அத்தியாயம் 26
நிறைய நாள்களாகத் தகப்பனைக் காணாமல், அவன் பாசத்தை உணராமல் தவிக்க ஆரம்பித்திருந்த தளிர், திடீரென்று அவனைப் பார்த்ததும், பார்த்தும் அவனிடம் போக முடியாமல் போன ஏக்கமும் சேர்ந்ததில் அழுது தீர்த்தாள். யாராலும் அவளைச் சமாளிக்கவே முடியவில்லை.
இந்தக் கொஞ்ச நாள்களாகத் தகப்பனுக்குச் சமமாக அவளைத் தாங்கும் அபயனுடன் அதிகமாக ஒட்டிக்கொண்டிருந்தாள். அவன்தான் மார்பிலும் தோளிலும் போட்டுக்கொண்டு நடந்து, அவளை உறங்க வைப்பான்.
இன்றைக்கு அவனாலும் அவளைச் சமாதானம் செய்ய முடியவில்லை. கடைசியில் அழுது அழுது, முகம் உதடுகள் எல்லாம் காய்ந்து, தொண்டை வறண்டு, களைத்துக் கண்ணயர்ந்திருந்தாள். அப்போதுமே சின்ன விம்மலும் விக்கலும் விட்டுவிட்டு வந்தது.
குழந்தைவேலுக்குப் பேத்தியின் நிலை பெரும் கவலையைக் கொடுத்தது என்றால், காந்தன் சொல்லிவிட்டுப் போனவற்றை யோசிக்கக்கூட முடியால் நின்றார்.
மகனுக்கும் அன்பினிக்கும் பேசிய திருமணம் அவர்களுக்குள் மெல்லிய பிணைப்பை உண்டாக்கியிருக்கும், ஆனாலும் பரவாயில்லை, அதிலிருந்து வெளியே வந்து, இருவரும் அவரவருக்கான வாழ்க்கையைப் பார்ப்பதுதான் அவர்கள் இருவரோடும் சேர்த்து இரண்டு குடும்பங்களுக்கும் நல்ல முடிவாக இருக்கும் என்றுதான் இத்தனை நாள்களும் எண்ணியிருந்தார்.
இன்று காந்தன் சொல்லிவிட்டுப் போனதோ வேறாய் இருந்தது. அதுவும் மகனால் அன்புவை மறந்து இன்னொருத்தியோடு வாழ முடியாது என்று அவன் அடித்துச் சொன்னது அவரை உலுக்கியிருந்தது.
அவரின் அந்த அமைதி அபயனைப் பாதிக்க, “அப்பா, அவன் எல்லாம் ஒரு ஆள் எண்டு…” என்று பேச ஆரம்பித்தவனைப் பட்டென்று இடைமறித்து, “அவன் சொன்ன மாதிரி அன்புவோட உனக்குப் பழக்கம் இருந்ததா?” என்றார் அவன் முகத்தையே பார்த்து.
அவன் அமைதியாகிவிடவும், “எனக்குப் பதில் வரோணும் தம்பி!” என்றார் பிடிவாதமாக.
“அதத்தான் அவளே சொல்லிட்டாளே.”
“நான் கேட்டது உன்னட்ட!”
அதற்குமேல் முடியாமல், “இருந்தது.” என்றுவிட்டுப் பட்டென்று எழுந்து அங்கிருந்து வெளியேறினான்.
சுபாங்கியால் இதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவர்களுக்குள் நிச்சயமாய்ப் பழக்கம் உண்டு என்று அவளும் உறுதியாய் நம்பினாள்தான். ஆனாலும் அவள் எத்தனையோ முறை விடுத்து விடுத்துக் கேட்டும் அவன் பிடி கொடுத்ததில்லை. இன்றைக்கு ஒத்துக்கொண்டபோதோ அவனும் தன்னை ஏமாற்றிவிட்டதுபோல் உணர்ந்தாள்.
