அத்தியாயம் 29
தன் அறைக்குள் வந்து முடங்கியிருந்தாள் அன்பினி. எவ்வளவு முயன்றும் முடியாமல், கைகளைக் கட்டிக்கொண்டு, பைக்கில் சாய்ந்து அமர்ந்திருந்தபடி, அவளையே பார்த்திருந்தவன்தான் கண்களுக்குள் நின்றான்.
இப்போது கூட எந்த விளக்கமும் தர அவன் முயலவே இல்லை. இனித் தந்து எதுவும் மாறிவிடப்போவதில்லைதான். என்றாலும் நடந்தவற்றுக்கான காரணங்களை அவளிடம் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் அவனுக்கு இல்லை என்று, அவன் திரும்ப திரும்ப உணர்த்துவதுதான் வலித்தது. அவ்வளவுதானா அவள் அவனுக்கு?
அவ்வளவுதானாம்! அவன் எத்தனையோ முறை அவளிடம் சொல்லாமல் சொல்லிவிட்டான். அவள்தான் இன்னும் அதே கேள்வியைக் கேட்டுக்கொண்டு நிற்கிறாள்.
அலைகள் அமைதியைத் தேடுவதுபோல்தான் இனி அவள் வாழ்க்கை போலும்.
பெரிய சலசலப்புகள் எதுவுமில்லாது நாள்கள் மீண்டும் கரைய ஆரம்பித்திருந்தன. அபயன் இப்போதெல்லாம் இரண்டு மூன்று நாள்களுக்கென்று கொழும்பு சென்றுவர ஆரம்பித்திருந்தான்.
தந்தையின் நினைவோ, அவன் பற்றிய பேச்சோ வந்துவிட்டால் இப்போதும் தளிரைச் சமாளிப்பது பெரும் பாடாக இருந்தாலுமே, தந்தை இல்லாத வாழ்க்கையை அவளும் மெல்ல மெல்லப் பழக ஆரம்பித்தாள்.
அப்படி, அவள் அந்த வாழ்க்கைக்குப் பழகுவதும் சுபாவின் நெஞ்சை அறுத்தது. ஆனால், வேறு வழிதான் என்ன?
இங்கே காந்தன் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அங்கும் கூப்பிட்டு வைத்து விசாரித்தார்கள். முகம் கறுக்க நடந்தவற்றை ஒப்புக்கொண்டான். வேலைக்கு எந்த ஆபத்தும் வராதபோதும் விரைவில் மாற்றல் வரும் என்று அவனாலேயே கணிக்க முடிந்தது.
அடிபட்ட காலை நிலத்தில் ஊன்றவே முடியாது என்றிருந்த நிலை மாறி, இப்போதெல்லாம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கத் தொடங்கியிருந்தான்.
இதற்குள் நிலானி பெறு மாதத்தை எட்டியிருந்தாள். அதனாலேயே அடிக்கடி அவள் வீட்டுக்குப் போய்வந்தான். அவள் அவனை ஏறெடுத்துப் பார்ப்பதே இல்லை. வராதே என்று எவ்வளவு சொல்லியும் இவன் போவதை நிறுத்தவில்லை.
அவளின் அன்னை இருந்திருந்தாலாவது அவள் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தள்ளி நின்றிருப்பானாக இருக்கும். நிறைமாத வயிற்றுடன் தனியாக இருப்பவளை அப்படி விட முடியவில்லை.
இன்னுமே அவள் வேலைக்குப் போய்க்கொண்டு இருப்பது உறுத்தியது. என்ன சொல்லியும் கேட்கவில்லை. ஒருமுறை வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வைத்தான். இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் சென்றபோது, அவை அவன் வைத்த இடத்திலேயே இருந்தன.
பழங்கள் பழுதாகி, பூஞ்சணம் பிடித்திருந்தபோதும் அவள் அவற்றை எடுத்து எறியக்கூட இல்லை. இனிக் கொண்டுவராதே என்பதை அவ்வளவு தெளிவாய்ச் சொல்லி இருந்தாள்.
