அத்தியாயம் 25
இரவு பதினொன்றைத் தாண்டியிருந்தது பொழுது. மொத்த வீடும் உறங்கியிருந்தது. இருண்ட வானில் தூரமாய் ஒற்றை நிலா. கைகளைக் கட்டிக்கொண்டு, தென்னை மரத்தில் சாய்ந்து நின்றிருந்த அபயனின் பார்வை, அந்த நிலவில் மட்டுமே!
எந்த ஆரவாரமும் இல்லாமல், அமைதியாய் அது பாட்டுக்கு அது இருந்தது. அதையே பார்த்திருந்த அவனுக்குள்தான் கடலின் பேரிரைச்சல்.
பகல்கள் அவனுக்கான கடமைகளைக் கவனிப்பதிலேயே ஓடிவிடுகின்றன. இரவுகள் அப்படியன்று! அவனுக்கானவை. இன்னுமே சொல்லப்போனால் அவன் மனத்துக்கானவை. அப்போதுதான் அவன் மனம் விழித்துக்கொள்ளும். அவனுக்கு மட்டுமேயான உணர்வுகளும், உள்ளத்தின் தேடல்களும் வெளியே வந்து நிற்கும். அவை அவனை உறங்க விடுவதேயில்லை.
சுபாங்கியின் திருமணம் நிச்சயமானபோது, என்னவோ அவளுக்குத்தான் ஏதோ ஒன்று நடப்பது போன்ற பூரிப்புடன் அவர்களின் வீடு முழுக்க ஒடித் திரிந்த அன்பினி, அவனை ஏதோ ஒரு வகையில் ஈர்த்தாள். கூடவே அவளின் பதுமையான சுபாவம் சீண்டிப் பார்க்கத் தூண்டிற்று.
அவனின் அர்த்தமே இல்லாத மிரட்டல்களுக்கெல்லாம் அவள் மிரண்டபோது, அவனுக்கு மிக மிகப் பிடித்த விளையாட்டு பொம்மையைப் போல் அவள் மாறிப்போனாள். அதுவே வாலிபத்தை எட்டியபோது மனத்துக்கு நெருக்கமானவளாக வந்து நின்றாள்.
அவளை ஏன் பிடிக்கும், எதற்குப் பிடிக்கும் என்று கேட்டால் அவனுக்குத் தெரியாது. பிடிக்கும். எக்காரணத்தைக் கொண்டும் அவளைத் தவற விட்டுவிடவே கூடாது என்கிற அளவுக்குப் பிடிக்கும்.
அதனால்தான் துரத்தி துரத்தி நேசித்தான். அவளையும் நேசிக்க வைத்தான். ஆனால், காலம் சூறாவளியாக மாறிச் சுழன்று அடிக்கையில், நூல் அறுந்த பட்டமாகத் தன் காதல் தொலைந்துபோகும் என்று அவன் எண்ணிப் பார்த்ததே இல்லை.
ஒரு காலத்தில் தன் நேசத்துக்கு எதிராய் நியாயமே இல்லாத மறுப்புகள் வந்தால் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்தியவன்தான் அவன். ஆனால், பாசத்தின் முன்னே தான் எவ்வளவு பெரிய கோழை என்று இப்போதுதான் அறிந்துகொண்டிருக்கிறான்.
என் வேதனைகளைக் கொஞ்சமாவது குறைத்துவிடு என்று கூடப்பிறந்தவள் கையேந்தி மன்றாடுகையில், என்னால் முடியாது என்று சொல்ல முடியவில்லை.
அன்று, அவள் வேதனையில் கொந்தளித்து நிற்கையில் உன் சொல்லைத் தாண்டிப் போகமாட்டேன் என்று வாக்குக் கொடுத்துவிட்டு, அதனாலேயே அவள் காட்டுகிற பெண்ணை மணப்பேன் என்றும் சொல்லிவிட்டு, அதன் பெயரில் அவள் கொண்டு வந்து நிறுத்திய பெண்ணோடு நிச்சயமும் செய்தபிறகு, பெண் வீட்டினரின் விருப்பின் பெயரில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டபோது, அவனால் என்ன செய்துவிட முடியும்?
அப்படி எடுத்த புகைப்படங்களை எல்லாம் அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண் அவனிடம் காட்டியபோது அவனாலேயே பார்க்க முடியவில்லை. அப்படியிருக்க அன்பினியின் நிலை? நிச்சயம் தரையில் விழுந்த மீனாகத் துடித்துப் போயிருப்பாள்.
