கேட்பார் இன்றிக் காதல் – 3

அத்தியாயம் 3

காந்தன் சுபாங்கி தம்பதியினர், மகளின் முப்பத்தியொன்றாம் நாளினை எந்தக் குறையும் இல்லாமல் செய்து, தளிரினி என்று பெயரும் சூட்டினர். பகல் உணவும் நல்லபடியாக முடிய, விசேசத்துக்கு வந்தவர்கள் மெல்ல மெல்லக் கலையலாயினர்.

அவளின் பெயரைப்போலவே மருமகளுக்கும் வைத்துவிட்டதில் அன்பினியைக் கையில் பிடிக்கவே முடியவில்லை. அழகான சுடிதார் ஒன்றில், அளவான அலங்காரத்தோடு, தன் சொந்த வீடு போன்று பரமேஸ்வரிக்கு மிகுந்த உதவியாக இருந்தாள்.

கூடவே, கையில் தூக்கிப் பழக்காதே, பிறகு சுபாங்கியை வேலை செய்ய விடமாட்டாள் என்று யார் சொல்லியும் காதில் விழுத்தாமல், கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் தளிரைத் தூக்கி வைத்துக்கொண்டாள்.

அபயனும் மற்றவர் அறியாமல் அவளைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். அவள் மீதிருந்த கோபம், கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுவிடாதே என்று உந்தியது.

அங்கே விறாந்தையில் இருந்த பேப்பர் கப்புகளை எல்லாம் பொறுக்கிக்கொண்டு போய், குசினியில் இருந்த குப்பை வாளிக்குள் போட்டான். அப்படியே சமையல் கட்டை ஒதுக்கிக்கொண்டு நின்றவள் காதினுள், “எனக்குத் தோடம்பழத் தண்ணி வேணும். கரைச்சுத் தாரும்!” என்று சொல்லிவிட்டு வந்தான்.

இதை அவள் எதிர்பார்க்கவில்லை. அதுவும் காதருகில் வந்து மோதிய அவன் குரலில் விதிர்விதிர்த்து, திகைப்புடன் திரும்பி அவனைப் பார்த்தாள்.

இதற்குள் பழையபடி சோபாவில் வந்து அமர்ந்துகொண்டவன் ‘செய்!’ என்று பார்வையாலேயே கட்டளையிட்டான்.

படக்கென்று அவன் பார்வையிலிருந்து மறைந்துகொண்டவளுக்கு அவன் கேட்டதைச் செய்வதா என்கிற கேள்வி. வீடு முழுக்க ஆட்கள் இருந்ததில் சேட்டை செய்யமாட்டான் என்று தைரியமாக இருந்தாளே.

அங்கே வந்த பரமேஸ்வரி, அவள் நின்றிருந்த நிலையைக் கவனித்துவிட்டு, “என்னம்மா?” என்றார் எதுவும் விளங்காமல்.

“அது மாமி, எல்லாருக்கும் தோடம்பழத் தண்ணி கரைக்கவா?” தன்னை மீறி வினவினாள்.

முகம் மலர, “ஓமாச்சி. கரைச்சா நல்லம்தான். கொஞ்சம் உசாரும் வரும். மரக்கறி சாப்பிட்டதாக்கும் நித்திரை மொய்க்குது.” என்று சொன்னார் அவர்.

“அப்ப நான் போய்த் தோடம்பழம் பிடுங்கிக்கொண்டு வாறன்.” அவர்கள் வீட்டின் பின்னால் பெரிய தோடம்பழ மரம் நிற்பது தெரியுமாதலால் ஒரு கிண்ணத்தைத் தூக்கிக்கொண்டு நடந்தாள்.