*****
அன்று மாலை கொழும்பிலிருந்து வீடு திரும்பியிருந்தான் அபயன். அதனாலோ என்னவோ அவனைப் படுக்க விடவில்லை தளிர். அவனுடனேயே சுற்றிக்கொண்டிருந்தாள்.
கடைசியில் அவள் மடியில் தலையணையைப் போட்டு, அதில் தலை வைத்து விறாந்தையின் தரையில் படுத்திருந்தான் அவன். அவளோ அவன் முடிகளை எல்லாம் ஒன்றாக்கி, பாண்ட் போட்டுவிட முயன்றுகொண்டிருந்தாள்.
“கடைசில மாமான்ர மண்டைல இருக்கிற முடி எல்லாம் பிள்ளையின்ர கைல இருக்கப் போகுது.” மெல்லிய சிரிப்புடன் சொன்னார் பரமேஸ்வரி.
சுபாவுக்கும் அவள் அபயனின் தலையைப் போட்டுப் படுத்தும் பாட்டைப் பார்க்கையில் முறுவல் எழுந்தது. “மாமாவைக் கொஞ்ச நேரம் படுக்க விடம்மா.” என்று அவள் சொன்னதையும் சின்னவள் காதில் விழுத்துவதாய் இல்லை.
அப்போதுதான் கடையைச் சாற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார் குழந்தைவேலு. அப்போதிலிருந்து அவர் பார்வை அடிக்கடி அபயனில் யோசனையோடு படிந்து மீண்டது.
இரவு உணவின்போதுதான் அபயன் அதைக் கவனித்தான். “என்னப்பா, ஏதும் சொல்லோணுமா?” என்றான் ஒன்றும் விளங்காமல்.
இல்லை என்பதுபோல் தலையை அசைத்தவர், “அன்புக்கு ஒரு சம்மந்தம் வந்திருக்கு.” என்றார் அவனையே பார்த்தபடி.
உணவை வாயருகே கொண்டு போனவனின் கை அப்படியே நின்றுபோயிற்று. ஆனாலும் சமாளித்து, “இதையேன் என்னட்டச் சொல்லுறீங்க?” என்று கேட்டுவிட்டு உணவை வாயிலிட்டான்.
இப்போது அவர்தான் இதற்கு என்ன சொல்வது என்று தெரியாது அவனைப் பார்த்தார்.
அன்பினி படித்த பாடசாலையில்தான் அந்தப் பெடியனும் படித்திருக்கிறான். மூன்று வருடங்கள் பெரியவனாம். முன்னரே அவளைப் பிடிக்குமாம். இப்போது எங்கோ அவளைப் பார்த்து, ஆசைப்பட்டு வீட்டில் சொல்லியிருக்கிறான். அவள் இவரின் மருமகனின் தங்கை என்று அறிந்து இவரிடம் வந்து விசாரித்திருந்தனர்.
குழந்தைவேலுக்கு நடந்தவற்றைச் சொல்வதா, இல்லையா என்கிற குழப்பம். அவர் சொல்லி, அதனால் ஒரு பெண் பிள்ளைக்கு அமையும் வாழ்க்கை அமையாமல் போனால்?
எதைப் பற்றியும் வாய் திறவாமல் இரண்டு தினங்களில் பதில் சொல்வதாகச் சொல்லிவிட்டு வந்திருந்தார். அதற்கு முக்கிய காரணம் அபயன்.
அன்புவை அவனுக்கு எடுப்பதில் அவருக்கு மருந்துக்கும் உடன்பாடு இல்லாதபோதிலும் அவன் மனத்தையும் அலட்சியப்படுத்த முடியவில்லை. மனம் குழம்பி நின்றது. அவனாவது ஏதாவது சொல்வான் என்றுதான் அவனிடம் சொன்னார். அவனானால் இப்படிக் கேட்கிறான்.
பரமேஸ்வரிக்கு மகன்மீது கோபம்தான் வந்தது. “அப்பா ஏன் கேக்கிறார் எண்டு யோசிச்சுப் பதில் சொல்லு தம்பி.” என்று அதட்டினார்.
