அத்தியாயம் 34
வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கையிலேயே நிலவரம் என்னவோ சரியில்லை என்று கண்டுகொண்டாள் அன்பினி. அவளின் கணிப்புச் சரிதான் என்று சொல்லும் விதமாய், “இந்தா வாறாள் பாருங்கோ, ஒண்டுமே தெரியாதவள் மாதிரி நடிச்சுக்கொண்டு!” என்று கொதித்தாள் சுபாங்கி.
‘நடிக்கிறாள்’ என்கிற அந்த வார்த்தை சுருக்கென்று நெஞ்சைத் தைத்தாலும், “என்ன அண்ணி?” என்றாள், என்ன நடந்தது என்று தெரியாமல்.
“அண்டைக்கு எல்லா சொன்னனான், என்னை அண்ணி எண்டு கூப்பிடாத எண்டு!” என்று சீறிவிட்டு, “கலியாணம் நல்லபடியா முடிஞ்சுது, இனி அவே ஒண்டும் செய்யேலாது, வந்து தளிரைக் கேளுங்க எண்டு அந்தக் கேவலம் கெட்டவனிட்டச் சொல்லியிருக்கிறாய் என்ன?” என்றாள் கோபமாக.
அப்போதுதான் என்ன நடந்திருக்கிறது என்று ஓரளவுக்கு ஊகிக்கவே முடிய, “இல்ல, நான் அண்ணாவோட கதைக்கிறேல்ல.” என்றாள் அவசரமாக.
“பச்சப் பொய்யச் சொல்லாத. நம்ப வச்சுக் கழுத்தறுக்கிறது எல்லாம் உங்கட குடும்பத்துக்குப் புதுசா என்ன?”
துடித்துப்போய் அன்பினி பார்க்க, “விடுங்கோ சுபா. அதுதான் கதைக்கேல்ல எண்டு சொல்லுறா எல்லா.” என்று அவளைத் தணிக்க முயன்றார் குழந்தைவேலு.
“இவளின்ர கதையை நம்புறீங்களாப்பா நீங்க? அவன்ர தங்கச்சி இவள். ஏமாத்திறதும் பொய் சொல்லுறதும் இவளுக்கெல்லாம் ஒரு விசயமே இல்ல! அபயன விரும்பிப்போட்டு அதே வீட்டில இருந்த என்னட்ட ஒரு வார்த்த கூடச் சொல்லாமல் மறச்சவள்தானே!” என்றாள் சினத்துடன்.
அந்த வயதில் தைரியமில்லாமல் செய்த ஒன்று இன்று இப்படித் திரும்பி நிற்கும் என்று அவளுக்கு என்ன தெரியும்? பேச வார்த்தைகள் வராமல் அவள் நிற்க, “போதும் சுபா. பொறுமையா இருங்கோ. அவன் கேட்டுட்டான் எண்டதுக்காக எல்லாம் தளிரைத் தூக்கிக் குடுக்கேலாது.” என்று, அப்போதும் குழந்தைவேலுதான் சமாளிக்கப் பார்த்தார்.
சுபாங்கி அதைக் கேட்க வேண்டுமே. “இன்னும் என்னப்பா பொறுமையா இருக்கோணும்? அவன் அவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்தும் தளிருக்காகப் பொறுமையாத்தான் இருக்கிறன். இந்தா இவளைத் தம்பிக்குக் கட்டிவைக்கப் போறன் எண்டு நீங்க சொன்ன நேரமும் வாய மூடிக்கொண்டுதான் இருந்தனான். இப்ப வந்து பிள்ளையைக் கேக்கிறான். இப்பவும் பொறுமையா இருக்கோணுமா நான்? இப்பிடி எல்லாத்தையும் இழந்துபோட்டு நான் ஏன் வாழ? இல்ல ஆருக்காக வாழ?” என்றாள் கோபம் எல்லையைக் கடக்க.
அதற்குமேல் நொடியும் யோசிக்காமல் தமையனுக்கு அழைத்தாள் அன்பினி.
இனி என்ன நடக்குமோ என்று பயந்துகொண்டு இருந்த காந்தனும் வேகமாய் அழைப்பை ஏற்று, “அன்பு!” என்றான் தவிப்பும் தடுமாற்றமுமாக.
