“அது மகள்தான் ஃபேஸ்புக்லையோ எங்கயோ ஃபோட்டோ பாத்தவாவாம் எண்டு சொன்னவா. உண்மையாவே சந்தோசம் தம்பி. எல்லாம் நல்லபடியா நடக்கும். என்ர பக்கத்தில இருந்து என்ன உதவி தேவை எண்டாலும் எதைப் பற்றியும் யோசிக்காமச் சொல்லுங்கோ. கட்டாயம் செய்வன்.” அவன் தோளில் தட்டிச் சொல்லிவிட்டு அவர் விடைபெற்றுக்கொள்ள, நிலைகுலைந்துபோய் நின்றிருந்தான் அபயன்.
“இப்பிடியான ஒரு மனுசனுக்கு அப்பிடியான ஒரு மகன். என்னத்தச் சொல்லுறது? வாய்யா, வந்த வேலையைப் பாப்பம்.” என்றுவிட்டு நடந்தார் குழந்தைவேலு.
“நீங்க போங்கப்பா. இப்ப வாறன்!” என்றவன் எதிர்திசையில் சென்று, அவர் கண்ணுக்குத் தெரியாமல் நின்றுகொண்டான்.
தனக்குத் திருமணம் நிச்சயமானது அன்பினிக்கு இவ்வளவு வேகமாகத் தெரிய வந்திருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை. பெண் வீட்டினர் யாழ்ப்பாணம் என்பதும், இவர்கள் யாரிடமும் சொல்லவில்லை என்பதாலும் அவள் காதுக்குப் போயிருக்காது என்றுதான் எண்ணியிருந்தான்.
அப்படி அவளுக்குத் தெரிய வருவதற்கு முதல் தானே அவளைப் பார்த்துப் பேசி, மனத்தளவிலான அவர்களின் காதல் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள நினைத்திருந்தான். என்ன, முடிவெடுத்ததும் முதல் வேலையாக ஓடிப்போய் அதை முடிக்க அவனால் முடியவில்லை.
அவள் முகத்தைப் பார்த்து, அவள் தவிக்கிற தவிப்பை எல்லாம் எதிர்கொண்டபடி இதைச் சொல்வது அவனுக்கு இலகுவான காரியமே இல்லை. அதற்குத் தன்னை மனத்தளவில் தயார் படுத்த ஆரம்பித்திருந்தான்.
இங்கானால் அவளுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. ஆனாலும் கூட அவனிடம் நியாயம் கேட்டுக்கொண்டு வரவுமில்லை, சண்டை பிடிக்கவுமில்லை. என்ன நினைத்திருப்பாள் அவனைப் பற்றி? முதலில் இதையெல்லாம் எப்படித் தாங்கினாள்?
ஆனால், அவனும் சூழ்நிலைக் கைதியாயிற்றே! தமக்கையின் வாழ்க்கையை அழித்து, நம்பிக்கைத் துரோகம் செய்தவனின் தங்கையைக் காதலுக்காகக் கைப்பிடிக்க அவனும் மனத்தளவில் தயாரில்லை என்பதும் உண்மைதான்.
திருமணம் என்ன திருமணத்தோடே முடிகிற ஒன்றா என்ன? அப்படி அவளை மணமுடித்தால் அவர்களின் வீட்டுக்குச் சென்றுவர வேண்டும், அவர்களையும் உறவாக மதிக்க வேண்டும், நாலு நல்லது கெட்டதற்கு அவர்கள் இவர்கள் வீட்டுக்கு வந்து போக வேண்டும், எல்லாவற்றையும் விட அன்பினியைப் பார்த்துக்கொண்டு அவன் தமக்கையினால் ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழத்தான் முடியுமா?
சந்தோசம் என்கிற ஒன்று அவள் வாழ்க்கையில் இனி இருக்குமா தெரியாது. குறைந்தபட்சமாக நிம்மதியைத் தன்னும் கொடுக்க வேண்டியது அவன் கடமையாயிற்றே!