அதுவரை நேரமும் நடப்பதைக் கவனித்தபடி தானும் சாப்பிட்டுக்கொண்டிருந்த சுபாங்கி பட்டென்று எழுந்துகொண்டாள். “நீ என்னைப் பற்றி யோசிக்காத தம்பி. நான் இப்ப ஓகே. என்ன எண்டாலும் உன்ர விருப்பப்படி செய். உன்ர சந்தோசத்துக்கு எதிரா நான் நிக்க மாட்டன்.” என்றுவிட்டுத் தட்டுடன் சமையலறைக்கு நடந்தாள்.
இப்போது பெற்றவர்களின் பார்வை அவனில்.
“இல்லை அப்பா. முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். நீங்க அவேயே மேல கதைக்கச் சொல்லிச் சொல்லுங்கோ. ஆனா நடந்த எல்லாத்தையும் சொல்லுங்க. மறச்சு எனக்கு நடந்த மாதிரி எதுவும் நடக்க வேண்டாம்.” என்றுவிட்டு எழுந்துகொண்டான் அவன்.
அறைக்கு வந்தவனுக்கு அவன் மனநிலை என்ன என்று அவனாலேயே கணிக்க முடியவில்லை. அவனாக விலகியபோது கூட இப்படி வலிக்கவில்லை. அதற்கு அந்த நேரம் அவன் இருந்த கொதிப்பான மனநிலை காரணமாக இருக்கலாம்.
ஆனால் இன்று, அத்தனையும் சமன் பட்டு, நிதானத்துக்கு வந்துவிட்டது காரணமா, இல்லை அவள் மொத்தமாய்த் தன்னை விட்டுப் போகப்போகிறாள் என்பது காரணமா தெரியவில்லை. நெஞ்சை என்னவோ செய்தது.
வேகமாய்க் கைப்பேசியை எடுத்து அவளைத் தடை செய்து வைத்திருந்ததை நீக்கிவிட்டு, “நடந்த எல்லாத்துக்கும் சொறி அன்பா. உனக்கு நான் நேர்மையா நடக்கவே இல்ல. அதுக்குச் சொல்லுறதுக்கு நியாயமான காரணங்கள் கூட என்னட்ட இல்ல. வாழ்க்கையைத் துலச்சுப்போட்டு நிக்கிற அக்காவை விட்டுட்டு, நீதான் வேணும் எண்டு வரேலாத கோழைதான் நான். கட்டாயம் உனக்கு நல்ல வாழ்க்கை அமையும், நீ நல்லா இருப்பாய். நல்லா இருக்கோணும். எல்லாத்துக்கும் சொறி!” என்று மடமடவென்று எழுதியவனால் அதை அனுப்ப முடியவில்லை.
அனுப்பி மட்டும்? காலம் கடந்து கேட்கிற இந்த மன்னிப்பு எதையும் சரி செய்துவிடப் போவதில்லையே! மனம் வலிக்க அதை அனுப்பாமல் கைப்பேசியைத் தூக்கிப் போட்டான்.
குழந்தைவேலுக்கு மகன் சொன்ன பதிலில் திருப்தி இல்லை. அதே நேரம், இதற்கு என்ன சிறந்த தீர்வு என்றும் தெரியவில்லை.
என்னவோ நடப்பது நடக்கட்டும் என்று எண்ணியவர் அந்த வீட்டினரைச் சந்தித்து, காந்தன் செய்ததை எல்லாம் மறைக்காமல் சொல்லிவிட்டு, அன்பினியைப் பற்றியும் சொன்னார்.
“இதை எல்லாம் சொன்னதுக்குக் காரணம், என்னை நம்பி வந்து கேக்கிற உங்களுக்கு எதையும் மறைக்க எனக்கு விருப்பம் இல்லை எண்டுறதுதான். ஆனா அவா உண்மையாவே அருமையான பிள்ளை. சின்ன வயதில இருந்தே எனக்குத் தெரியும். அவா அந்தக் காந்தன் மாதிரி இல்ல. முதல் எங்கட மகனுக்குத்தான் பேசினனாங்க. ஆனா, மகளும் இருக்கிற வீட்டில அவா வந்தா அது அவாக்காகும் சிரமம், எங்கட மகளுக்கும் துன்பம் எண்டுறதால மட்டும்தான் அந்தக் கலியாணம் நிண்டு போனது. மற்றும்படி தாய் தகப்பனும் அருமையான மனுசர். நீங்க தாராளமாக் கட்டிவைக்கலாம் எண்டுதான் நான் சொல்லுவன். இனி நீங்கதான் யோசிக்க வேணும்.”