“தளிர் அண்ணிட்டையே இருக்கட்டும். அவவைப் பாக்கப்போறன், அவவோட கதைக்கப்போறன் எண்டுகொண்டு வராதீங்க. உங்களால நாங்க பட்டதெல்லாம் போதும். இனியாவது நிம்மதியா இருக்க விடுங்க. இல்ல எனக்குப் பிள்ளை வேணும், நான் வருவன், எனக்கு உரிமை இருக்கு எண்டு சண்டைக்கு ஏதும் வருவீங்க எண்டா சொல்லுங்க, நான் எங்கயாவது போயிடுறன். உங்களுக்குத் தங்கச்சியாப் பிறந்து படுற பாடெல்லாம் போதும் எனக்கு.” கண்ணீருடன் சொன்னவள், அவன் பதிலைக்கூட எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்துவிட்டு நிமிர்ந்து, “இனி அண்ணா பிரச்சினைக்கு வரமாட்டார் மாமா.” என்று குழந்தைவேலுவிடம் சொல்லிவிட்டு நடந்தவள் நின்று சுபாங்கியைப் பார்த்தாள்.
“அண்ணா செய்த பிழைக்கு ஊர் உலகம் உங்களைக் குறை சொல்லுறது எப்பிடி நியாயம் இல்லையோ, அப்பிடித்தான் அவர் செய்த பிழைக்கு எங்கட குடும்பத்தை இழுத்து நீங்க கதைக்கிறதிலயும் எந்த நியாயமும் இல்ல. அதுவும் உங்களையும் ஒரு மகளாப் பாத்த அம்மா அப்பாவைப் பற்றிக் கதைக்காதீங்க. உங்களுக்காகவே தளிரைக் கூடப் பாக்க வராமத் தள்ளி இருக்கினம்.” என்று சொல்லிவிட்டு உள்ளே நடந்தவளுக்கு உள்ளம் பச்சைப் புண்ணாய் வலித்தது.
யாரிடமும் ஆற வழியில்லை. மனம் விட்டுப் பேச ஒருவர் இல்லை. ஏற்கனவே போதும் போதும் என்கிற அளவுக்குக் காயப்பட்டு, மகள் வாழ்க்கையும் நன்றாக இருக்குமா என்று சதா பயந்தபடி இருக்கும் பெற்றவர்களிடம் போய் இதையெல்லாம் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை.
எப்போதும்போல் அனைத்தையும் தனக்குள்ளயே விழுங்க முயன்றாள். முடியவேயில்லை. ஏன் இப்படியானது, ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று மனம் பழையபடி பரிதவிக்க ஆரம்பித்தது.
தகப்பனின் மூலம் விடயமறிந்த அபயன், “அவனுக்கு ஒரு கால் முறிஞ்சது காணாது போல அப்பா. மற்றக் காலையும் முறிச்சுப் போட்டாத்தான் அடங்குவான்.” என்று கொதித்தான்.
“தம்பி, எல்லாம் போதும். நீ அவனோட சண்டைக்குப் போறதுக்காக நான் உனக்கு இதையெல்லாம் சொல்லேல்ல. நீ அங்கேயும் அன்பு இஞ்சயும் எண்டு ஏன் இருக்கிறீங்க? வந்து அவாவையும் கூட்டிக்கொண்டு போகலாமே.” என்றார் அவர்.
தேவையில்லாமல் தமக்கையிடம் பேச்சுக் கேட்ட மனைவியின் நினைவிலும் பல்லைக் கடித்தான் அபயன். அவன் வரச் சொல்லி அழைத்தபோதே வந்திருக்க இதைத் தவிர்த்திருக்கலாமே!
அவரிடம் ஒன்றும் சொல்லாமல், “நான் வாறன் அப்பா. வந்து அவளைக் கூட்டிக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவனுக்கு அன்பினி இதையெல்லாம் எடுத்துத் தனக்குச் சொல்லாததும் கவனத்தில் பதிந்தது.
உடனேயே முல்லைத்தீவுக்குப் புறப்பட்டான்.
இப்படி அடுத்த நாள் காலையிலேயே அபயன் வந்து நிற்பான் என்று அன்பினி எதிர்பார்க்கவில்லை. அதுவும் அவளை முறைத்துக்கொண்டு. தந்தையின் கடைக்குப் புறப்பட்டவள் போகாமல் நின்றாள்.
தந்தை அவனோடு பேசியதை அறியாத சுபாங்கியும் அவன் வரவை எதிர்பார்க்கவில்லை. “என்னடா, சனிக்கிழமைதான் வருவன் எண்டு சொல்லிப்போட்டுத் திடீரெண்டு வந்து நிக்கிறாய்?” என்று விசாரித்தாள்.
