கேட்பார் இன்றிக் காதல் – 33

அத்தியாயம் 33

சுபாங்கி தன்னுடன் இணக்கமாகப் பழகமாட்டாள் என்று அன்பினி எதிர்பார்த்தாள்தான். என்றாலும் இத்தனை கடுமையை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. கண்ணீரைக் கண்களுக்குள் இழுத்துப் பிடித்தபடி அபயனைப் பார்த்தாள். இறுகிவிட்ட முகத்தோடு தன் முன்னிருந்த தேநீர்க் கோப்பையிலேயே பார்வையைப் பதித்திருந்தான் அவன்.

பரமேஸ்வரியும் இதை எதிர்பார்க்கவில்லை. வேகமாகச் சமாளித்து, “அன்பு, குடிச்ச தேத்தண்ணிக் கோப்பைகளை எடுத்துக்கொண்டு வாங்கோம்மா.” என்று குரல் கொடுத்தார்.

அவர் முகம் பாராமல் கோப்பைகளைக் கொண்டுபோய் சிங்கில் போட்டுவிட்டு, அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாள் அன்பினி. உள்ளத்தில் பெரும் இரைச்சல்.

வார்த்தைகளைக் கத்தியாக வீசிய சுபாங்கி, அதற்காய்த் தமக்கையைக் கடியாத அபயன், எதுவுமே நடக்காததுபோல் காட்டிக்கொள்ள முயன்ற மாமியார் மூவரும் அவள் வாழ்க்கை இனி இந்த வீட்டில் எப்படி இருக்கும் என்று அவளுக்குக் காட்டியது போலுணர்ந்தாள்.

தமையனின் தவறிய நடத்தையும், அதுவரையில் அண்ணா, அண்ணி, அண்ணன் மகள் என்று அழகிய கூடாக இருந்த குடும்பம் உடைந்து போனதும், மொத்த வீட்டின் நிம்மதியும் தொலைந்து போனதும், அதைத் தொட்டு அவள் உயிராய் நம்பியவன் அவளுக்குச் செய்த துரோகம் என்று அவளுக்குள்ளும்தானே காயங்களும் கவலைகளும் நிறைந்து கிடக்கின்றன. மனம் விட்டுப் பேசவும், தோள் சாய்ந்து அழவும் யாருமற்று நிற்கிறாள்.

அப்படியிருக்க நியாயமே இல்லாமல் இப்படிக் காயப்படுத்துகிறார்களே. அவளுக்கு வலிக்கும் என்று தெரியாதா?

கழிவிரகத்தில் விழிகள் கலங்க முயல, ‘இல்லை, நான் உடையக் கூடாது’ என்கிற பிடிவாதத்துடன் அவள் நிமிர்கையில் அறைக்குள் வந்தான் அபயன்.

திடுக்கிட்டு அவள் திரும்பிப் பார்க்க, பைக் திறப்பை எடுத்துக்கொண்டு போனான்.

தளிரை நேசரிக்குத் தயார் செய்து, சுபாங்கி வெளியே அழைத்து வந்தபோது, பைக்கில் தயாராக நின்றிருந்தான் அபயன்.

அவளைப் பாராமல், சின்னவளைத் தூக்கி முன்னால் அமர்த்திவிட்டு, அவளின் குட்டி நேசரி பாக்கையும் வாங்கி ஹாண்டிலில் கொழுவிக்கொண்டு அவன் பைக்கை உதைத்துக் கிளப்ப, “உனக்கும் என்னில கோவம் வருது என்னடா?” என்றாள் சுபாங்கி.

வேகமாய்த் திரும்பித் தமக்கையைப் பார்த்தான் அபயன்.

“நான் கொஞ்சம் கோவமாக் கதைச்சிட்டன் எண்டு எனக்கே தெரியும். ஆனா, அவளைப் பாக்கிற நேரமெல்லாம் நான் தோத்து நிக்கிறதுதான் நினைவுக்கு வருது. நான் என்ன செய்ய?” என்றாள் குரல் உடைய.

