கேட்பார் இன்றிக் காதல் – 27

அத்தியாயம் 27

அபயனுக்குப் பேசிய பெண்ணுக்கு அன்று முல்லைத்தீவில் செமினார் ஒன்று இருந்தது. அதை அவள் தமக்கை சுபாங்கியிடம் பகிர்ந்துகொண்டிருந்தாள். சுபாங்கிதான் செமினார் முடிந்ததும் வீட்டுக்கு வந்துவிட்டுப் போகச் சொல்லியிருந்தாள். அவள் வீட்டில் அவளைத் தனியாக அனுப்ப விருப்பமில்லாமல் சகோதரனோடு அனுப்பி வைத்திருந்தார்கள்.

அன்று நடந்த பிரச்சனையில் அன்பினியிடம் நேராகக் கேட்டு, அவளும் நேராகவே அவர்களுக்குள் எந்த உறவும் இல்லை என்று சொன்னபோதும், அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

வாய்மொழி வேறு, உடல்மொழி வேறாயிற்றே! அன்பினியின் கலங்கிச் சிவந்திருந்த விழிகளும், நடுங்கிய குரலும், மொத்தமாய் ஓய்ந்து நின்ற தோற்றமும், அவள் அபயனைப் பார்த்த பார்வையும் அவர்களுக்கிடையில் இருந்தது சாதாரணமாகப் பேசப்பட்டு, முறிந்துபோன திருமண உறவு இல்லை என்று அடித்துச் சொல்லியது.

ஆரம்பத்தில் அபயனும் அன்பினியும் ஒரே பல்கலை என்றது சாதாரணமாகத் தெரிந்தது, இன்று யோசிக்க வேண்டிய முக்கியமான ஒன்றாய் வந்து நின்றது.

“அக்கா, எனக்கு என்னவோ இவ்வளவு பிரச்சினைகள் இருக்கிற குடும்பத்துக்க எங்கட தங்கச்சியக் குடுக்கத்தான் வேணுமா எண்டு இருக்கு. நீங்க பாக்கேல்லை, அண்டைக்கு எனக்கே வெக்கமாப் போச்சு. அந்தளவுக்கு ரோட்டில நிண்டு அடிபட்டவே. முதல் அபயனுக்கும் அன்பினிக்கும் பழக்கம் இருந்ததா, அது எந்த அளவில இருந்தது எண்டு சுபா அக்காட்ட நேராக் கேட்டு கிளியர் பண்ணுங்க. நான் கம்பஸ்ல விசாரிக்கப் போறன்.” என்று தமக்கையிடம் சொல்லிவிட்டுப் போனவனுக்கு, உண்மையை அறிந்துகொள்ள ஒரு வாரமே தேவையாக இருக்கவில்லை.

முதல் நாள் அன்பினியின் நெருங்கிய தோழி யார் என்று கவனித்து, அடுத்த நாள் நிர்மலாவைத் தனியாகப் பிடித்து, “அபயன் அனுப்பி விட்டவர்.” என்று ஒரேயொரு வாக்கியம்தான் சொன்னான்.

“என்னவாம் அவருக்கு? சிவனே எண்டு இருந்தவளுக்குப் பின்னாலயும் முன்னாலயும் சுத்தி விரும்ப வச்சுப்போட்டு ஏமாத்தின கள்ளன்! இப்ப என்னத்துக்கு உங்களை அனுப்பிவிட்டவர்? இனியும் அவரின்ர பெயரைச் சொல்லிக்கொண்டு வந்து நிண்டீங்க, கல்லாலேயே மண்டைய அடிச்சு உடைப்பன். என்னை என்ன அவளை மாதிரி, ஆர் என்ன செய்தாலும் அமைதியாப் போறவள் எண்டு நினைச்சீங்களா?” என்று சீறிவிட்டுப் போனாள் நிர்மலா.

இதை அறிந்த அவன் தமக்கைக்கு மிகுந்த ஆத்திரம். அன்று அவள் நேரடியாகக் கேட்டும் அப்படி எதுவுமில்லை என்று சொல்லியிருந்தாள் சுபாங்கி.