ஒருகணம் தயங்கினாலும், “அன்பாவக் கூட்டிக்கொண்டு போகப்போறன் அக்கா.” என்றான் வேறு சொல்லாமல்.
ஒரு கணம் அவனைக் கூர்ந்தவளின் முகம் கடுத்தது. “உனக்கு அவளை ஒரு சொல்லுச் சொன்னாப் பிடிக்காது என்ன? அண்டைக்கும் அவளைச் சொல்லீட்டன் எண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு நிண்டவன்தானே நீ? முந்தியும் அப்பிடித்தான். காதலிச்சீங்களா எண்டு கேட்டதுக்கு நீ மூச்சும் விடேல்ல. பிறகு அப்பா கேக்க ஓம் எண்டு சொன்னனி என்னடா. எல்லாரும் ஒழிப்பும் மறைப்பும். வாழ்க்கைல ஆரையுமே நம்பக் கூடாது எண்டுதான்டா எல்லாரும் பாடம் படிப்பிக்கிறீங்க.” என்று கொதித்தாள்.
“அக்கா, சும்மா நீங்களா எதையாவது கதைக்காதீங்க. நான் ஏற்கனவே அம்மாவோடயும் அப்பாவோடயும் கதைச்சிட்டன். அன்பாட்டையும் சொல்லிட்டன். அப்பாவைக் கேட்டுப் பாருங்க. எப்பிடியும் இந்தச் சனிக்கிழமை வந்து கூட்டிக்கொண்டுதான் போயிருப்பன். எனக்கு அவனை ஒருக்காப் போய்ப் பாத்து, தளிரைப் பாக்கிறதுக்காக அப்பிடி என்ன வெட்டிக் கிழிக்கப்போறான் எண்டு கேக்கோணும். அதாலதான் இப்பவே வந்தனான். அவ்வளவுதான். நான் ஒருக்கா வவுனியாவுக்குப் போயிட்டு வாறன்.” என்றவன், “நீ தேவையானதை எல்லாம் எடுத்து வை, நாளைக்கு விடிய வெளிக்கிடோணும்.” என்றான் அன்பினியிடம்.
“தம்பி, அதான் அதெல்லாம் வேண்டாம் எண்டு சொன்னேனே.” என்று அவசரமாக மறுத்தார் குழந்தைவேலு.
“அப்பிடியெல்லாம் விடேலாது அப்பா. பேசாம இருந்தா என்னவும் கதைக்கலாம் எண்டு நினைச்சிட்டானா? என்ன எண்டு கேட்டுக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு எழுந்து அறைக்கு நடந்தான்.
அன்பினிக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. எல்லோர் முன்னும் புறப்படு என்று சொன்னவனிடம் மறுக்க முடியவில்லை. ஆனால், அவளின் அம்மா, அப்பா? அவர்களைப் பற்றி இங்கே யாரும் யோசிப்பதுபோல் தெரியவில்லை. இதில் இவன் வேறு வவுனியாவுக்குப் போகிறேன் என்கிறான். மனம் கலங்கிவிட என்றுமில்லாது அன்று அவன் பின்னால் தானும் அறைக்கு வந்தாள்.
திரும்பிப் பார்த்தவன் அவள் என்றதும், “உனக்கு இஞ்ச ஒரு பிரச்சினை நடந்தா எனக்கு எடுத்துச் சொல்லேலாது என்ன?” என்று அதட்டினான்.
“நீங்க வவுனியாவுக்குப் போக வேண்டாமே.”
ஒருகணம் அவளையே கூர்ந்துவிட்டு, “ஏன்?” என்றான் அவன்.
“அது… நான் அண்ணாட்டச் சொல்லிட்டன். இனி அவர் வரமாட்டார்.”
“அண்ணா? இன்னும் அவனில பாசம் இருக்கு. அந்தளவுக்கு நல்லவன் என்ன?” என்றவனின் முகத்தில் மெல்லிய கோபம் படர்ந்தது.
அவள் விழிகள் திரும்பவும் கலங்காவா என்றன. அவன் தமக்கை, அண்ணி என்று சொல்லாதே என்கிறாள். இவன், அண்ணாவை அண்ணா என்று சொல்ல வேண்டாம் என்கிறான். அவர்கள் இருவருக்குமே ஒரு பிள்ளை போன்று வளர்ந்தவள் அவள். அவளால் அது முடியவில்லை என்று எப்படிச் சொல்வது என்று தெரியாத போதும், “நான் அவருக்காகக் கதைக்கேல்ல!” என்றாள் முணுமுணுப்பாக.
