கேட்பார் இன்றிக் காதல் – 31

அத்தியாயம் 31

அன்று முழுக்க இதை வீட்டில் எப்படிச் சொல்வது என்று யோசித்துக்கொண்டே இருந்தார் குழந்தைவேலு.

மகனுக்கு இரண்டாம் முறையும் திருமணம் குழம்பிப்போனது காரணமா, இல்லை அவன் இனித் திருமணம் செய்யாமலேயே இருந்துவிடுவானோ என்கிற பயமா, அன்பினியை நேசித்து, அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்துவிட்டு விலகிவிட்டான் என்று அறிந்ததிலிருந்து இருந்த மெல்லிய குற்றவுணர்வு காரணமா, இல்லை திருநாவுக்கரசு என்கிற நல்ல மனிதரின் மனத்தை அறிந்துகொண்டதனால் உண்டான மாற்றமா என்று அவருக்கே தெரியவில்லை.

கேட்டுவிட்டார். இனி அதை மாற்ற முடியாது. அன்று மாலை வீடு வந்து, எல்லோர் முன்னிலையிலும் நடந்ததைச் சொன்னார்.

இதை நம்ப முடியாமல் அதிர்ந்த விழிகளால் தந்தையையே நோக்கினாள் சுபாங்கி.

அந்தப் பார்வை பெற்றவர் நெஞ்சைக் குத்தியது. “அம்மாச்சி, உங்களைப் பற்றி யோசிக்காம இத நான் கேக்கேல்லை. என்னவோ அந்த நிமிசம் வாயில வந்திட்டுது. அதவிட அந்தப் பிள்ளையா இருந்தாலும் சரிதான் உங்கட தம்பியா இருந்தாலும் சரிதான் இன்னொரு வாழ்க்கையச் சந்தோசமா வாழுவினம் எண்டுற நம்பிக்கை எனக்கு இல்ல. அதான்…” என்றார் கெஞ்சலாக.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவள் தம்பி சந்தோசமான, நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான் அவள் ஆசையும். ஆனால், அவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்துவிட்டும் கூட, என் தங்கை திருமணம் முடிகிற வரையில் வெளியே சொல்லாதே என்றவனுக்கு, அவளுக்காகவே இந்த வீட்டுக்கு வந்து நியாயம் கேட்டவனுக்கு அவளால் கொஞ்சமாய்க் கூடத் திருப்பிக் கொடுக்க முடியவில்லையே! அதுதான் அவளை அறுத்தது.

அநியாயமாய்த் தண்டனை அனுபவிக்கிறாள் அவள். ஆனால், அவளால் நியாயமாய்க்கூட அவனைத் தண்டிக்க முடியவில்லை. அது போதாது என்று அவன் ஆசைப்பட்ட அவன் தங்கையின் திருமணம், தன் தந்தையாலேயே முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு விரக்தி அவளைச் சூழ்ந்தது.

அபயனும் இதை எதிர்பார்க்கவில்லை. வேகமாகத் திரும்பித் தமக்கையைப் பார்த்தான். அவள் முகத்திலிருந்து எதையும் படிக்க முடியாதபோதும், எழுந்து அவள் முன்னே வந்து நின்றான்.

அவள் நிமிர்ந்து பார்க்கவும், “உங்களிட்ட நான் சொன்னது சொன்னதுதானக்கா. மாறாது!” என்றுவிட்டு அறைக்கு நடந்தான்.

பரமேஸ்வரிக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.

“மாற வேண்டாம் தம்பி. இப்பிடியே இரு. இப்ப நீங்க எல்லாம் வளந்த மனுசர். அப்பா வாக்குக் குடுத்தா என்ன, அதால மரியாதை கெட்டு அவர் நிண்டாத்தான் என்ன? உங்களுக்கெல்லாம் உங்கட பிடிவாதங்கள் தானே முக்கியம். அதால எதுவும் மாற வேண்டாம். நீ நீ நினைச்ச மாதிரியே நட!” என்றவர் கணவர் புறம் திரும்பி,

“இதெல்லாம் நடக்காது எண்டு நாளைக்கு நீங்க திரும்பவும் எடுத்துச் சொல்லிவிடுங்கோ. நம்பிக்கையக் குடுத்து ஏமாத்துறது எல்லாம் எங்களுக்குப் புதுசா என்ன? எங்களுக்கே தெரியாம அந்தப் பிள்ளையோட பழகிப்போட்டு, சத்தமே இல்லாமக் கைவிட்டவன்தானே இவன்!” என்றதும், “அம்மா!” என்றான் அதட்டலாக.