அந்தக் கோபத்தில் உடனேயே அவளுக்கு அழைத்து, “உன்னட்ட நான் இத எதிர்பாக்கேல்ல சுபா. எங்கட வீட்டில வெளில பெருசா விசாரிக்காம விட்டதே உங்க எல்லாரையும் தெரியும், நீங்க நல்ல மனுசர் எண்டு நம்பினதாலதான். அதுக்கு இப்பிடித்தான் ஏமாத்துவியா? அண்டைக்கு நான் கேட்ட நேரமாவது நீ எல்லாத்தையும் சொல்லி இருக்கோணுமா இல்லையா சொல்லு? உன்ர மனுசன் உனக்குச் செய்ததுக்கும் நீங்க எல்லாருமாச் சேர்ந்து எங்களுக்குச் செய்ய நினைச்சதுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல சுபா. வீட்டில எல்லாரும் எனக்கு நல்ல கிழி(திட்டு). இப்பிடி ஒருத்தனுக்கு எங்கட வீட்டுப் பிள்ளையை ஏன் குடுக்கோணும் எண்டு கேக்கினம். இனி ஒண்டும் செய்யேலாது. குறை நினைக்காத, இனி இந்தக் கலியாணம் நடக்காது.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள் அவள்.

செய்வதறியாது அமர்ந்திருந்தாள் சுபாங்கி. நடந்த எல்லாவற்றையும் சொல்லிவிடு என்று சொன்ன அபயனின் வாயைக் கூட அடைத்தது அவள்தான். கடைசியில் அதுவே திருமணம் நிற்பதற்குக் காரணமாய் வந்து நின்றிருந்தது.

திரும்புகிற பக்கமெல்லாம் தோல்வி. அவள் நம்பிய எல்லோரும் ஏதோ ஒரு வகையில் அவளைக் கைவிடுவது போலிருக்க, நெஞ்சில் ஒருவித விரக்தி சூழ்ந்தது.

இரண்டாம் முறையாகவும் மகனுக்குப் பேசிய திருமணம் குலைந்துபோனதில் குழந்தைவேலு, பரமேஸ்வரி தம்பதியருக்கு மிகுந்த மனவருத்தம். ஆனாலும் இது நல்லதற்கே என்று எண்ணினர். என்னவோ அவசரப்பட்டு நடக்கும் எதுவும் பிடிக்கவில்லை. எல்லாவற்றையும் கொஞ்ச நாள்களுக்கு ஆறப்போட விரும்பினர்.

அபயன் அப்போதுதான் நிம்மதியாக மூச்சுவிட்டான். அதற்குள், “அவே வேண்டாம் எண்டு சொன்னா என்ன? உனக்கு என்னடா குறை? உனக்கு ஏற்ற மாதிரி நல்ல ஒரு பெட்டையாக் கொண்டு வரவேண்டியது என்ர வேலை. நீ யோசிக்காத.” என்று சுபாங்கி சொன்னபோது, “தயவு செய்து என்னைக் கொஞ்சம் சும்மா விடுங்க அக்கா!” என்றுவிட்டான் குரலை உயர்த்தி.

அவனாலும் முடியவில்லை. அவனுக்குப் பேசிய அந்தப் பெண் அழைத்து, தமையன் விசாரித்து அறிந்ததை எல்லாம் சொல்லி, “நீங்களும் எல்லாத்தையும் மறச்சிட்டீங்க என்ன?” என்று கேட்டு அழுதபோது, குற்றவாளியாக நின்றவன் அவனாயிற்றே.

அன்பினியோடான அவனுடைய வாழ்க்கைக்கு எதிர்காலம் இல்லை என்பது அவன் அறிந்ததுதான். ஆனாலும் அன்று அவள் அவனையே பார்த்து, அவர்களின் உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுப் போனதிலிருந்து வெளியே வரமுடியாமல் நின்றான்.

அந்தக் கண்கள், அவை பார்த்த பார்வை, கேட்ட கேள்வி, அதிலிருந்து வழிந்த கண்ணீர், அவள் உதடுகள் சிந்திய வெற்றுப் புன்னகை எல்லாம் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்க ஆரம்பித்திருந்தன.

கண்களை மூடவே முடியவில்லை. மூடினால் கண்களுக்குள் வந்து நின்று வெற்றுப் புன்னகை சிந்தினாள் அன்பினி.

பரமேஸ்வரி அம்மாவும் அவனைக் கவனிக்காமல் இல்லை. அவருக்கு ‘தளிரும் என்ர பிள்ளைதான், அவளையும் நீ வெறுப்பியா?’ என்று காந்தன் கேட்டது உறுத்திக்கொண்டே இருந்தது.