“நீங்க ஒண்டுமே செய்ய வேண்டாம்.” என்றான் அவன் வேகமாக. “அதவிட நீங்க தோக்கேல்ல அக்கா. அவன்தான் உங்களை மாதிரி நல்ல வாழ்க்கைத் துணையை இழந்திட்டான். அதால கண்டதையும் யோசிக்காமப் போய்ச் சாப்பிட்டுட்டு வேலைக்கு நடவுங்க.” என்றான் கரிசனை மிகுந்த குரலில்.

“கோவம் இல்லையேடா?” குரல் அடைக்க வினவினாள்.

“அக்கா!”

“அவளைக் கொஞ்சம் என்னட்ட இருந்து தள்ளி இருக்கச் சொல்லு. என்னால பொறுமையாப் போகேலாம இருக்கடா.” என்றவளுக்கு என்ன முயன்றும் முடியாமல் கண்ணீர் வழிந்தது.

“அக்கா, என்ன இது வீட்டுக்கு வெளில நிண்டு அழுதுகொண்டு? நான் அவளிட்டச் சொல்லி விடுறன். நீங்க போங்க.” என்றுவிட்டுப் புறப்பட்டவனின் மனம் கனத்துக் கிடந்தது.

கண்ணில் நீருடன் ‘உன் அக்கா பேசிய பேச்சுக்கு நீ என்ன செய்யப் போகிறாய்?’ என்று பார்த்த தாரமும், ‘என் மீது கோவப்படாதே’ என்று அழுத தமக்கையும் இரு புறமும் நிற்க, அவன் யாருக்காக நிற்பான்?

நடுநிலையில் நின்றால் கூடக் காயப்பட்டுவிடும் நிலையில் இருக்கும் தமக்கையை வைத்துக்கொண்டு அவனால் மனைவி புறம் சுண்டுவிரலைக் கூட அசைக்க முடியவில்லை. ஒரு நெடிய மூச்சுடன் தளிரைக் கொண்டுபோய் நேசரியில் இறக்கிவிட்டான்.

மகளிடம் கோபப்பட்டுவிடுவாரோ என்கிற பயத்தில் பரமேஸ்வரியும் நடந்த விடயத்தைக் கணவரிடம் கொண்டு போகவில்லை.

அதேநேரம், “என்ர மகளுக்காக இதைச் சொல்லேல்ல அன்பு. அவா தைரியமா இருக்கிற மாதிரி வெளில காட்டுறாவே தவிர உள்ளுக்க நல்லா உடஞ்சுபோயிருக்கிறா. அதால அவா ஏதும் சொன்னா, அதைப் பெருசா எடுக்காதீங்கோம்மா.” என்று, மகள் நிலையை அன்பினிக்கு விளக்கினார்.

அவளும் கண்ணை எட்டாத சின்ன முறுவலோடு, “என்ர அண்ணா, அண்ணிக்குச் செய்தது எவ்வளவு பெரிய துரோகம் எண்டு எனக்கும் தெரியும் மாமி.” என்றாள் சுருக்கமாக.

அன்றைக்குப் பிறகு, அபயன் சொல்லும் அவசியம் இல்லாமலேயே, சுபாங்கி இருக்கிற பொழுதுகளில் அவசியம் தாண்டி அறையை விட்டு அன்பினி வெளியே வருவதேயில்லை. தானாகவே ஒதுங்கிக்கொண்டாள். தளிர் கூட இவர்களின் அறைக்கு வந்துதான் அவளோடு விளையாடுவாள்.

விருந்துக்கு அழைக்கட்டுமா என்று கேட்ட அன்னையிடம் கூட எதுவும் வேண்டாம் என்றுவிட்டாள். தமக்கையைக் காயப்படுத்தும் எந்தக் காரியத்தையும் அபயன் செய்யமாட்டான் என்று தெரியும். தாலி கட்டியதும் நேராக இங்கேயே வந்தவன் அவன். தெரிந்துகொண்டே எதற்கு அழைத்து, அவன் மறுத்து, மனம் நோக?

*****

அபயன் கொழும்பு வந்து இரண்டு நாள்களாகியிருந்தன.
அந்த வீட்டில் யாரோடும் ஒட்டாமல், தன்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அன்பினி சுருக்கிக்கொள்ள, தமக்கையும் தமக்கையைக் கருத்திற்கொண்டு அவன் அன்னையும் அவளைத் தள்ளி வைத்திருப்பது தெரிந்தே விட்டுவிட்டு வந்தது, அவனை நிம்மதியாக வேலை பார்க்க விடவில்லை.