“என்ன அம்மா? நான் என்ன பொய்யா சொல்லுறன்? உன்ர அக்காக்கு ஒரு நியாயம், அந்தப் பிள்ளைக்கு ஒரு நியாயமா?” அவனுக்கு மேலால் நின்றார் அவர்.

அவருக்குப் பதில் சொல்லாமல் தந்தையைப் பார்த்தான் அபயன். அவனுக்கு அவனிடம் கேளாமல் அவர் இப்படி அங்குப் பேசியதில் உடன்பாடில்லை.

அதை உணர்ந்துகொண்டவரும், “அக்காக்காக யோசிக்கிறாய் எண்டு விளங்குது தம்பி. ஆனா, அந்தப் பிள்ளையை நீ கட்டாம இருக்கிறதால அக்கான்ர வாழ்க்கைல எதுவும் மாறப்போறேல்ல. எல்லாத்தயும் விட நான் உங்களிட்ட விசாரிச்சமாதிரி அவரும் அன்புட்டக் கேட்டிருப்பார். நீங்க ரெண்டு பேரும் விரும்பினது தெரிய வந்திருக்கும். ஆனாலும் இஞ்ச வந்து நியாயம் கேட்டுச் சண்டைக்கு வரேல்ல. இப்பவும் ஒதுங்கித்தான் இருக்கினம். ஏன், அன்புகூட அண்டைக்கு அந்தப் பெடியன் கேக்கேக்க என்ன சொன்னவா?” என்றவரின் கேள்வியில் பார்வையை அவரிடமிருந்து அகற்றிக்கொண்டவனுக்குத் தொண்டை ஒருமுறை ஏறி இறங்கிற்று.

“எல்லாத்தையும் விட அந்தக் குடும்பமும் பாவம். காந்தனால அவேயும்தான் பாதிக்கப்பட்டு நிக்கினம். அண்ணாவே இப்பிடி நடந்திருக்கிறார் எண்டேக்க, எனக்கு வாறவனும் மோசமா நடக்கமாட்டான் எண்டு என்ன நம்பிக்கை எண்டு அன்பு கேட்டவாவாம். அந்தப் பயத்தில கலியாணமே வேண்டாம் எண்டு அப்பிடியே இருந்திட்டா எண்டா அந்தப் பாவமும் எங்களுக்குத்தான் வந்து சேரும். அதால அவசரப்படாம யோசிச்சு முடிவு சொல்லப்பு.” என்றுவிட்டு எழுந்து போனார் அவர்.

அப்படியே நின்றுவிட்டான் அபயன். சும்மாவே எல்லாவற்றுக்கும் பயப்படுகிறவள் அவள். நிச்சயம் இப்படி எல்லாம் யோசித்துத்தான் இருப்பாள். எங்கு என்றாலும் அவள் நன்றாக வாழ வேண்டும் என்பதுதான் அவன் ஆசை. அப்படியிருக்க அவளுக்கு அப்படி ஒரு நிலை வருமாயின் அவனாலேயே அவனை மன்னிக்க முடியாது!

தமக்கையைப் பார்த்தான். தளிரை மடியில் வைத்துக்கொண்டு தனியாக அமர்ந்திருந்தாள். அந்தக் காட்சி அவன் நெஞ்சை என்னவோ செய்ய, “அக்கா!” என்றான்.

