கேட்பார் இன்றிக் காதல் – 32

அத்தியாயம் 32

அபயனின் வீடு அன்பினிக்குப் புதியதே இல்லை. இன்னுமொரு சொந்த வீடு போன்று புழங்கிய இடம். இன்றைய நிலையில் அந்த வீடே அந்நியமாகிப்போயிருக்க அவனுடைய அறை?

அந்த அறைக்குள் அவன் அணிவித்த தாலியைத் தாங்கி, மனைவி என்கிற அங்கீகாரத்தோடு நின்றிருந்தாள். மனத்தில் மட்டும் பெரும் இரைச்சல். ஒரு காலத்தில் இது அமைந்துவிட வேண்டும் என்று தினம்தோறும் கடவுளிடம் கேட்டுப் பிரார்த்தித்த வாழ்க்கை. இன்று அதை ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை.

இனி இந்த வீட்டில் அவள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியாது. கழுத்தில் தாலி கட்டியவன் எப்படி நடப்பான் என்று தெரியாது. தன் மனத்திலிருக்கும் கசப்பை மறைத்துக்கொண்டு தன்னால் எந்தளவு தூரத்துக்கு அந்த வீட்டோடு பொருந்திப்போக முடியும் என்றும் தெரியவில்லை.

ஒரு நெடிய மூச்சுடன் விழிகளைச் சுழற்றினாள். அங்கிருந்த கட்டிலில் அமர விருப்பமில்லை. ஒரு பக்கமாய் மேசை நாற்காலி போடப்பட்டிருந்தன. அதில் சென்று அமர்ந்துகொண்டாள்.

*****

அபயன் இங்கே சுபாங்கியின் அறையில் தளிரைத் தோளில் போட்டுத் தட்டிக்கொடுத்தபடி அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்தான். சுபாங்கி கால்கள் இரண்டையும் தூக்கிக் கட்டிலில் சப்பாணி(சம்மனம்) கட்டி அமர்ந்திருந்தாள். அக்கா தம்பி இருவரிடையேயும் கனத்த மௌனம்.

இருவர் உள்ளத்திலும் ஒரு போராட்டம். இருவரும் மற்றவர் மனநிலையை அறிந்தே இருந்தனர். எதையாவது பேசப்போய் அது மற்றவரின் மனத்தைக் காயப்படுத்திவிடுமோ என்கிற பயம், இருவர் வாயையும் கட்டிப்போட்டிருந்தது.

இதுவரை காலத்தில் அவர்கள் இருவருக்குள்ளும் யாரும் வந்ததில்லை; அவர்களைப் பெற்றவர்கள் உட்பட. ஆனால் இன்று என்னவோ பெரிய இடைவெளி விழுந்துவிட்டது போன்று சுபாங்கிக்குத் தோன்றியது.

காந்தனின் நம்பிக்கைத் துரோகத்தைக் கொஞ்சமாவது அவள் தாங்கிக் கடந்து வந்ததற்குப் பக்க பலமாகவும், நம்பிக்கைத் தூணாகவும் நின்றவன், நிற்பவன் அபயன்தான். இனியும் அந்தப் பக்கபலமும் துணையும் கிடைக்குமா தெரியவில்லை. ஒருவிதமான பாதுகாப்பின்மையால் மனம் பயப்படுவதை அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

ஒரு வழியாகத் தளிர் உறங்கினாள். மெதுவாக அவளைக் கட்டிலில் கிடத்தி, போர்வையையும் போர்த்திவிட்டான் அபயன். மாமனின் தேகச்சூடு விலகியதால் அவள் சினுங்க, தானும் அருகில் படுத்துத் தட்டிக்கொடுத்தான்.

மீண்டும் தளிர் உறங்கிய பிறகும் அவன் எழுந்துகொள்ளவில்லை. கைகள் இரண்டையும் தலைக்குக் கொடுத்து, அங்கேயே படுத்திருந்தான்.