பாசமா நேசமா என்று வருகையில் அவனால் பாசத்தின் புறம்தான் நிற்க முடிந்தது. அவனளவில் எல்லாம் சரிதான். அவள்? அவள் நிலை?
அவர்கள் வீட்டில் அவசரத் திருமணம் ஒன்றுக்கு அவர்கள் யாருமே தயாராயில்லை. அதையெல்லாம் யோசிக்கும் நிலையில் சுபாங்கி இல்லை. அவளுக்கு அவள் மனத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் நெருப்பைக் கொஞ்சமாவது அணைக்க வேண்டும். அந்த வேகத்தில்தான் அபயனுக்குப் பெண் பார்த்தாள்.
ஆரம்ப நாள்களில் இங்கே முல்லைத்தீவில் இவளோடு இவளின் அலுவலகத்திலேயே வேலை செய்த நண்பி ஒருத்தி, பிறகு அவர்களின் சொந்த இடமான யாழ்ப்பாணத்துக்கே மாற்றல் வாங்கிக்கொண்டு போயிருந்தாள். இங்கிருந்த நாள்களில் இவர்கள் வீட்டுக்கு அவளின் குடும்பமே வந்து போயிருக்கிறது. அதில் நல்ல பழக்கமும் கூட.
முன்னொரு நாளில் அவளே அவளின் தங்கைக்கு அபயனைக் கேட்டபோது, அன்பினியைப் பேசியிருப்பதைச் சொல்லி இவள் மறுத்திருந்தாள். அதுவே இன்று கைகொடுக்க, தனக்கு நடந்ததையெல்லாம் சொல்லியே கேட்டாள்.
அவர்கள் மறுக்கவில்லை. இருவருக்குமான பொருத்தம் வேறு மிக நன்றாகப் பொருந்திப்போனதில் சுபாங்கி அதன் பிறகு தாமதிக்கவில்லை.
“அக்கா, வீடு இருக்கிற நிலையில இப்பிடி ஒரு அவசரக் கலியாணம் வேணுமா? அதுதான் நீங்க சொல்லுறதைத் தாண்டிப் போகமாட்டன் எண்டு சொல்லிட்டேன்தானே. பிறகும் ஏன் இப்பிடி அவசரப்படுறீங்க? முதல் ஒரு கலியாணத்துக்கு நான் ரெடியாவே இல்ல.” என்று சொன்ன அபயனை அவள் விடவில்லை.
“அவளைக் கட்டுறதுக்கு ரெடியாத்தானே இருந்தனி. இப்ப மட்டும் என்ன ரெடியா இல்ல?” என்று திருப்பிக் கேட்டாள்.
“அப்ப இருந்த சூழ்நிலை வேற. இப்ப இருக்கிற சூழ்நிலை வேற அக்கா.”
“அது மாறினதுக்குக் காரணமே நான்தான். நானே சொல்லுறன் கட்டு எண்டு. நீ ஏன் மாட்டன் எண்டு நிக்கிறாய்? இன்னும் உன்னால அவளை மறக்கேலாம இருக்கோ?” என்றதும் அவனுக்குக் கோபம்தான் வந்தது.
“அக்கா, தேவை இல்லாமக் கதைக்காதீங்க. நான் நீங்க காட்டுற பெட்டையைக் கட்ட மாட்டன் எண்டு சொல்லேல்ல. இப்ப கலியாணம் வேண்டாம் எண்டுதான் சொல்லுறன். நீங்க முதல் நோர்மல் ஆகோணும். நானும் தொழிலை ஒழுங்காப் பாக்கேலாம இங்க நிக்கிறன். இந்த நேரம் இதெல்லாம் தேவையா சொல்லுங்க? முதல், அம்மா அப்பாவே இந்தக் கலியாணத்துக்கு ரெடியா இல்ல.”