அதுவும் அவன் கொழும்புக்குப் புறப்படும் நேரம், அவனுடைய அந்த நாற்காலியில் தன் விரல்களை ஆராய்ந்தபடி அமர்ந்திருந்தவளின் தோற்றம், அவனை வெகுவாய்ப் பாதித்திருந்தது. அவளை அணைத்துக்கொள்ள வேண்டும்போல் எழுந்த உந்துதலில் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். தளிர் அங்கே இல்லாமல் இருந்திருக்க அது நிச்சயம் நடந்திருக்கும்.

அவளை அழைத்துவந்து தன்னுடனேயே வைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றிவிடவும் சட்டென்று அவளுக்கு அழைத்தான்.

அது, இரவு பத்தை நெருங்கிய பொழுது. அவன் அறையில் இல்லாதது ஒருவித ஆசுவாசத்தைத் தந்த அதே நேரம், மனத்தில் அவளுக்கு அமைதியும் இல்லை. அந்த வீட்டில் அவள் வாழ வந்து பத்து நாள்களாயிற்று. கொஞ்சம் கூட ஒட்டிக்கொள்ள முடியவேயில்லை.

தளிரினி இருப்பதால் ஏதோ சமாளிக்கிறாள். கூடவே குழந்தைவேலுவிடம் கேட்டு, கொஞ்ச நேரம் தந்தையின் கடைக்குச் சென்று வர ஆரம்பித்திருப்பதும் மெல்லிய ஆறுதல்.

முடிந்தபோதெல்லாம் இந்துமதியையும் சென்று பார்த்துக்கொண்டு வருவாள். தளிரினியைப் பார்க்க அவர் மிகவுமே ஏங்குவது அப்படியே தெரிந்தது. தந்தையின் வார்த்தைக்கு அடங்கி, தன் ஆசையை அடக்கிக்கொண்டு நாள்களைக் கழித்துக்கொண்டிருந்தார்.

இப்படியே இன்னும் எத்தனை நாள்களுக்கு இந்த வாழ்க்கையை வாழ முடியும்? இனி என்னாகும் என்று அவளுக்குள் ஓராயிரம் கேள்விகளும் குழப்பங்களும்.

இப்படி அவள் சிந்தனை எங்கென்றில்லாமல் அலைந்துகொண்டு இருக்கையில்தான் அபயன் அழைத்தான்.

அவள் நெஞ்சிலோ பெரும் அதிர்வு. தமையனைப் பற்றி அறிந்து, ஆறுதல் தேடும் குழந்தையாகத் தவித்துப்போய் அவனுக்கு அவள் அழைத்ததும், அவன் அவளை முற்றிலுமாகத் தடை செய்ததும், அதையறிந்து அன்று அவள் பட்ட பாடுகளும் கண்முன்னே வந்து போக, கைப்பேசியையே வெறித்திருந்தாள்.

இரண்டு முறை அழைத்து ஓய்ந்தது. விடாமல் மூன்றாவது முறையும் அழைக்க, பக்கத்து அறைகளில் இருப்பவர்களுக்குக் கேட்டுவிடுமோ என்கிற பயத்தில் சத்தத்தை நிறுத்திவிட்டு, விழிகளை இறுக்கி மூடிக்கொண்டு படுத்துக்கொண்டாள்.

அதன் பிறகு அபயன் அழைக்கவில்லை. தன் கைப்பேசியையே வெறித்துக்கொண்டிருந்தான். நிச்சயமாக உறங்கியிருக்க மாட்டாள் என்று அவன் மனது அடித்துச் சொன்னது. அப்படியே உறங்கியிருந்தாலும் கூட இத்தனை முறை அழைத்த சத்தத்துக்கு விழித்து, அழைப்பை ஏற்றிருக்க முடியும். ஆக, அவள் வேண்டுமென்றுதான் செய்கிறாள்.

அன்னைக்கு அழைத்து அவளிடம் கொடுக்கச் சொல்லலாமா என்று ஓடிய யோசனையைத் தூக்கிப் போட்டவன் அடுத்தநாள் காலை, மீண்டும் அழைத்தான். அப்போதும் அவள் ஏற்கவில்லை.

