப் போன்று வைத்தியசாலையில் கிடந்ததும் தனிமையும் நிறைய யோசிக்க வைத்திருந்தது. நடந்த எதையும் மாற்ற முடியாது என்பதும், தன் மீது தானே பூசிக்கொண்ட கரியோடுதான் இனி மிச்ச வாழ்க்கை என்பதும் நன்றாகவே விளங்கியது.
அமர்ந்திருந்த இருக்கையிலேயே தளர்வாய்ச் சாய்ந்து, பின்னால் தலையைச் சாய்த்து, விழிகளை மூடிக்கொண்டான்.
கண்களுக்குள் தளிர் வந்தாள். அவனைக் கண்டாலே அப்பா என்று தாவி வரும் குழந்தை. அவன் இருந்தால் அவளுக்கு யாருமே தேவையில்லை. இனி? விழியோரங்கள் மெலிதாய்க் கரித்தன.
சுபா கண்களுக்குள் வந்து நின்று முறைத்தாள். உனக்கு என்ன குறை வைத்தேன் என்று எனக்குத் துரோகம் செய்தாய் என்று கேட்டாள். இதே வீட்டில் வைத்து அவளைத் தள்ளி விழுத்தியது நினைவு வந்தது.
அங்கே நடந்த நிகழ்வுகள் முழுமையாக அவனை வந்து சேராதபோதும், அவனுக்குச் சேரவேண்டிய சொத்து முழுவதையும் திருநாவுக்கரசு தளிருக்குக் கொடுத்த விடயத்தை அறிந்திருந்தான். அவனைப் பார்க்க வைத்தியசாலைக்கு வந்த அவனோடு படித்த நண்பர்கள் அவனைத் திட்டிவிட்டுச் சொல்லியிருந்தார்கள்.
நிலானியின் நிலை என்ன, அவளின் அன்னை என்ன சொன்னார் என்று எதுவுமே தெரியவில்லை. யாரிடம் என்ன விளக்கம் கொடுப்பது என்று புரியவுமில்லை.
*****
அன்பினியின் மனது அமைதியிழந்து நிறைய நாள்களாயிற்று. அபயனும், அவன் வார்த்தைகளும், அன்று அவன் காட்டிய கடுமையும், இன்று வரையில் எந்த விதத்திலும் அவளைத் தொடர்புகொள்ளாது விலகி நிற்பதும் என்று அவன் அவளுக்குத் தந்துகொண்டிருப்பது மிகப்பெரிய தண்டனை.
எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்த முயன்றாள். முடியவேயில்லை. பரீட்சைகளில் கோட்டை விட்டுவிடுவோமோ என்று பயப்படுகிற அளவில் இருந்தது அவள் மனநிலை.
இப்படி இருக்கையில்தான் அன்று அவள் கைப்பேசிக்குச் சில புகைப்படங்கள் வந்து விழுந்தன. அவளோடு பாடசாலையில் படித்த தோழி ஒருத்தி அனுப்பியிருந்தாள். எடுத்துப் பார்த்தவள் இதயம், தன் துடிப்பை நிறுத்தியே இருந்தது.
அங்கே அபய் இன்னொரு பெண்ணோடு சோடியாக நின்றிருந்தான். அவளால் நம்பவே முடியவில்லை. மூச்சடைத்த நிலை. திரும்ப திரும்பப் பார்த்தாள். எத்தனை தரம் பார்த்தாலும் அங்கே அவன்தான் நின்றுகொண்டிருந்தான்.
அதுவும் அவன் கையைத் தன் இரு கைகளாலும் பிடித்தபடி நின்றிருந்தாள் அந்தப் பெண். இன்னொன்றில் அவள் முன்னால் நிற்க, அவளின் இரண்டு தோள்களையும் பற்றியபடி பின்னால் அவன். மற்றையதில் அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டபடி அவன்.
என்னவோ நெஞ்சைக் கிழித்து, இதயத்தில் யாரோ கத்தியைச் செருகியது போலிருந்தது அவளுக்கு.
இனி அவர்களின் திருமணம் நடக்காது என்று சுபாங்கி சொன்னாளாம் என்று சொன்னபோதிலும் சரி, அவளோடு அவன் கதைக்காமல் தவிர்த்தபோதிலும் சரி, அவனே அப்பாவிடம் திருமணம் நடக்காதாம் என்று சொன்னானாம் என்று அறிந்தபோதிலும் சரி, ஒருவிதக் கலக்கவும் பயமும் அவளைப் போட்டு ஆட்டினாலும் கூட, அவள் நம்பிக்கையை மொத்தமாக இழக்கவில்லை.
காரணம் அவளோ அவள் நேசமோ இல்லை! அவன்! அவன் காட்டிய காதல்!