திரும்பி அவனைப் பார்த்தவள் விழிகளில் என்ன இருந்தது?
பிரித்தறிய முடியாமல் அவன் நிற்க, “அப்பா சொன்ன மாதிரி என்ன நடந்தாலும் எனக்கு நடந்துகள் மாறப்போறேல்ல. அவளைக் கட்டமாட்டன் எண்டு எனக்குச் சொன்னதைப் பற்றிப் பெருசா யோசிக்காத. உனக்கு எது சரி எண்டு படுதோ அதைச் செய்.” என்றுவிட்டு அவளும் எழுந்து போனாள்.

*****

இங்கே அன்பினியும் விடயமறிந்த கணத்திலிருந்து தன் விரல்களையே ஆராய்ந்தபடி அமர்ந்திருந்தாள். உள்ளத்தில் எந்த உணர்வுகளும் இல்லை. சந்தோசம், துக்கம், துயரம் என்று எல்லாவற்றையும் கடந்த நிலை.

“என்னம்மா? இப்பிடியே இருந்தா என்ன அர்த்தம்?”

“முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டுமே அப்பா.” என்றாள் நிமிர்ந்து.

“ஏன் பிள்ளை? அவேயே கேட்டு வரேக்க வேண்டாம் எண்டு ஏன் சொல்லுறீங்க?” என்ற அன்னையை வேதனையுடன் பார்த்தாள் அவள்.

“அது என்னம்மா அவேயே கேட்டு வரேக்க எண்டுறீங்க. அந்தளவுக்கு மோசமா இருக்கா என்ர நிலமை?”

இந்துமதி தவித்துப்போனார். “நாங்க அப்பிடி நினைப்பமா பிள்ளை? நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கை. தானா வரேக்க விட வேண்டாமே எண்டு நினைச்சன்.” என்று அவசரமாகத் தன்னை விளக்கினார்.

“ஆசைப்பட்டது எல்லாம் ஒரு காலம் அம்மா. இப்ப அந்த ஆசை எல்லாம் இல்ல. அதால வேண்டாம்.”

“இப்பிடி ஆரைக் காட்டினாலும் வேண்டாம் வேண்டாம் எண்டு சொன்னா என்னம்மா அர்த்தம்? ஆரையாவது கட்டத்தானே வேணும்.”

“அப்பிடி என்னம்மா கட்டாயம்? உங்க ரெண்டுபேருக்கும் மகளா வாழக்கூடாதா? எனக்கு இந்தக் கலியாணம் எல்லாம் வேண்டாம்.” என்றதும் பெற்றவர்கள் இருவரும் பயந்து போயினர்.

அதுவும் இந்துமதி அழுதேவிட்டார். “அப்பிடிச் சொல்லாத ஆச்சி. நீயாவது நல்லபடியாக் கட்டி, குழந்தை குட்டி எண்டு இருக்கிறத நாங்க பாக்கோணும். அதுதானே எங்களுக்குச் சந்தோசம்.”

அவள் விழிகளும் கலங்கின. ஆனால், இனியும் அவளால் அவள் வாழ்வில் ஒருவனை நம்ப முடியுமா என்ன? தந்தையின் இடத்தில் வைத்துப் பார்த்தவனும் பொய்த்துப்போய், சகலதுமாக இருப்பான் என்று நினைத்தவனும் பொய்த்துப்போன பிறகு யாரை நம்புவாள்?

“என்னம்மா? ஓம் எண்டு சொல்லுங்கோ குஞ்சு.” என்று கெஞ்சினார் இந்துமதி.

“என்னால ஏலாம இருக்கே அம்மா. நான் என்ன செய்ய?” உடைந்த குரலில் அவரிடமே கேட்டாள் அவள்.

“அந்த நேரம் எனக்கு அவ்வளவு பயமா இருந்தது. ஆனா, நான் இருக்கிறன் உனக்கு, என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் எண்டு நம்பிக்கை தந்தது அவர். அதே அவர்தான் கடைசில ஒண்டுமே சொல்லாம விட்டுட்டுப் போனவர். அப்பிடியானவரோட ஒரு வாழ்க்கை வேணுமா எண்டு இருக்கு.” என்று கேட்டுவிட்டு எழுந்துபோனாள் அவள்.