உள்ளத்தில் ஓராயிரம் சிந்தனைகள். இன்று மணமாகி அவனுக்கென்று ஒருத்தி வந்ததாலோ என்னவோ தமக்கை தனியாக நிற்பது இன்னும் அதிகமாய் உறுத்தியது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படியே இருப்பாள்? இந்தத் தனிமைதான் அவளுக்குக் கடைசி வரையிலுமா? சகோதரனாக அவள் வாழ்க்கை மலர என்ன செய்யப் போகிறான்?

“நேரமாகுது அபய். எழும்பிப் போ.” என்றாள் சுபாங்கி.

அவன் விழிகள் மூடியே இருந்தன. அவளுக்குப் பதில் சொல்லவும் இல்லை.

“அபய்!”

“நான் நினைச்சிருந்தா இந்தக் கலியாணத்த நிப்பாட்டியிருக்கலாம்தான் அக்கா. ஆனா அவளும் உங்களை மாதிரித்தான். அவனுக்குத் தங்கச்சியாப் பிறந்ததத் தவிர வேற எந்தப் பிழையும் செய்யேல்ல. என்னாலயும் திரும்பவும் ஆரோ ஒருத்திக்குப் பக்கத்தில போய் நிக்கிறத யோசிக்கவே ஏலாம இருந்தது.” என்றவன் விழிகளைத் திறந்து தமக்கையைப் பார்த்தான்.

ஒருவித அதிர்வுடன் அவனையே பார்த்திருந்தாள் அவள்.

“அதுக்காக அவளுக்குப் பின்னாலேயே போயிடுவன் எண்டு நினைக்காதீங்க. எனக்கு எப்பவும் என்ர அக்காவும் அக்கான்ர பிள்ளையும் முக்கியம். உங்களுக்காக எப்பவும் நான் இருப்பன். அதால எதப் பற்றியும் யோசிக்காமப் படுத்து நித்திரையைக் கொள்ளுங்க.” என்றான் அவள் விழிகளையே பார்த்து.

விழிகள் கலங்கிச் சிவந்துவிட, மெலிதாகப் புன்னகைக்க முயன்றாள் சுபாங்கி.

அவன் வெளியே வந்தபோது, “என்ன தம்பி இது? அந்தப் பிள்ளை எவ்வளவு நேரம்தான் உங்கட அறைக்க தனியாவே இருப்பா?” என்று மகனை இலேசாகக் கடிந்துகொண்டார் பரமேஸ்வரி.

அவ்வளவு நேரமாகத் தமக்கையை எண்ணி கனத்திருந்த அவன் மனது, இப்போது அவளை எண்ணிப் பாரமாயிற்று. “நீங்க போய்ப் படுங்கம்மா.” என்று அவரை அனுப்பிவிட்டு அறைக்கு வந்தான்.

அங்கே அவனுடைய மேசையிலேயே கையை வைத்து, அதிலேயே தலையைச் சாய்த்துப் படுத்திருந்தாள் அவள். இவனைக் கண்டதும் தன்னிச்சையாய் எழுந்து நின்றாள்.

“கட்டில்ல படுக்கவேண்டியதுதானே.” அவளைப் பாராமல் சொன்னபடி அறையின் கதவைச் சாற்றினான். ஏற்கனவே இருவரும் குளித்து, வீட்டுடைக்கு மாறியிருந்தனர். அதில், விளக்கை அணைத்துவிட்டு வந்து, கட்டிலின் ஒரு பக்கமாகத் தலையணையைத் தட்டிப் போட்டுவிட்டுப் படுத்துக்கொண்டான் அபயன்.

சற்று முன்னர் அநாதரவாக அவள் படுத்திருந்த காட்சியே கண்களுக்குள் நின்று அவனை என்னவோ செய்தது. தற்போதும் அவள் அசையாமல் நின்ற இடத்திலேயே நிற்பது தெரியாமல் இல்லை. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல் அப்படியே படுத்திருந்தான்.