“பின்ன ஆருக்காக?”
“அது… சும்மா வீண் பிரச்சினைகள் என்னத்துக்கு எண்டுதான்.” என்றாள் அவனைப் பாராமல்.
“அதான், ஆருக்கு வீண் பிரச்சினைகள் வரும் எண்டுறாய்?” அவளிடமிருந்து பதில் வாங்கியே தீருவேன் என்கிற தொனியில் வினவினான்.
“எல்லாருக்கும்தான்.”
“எல்லாருக்குமா, எனக்கா?”
அவள் பதில் சொல்லாமல் முகம் திருப்பி நின்றாள்.
ஒரு கணம் அவளையே இமைக்காது பார்த்தவன் அவள் கரம் பற்றி உள்ளே இழுத்து, அறையின் கதவைச் சாற்றிவிட்டு, அவளை இறுக்கி அணைத்தான்.
இதை எதிர்பாராதவளின் உடல் அதிர்ந்து மீண்டது. விழிகளை இறுக்கி மூடிக்கொண்டு அப்படியே நின்றாள்.
அவளின் அசைவற்ற நிலையைக் கண்டு நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். பார்க்க பார்க்க அத்தனை மாதங்களாக அவனைச் சூழ்ந்திருந்த இறுக்கங்கள் எல்லாம் விலகுவது போலிருந்தது. “எல்லாத்துக்கும் சொறியடி!” என்று தன்னை மீறிச் சொல்லியபடி, அவள் உதட்டில் தன் உதட்டினை அழுத்தி எடுத்தான்.
திகைப்புடன் நிமிர்ந்தவளின் விழிகள் கலங்கியிருந்தன. அந்த விழிகளையே பார்த்தவனின் உள்ளத்தில் எதுவோ உடையும் சத்தம். தன் கைகளாலேயே அவள் கண்களைத் துடைத்துவிட்டபடி, “சரி, நான் அங்க போகேல்ல. ஆனா நீ என்னோட வரோணும். இஞ்ச இருந்தா இப்பிடி ஏதோ ஒண்டு நடந்துகொண்டேதான் இருக்கும். அது வேண்டாம்.” என்றான் இதமான குரலில்.
“அம்மா அப்பா?” அவளும் அருகில் இல்லாமல் அவர்கள் இன்னுமே தனித்துப் போவார்கள் என்று நினைக்கவே அவள் விழிகளில் மீண்டும் நீர் சேர்ந்தது.
அவனுக்கும் புரிந்தது. அதற்காக அவளை விட்டுவிட்டுப் போக அவன் தயாராயில்லை. “இப்போதைக்கு ஒண்டும் செய்யேலா அன்பா. நீ என்னோட வந்துதான் ஆகோணும்.” என்றான்.
இன்றைய நிலையில் சுபாவிடமிருந்து விலகி இருக்கத்தான் அவளும் ஆசைப்பட்டாள். அதில் அவள் தலை சரி என்பதுபோல் ஆடியது.
“எனக்கு உன்னட்ட நிறையக் கதைக்கோணும் அன்பா. ஆனா எந்த முகத்தை வச்சுக்கொண்டு கதைக்கிறது எண்டு தெரியேல்ல. நீ முதல் அங்க வா!” என்று அவன் சொன்னபோது, அவள் முகத்தில் மெல்லிய நிழல் படிந்தது. மெல்ல அவனிடமிருந்து விலகினாள்.
அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் மீண்டும் அவளை இழுத்து அணைத்து, “சத்தமே இல்லாமக் கோவத்தைக் காட்டுறதுக்கு உன்னட்டத்தான்டி டியூஷனுக்கு வரோணும்.” என்றுவிட்டு வெளியே நடந்தான்.
அவர்களுக்குள் ஒன்றும் இன்னும் சரியாகவில்லை. இலகுவில் அது சரியாகப் போவதும் இல்லை. ஆனாலும் மனத்திலிருந்து அவளிடம் கேட்ட மன்னிப்பும், அவளை அணைத்து முத்தமிட்டதும் சேர்ந்து, அவன் உள்ளத்தை இலேசாக்கிற்று. கள்ளுண்ட வண்டைப் போன்று மெல்லிய மயக்க நிலையில் மனம் திளைத்தது.