அதையெல்லாம் கேட்ட அவர்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சிதான். எல்லோரோடும் கலந்து பேசிவிட்டு முடிவு செய்தவாதச் சொன்னவர்கள், அடுத்த ஒரு வாரத்தில் எடுத்து, வீட்டில் அனைவருக்கும் விருப்பம் என்று சொன்னார்கள்.
“உண்மையாவே சந்தோசம் எனக்கு. உங்கட மகன் கட்டாயம் நல்லா இருப்பார். அந்தளவுக்கு அருமையான பிள்ளைதான் அவா.” என்று குழந்தைவேலு மனதாரச் சொன்னாலும் மனத்தில் இனம்புரியாத ஒரு பாரம்.
மகன் ஆசைப்பட்ட பெண் நிரந்தரமாகக் கைவிட்டுப் போகப் போகிறாள்! அன்று இரவு பரமேஸ்வரியிடம் அவர் பகிர்ந்துகொண்டபோது அவருக்கு அழுகையே வந்திருந்தது. இதற்கு மேலே என்ன செய்வது என்று தெரியவும் இல்லை. மகனுக்காய்ப் பார்ப்பதா, மகளுக்காய்ப் பார்ப்பதா என்று தவித்தார்.
மனம் கேளாமல், அவன் அறைக்கு அவனைத் தேடி வந்து, “தம்பி, அவே எல்லாருக்கும் விருப்பமாம். அங்க கதைக்கப் போயினமாம். இப்பவும் விட்டா இனி நீ ஆசைப்பட்டது நடக்கவே நடக்காதப்பு. தயவு செய்து யோசி.” என்றார் கெஞ்சலாக.
அவனுடனேயே உறங்கிவிட்ட தளிரில் பார்வை இருக்க, “விடுங்கம்மா.” என்றான் வேறு பேசாமல்.
அவரால் அப்படி விட முடியவில்லை. “தாங்க மாட்டாயப்பு. உனக்கு விளங்கேல்ல. இப்பவே நீ நீயா இல்ல. நாளைக்கு அவா கலியாணம் செய்து போய்ட்டா எண்டா துடிச்சுப் போவாய். அக்கா பாவம்தான். இல்லை எண்டு சொல்லேல்ல. ஆனா இது உன்ர வாழ்க்கை. போனாக் கிடைக்காது தம்பி. சொல்லுறதைக் கேளு.” என்று பரிதவித்தார்.
அவன் மெலிதாய்ச் சிரித்தான். “நிறைய சீரியல் பாத்து அப்பிடியே யோசிக்கிறீங்க போல அம்மா. அப்பிடி எல்லாம் ஒண்டுமில்ல. கொஞ்சக் காலம் போனா எல்லாம் மறந்திடும்.” என்றான் அவன்.
“அப்ப இன்னொருத்தியைக் கட்டி வாழ நீ ரெடியோ?”
“ஏற்கனவே ஒருத்திக்கு ஓம் எண்டு சொன்னதை மறந்து கேக்கிறீங்களே. அவே வேண்டாம் எண்டு சொல்லாம இருந்திருந்தா இப்ப எனக்குக் கலியாணமே முடிஞ்சிருந்திருக்கும்.” என்றான் அவன் கண்ணை எட்டாத ஒரு சிரிப்புடன்.
அவருக்குக் கோபம்தான் வந்தது. “கெட்டித்தனமாக் கதைக்கிறதா நினைக்கிறாய் போல. எனக்கும் இதில முதல் விருப்பம் இல்லைதான். ஆனா, தாயும் பிள்ளையுமா இருந்தாலுமே வாயும் வயிறும் வேற தம்பி. அக்காக்காக நீ நிக்கிறது சந்தோசம்தான். அதுக்காக வாழ்க்கையையே இழக்கிறது சரியா எண்டு யோசி!” என்றுவிட்டுப் போனார்.