அன்பினியின் உள்ளத்திலும் பெரும் போராட்டம்தான். இது அவன் அறை, அவனும் இங்கேதான் வருவான், இதுதான் இனி வாழ்க்கை, இதையும் தாண்டிப் போகும் என்றெல்லாம் அவளுக்குத் தெரியாமல் இல்லை. ஆயினும்கூட அவன் வந்து கதவடைத்தபோது அவள் உள்ளத்தில் ஒரு போராட்டம்.

ஒரு நெடிய மூச்சை இழுத்து விட்டுவிட்டு வந்து தானும் கட்டிலில் சரிந்தாள். முற்படுக்கையாய் உடலும் உள்ளமும் வலித்தது. என்னென்னவோ நினைவுகள் எல்லாம் நெஞ்சில் எழுந்துவந்து அவளை அலைக்கழிக்க முயன்றன. இல்லை, அதையெல்லாம் நினைக்கவே கூடாது என்கிற பிடிவாதத்தோடு விழிகளை இறுக்கி மூடிக்கொண்டாள்.

அபயனின் உள்ளத்திலும் பெரும் துடிப்பு. அவளோடு கழிக்கப்போகும் இந்த ஒரு நாளைப் பற்றி அவன் கண்ட கனவுகள் ஓராயிரம். ஆனால் இன்று…

உண்மையைச் சொல்லப்போனால் அவள் முகம் பார்க்க அவனுக்குத் தைரியமில்லை. அதில்தான் பேசாமல் வந்து படுத்துக்கொண்டான். அவள் மனத்தில் ஆசையையும் நம்பிக்கையையும் வளர்த்துவிட்டு, இன்னொருத்தியின் அருகில் போய் நின்றவன்தானே நீ என்று, அவன் நெஞ்சே அவனைக் கூறு போட்டுக்கொண்டிருந்தது.

*****

ஆழ்ந்து உறங்க முடியாததாலேயே காலையிலேயே விழித்திருந்தாள் அன்பினி. இரவு படுத்தது போலவே அபயன் இப்போதும் படுத்திருந்தான். எழுந்து, சத்தமில்லாமல் வெளியே வந்தாள். யாரையும் காணவில்லை. முகம் கழுவிக்கொண்டு வந்தபோது பரமேஸ்வரியும் தளிரும் சமையலறையில் இருந்தனர்.

இவளைக் கண்டதும் தளிரின் முகம் பூவாக மலர்ந்து போனது. அன்று போலவே, “அத்தை!” என்று ஓடிவந்து தாவினாள்.

ஆசையாய் அள்ளித் தூக்கி முத்தமிட்டவளுக்கு அழுகைதான் வந்தது. தவிர்க்கவே முடியாமல் சின்னவள் தமையனை நினைவூட்டினாள். அவன் சரியாய் இருந்திருக்க எல்லோர் வாழ்க்கையும் எத்தனை அழகாய் இருந்திருக்கும்? சீரமைக்கவே முடியாத அளவுக்குச் சிதைத்துவிட்டானே!

பரமேஸ்வரி அவளறியாமல் அவள் முகத்தை ஆராய்ந்தபடி தேநீர் கொண்டுவந்து கொடுத்தார்.

சட்டென்று சின்னதாய் ஒரு சங்கடம் சூழ, “நானே ஊத்தி இருப்பனே மாமி.” என்றபடி வாங்கிக்கொண்டாள்.

“அதுக்கு என்னம்மா, குடிங்கோ!”

“தளிருக்கு?”

“காய்ச்சின பால் அங்க ஆறுது.”

அன்று இருவருக்கிடையிலும் இயல்பாய் இருந்த பாசமும் நெருக்கமும் இன்று வருவேனா என்று நின்றது.