அன்று, காந்தனைப் பற்றித் தெரிய வர முதல் மகனுக்கும் அன்பினிக்கும் திருமணம் நடக்காதது நல்லது என்று சொன்ன அவரே இன்று, அந்தத் திருமணம் நடந்த பிறகு இதெல்லாம் தெரிய வந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்று யோசிக்க ஆரம்பித்திருந்தார்.

அதைவிட இப்படி இரவுகளில் உறக்கமில்லாமல் அல்லாடும் மகன் அவரை இன்னுமே வருத்தினான். அன்று அவரும் இருக்கையில்தானே அவளைப் பற்றிச் சுபாவிடம் ஒரு வார்த்தைகூட விட்டுக் கொடுக்காமல் திருமணப் பேச்சை ஆரம்பித்து வைத்தான். அந்தளவில் விரும்பியவன் இன்று தமக்கைக்காக இன்னொரு திருமணத்துக்குத் தயாராகிறான்.

ஆனால், ஒருத்தியை மனத்தில் வைத்துக்கொண்டு இன்னொருத்தியோடு வாழ முடியுமா என்ன? இல்லை, காந்தன் சொன்னது போலவே இன்னொரு திருமணத்தில் நுழைந்த பிறகு, அவளை இழந்துவிட்டேனே என்று நினைத்துவிட்டான் என்றால் அவனுடைய மிகுதி வாழ்க்கை நரகமாகிவிடாதா?

இந்த யோசனைகளின் கனத்தைத் தாங்க முடியாமல், “பேசாமத் தம்பிக்கு அன்புவையே கட்டிவைக்கிறதுதான் நல்லமோ எண்டு இருக்கப்பா.” என்றார் கணவரிடம்.

குழந்தைவேலு அதிர்வுடன் பார்க்க, “பயமா இருக்கப்பா. என்ன பாவம் செய்து இவ்வளவு அனுபவிக்கிறமோ தெரியா. இதில ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர பாவத்தையும் சம்பாதிக்கிறதா எண்டு இருக்கு.” என்றார் கவலையோடு.

குழந்தைவேலுக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும் மறுத்தும் எதுவும் பேசவில்லை. கொஞ்ச நாள்களுக்கு எதுவுமே வேண்டாம் என்றுதான் இப்போதும் நினைத்தார்.

ஆனால், பரமேஸ்வரியால் மகன் மனத்தினுள் என்ன ஓடுகிறது என்று அறியாமல் இருக்க முடியவில்லை.

அன்று சுபாங்கி வேலைக்குச் சென்றிருந்தாள். அப்பாவும் மகனுமாகப் பகல் உணவை முடித்துக்கொண்டு புறப்பட ஆயத்தமாகவும், “தம்பி, கொஞ்சம் நில்லு!” என்றார்.

அவன் பார்க்க, “அன்புவை மறந்து உன்னால வாழ ஏலுமா?” என்றார் எந்த மேல்பூச்சும் இல்லாமல்.

“அம்மா.”

“சொல்லு தம்பி!”

“அதெல்லாம் முடிஞ்ச கதை. திரும்ப என்னத்துக்கு அதைப் பற்றிக் கதைக்கிறீங்க?”

“முடிஞ்ச விசயம் எண்டுறதாலதான் இரவில படுக்கேலாம வெளில போய்க் குந்திக்கொண்டு இருக்கிறியோ?”

“அது… சும்மா… ஏதோ யோசின.”

“சரி இருக்கட்டும். நான் கேட்ட கேள்விக்குப் பதிலச் சொல்லு.”

“ரெடியாகாமையா வேற கலியாணத்துக்கு ஓம் எண்டு சொன்னனான்?” ஒருவித விரக்தியோடு அவன் கேட்டு முடிக்க முதலே அவன் கையை எடுத்துத் தன் தலையில் வைத்திருந்தார் அவர்.

“அம்மா சத்தியமா அவளை மறந்திட்டு வாழுவன் எண்டு சொல்லு!”

திடுக்கிட்டுப்போனவன் அவசரமாய்த் தன் கையை இழுத்துக்கொள்ள முயன்றான்.

அவர் விடுவதாக இல்லை. “சொல்லு தம்பி!” என்று நின்றார்.

அவன் பதில் சொல்லவில்லை. அதற்கு மாறாக பொக்கெட்டில் இருந்த அவள் செயினை எடுத்து, அவர் கையில் திணித்துவிட்டுப் போனான்.

error: Alert: Content selection is disabled!!