அடுத்தநாள் குழந்தைவேலுவுக்கு அழைத்த திருநாவுக்கரசிடமும் மிகுந்த தயக்கம்.

அவர் என்ன ஏது என்று விசாரிக்க முதலே, “மகள் வேண்டாம் எண்டு நிக்கிறா.” என்று சொன்னார்.

“கலியாணம் வேண்டாமாமோ இல்லை அபயன் வேண்டாமாமோ?”

“ரெண்டும். உங்களுக்கு மகளாவே இருக்கிறன் எண்டு சொல்லுறா.”

ஒரு நெடிய மூச்சுடன், “பிள்ளைகள் வளந்தா நிம்மதியா இருக்கலாம் எண்டு பாத்தா, பிள்ளைகள் வளர வளரப் பிரச்சினைகளும் வளருதே தவிர எங்களுக்கு நிம்மதி மருந்துக்கும் இல்லை.” என்றார் அவர்.

“ரெண்டு நாள் போகட்டும். திரும்பக் கேட்டுப் பாக்கிறன்.” என்றுவிட்டு வைத்தார் திருநாவுக்கரசு.

இங்கே அவள் மறுத்ததை அறிந்த அபயன் ஒன்றுமே சொல்லவில்லை. உள்ளத்தில் மட்டும் சின்னதாய்ச் சுருக்கென்று ஒரு துடிப்பு. ஒரு காலத்தில் அவனும் அவளும் இணைவதுதான் அவர்களின் பெரும் கனவாகவே இருந்தது. இன்றைக்கு அவர்களே அதற்கு எதிராய் நிற்கிறார்கள்.

“தம்பி, நீ ஒருக்காப் போய்க் கதையன் அப்பு. நீ கதைச்சா அவா ஓம் எண்டு சொல்லுவா.” என்று கெஞ்சினார் பரமேஸ்வரி.

மெல்லிய வருத்தத்துடன் “நான் இன்னொருத்தியோட சோடி போட்டுக்கொண்டு நிண்டவன் அம்மா. அவளிட்டப் போய்க் கேக்க எனக்கு உரிமையோ தகுதியோ இல்ல. அவள் இப்பிடித்தான் சொல்லுவாள் எண்டு எனக்கு ஏற்கனவே தெரியும். அதால இத விடுங்கோ.” என்றான் முடிவாக.

“அண்டைக்கு திரும்பவும் வந்து என்னத்துக்கு அந்தச் செயினை என்னட்ட இருந்து வாங்கினனீ?” என்றார் சம்மந்தமேயில்லாமல்.

“அது என்ர செயின்.”

“அது உன்ர செயின் இல்ல. நீ அன்புக்குப் போட்ட செயின்.”

“இப்ப என்ன அதுக்கு?”

“அது எங்க? கொண்டுவா. அதைக் குடுத்துப்போட்டு நான் எனக்குப் பிடிச்ச மாதிரி ஏதாவது வாங்கப் போறன்.” என்றதும், “அம்மா!” என்றான் அதட்டலாய்.

“என்ன அம்மா? அதான் அவா வேண்டாம் தானே உனக்கு. செயினை மட்டும் வச்சிருந்து என்ன செய்யப் போறாய்? கொண்டு வா!” என்று நின்றார் அவர்.

அவன் பேசாமல் எழுந்து போக, “இதே மாதிரி கலியாணத்துக்கும் அமைதியா வந்து நிக்கிறாய்!” என்று முடித்தார் பரமேஸ்வரி.

*****
இங்கே எதிர்பார்ப்புடன் தன் முகத்தையே பார்க்கும் தாயின் பார்வையை எதிர்கொள்ள இயலாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள் அன்பினி.

இந்துமதி விடவில்லை. “இந்த வீடு பாழடைஞ்சுபோய்க் கிடக்கம்மா. ஒரு சந்தோசம் இல்ல. சிரிப்பில்ல. நீங்க கட்டி, மனுசன் பிள்ளை எண்டு ஆனாத்தான் நாங்க இது எல்லாத்துலயும் இருந்து கொஞ்சமாவது வெளில வரலாம்.” என்று தேடிவந்து சொன்னார்.