குழந்தைவேலுவும் அமர்ந்திருந்த இருக்கையிலேயே தளர்ந்துபோனார். திருமணம் பேசி, நிச்சயமாகி, நிற்பது என்பதெல்லாம் வேறு, இது வேறாயிற்றே. இதுவும் ஒரு வகையில் துரோகம்தானே? நம்பிய பெண்ணை ஏமாற்றுவதாகாதா?
அவளும் தங்களுக்குள் ஒன்றுமில்லை என்று எல்லோர் முன்னும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள். தமையன் செய்த தப்புக்குத் தண்டனை என்று எடுத்துக்கொண்டாளோ!
அவருக்கு மனமே சரியில்லாமல் போயிற்று. தன் பிள்ளைகள் இருவரின் வாழ்க்கையும் ஏன் இப்படிப் பெரும் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டு நிற்கிறது என்று தெரியவே இல்லை.
அங்கே திருநாவுக்கரசின் நிலையும் அதேதான். அன்பினியிடமிருந்து எல்லாவற்றையும் கேட்டு அறிந்துகொண்டவருக்கு உள்ளத்தில் பெரும் வலி.
என்னதான் அவன் இனி எனக்கு மகனுமில்லை, நான் அவனுக்குத் தகப்பனும் இல்லை என்று முடிவு எடுத்திருந்தாலுமே, இப்படித் தன் வாழ்க்கையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டானே என்கிற கவலை அவருக்கு இல்லாமல் இல்லை.
கூடவே, என் மகனை நம்பி மணந்த சுபாவுக்கு என்ன செய்யப் போகிறேன், சொத்தைக் கொடுத்தால் மட்டும் போதுமா, தங்க விக்கிரகம் போலிருக்கும் பேத்தியின் வாழ்க்கை என்னாகும் என்று அதுவேறு ஓராயிரம் யோசனைகளும் கவலைகளும்.
இப்போது மகளும் மனத்தைப் பறிகொடுத்துவிட்டுச் சூழ்நிலைக் கைதியாக நிற்கிறாள் என்று தெரிந்தபோது உடைந்துபோனார்.
அன்பினியின் நிலையும் மிக மோசமாய்த்தான் இருந்தது. கழுத்தில் இருந்த செயினை அறுத்து அவன் வீட்டு வாசலிலேயே போட்டுவிட்டு வந்துவிட்டாள். நெஞ்சில் நிறைந்து கிடக்கும் அவன் நினைவுகளை என்ன செய்வது? அவனோடு பழகிய நாள்களை? அவன் தந்த அழகான தருணங்களை?
அவளால் அவளின் தந்தையும் கலங்கி நிற்கிறார். “சொறி அப்பா!” என்றாள் கண்ணீருடன்.
அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவள் தலையை வருடிக் கொடுத்தவர், “இப்ப அப்பா என்னம்மா செய்ய?” என்றார் மிகுந்த இயலாமையுடன்.
அவள் விழிகள் சட்டென்று நிறைந்து போயின. அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “ஒரு காலம் ஆசைப்பட்டது உண்மைதான் அப்பா. ஆனா, அண்ணா இப்பிடிச் செய்தபிறகு ஏதோ ஒரு விதத்தில இதுக்கெல்லாம் நான் தயாராகிட்டன். அதால பெரிய பாதிப்பெல்லாம் இல்ல. நீங்களும் ஒண்டும் செய்ய வேண்டாம். என்னை நினைச்சுக் கவலைப்படவும் வேண்டாம். இன்னும் ரெண்டு மாதம். படிப்பை முடிச்சுப்போட்டு இங்கயே வந்திடுவன் அப்பா.” என்றாள், அவர் மனத்தை ஆற்றும் குரலில்.
தனக்காய்ப் பேசும் மகளைப் பார்த்தவருக்கு அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முடியா நிலையில் நிற்கிறோமே என்கிற எண்ணம் நெஞ்சை அறுத்தது.
“அதுக்கிடைல அபயனுக்குக் கலியாணம் முடிஞ்சிடுமேமா.”