“பொறுங்கோ பிள்ளை. கைக்கு எட்டுற உயரத்தில இருந்ததை எல்லாம் நான் பிடுங்கிட்டன். உங்களுக்கு எட்டாது.” என்று அவளைத் தடுத்து நிறுத்திவிட்டு, “தம்பி, அன்பினி தோடம்பழத் தண்ணி கரைக்கப் போறவாம். அங்க பிலா மரத்தில அப்பா கொக்கத்தடியை நிமித்தி வச்சிருக்கிறார். அதை எடுத்து நாலஞ்சு பழம் ஆஞ்சு குடுங்கோ.” என்று அவனை ஏவி, அவனுக்கான சந்தர்ப்பத்தை அவரே உருவாக்கிக் கொடுத்தார்.

அவன் எழுந்து வரவும், “இல்ல மாமி, அவர் என்னத்துக்கு? நானே பிடுங்குவன்.” என்று அவசரமாகச் சொன்னாள் அன்பினி.

“பிறகு என்னம்மா? அவாவே பிடுங்குறாவாம். என்ன விடுங்க!” என்று அவன் திரும்ப, “தம்பி, என்ன பழக்கம் இது? அவா சொன்னா அப்பிடியே விடுறதா? போய்ப் பிடுங்கிக் குடுங்கோ!” என்று அதட்டினார் பரமேஸ்வரி.

“ஒரு மனுசனை நிம்மதியா இருக்க விடுறீங்களா நீங்க?” என்று அன்னையிடம் சீறியவன் அவளைக் கடக்கையில் கண்ணைச் சிமிட்டிவிட்டுப் போனான்.

அவளுக்கு ஒருமுறை தூக்கிப் போட்டது. அதற்குமேல் எதுவும் செய்ய முடியாமல், மாலை மரியாதையோடு வெட்ட அழைத்துச் செல்லும் ஆட்டைப் போன்று அவன் பின்னால் சென்றாள்.

வீடு கொஞ்சம் முன்னால் இருக்க, வீட்டின் மூன்று பக்கமும் போதியளவிலான நிலம் கொண்ட பெரிய காணி அவர்களது. ஒரு பக்கமாகப் பெரிய கிணறு இருந்தது. அதனருகிலேயே குளியலறையும், அதற்குமேல் தண்ணீர் டாங்கினையும் கட்டி இருந்தார்கள். அங்கிருந்து மோட்டார் மூலம் வீட்டுக்குத் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. காணி முழுக்கச் சோலைதான்.

மதிலோரமாக ஓங்கி வளர்ந்து நின்றது தோடம்பழ மரம். அதனருகில் சென்றதும், “நான் என்ன உம்மைப் பிடிச்சா தின்னப் போறன், அந்தப் பயம் பயப்பிடுறீர்?” என்றான் கடுப்புடன்.

“இல்ல, நான் பயப்பிடேல்லை.”

“அதான் என்னை ப்ளொக் பண்ணி வச்சிருக்கிறீர் போல.”

இப்படிக் கிடைத்த சந்தர்ப்பத்தில் அதைக் கேட்பான் என்று எதிர்பாராதவள் பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.

“நம்பர் தர விருப்பம் இல்ல. ஒரு ஹாய் போட்டா ப்ளொக். என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறீர் என்னைப் பற்றி? பொறுக்கி எண்டா?”

“ஐயோ இல்ல!” என்று பதறினாள் அவள்.

“சும்மா நடிக்காதையும். அந்தளவில என்னில சந்தேகம் என்ன உமக்கு?” என்றவனின் கேள்வியில் அவளுக்குக் கண்களில் கண்ணீர் திரண்டு போயிற்று.

அவனுக்கு அதற்கும் கோபம்தான் வந்தது. “கண்ணீர் வடிச்சீரோ தோடம்பழத்துக்குப் பதிலா உம்மட தலையத்தான் இந்தக் கொக்கத்தடியால சீவுவன்!” என்று கொக்கத்தடியை அவள் கழுத்துக்கு நேராய் நீட்ட, “இல்ல இல்ல. நான் அழேல்ல!” என்று பின்னால் பாய்ந்தாள் அவள்.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மரத்தின் உச்சியில் கிடந்த பழங்களைக் கடகடவென்று ஆய்ந்து போட்டான்.