அது உண்மை என்பதில் பரமேஸ்வரியும் குழந்தைவேலுவும் கொஞ்சம் பொறுக்கும்படிதான் அவளிடம் சொல்லினர். அவள்தான் கேட்பதாய் இல்லை.
“நீ இந்தக் கலியாணத்தைத் தள்ளிப்போடுறதுக்குக் காரணம் சொல்லுறியே தவிர இதெல்லாம் உண்மையே இல்ல. உன்ன நான் நம்ப மாட்டன். அவளை நீ விரும்பினது எனக்குத் தெரியாது எண்டு நினைச்சியா? இல்ல, இப்ப கலியாணம் வேண்டவே வேண்டாம் எண்டு நிண்டவள் நீ எண்டதும் ஓம் எண்டு சொன்னது ஏன் எண்டு தெரியாதா? ஃபோன கூடக் காட்ட மாட்டன் எண்டு சொன்னவன்தானே நீ. இப்ப என்ன தள்ளிப் போடுற மாதிரி தள்ளிப் போட்டுட்டு, பிறகு அவளையே கட்டுற பிளான்ல இருக்கிறியா?” என்று குரலை உயர்த்தினாள் அவள்.
“அவேன்ர வீட்டு ஆக்களிட்டயே இந்தக் கலியாணம் நடக்காது எண்டு நேராச் சொன்ன பிறகும் நீங்க இப்பிடிக் கேட்டா நான் என்ன சொல்லுறது?” உண்மையிலேயே அவளுக்கு என்ன சொல்லி நம்ப வைப்பது என்று தெரியாமல் அவளிடமே கேட்டான் அவன்.
“எனக்கும் விளங்குதடா தம்பி. ஆனாலும் இப்ப இப்ப என்னால ஆரையுமே நம்பேலாம இருக்கு. எல்லாரையுமே சந்தேகமாத்தான் பாக்கிறன். அதான் உன்னையும் நம்புறன் இல்லை போல…” எனும்போதே அவள் உடைய ஆரம்பித்திருந்தாள்.
“அக்கா என்னக்கா இது…” என்று எழுந்து அவன் அவளருகில் வரவும் அவன் கையைப் பற்றிக்கொண்டவளிடம் மிகுந்த தவிப்பு.
“நீ எனக்கு ஏதாவது செய்யோணும் எண்டு நினைச்சா இப்பவே அவளைக் கட்டு. இத நான் எனக்காக மட்டும் சொல்லேல்ல. உண்மையா நான் அவனில கோவமாத்தான் இருக்கிறன். அதுக்காக என்ர தம்பிக்குப் பொருத்தமே இல்லாத ஒருத்தியப் பாக்கவே மாட்டன். என்ர வாழ்க்கை பிழைச்சுப் போனாலும் நீ காலத்துக்கும் நல்லா இருக்கோணும் எண்டுற ஆசை இருக்கு. அதே நேரம் எனக்கு ஆத்திரம் அடங்கோணும், அவன் செய்த துரோகத்தில இருந்து நான் கொஞ்சமாவது வெளில வரோணும் எண்டு நீ நினைச்சா இதுக்கு நீ ஓம் எண்டு சொல்லியே ஆகோணும்.” கண்களில் கண்ணீர் வழிய, அவன் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு அவள் கெஞ்சியபோது அவனால் மறுக்க முடியாமல் போயிற்று.
“சரி, நீங்க ஏற்பாடு செய்ங்க. நான் கட்டுறன்.” என்றுதான் சொல்ல முடிந்தது.
சுபாங்கியும் அதன் பிறகு தாமதிக்கவில்லை. இதோ அடுத்த இரண்டு மாதத்தில் திருமணம் என்கிற இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருந்தாள்.
அவனும் தன்னை அதற்குத் தயார்படுத்த ஆரம்பித்திருந்தான். எல்லாம் சரிதான். தமக்கைக்கு அவன் நல்ல தம்பிதான். நேசித்த பெண்ணுக்கு?