இந்தமுறை விடக் கூடாது என்று தோன்றிவிட, உடனே அன்னைக்கு அழைத்து, அவள் எங்கே என்று விசாரித்தான்.

“இஞ்சதானப்பு இருக்கிறா.” காலை நேரத்துச் சமையலுக்கு அவருக்கு உதவியபடி நின்றவளைத் திரும்பிப் பார்த்துவிட்டுச் சொன்னார் பரமேஸ்வரி.

“அவளின்ர ஃபோன் எங்க எண்டு கேளுங்கம்மா.”

அவன் குரலில் இருந்த கோபத்தின் காரணம் புரியாது, “அன்பு, உங்கட ஃபோன் எங்கம்மா? தம்பி கேக்கிறான்.” என்று அவரும் அவன் கேட்கச் சொன்னதைக் கேட்டார்.

“அறைக்க மாமி.” முகம் மாறாமல் காத்தபடி சொன்னாள் அன்பினி.

அது அவன் காதிலும் விழுந்ததில், “அவளோட கதைக்கோணும். போய் எடுக்கச் சொல்லுங்க.” என்றுவிட்டு உடனேயே அவளுக்கு அழைத்தான்.

இனிப் பேசாமல் இருக்க முடியாது என்பதில் அறைக்குச் சென்று, அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.

“நீ வேணுமெண்டுதானே எடுக்கேல்ல.” என்றான் அவன் எடுத்ததுமே.

பொய் சொல்ல விருப்பம் இல்லாமல் அமைதி காத்தாள் அன்பினி.

“ஒரு அவசரம் ஆபத்துக்கு எடுத்தாலும் இப்பிடித்தான் கதைக்காம இருப்பியா அன்பா?”

அப்படியான ஒரு நேரத்தில்தானே அவளும் அவனைத் தேடி அழைத்தாள். ஏனோ அவளுக்கு அதைக் கேட்க வேண்டும் போலில்லை. தண்டிக்கப்பட்டுவிட்ட பிறகு நியாயம் கேட்டு வாதாடுவதில் என்ன வந்துவிடப் போகிறது?

அவளின் அமைதி அவனுக்கு எதை உணர்த்தியதோ! “அன்பா!” என்றான் பேச வார்த்தைகளற்று.

அவள் அமைதி தொடர்ந்தது. அவனுக்கோ ஏன் அழைத்தோம் என்பதே மறந்த நிலை.

“சாப்பிட்டியா?”

“ம்”

“அக்கா ஏதும் சொன்னவாவா?”

“இல்ல.”

“தளிர் என்ன செய்றா?”

“அவா அண்ணிட்ட.”

“நீ இங்க என்னோட வந்து இருக்கிறியா?” இதற்குள் தன்னைச் சமாளித்துக்கொண்டிருந்தவன் அவளிடம் கேட்க நினைத்ததைக் கேட்டான்.

“இல்ல இல்ல! நான் இங்கயே இருக்கிறன்.”

வேகமாக அவள் பதில் சொன்னது அவனைப் பாதித்தது. “அங்க இருந்து என்ன கிழிக்கப் போறாய்?” என்றான் சூடாக.

“அது அப்பாக்கு ஹெல்ப்… கடையப் பாக்கோணும்.”

“இவ்வளவு காலமும் அவருக்கு நீயா பாத்துக் குடுத்தனி?”

இல்லைதான். இவ்வளவு காலமும் இருந்த தெம்பும், தைரியமும் இப்போது அவரிடம் இல்லையே. இருப்பதுபோல் நடித்துக்கொண்டிருக்கிறார். அதை அவனிடம் சொல்ல விருப்பம் இல்லாமல் மீண்டும் மௌனமானாள்.

“இப்பிடி எல்லாத்துக்கும் அமைதியா இருந்தா என்ன அர்த்தம் அன்பா?” என்று சினந்தவன், “நீ அங்க இருந்தா வீண் சண்டை சச்சரவு வரப்பாக்கும். என்னாலயும் இங்க நிம்மதியா வேலையைப் பாக்கேலாது. நீ வா!” என்றான் அழுத்தி.

“இல்ல. நான் இங்கயே இருக்கிறன். எனக்கு இஞ்ச ஒரு பிரச்சினையும் இல்ல.”