“தம்பி!” அவன் சிந்தனைக்குள் இடையிட்டார் பரமேஸ்வரி.
“ஏன் அப்பு இந்த நேரத்தில இங்க நிக்கிறாய்?”
என்ன சொல்வது? உறக்கம் வரவில்லை என்று சொன்னால் ஏன் வரவில்லை என்று கேட்பார். ஒன்றுமே சொல்லாமல் நின்றான்.
“ஆசைப்பட்டது எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கிறேல்ல தம்பி. இந்த வீட்டுக்கு வந்து அந்தப் பிள்ளையும் சந்தோசமா இருக்கப் போறேல்ல. எங்களாலையும் எல்லாத்தையும் மறந்து அவாவை நல்லமாதிரி நடத்தேலாது. என்னைக் கேட்டா, உனக்கும் அன்புக்கும் கலியாணம் நடக்கமுதல் இதெல்லாம் நடந்ததுதான் கெட்டதிலையும் நடந்த ஒரேயொரு நல்லது எண்டு சொல்லுவன். அதால மனதைப் போட்டுக் குழப்பமாப் போய்ப் படு.” என்றார் இதமான குரலில்.
தலையை ஆட்டிவிட்டு வீட்டுக்குள் நடந்தான் அவன்.
*****
அன்று, காலினைக் காட்டுவதற்கும், காலில் கட்டியிருந்த கட்டினை மாற்றுவதற்கும் முல்லைத்தீவுக்கு வந்திருந்தான் காந்தன்.
அங்கு வந்ததாலோ என்னவோ மனம் அதிகமாய் மகளைத் தேடிற்று. தன் வேலைகளை முடித்துக்கொண்டு ஆவலோடு நேசரிக்குச் சென்றபோது, அங்கே அன்றைக்கு அவள் வரவில்லை என்றார்கள்.
ஏமாற்றத்தில் மனம் சுருண்டாலும் இவ்வளவு தூரம் வந்துவிட்டு அப்படியே போக மனமில்லை. இன்னுமே அரசவாகனம் கிடைக்காதபடியால் வாடகைக்குத்தான் ஒரு வாகனத்தைப் பிடித்திருந்தான். அதுவே அவனைக் காட்டிக்கொடுக்காது என்கிற தைரியத்தைத் தர, முதலில் அவன் வீட்டுக்குப் போகச் சொன்னான்.
அந்த வீதிக்குள் நுழைகையிலேயே நெஞ்சைப் பிசைந்தது. கவலை என்பதே இல்லாமல், நொடிப் பொழுதையும் அனுபவித்து வாழ்ந்தபடி, இந்த வீதியால் எத்தனையோ தடவைகள் பயணித்திருக்கிறான். இன்று, யாருக்கும் தலை காட்ட முடியாமல் வெட்கி, ஒளித்து மறைத்து வருகிறான்.
அவர்கள் வீடு நெருங்கவும் வேகத்தைக் குறைக்கச் சொன்னான். எப்போதும்போல அன்னையின் கவனிப்பில் துப்பரவாய், சோலையாய்க் காட்சி தந்தது வீடு. யாரையும் வெளியே காணோம்.
அப்பா கடைக்குப் போயிருப்பார். இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பிட வருவார். அம்மா சமையலை முடித்துவிட்டு, தொலைகாட்சி பார்த்தபடி அப்பாவுக்காகக் காத்திருப்பார்.
எப்போதும் வீட்டின் பக்கமாக நிறுத்தப்பட்டிருக்கும் அன்பினியின் ஸ்கூட்டி, வீட்டின் முன்னால் நிற்பதிலேயே அவளும் அங்கேதான் நிற்கிறாள் என்று தெரிந்தது.
எல்லோரையும் பார்க்க ஏங்கினான். ஆனால், வெறுப்பும் அருவருப்புமாய் அவர்கள் அவனைப் பார்க்கும் பார்வையைத் தாங்குமளவுக்குத் தைரியமில்லை.
அடுத்ததாகச் சுபாங்கியின் வீடு. அதை நெருங்க நெருங்க ஒரு பதற்றம் பிடித்துக்கொண்டது. மகள் தெரிந்துவிடமாட்டாளா என்று பார்வையைச் சுழற்றினான்.