மகன் அவளைத்தான் மணக்க வேண்டும் என்று வற்புறுத்தியது பரமேஸ்வரிதான். ஆனாலும் கூட அவளைப் பார்க்கையில் காந்தனும், அவன் தன் மகளுக்குச் செய்த துரோகமும் நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

தளிரைச் சாப்பாட்டு மேசையில் அமர்த்திவிட்டுப் போய், அவள் தேநீரையும் சின்னவளின் பாலையும் எடுத்துக்கொண்டு வந்து, தானும் அமர்ந்துகொண்டாள் அன்பினி. வாயால் ஊதி ஊதி சின்னவளுக்குப் பாலைக் கொடுத்தபடி தன்னுடையதையும் பருகினாள்.

அப்போதுதான் எழுந்து, முகம் கழுவிக்கொண்டு வந்தான் அபயன். அன்பினியும் தளிரும் சாப்பாட்டு மேசையில் இருக்கவும் வந்து எதிரில் அமர்ந்தான். “மாமா!” என்று அவனிடம் தாவினாள் தளிர்.

“மாமான்ர செல்லம் நேசரிக்கு போக வெளிக்கிட்டாச்சோ?”

“ம்ஹூம்! நான் போகேல்ல!” தலையைப் பெரிதாய் ஆட்டி மறுத்தாள் சின்னவள்.

“பிறகு அம்மா அடிப்பா. பரவாயில்லையா?” என்றான் அவன் சிரித்துக்கொண்டு.

அவர்களை நேராகப் பாராதபோதும் மனக்கண்ணால் உணர முடிந்த அன்பினியால் அங்கே இருக்க முடியவில்லை. எப்படி இப்படி அவனால் இயல்பாக இருக்க முடிகிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. எழுந்து போகலாமா என்று நினைக்கையில், “உனக்கும் தேத்தண்ணி போடவா தம்பி?” என்று குசினிக்குள் இருந்து குரல் கொடுத்தார் பரமேஸ்வரி.

பார்வை தன்னிச்சையாய் மனைவியை நோக்க, “நீங்க விடுங்கம்மா. அன்பா போடுவாள் எனக்கு.” என்று சொன்னான் அபயன்.

அவள் உடல் விறைத்து நிமிர்ந்தது. ஆனாலும் அசையாது அவளையே பார்த்தான். வேறு வழியில்லாமல் எழுந்து போனாள் அன்பினி.

அவள் மகனுக்குத் தேநீர் ஊற்றுவதைக் கண்ட பரமேஸ்வரி, சற்றே நிம்மதியாக உணர்ந்தார்.

தேநீரைக் கொண்டுவந்து அவன் முன்னால் வைத்தபோது, அவளின் தேநீர்க் கோப்பை வற்றிப்போயிருந்தது.

முகம் மாறாமல் காக்க அவள் போராடிக்கொண்டு இருக்கையில், “தளிர், நேரமாகுது வாம்மா, நேசரிக்கு வெளிக்கிடோணும்!” என்றுகொண்டு வந்தாள் சுபாங்கி.

ஒரு தயக்கம் சூழ்ந்தாலும், “அண்ணி, தளிரை நான் வெளிக்கிடுத்தவா?” என்று மெல்ல வினவினாள் அன்பினி.

சுபாங்கியின் முகம் சட்டென்று கடுத்துப்போனது. “இந்த வீட்டில அபயனுக்கு மனுசியா இருக்கிற வேலைய மட்டும் பார்! அதவிட்டுப்போட்டு அண்ணி கிண்ணி எண்டுகொண்டு வந்தியோ பல்லைத் தட்டிக் கைல தந்திடுவன்!” என்றுவிட்டு அபயனிடமிருந்த மகளைப் பறித்துக்கொண்டு திரும்பி நடந்தாள் சுபாங்கி.

சட்டென்று விழிகள் நிறைந்துவிட அதிர்ந்துபோய் நின்றாள் அன்பினி.

error: Alert: Content selection is disabled!!