“இனிக் காணும்.” என்று அவள் சொன்னதும் கொக்கத் தடியைக் கொண்டுபோய்ப் பழையபடி வைத்துவிட்டு வந்தான்.

இதற்குள் கையோடு கொண்டு வந்திருந்த கிண்ணத்தினுள் பழங்களை நிரப்பியிருந்தாள் அன்பினி.

அவளோடு வீடு நோக்கி நடந்தபடி, “எந்த கம்பஸ் எண்டு டிசைட் பண்ணியாச்சா?” என்று பேச்சுக் கொடுத்தான்.

அவளுக்கு மீண்டும் திக் என்று இருந்தது. நில அளவைத் திணைக்களத்தினால் கொடுக்கப்பட்ட ஒரு ப்ராஜெக்ட்டுக்காக காந்தன் வவுனியாவில் தங்கி வேலை செய்துகொண்டிருந்தான். அதில் வவுனியாப் பல்கலையிலேயே சேர்த்துவிடலாம் என்று வீட்டில் பேசிக்கொண்டதைச் சொல்லப் பயந்து, “அது… அண்ணா இன்னும் ஒண்டும் சொல்லேல்ல.” என்றாள் அவனைப் பாராமல்.

“நீர் எங்க எண்டாலும் போம். ஆனா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எங்கட கம்பஸ் பக்கம் வந்தீரோ தெரியும்!” என்றுவிட்டு அவளை முந்திக்கொண்டு நடந்து போனான் அவன்.

இவன் உண்மையாகச் சொல்லுகிறானா, இல்லை இதுவும் சீண்டலா என்று தெரியாமல் அவனைப் பின்தொடர்ந்தாள் அன்பினி.

அந்தக் குழப்பத்தோடே தோடம்பழத் தண்ணீரைக் கரைத்து எல்லோருக்கும் பரிமாறினாள். இன்றைக்கு என்ன குறையைச் சொல்வானோ என்று அவள் பயந்துகொண்டிருக்க, “பரவாயில்ல. கொஞ்சம் வாயில வைக்கிற மாதிரித்தான் இருக்கு!” என்றுகொண்டு வந்தவன், அங்கு மீதமாய் இருந்ததையும் எடுத்துத் தன் வாயினுள் கவிழ்த்துவிட்டுப் போனான்.

அவளுக்கு ஏனோ கோபத்திற்குப் பதிலாய்ச் சிரிப்புத்தான் வந்தது.

மாலையாகும் நேரத்தில், “அன்புவையும் அங்க வவுனியா கம்பஸிலேயே சேர்ப்பம் எண்டு நினைக்கிறன் அபயன். நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று விசாரித்தான் காந்தன்.

“அப்பிடியே செய்யலாம் அத்தான். அங்க எல்லா வசதியும் இருக்கு. பயமும் இல்ல.” என்று சொன்னவனின் பதிலில் விழிகள் இரண்டும் தெறித்துவிடும் அளவுக்கு அதிர்ந்து பார்த்தாள் அன்பினி.

“எனக்கும் ரெண்டு வருசத்துக்குக் குறையாம அங்க வேல இருக்கும். அதால என்ர குவாட்டர்ஸிலேயே அவாவும் நிக்கலாம். ஏதும் பிரச்சினைகள் வந்தாலும் பாக்கக் கேக்க நீங்களும் இருக்கிறீங்கதானே எண்டு யோசிச்சன்.” பொறுப்புள்ள தமையனாகச் சொன்னான் காந்தன்.

“ஓம் அப்பு. நானும் நீங்க அங்க இருக்கிறீங்க எண்டுற தைரியத்திலதான் அங்கேயே சேர்ப்பம் எண்டு சொன்னனான்.” என்ற இந்துமதியைக் கண்டு தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது அவளுக்கு.

அவள் நடுங்குவதே இந்த அபாயகரமானவனை எண்ணித்தான். இதில் ஆளுக்கு ஒரு நாடகமாக நடித்துக்கொண்டிருக்கிறான் அவன். இவர்களும் நம்புகிறார்கள். அவனைப் பார்வையால் எரிக்கவும் பயந்து, ஊமையாக நின்றாள் அன்பினி.