ஆனால் இன்று, அந்த நேசத்தைச் சுமந்திருந்த நெஞ்சம் நொறுங்கியே போயிற்று. இதற்கு அவன் அவளைக் கொன்றிருக்கலாம். உண்மையிலேயே கொன்றுபோட்டிருக்கலாம்.
ஏன் பார்க்கிறோம், எதற்குப் பார்க்கிறோம் என்று தெரியாமலேயே அந்த மூன்று புகைப்படங்களையும் திருப்பி திருப்பிப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அவளுக்கு அழைத்த தோழி, அபயனுக்குப் பேசியிருக்கும் அந்தப் பெண் அவளோடு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயில்கிறவளாம், இவர்களை விட ஒரு வயது பெரியவளாம் என்று சொன்னாள். அதனால் அவளின் முகப்புத்தகத்தில் அவள் பகிர்ந்ததை இவளும் பார்த்திருக்கிறாள்.
அவளுக்கு ஏனோ அவனுக்கு அழைத்து இதெல்லாம் என்ன என்று கேட்கவோ, கேட்டுச் சண்டை பிடிக்கவோ விருப்பமில்லை. அன்புக்காகப் பிச்சை எடுப்பது வேறு! அன்பையே பிச்சையாகக் கேட்பதில் அர்த்தம் இல்லையே!
அதைவிட, இந்தப் புகைப்படங்கள் சொல்லாத விளக்கத்தையா அவன் சொல்லிவிடப் போகிறான்? எல்லாவற்றையும் விட, அவனால் அவளைத் தாண்டி இன்னொருத்தியோடு அவன் வாழ்க்கையை யோசிக்க முடிந்திருக்கிறது. மனத்தளவிலும் உடலளவிலும் இன்னொருத்தியோடு வாழ்வதற்குத் தயாராக முடிந்திருக்கிறது என்கையில் என்ன கேட்டு என்ன பயன்?
அவளோடு கண்ட கனவுகளையும், அவளோடு நிகழ்த்திய பிரத்தியேகமான உரையாடல்களையும் இன்னொருத்தியோடு வாழப்போகிறானாம். வாழட்டும்! அவளுக்கு என்ன? நன்றாக வாழட்டும்! அவள் ஒன்றும் தடுக்கப் போவதில்லை. இந்தக் கண்ணீர் மட்டும் அவள் கட்டுப்பாட்டை மீறி வழிந்துகொண்டே இருந்தது.
ஆனால், அவன் அணிவித்துவிட்ட செயினுக்கு என்ன பொருளாம்? அதை அணிவித்துவிட்டு ‘அன்பா, உண்மையா எங்களுக்குக் கலியாணம் நடந்திட்டா?’ என்று காதோரமாய்க் கேட்டானே. மறந்துவிட்டானா என்ன?
தந்த முத்தம்? காட்டிய நெருக்கம்? ஓர் கோப்பையில் தேநீர் எல்லாம் பருகினார்களே! அவளின் அறை வரைக்கும் வந்தானே? ‘கலியாணம் முடிஞ்ச பிறகு உன்னத் தள்ளி எல்லாம் வைக்கேலாது’ என்றானே. அதற்குமேல் முடியாமல் விம்மல் வெடிக்க ஆற்றுவார் தேற்றுவாரின்றி அழுது தீர்த்தாள்.
*****
அன்று டவுனில் ஏதோ அலுவலாகச் சென்றுவிட்டுக் கடைக்குத் திரும்பிக்கொண்டிருந்த திருநாவுக்கரசு, எதிரில் குழந்தைவேலு அபயனோடு நடந்துவருவதைக் கண்டார். இருதரப்புக்கும் மிகுந்த சங்கடம். கண்டுவிட்ட பிறகு காணாததுபோல் போக முடியவில்லை. இன்முகமாகப் பேசவும் வரமாட்டேன் என்றது.
ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் நின்ற திருநாவுக்கரசு, “எப்பிடி இருக்கிறீங்க?” என்றார் பொதுவாக.
“பரவாயில்ல. போகுது…” குழந்தைவேலு வார்த்தைகளைத் தேடிப்பிடித்துப் பேசினார்.
“அபயனுக்குக் கலியாணம் நிச்சயமாயிற்றுதாம் எண்டு அறிஞ்சன். நாள் குறிச்சாச்சா?” இயல்பாய் அவர் விசாரித்தபோது, அப்பா, மகன் இருவருமே மெலிதாய் அதிர்ந்தனர்.
ஒருபுறம் இத்தனைக்குப் பிறகும் இயல்பாய் உரையாடும் அந்த மனிதரின் குணம் அவர்களைத் திணற வைத்தது என்றால், மறுபுறம் அவனுக்கு நிச்சயமான திருமணத்தைப் பற்றி அவர்கள் பெரிதாய் வெளியில் சொல்லாதபோதும் இவருக்கு எப்படித் தெரிந்தது என்று பார்த்தனர்.