“நீ அங்க போனா அடிக்கடி தளிரையும் பாக்கலாம். கண்ணுக்கையே நிக்கிறா. இல்லாட்டி இந்த உறவு அப்பிடியே விடுபட்டுப் போயிடுமாச்சி.” என்றார் இன்னொருமுறை.

அன்று டவுனில் வைத்து அத்தை என்று அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுத தளிரின் நினைவில் அவள் விழியோரங்கள் கசிந்தன.

“உடம்பில பலமும் மனதில தைரியமும் இருக்கிற வரைக்கும் தனியாக இருக்கலாம் எண்டு நினைப்பாயம்மா. உனக்கும் வயது வந்து, நாங்களும் இல்லாத காலத்திலதான் தனியா இருக்கிறதின்ர வலி தெரியும். முதல் இப்பிடி உங்களைப் பாக்கத்தான் நாங்க பெத்து வளத்தமா? அண்ணாதான் செய்யக் கூடாததை எல்லாம் செய்து எங்களை ஏமாத்திப்போட்டான் எண்டா நீயும் அப்பிடி ஏதும் செய்துபோடாத பிள்ளை. இப்ப இப்ப எல்லாம் ஒவ்வொரு நாளையும் கடத்திறதே என்னவோ மலையப் புரட்டுற மாதிரி இருக்கு.” என்றதும் அவள் கன்னங்களைக் கண்ணீர் நனைத்தது.

ஆரம்ப நாள்களில் இந்தத் திருமணம் வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதமாய் இருந்தவள் இப்போதெல்லாம் சம்மதிக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பு போன்று தடுமாறிக்கொண்டிருந்தாள்.

இப்படி இருக்கையில்தான் குழந்தைவேலு மூலம் திருமணத்துக்குக் கேட்டவர்கள் திரும்பவும் திருநாவுக்கரசைத் தொடர்புகொண்டிருந்தார்கள்.

அன்று வீடு வந்தவரும், “அம்மாச்சி, உங்களுக்கு வயசும் காணும், படிப்பையும் முடிச்சாச்சு. இப்ப அவேயும் கேக்கினம். ஆருக்கு நான் ஓம் எண்டு சொல்ல?” என்று கேட்டார்.

நேசித்தவனை மணக்கவே சம்மதிக்க முடியாமல் அவள் தனக்குள் போராட இன்னொருவனா?

“தனியாவே நிண்டு அப்பாக்கு நீங்களும் தண்டனை தந்திடாதீங்கோ பிள்ளை. எனக்கு அபயனா இருந்தாலும் சரிதான், அந்தத் தம்பியா இருந்தாலும் சரிதான். நீங்க கலியாணம் கட்டிச் சந்தோசமா வாழோணும். அத நான் பாக்கோணும்.” என்று உணர்ச்சிவசப்பட்டு அவர் சொன்னபோது கொஞ்சம் திகைத்துத்தான் போனாள்.

இப்படிப் பேசுவது அவரின் இயல்பில்லை. தமையனின் கூடாத நடத்தை அவரை இப்படி மாற்றியிருந்தது. நொடியும் யோசிக்கவில்லை அவள். அபயனை மணக்கச் சம்மதித்தாள்.

பெரியவர்கள் நால்வரும் அதன் பிறகு நொடியும் தாமதிக்கவில்லை. அடுத்து வந்த நல்ல நாள் ஒன்றில் அவர்களின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

அவளை எதிர்கொள்ளவே முடியாத மனநிலையோடு அவனும், மகிழ்ச்சி என்பது சிறிதுமில்லா நிலையில் அவளும் திருமணத்துக்குத் தயாராகினர்.

பெரிய ஆரவாரங்கள் எதுவும் இல்லாது, அவர்களின் ஊர்க் கோயிலில் வைத்து, பொன் தாலியைப் பூட்டி, அவளைத் தன் மனைவியாக்கிக்கொண்டான் அபயன்.

error: Alert: Content selection is disabled!!