அங்கே முற்றத்தில் அபயனோடு ஒரு பெண் நின்றிருந்தாள். அவன் புருவங்கள் சுருங்கின. வாகனத்தின் வேகத்தை நன்றாகக் குறைக்கச் சொல்லிவிட்டு அவர்களை ஊன்றிக் கவனித்தான்.
அவர்கள் சாதாரணமாக நிற்பதுபோல் தெரியவில்லை. அதுவும் அந்தப் பெண் அபயனைப் பார்க்கும் பார்வையும், பேசும் விதமும் என்னவோ என்று சொல்ல, வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் வாகனத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு இறங்கினான்.
*****
வாகனம் ஒன்று வேகத்தை நன்றாகக் குறைத்தபடி, அவர்கள் வீட்டை நெருங்குகையிலேயே அபயனின் கவனம் அங்கே தாவியிருந்தது. அந்த வாகனம் நின்று, அதிலிருந்து இறங்கிய காந்தனைக் கண்டதும் அவன் முகம் கோபத்தில் சிவந்தது.
இரண்டெட்டில் அவனை நெருங்கி, “எங்க வாறாய்? நடவடா வெளில!” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.
ஊன்றுகோலுடன் அதுவும் அன்றுதான் காலுக்குப் புதுக் கட்டுப் போட்டு நின்றவன் தன்னை மறந்து அந்தக் காலை ஊன்றி, வலியில் கத்தி, சமாளிக்க முடியாமல் தடுமாறி விழப்போய், கேட்டை பற்றிச் சமாளித்து நின்றான்.
இதையெல்லாம் பார்த்திருந்த அந்தப் பெண் பயந்துபோனாள்
“அபயன் என்ன செய்றீங்க? அவரே கைல தடியோட நிக்கிறார். அவரைப் போய்த் தள்ளி விடுறீங்க.” என்றபடி ஓடி வந்தாள்.
அவன் அதைக் கேட்கும் நிலையில் இல்லை. “உன்னப் பாக்க பாக்க எனக்கு வெறி ஏறுது. போ இஞ்ச இருந்து!” என்று அவனை அப்போதும் தள்ளிவிட்டான்.
இதற்குள் இவர்களின் சத்தம் கேட்டு மொத்த வீடும் வெளியே ஓடி வந்தது.
குழந்தைவேலுவைக் கண்டதும், “இங்க என்ன நடக்குது மாமா? ஆர் இந்தப் பிள்ளை? இவா ஏன் அபயனோட நிக்கிறா? அவனுக்கும் அன்புக்கும் தானே கலியாணம் பேசினது.” என்றான் காந்தன்.
குழந்தைவேலு கொதித்துப்போனார். செய்வதை எல்லாம் செய்துவிட்டு வெட்கமே இல்லாமல் அவரை மாமா என்கிறான்!
மகனுக்குப் பேசியிருக்கும் பெண்ணும் அவள் தமையனும் வீட்டுக்கு வந்திருக்கும் இந்த நேரத்தில் தன் கோபத்தைக் காட்ட முடியாமல், “எங்கட மகனுக்கு ஆரைக் கட்டி வைக்கிறது எண்டுறது எங்கட விருப்பம். அதைப் பற்றிக் கதைக்க உமக்கு ரைட்ஸ் இல்ல. பேசாம நடவும்.” என்றார் பொறுமையை இழுத்துப்பிடித்த குரலில்.
“அப்பிடிச் சொல்லாதீங்க ப்ளீஸ். நான் செய்த பிழைக்கும் அன்புக்கும் என்ன சம்மந்தம்? அவள் பாவம் மாமா…” என்றவனின் வார்த்தைகள் மகளோடு அங்கே வந்த சுபாங்கியைக் கண்டதும் நின்று போயிற்று.
பெரும் தவிப்புடன் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். அதுவும் அவனைக் கண்டுவிட்டு, “அப்பா அப்பா!” என்று பெருங்குரலில் கதறியபடி அவனிடம் ஓடிவர முயன்ற தளிரைக் கண்டதும் அவன் விழிகள் நிறைந்தன.
“தளிரம்மா…” என்றபடி ஒரு எட்டு எடுத்து வைத்தவனை அபயன் விடவில்லை.
“எங்க வரப் பாக்கிறாய்? போ வெளில. போடா!” என்று அவனைப் பிடித்துத் திரும்பவும் தள்ளிவிட்டான்.