“அப்பிடிப் பயப்பிடுறதுக்கு ஒண்டும் இல்ல மாமி. நீங்க யோசிக்காதீங்க.” என்றவன், “அப்லை பண்ணியாச்சா அத்தான்? இல்ல இனித்தானா?” என்றான் காந்தனிடம்.

“இன்னும் இல்ல. உங்களோடயும் கதைச்சுப்போட்டுச் செய்வம் எண்டு நினைச்சன். எப்பிடிச் செய்யோணும், என்ன ஏது எண்டு ஒருக்கா விசாரிச்சுச் சொல்லுறீங்களா?”

“அதெல்லாம் சின்ன விசயம் அத்தான். ஆனா உங்கட குவாட்டர்ஸ் டவுனுக்க எல்லா இருக்கு. அங்க இருந்து கம்பஸ் ஒவ்வொரு நாளும் வந்து போறது ஈஸி இல்ல. அதால ஹொஸ்டல் ரூமும் சேத்தே எடுப்பம். பிறகு வசதிப்படி எங்க எண்டாலும் நிக்கலாம்.” என்று அவன் சொன்னது சரியாகவே இருக்க அவர்களும் சம்மதித்தார்கள்.

“அன்பினி, எதுக்கும் நீர் உம்மட நம்பர் தாரும். நான் அங்க இந்தக் கிழமையே விசாரிச்சுப்போட்டு என்ன செய்யோணும் எண்டு மெசேஜ் பண்ணி விடுறன்.” என்றவன் கைப்பேசியை பொக்கெட்டிலிருந்து எடுத்தபடி அவள் முகம் பார்த்தான்.

அசந்துதான் போனாள் அன்பினி. எவ்வளவு அழகாக நடிக்கிறான்! அவளால் அசையக்கூட முடியவில்லை.

அவள் நிலையை உணராத இந்துமதி, “என்னம்மா சும்மா பாத்துக்கொண்டு நிக்கிறீங்க? சொல்லுங்கோவன்.” என்றார்.

வேறு வழி? அன்று பிழையாகச் சொன்னதற்குப் பழி வாங்குகிறானே என்று உள்ளம் குமுறச் சொன்னாள்.

உடனேயே அவளுக்கு அழைத்துவிட்டு, “லைன் போகேல்லையே. நம்பர் ஏதும் பிழையா?” என்றான் ஒன்றுமே தெரியாதவனாக.

“இல்ல பொறுங்க, பாக்கிறன்.” அவனைப் பாராமல் முணுமுணுத்துவிட்டுக் கைப்பேசியை எடுத்து, முதல் வேலையாக அவனைத் தடை செய்திருந்ததை அகற்றினாள்.

“இப்ப ரிங் பண்ணுங்க.” அவளும் அவன் நாடகத்தில் பங்கேற்றுக்கொண்டாள்.

அபயனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. உள்ளம் வேறு உள்ளே குத்தாட்டம் போட, அவளுக்கு அழைத்து, அவள் கைப்பேசி சத்தமிட்ட பின்னர் துண்டித்துக்கொண்டான்.

அன்று இரவே அவளுக்கு அழைத்தான். இனியும் தவிர்க்க முடியாது என்கிற நிலையில் அழைப்பை ஏற்றாள் அன்பினி.

“பொய் நம்பர் தாற ஆக்கள் கூடிப் போச்சு. அதான் நம்பர் சரியா எண்டு செக் பண்ண எடுத்தனான்.” என்றான் அவன்.

அடுத்த நாளும் அழைத்தான். “எப்பவும் நீர் அலேர்ட்டா இருக்கிறீரா எண்டு பாக்க எடுத்தனான்.” என்றான்.

இப்படி நாளுக்கு ஒரு வசனம். நொந்தே போனாள் அன்பினி.

