கேட்பார் இன்றிக் காதல் – 35

அத்தியாயம் 35

மகனும் மருமகளும் புறப்படுவது மெல்லிய வருத்தத்தைத் தந்தாலும் எதிரும் புதிருமாக இருக்கும் அவர்கள் இருவரும் இணைவதற்கு இந்தத் தனிமை உதவி செய்யும் என்று நம்பி, நல்லபடியாகவே விடைகொடுத்தனர் குழந்தைவேலுவும் பரமேஸ்வரியும்.

சுபாங்கி ஒதுங்கியே நின்றுகொண்டாள். தான் ஒரு வார்த்தை சொன்னதும் வந்து மனைவியை அழைத்துப்போகும் அபயனின் செய்கை, அவன் என்ன காரணம் சொன்னாலும் அவளைக் காயப்படுத்தியிருந்தது.

அவளின் அந்த அமைதியே அவள் மனநிலையைச் சொல்ல, அன்பினியைக் காரில் ஏற்றிவிட்டு அவளிடம் வந்தான் அபயன்.

“எப்பவும் சொல்லுறதுதான், எனக்கு என்ர அக்கா முக்கியம், அவா என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் அவாக்குப் பக்கபலமா நான் இருப்பன். அது என்ர அக்காக்கும் தெரியும் எண்டு நம்புறன். தெரியும்தானே?” என்று அவள் கரமிரண்டையும் பற்றி அவன் வினவியபோது, கண்களில் நீர் திரள, “நீ கதைக்கிறதில கெட்டிக்காரன் எண்டு எனக்குத் தெரியுமடா. அதால பேசாமப் போ!” என்று பொய்யாய் அவனை விரட்டினாள் சுபாங்கி.

“உண்மைக்கு மதிப்பில்லை எண்டுறது உண்மைதான் போல” என்று சிரித்துவிட்டு, “எப்பவும் மாதிரி ஒவ்வொரு சனி ஞாயிறும் வருவன் அக்கா. என்ன எண்டாலும் கோல் பண்ணுங்க.” என்றபடி விடைபெற்றுக்கொண்டான்.

இவர்கள் புறப்படுவதை அறிந்தால் தளிர் அழுவாள் என்று அவள் விழிக்க முதல், அதிகாலையிலேயே பயணத்தை ஆரம்பித்திருந்தார்கள்.

அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த அன்பினி, தன் துன்பத்தை எல்லாம் நெஞ்சுக்குழிக்குள்ளேயே அடக்கிக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தாள்.

முதல் நாள் மாலை தாய் தந்தையரைப் போய்ப் பார்த்துக்கொண்டு வந்திருந்தாள். அவள் கொழும்பு போகப்போவதை அறிந்ததும் இந்துமதிக்குக் கண்ணீரை அடக்கவே முடியவில்லை.

அவள் வாழ்க்கைக்கு இதுதான் நல்ல முடிவு என்று புத்தி எடுத்துரைக்காமல் இல்லை. ஆனால், திருமணமானதிலிருந்து தினமும் அவள் வந்துபோய்க்கொண்டு இருந்ததால்தான் கொஞ்சமாவது சமாளித்தார். இனி?

கொஞ்ச நாள்கள் போகட்டும், தளிரையும் கூட்டிவரப் பார்க்கிறேன் என்று வேறு சொல்லியிருந்தாள். இனி அதுவும் நடக்காது.

திருநாவுக்கரசுக்கும் மகளைப் பிரிவது இலகுவாய் இல்லை. தினமும் காலையில் கடைக்குப் போனதும் அவள் வரவை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பார். பகல் உணவை இருவருமாக வீட்டுக்கு வந்து உண்பதும், கொஞ்ச நேரம் என்றாலும் மூவருமாகக் கழிக்கும் அந்தப் பொழுதும், மாலையானதும் அவள் சொல்லிக்கொண்டு புறப்படுவதும் என்று அந்த வாழ்க்கைக்குப் பழகியிருந்தார்.

இனி மீண்டும் தனியாகவே எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். மனைவி, மகள் அறியாமல் ஒரு நெடிய மூச்சை வெளியேற்றிவிட்டு, “என்னத்துக்கு இந்த அழுகை? கொழும்பு என்ன அவ்வளவு பெரிய தூரமா? இல்ல, பிள்ளை இஞ்சையும் அபயன் அங்கேயும் இருக்கிறதுதான் உனக்கு வேணுமா?” என்று கோபம் போன்று அவர் அதட்டவும்தான் இந்துமதி கொஞ்சமாவது தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டார்.