சுருக்கென்று வலித்ததைக் காட்டிக்கொள்ளாமல், “அவருக்கு எப்ப கலியாணம் நடந்தாத்தான் எங்களுக்கு என்னப்பா?” என்று திருப்பிக் கேட்டாள்.
அவர் பதில் சொல்லாமல் அவளையே பார்த்தார்.
“அண்டைக்கு நீங்க சொன்னதுதான் அப்பா. எப்பிடியும் இது சரி வராது. அதால இனி நாங்க அவரைப் பற்றிக் கதைக்க வேண்டாமே!”
அவருக்கும் அதுவே தோன்றியதில், “வேற கலியாணத்துக்குப் பாக்கவா?” என்றார்.
உண்மையில் இப்போது அவருக்கு அதில் விருப்பமே இல்லை. மகன்தான் இனி இல்லை என்றாயிற்று. இன்னும் கொஞ்சக் காலத்துக்கு மகள் தங்களுடனேயே இருந்தால் ஆறுதலாக இருக்கும் என்றுதான் எண்ணினார்.
கூடவே, அவர்களை அறிந்த தெரிந்த மனிதர்கள், அவர்களின் இனசனமிடையே காந்தனின் கூடாத நடத்தை பேசுபொருளாக இருக்கும் இந்த நேரத்தில் அவளுக்கான கலியாணப் பேச்சை ஆரம்பிப்பது சரியான ஒன்றாகத் தோன்றவும் இல்லை. ஆனாலும் மகளின் மனத்தை அறிய விரும்பினார்.
அவளும், “இல்லை அப்பா. இப்போதைக்கு ஒண்டும் வேண்டாம். முதல் படிப்பை முடிச்சுக்கொண்டு வாறன். எனக்குக் கொஞ்ச நாளைக்கு உங்களோட இருக்கோணும். முதல் சொன்ன மாதிரி வேலைக்குப் போகோணும். அதுக்குப் பிறகு பாப்பமே!” என்றாள் கெஞ்சலாக.
சரி என்று தலையை ஆட்டியவர், “அப்பாவில கோவம் இல்லையே.” என்றார் மெல்ல.
அவள் கண்ணீருடன் சிரித்தாள். “என்ர அப்பாவில எனக்கு எப்பவும் கோவம் இல்ல. இவர் என்ர அப்பா எண்டு பெருமைதான்.” என்று அவரின் தோளில் சாய்ந்தவளுக்கு எத்தனை பெரிய துன்பத்தையும் அந்தத் திடகாத்திரமான தோளின் உதவியுடன் கடக்கலாம் என்றே தோன்றிற்று.
*****
இங்கே காந்தனுக்குத் தந்தை அறைந்ததோ, அவர் கோபமோ வலிக்கவே இல்லை. செய்த தப்புக்கான தண்டனையைச் சின்னதாகவேனும் அவரிடமிருந்து வாங்கிக்கொண்டதில் கொஞ்சம் ஆறுதலாய்த்தான் உணர்ந்தான்.
கூடவே இரண்டு மாதங்களுக்குப் பிறகு பார்த்த மனைவியும் மகளும் கண்ணுக்குள்ளேயே நின்றனர்.
அப்போதெல்லாம் அவள் மீது ஓராயிரம் குறைகளைச் சுமத்திக்கொண்டிருந்த மனது, எப்படியான ஒரு வாழ்க்கையை நீயே அழித்துக்கொண்டாய் என்று இன்று அவனைச் சாடியது. அதுவும் அவனிடம் ஓடி வருவதற்ககாகத் துடித்த மகளை மறக்க முடியாமல் அல்லாடினான்.
அவன் எவ்வளவு பெரிய தப்பை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால், இனியும் அவளைப் பாராமல் இருக்க முடியாது என்று மனம் சொல்லிவிட, இயல்பாய் நிலானியின் நினைவும் வந்தது.
அவளிடமிருந்து வராமல் நின்றுவிட்ட அழைப்புகள் அவளுக்கும் விடயம் தெரிந்துவிட்டது என்று சொல்லிற்று.