*****

விடிந்தால் அன்பினிக்கு இருபதாவது பிறந்தநாள். அபயன் வவுனியாவில் இருந்தான். தடுக்கவே முடியாத உந்துதலில் அன்று இரவு சரியாகப் பன்னிரண்டு மணிக்கு அவளுக்கு அழைத்தான். தன் தோழியர் யாராவது இந்த வேலை பார்ப்பார்கள் என்று தெரிந்து விழித்தே இருந்தவள் அவன் அழைப்பைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

நெஞ்சு டமாரம் அடித்தது. இப்படி விழித்திருந்து, முதல் அழைப்பாக ஏன் அழைக்கிறான்? எடுப்பதா வேண்டாமா? அந்தப் பிறந்தநாளை அவளுக்குப் பெரும் பதற்றத்தோடு ஆரம்பித்து வைத்தான் அவன்.

அழைப்பு நின்று மீண்டும் வந்தது. அதற்குமேல் முடியாமல் நடுக்கத்துடன் ஏற்றுக் காதில் வைத்தாள்.

“அன்பா!”

அந்த அழைப்பிலேயே அவள் உள்ளம் அதிர்ந்தது. ஒரு கணம் தடுமாறினாலும், “ம்!” என்றாள் தன்னையறியாது.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.

“தே…ங்க்ஸ்!”

வேறு என்ன கதைப்பது? அபயனுக்குள் புதிதாய் ஒரு தடுமாற்றம். சில நொடிகளை அமைதியில் கழித்துவிட்டு, “நித்திரை கொள்ளேல்லையா?” என்று கேட்டான்.

“இல்ல.”

“ஏன்?”

“தெரியா.”

“நான் இப்ப எடுப்பன் எண்டு நினைச்சீரா?”

அவனெல்லாம் அவளோடு இவ்வளவு தன்மையாகக் கதைப்பான் என்றே எதிர்பாராதவள் இந்த அழைப்பையா எதிர்பார்த்திருக்கப் போகிறாள்? பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தாள்.

“அன்பா?”

எல்லோரும் அன்பு என்று அழைக்க, அவன் மட்டும் புதிதாய் அன்பா என்கிறான். எப்போதும் அதட்டி உருட்டுகிறவனின் குரல் வேறு இன்று ஏதோ ஒன்றை உணர்த்த முயன்றதில் பயந்து, “நான் வைக்கவா?” என்றாள்.

இருந்த இதமான மனநிலை மெலிதாய் மாற, “ஏன், என்னோட எல்லாம் கதைக்க மாட்டீரோ?” என்றான் ஒரு மாதிரியாக.

“நித்திரை வருது.”

“இவ்வளவு நேரம் வராத நித்திரை இப்ப வருதா? பரவாயில்ல, கொஞ்ச நேரம் என்னோட கதைச்சுக்கொண்டு இருந்திட்டுப் படும்.”

அப்படி என்ன கதைக்க? அதைவிட இந்த நேரத்தில் இப்படியான ஒரு உரையாடல் வேண்டவே வேண்டாம் என்று மனம் எடுத்துரைக்க, “இல்ல, நான் வைக்கிறன்.” என்றவள் அழைப்பைத் துண்டித்தும் இருந்தாள்.

அவனுக்கு ஒரு விதமாக முகம் கன்றிப் போயிற்று. திரும்ப திரும்ப அவள் தன்னை அவமானப்படுத்துவது போலவே உணர்ந்தான். வேகமாகப் புலனத்தை திறந்து, “ஒரு அஞ்சு நிமிசம் கதைக்க மாட்டீர் என்ன? அப்பிடி என்ன செய்துபோடுவன் எண்டு இப்பிடி ஒவ்வொரு முறையும் கேவலப்படுத்துறீர்? எங்கட கம்பசுக்குத்தானே வரப்போறீர். வாரும், அங்க வச்சுக் கதைக்க வைக்கிறன்!” என்று சீறும் குரலில் ‘வொயிஸ் மெசேஜ்’ ஒன்றை அவளுக்கு அனுப்பி வைத்தான்.

error: Alert: Content selection is disabled!!