அதன்பிறகு அவளுக்கு என்னென்ன வேண்டும், என்ன கொண்டு போகலாம் என்று அவர் பரபரக்க ஆரம்பித்துவிட, கண்ணீரைக் கண்களுக்குள் தேக்கியபடி அமர்ந்திருந்தாள் அன்பினி.

மகள் மனநிலையை அறிந்த திருநாவுக்கரசு, அவளருகில் வந்து அமர்ந்து, அவள் தலையை வருடிக்கொடுத்தார். திரும்பி அவரைப் பார்த்தவளுக்கு அதற்குமேல் நெஞ்சின் புழுக்கத்தை நெஞ்சுக்குள்ளேயே வைத்திருக்க முடியவில்லை.

“ஏன் அப்பா இப்பிடி எல்லாம் நடக்குது? எனக்கு உங்களை எல்லாம் விட்டுட்டுப் போகவே விருப்பம் இல்ல. போகாம இருக்க வழியும் இல்ல. இந்த அண்ணா ஏன் இவ்வளவு பெரிய பிழையச் செய்தவர்? எவ்வளவு சந்தோசமா இருந்தம். எல்லாம் போச்சு. அங்கயும் ஆரும் சந்தோசமா இல்லை அப்பா.” என்று அழுதபடி அவர் தோள் சாய்ந்தாள்.

தகப்பனின் நெஞ்சமும் கலங்கிப்போனது. இந்துமதியாவது அவரிடம் வாய்விட்டு அரற்றி, கண்ணீரில் தன் கவலைகளைக் கரைப்பார்.

அவர் அப்படியில்லை. பகல்களை வேலையில் ஓட்டிவிடுவார். இரவுகள் முழுக்கக் கொட்ட கொட்ட விழித்திருந்து, நல்லது கெட்டதுகளைச் சொல்லிக்கொடுத்துத்தானே வளர்த்தோம், பிறகும் ஏன் இவ்வளவு பெரிய தப்பைச் செய்தான், அவன் இப்படிப் போனதில் என் பங்கு என்ன என்று யோசித்து யோசித்து, நெஞ்சுக்குள்ளேயே வைத்து மருகிக்கொண்டிருக்கிறார்.

அதே கேள்வியையே மகள் கேட்கையில் என்ன சொல்வார்?

எதையும் காட்டிக்கொள்ளாமல், “அம்மாச்சி, எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். பிறகு எல்லாம் சரியாகிடும். நீங்க எங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கிறதை விட எங்களுக்குப் பெரிய சந்தோசம் என்ன தெரியுமா? நடந்ததை எல்லாம் மறந்து, உங்கட மனுசனோட நீங்க சந்தோசமா வாழுறதை நாங்க பாக்கிறதுதான். சரியா?” என்று தேற்றியிருந்தார்.

என்னதான் ஆயிரம் சமாதானங்களை அவளுக்குச் சொல்லி அனுப்பிவைத்தாலும், நிச்சயமாய் அவர்கள் அங்கே நிம்மதியாக உறங்கிக்கூட இருக்க மாட்டார்கள் என்று தெரியும்.

போவதற்கு முதல் ஒருமுறை அவர்களைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவளுக்கு அவர்கள் என்றால் அவர்களுக்கு அவள்தானே இருக்கிறாள். ஆனால், அருகில் இருக்கிறவனிடம் அதைக் கேட்க விரும்பாமல், கைப்பேசியிலேயே விடைபெற்றிருந்தாள்.

“இவே ஏன் இஞ்ச நிக்கினம்?” திடீர் என்று கேட்ட அபயனின் குரலில் சிந்தனை கலைந்து, திரும்பி அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் அன்பினி.

“உன்ர அம்மா, அப்பா.” வீதியைக் காட்டிச் சொன்னான் அவன்.

அப்போதுதான் அவளும் கவனித்தாள். பைக் ஒரு பக்கமாக நிற்க, அவர்கள் இருவரும் இவர்கள் வரும் வழியையே பார்த்துக்கொண்டு வீதியோரமாக நின்றிருந்தனர். “காரை நிப்பாட்டுங்க பிளீஸ்.” பரிதவிப்புடன் அவசரமாகச் சொன்னாள்.

அவனும் இதை எதிர்பார்க்கவில்லை. இப்படி அவர்கள் வீதியில் நிற்பது அவன் மனத்தை ஒரு மாதிரித் தாக்க, காரைக் கொண்டுபோய் அவர்கள் அருகில் நிறுத்தினான். “அம்மா!” வேகமாகக் கதவைத் திறந்துகொண்டு இறங்கி ஓடினாள் அன்பினி.