இத்தனை நாள்களும் அவளையும் எதிர்கொள்ளப் பயந்து வீட்டுக்குள் அடைந்து கிடந்தவன் இன்றைக்குத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ஆட்டோவில் அவளின் வீட்டுக்குச் சென்றான்.
ஐந்து மாத வயிறு இலேசாக மேடிட ஆரம்பித்திருக்க, மொத்தமாய் உருக்குலைந்து, எலும்புக்கூடாகி, தன் பொலிவு கெட்டு, தனியாக இருந்தவளைக் கண்டு கொஞ்சம் ஆடித்தான் போனான்.
விறாந்தையின் தரையில் அமர்ந்திருந்த நிலானி அவன் வந்தபோதும் சரி, அவளிடம் பேச்சுக் கொடுத்தபோதும் சரி, வீடு முழுக்க சிவகாமி அம்மாவையும் நிசாந்தனையும் தேடிப் பார்த்துவிட்டு வந்து அவர்கள் எங்கே என்று கேட்டபோதும் சரி வாயைத் திறக்கவே இல்லை.
கடைசியில், “இப்ப நீ வாயைத் திறக்கேல்லையோ பக்கத்து வீட்டில போய்க் கேப்பன்!” என்ற அவனின் அழுத்தமான பேச்சில்தான் திரும்பி அவனைப் பார்த்தாள்.
“கேடுகெட்டுப்போய் நிக்கிறதுக்கு அம்மா என்ன என்னை மாதிரியா? ஒழுக்கம் கெட்ட மகளோட இருக்க விருப்பம் இல்லாம விட்டுட்டுப் போயிற்றா.” என்றாள் பார்வையை அவனிடமிருந்து கொஞ்சமும் அசைக்காமல்.
காந்தன் அதிர்ந்துபோனான். “நிலானி… அது… நான்” அவள் முகம் பார்க்க முடியாமல் திணறினான்.
அவளுக்கு அவன் சொல்லப்போகும் எந்த விளக்கமும் தேவையாகவே இல்லை. “இப்ப என்னத்துக்கு வந்தனீங்க?” என்று இடையிட்டாள்.
என்ன சொல்ல என்று தெரியாது பார்த்தான் அவன்.
“தயவு செய்து போயிடுங்க. இனிமேல் இஞ்ச(இங்க) வராதீங்க. இனியாவது அம்மான்ர மகளா இருக்க ஆசைப்படுறன்.” என்றாள் இப்போது முகத்தைத் திருப்பிக்கொண்டு.
“நிலானி, நான் செய்தது பிழைதான். எனக்குத் தெரியும். ஆனா…” என்றவனை இப்போதும் அவள் பேச விடவில்லை.
“எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம். தயவுசெய்து போங்க!” என்றாள் முடிவாய்.
அவன் அவளையே பார்த்து நின்றான். அவள் அசையவே இல்லை. நேரம்தான் போனதே தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை.
ஒரு பெருமூச்சுடன் பேர்சிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.
“சிலவுக்கு வச்சுக்கொள்.”
அவள் முகத்தில் சீற்றம் பொங்கிற்று. “என்ன, நீங்க எனக்குத் தந்த பிள்ளைக்குக் காசா? இல்ல, நான் உங்களோட இருந்ததுக்குக் காசா?” என்றாள் அடக்கப்பட்ட ஆவேசத்துடன்.
“நிலானி! என்ன கதைக்கிறாய்?” கண்ணை மூடிக்கொண்டு அவனை நம்பிய பெண் அவள். அவளை அவளே தரக்குறைவாய்ப் பேசவும் சகிக்க முடியவில்லை.
“எனக்கு உங்களோட கதைக்கவே விருப்பம் இல்ல. என்னைப் பாக்க எனக்குத் தெரியும். இவ்வளவு காலமும் நீங்களா பாத்தீங்க? நடவுங்க முதல்!” கோபத்தில் குரல் உயர அவனை விரட்டி அடித்தாள்.