அவனுக்குச் சுள் என்று ஏறிவிட, “அங்கேயே இரு. அதுக்குத்தானே கலியாணம் நடந்தது.” என்றுவிட்டுப் பட்டென்று அழைப்பைத் துண்டித்தான்.

அமைதியாய் இருந்தே அவனை ஆட்டுவிக்கும் அவளை எப்படி நெருங்குவது, என்ன விளக்கம் கொடுப்பது என்று அவனுக்குத் தெரியவேயில்லை.

*****

செய்த தப்புகளும், அதை மறக்கவிடாத தனிமையும் காந்தனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்ல ஆரம்பித்திருந்தன. போகிற போக்கில் மனநோயாளியாகிப் போவோமோ என்கிற பயம் இப்போதெல்லாம் அடிக்கடி வர ஆரம்பித்திருந்தது.

அப்படி இருக்கையில்தான் அபயன் அன்பினிக்குத் திருமணமான விடயம் அவன் காதுக்கு எட்டியிருந்தது. மனத்தில் மெல்லிய சந்தோசம் ஒன்று எட்டிப் பார்க்க, உள்ளம் இயல்பாய்த் தன் மகளைத் தேடிற்று.

தந்தை சொன்ன வார்த்தைகளையும் மீறி அவளைப் பார்க்க நேசரிக்கு வந்தான். அபயன் கொழும்பில் இருந்ததில் அன்று குழந்தைவேலுதான் தளிரை அழைத்துச் செல்ல வந்திருந்தார்.

இவனைக் கண்டதும் அப்படி ஒரு கோவம். நேராக அவன் முன்னே சென்று நின்று, “இங்க என்னத்துக்கு வந்து நிக்கிறீர்?” என்றார் அடக்கிய சினத்துடன்.

“பிளீஸ் மாமா, எந்தப் பிரச்சினைக்கும் வரேல்ல. எனக்குத் தளிரைப் பாக்கோணும்.” என்று கெஞ்சினான்.

“அப்பிடி எல்லாம் பாக்கேலாது. நடவும் கெதியா!” என்று விரட்டினார். இப்போதுதான் தளிரை அவன் பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவர ஆரம்பித்திருக்கிறார்கள். திரும்பவும் இவன் வந்து முகத்தைக் காட்டிவிட்டுப் போக, இவனை நினைத்து நினைத்து அழுவது அவரின் பேத்தியாயிற்றே.

“சும்மா பாத்திட்டு மட்டும் போறனே.”

“இப்ப போகப் போறீரா இல்ல உம்மட அப்பாவைக் கூப்பிடவா?” என்று அவர் கைப்பேசியை எடுக்கவும், “இல்ல நான் போறன். ஆனா சுபாவோட கதைச்சு நான் தளிரைப் பாக்கிறதுக்கு என்ன வழி எண்டு கேளுங்க மாமா. பதினஞ்சு நாளைக்கு ஒருக்கா எண்டாக்கூட எனக்குப் போதும். அவளைப் பாக்காம என்னால இருக்கேலாது. இல்லையோ, பிள்ளையப் பாக்கிறதுக்கு என்ன வழி எண்டு நான் பாக்க வேண்டி வரும்.” என்றுவிட்டு அவன் போகவும் குழந்தைவேலுவே கொஞ்சம் ஆடித்தான் போனார்.

விடயம் அறிந்த சுபாங்கி கொதித்துப் போனாள். “பாத்தீங்களா, நான் சொல்ல சொல்ல ஆருமே கேக்கேல்லை தானே? அவன் இவ்வளவு நாளும் அடங்கிப் போனதே அவன்ர தங்கச்சிய அபயன் கட்டட்டும் எண்டுதான். இப்ப கலியாணம் முடிஞ்சதும் தன்ர குணத்தைக் காட்டுறான். எங்க அவள்? ஊமக்கோட்டான் மாதிரி இருந்து இருந்தே காரியம் சாதிக்கிறவள்?” என்று சீறினாள்.

சரியாக அதே நேரம் தந்தையின் கடைக்குச் சென்றிருந்த அன்பினி, ஸ்கூட்டியைக் கொண்டுவந்து வீட்டின் முன்னே நிறுத்தினாள்.

error: Alert: Content selection is disabled!!