“அது, பயணம் அனுப்ப வந்தனாங்க.” காரை விட்டு இறங்கிய அபயனிடம் அவன் எதையும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்றெண்ணிச் சொன்னார் திருநாவுக்கரசு.

“அதுக்கு என்ன மா…மா.” தடுமாறிச் சொன்னவனால் அவர் முகம் பார்க்க முடியவில்லை. அன்று வீடு வந்தவர்களிடம் கோபமாகப் பேசியதும், திருமணத்தின்போது அவர்கள் முகம் பார்க்காமலேயே அனைத்தையும் செய்ததும் இன்று உறுத்தியது.

நால்வருக்கும் மேலே என்ன பேசுவது என்று தெரியாத நிலை.

இந்துமதிதான் கண்களைத் துடைத்துக்கொண்டு, “தம்பி, உங்கட அக்காவை மாதிரித்தான் எங்கட பிள்ளையும். உங்களை நம்பினதைத் தவிர வேற எந்தப் பிழையும் செய்யேல்ல. எங்கட மகன் செய்த பிழைக்காக அவாவைத் தண்டிச்சுப் போடாதீங்கோ. பாவம், சின்ன பிள்ளை. இன்னும் வாழ்க்கை எண்டா என்ன எண்டே தெரியாது. சந்தோசமா வச்சு வாழுவீங்க எண்டு நம்பி, உங்களோட அவாவை அனுப்பி வைக்கிறம். நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா இருக்கோணும். எங்களுக்கு இந்த நிம்மதிய மட்டுமாவது தந்திடுங்கோ. வேற ஒண்டும் வேண்டாம்.” என்று கேட்டபோது, அபயன் கொஞ்சம் தடுமாறிப்போனான்.

“கவலைப்படாதீங்க மாமி. நாங்க நல்லாருப்பம். நீங்க யோசிக்காதீங்க.” என்றான் தன்னை மீறிய உணர்வுகளின் உந்துதலில்.

பெரியவர்களுக்கு அவன் உறவுமுறை சொல்லிப் பேசியதே பெரும் ஆறுதலைத் தந்தது. அதில் கொஞ்சம் உள்ளம் தெளிய, “நேரமாகுது, வெளிக்கிடுங்கோ. போறது புது இடத்துக்கு, கவனம் என்னம்மா.” என்று ஆதூரத்துடன் அவள் தலையை வருடி விடைகொடுத்தனர். அபயனும் ஒரு தலையசைப்புடன் விடைபெற்றுக்கொண்டான்.

இவர்களின் கார் மறையும் வரையில் பார்த்து நின்ற அவர்கள் இருவரையும் கண்டு, அன்பினி கண்ணீர் உகுத்தாள் என்றால்
அபயன் பேச வார்த்தைகளற்று வாகனத்தைச் செலுத்தினான்.

இன்று நிதானம் திரும்பிவிட்ட நேரத்தில் யோசிக்கையில் அவர்களும் மிகுந்த பரிதாபத்துக்குரியவர்களாகவே தெரிந்தனர். யார் என்ன சொன்னால் என்ன என்று மகனைச் சேர்த்துக்கொண்டிருக்கலாம். இப்படித் தனியாக நிற்க வேண்டும் என்று கட்டாயமில்லை.

சட்டப்படி போனால் தளிர் அவர்களிடமும் போகும் நிலை வரும். ஆனாலும் அதையெல்லாம் செய்யாமல், ஒதுங்கியே இருப்பவர்களின்பால் அவன் மனமும் கசிந்து போயிற்று.

“அவே ரெண்டுபேரும் தனிச்சுப்போய் நிக்கினம் எண்டுறது கவலைதான் அன்பா. ஆனா, ஒரு துணை கட்டாயம் வேணுமே வேணும் எண்டுற நிலமயும் இல்லைதானே. எண்டாலும் பொறு, இதுக்கு ஏதாவது கட்டாயம் செய்வம்.” என்றான் அவள் மடியில் கிடந்த கரம் பற்றி.

அவள் கண்ணீர் உகுத்தாளே தவிர்த்துப் பதிலேதும் சொல்லவில்லை. ஒருமுறை அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “அன்பா, அழாத. அதான் என்ன செய்யலாம் எண்டு பாக்கிறன் எண்டு சொல்லுறன்தானே.” என்றான் பற்றியிருந்த அவள் கரத்தில் அழுத்தம் கொடுத்து.

அப்போதும் ஒன்றும் சொல்லாதவள் அவனிடமிருந்து தன் கரத்தை மட்டும் விடுவித்துக்கொண்டாள்.

திரும்பி அவளைப் பார்த்தான் அபயன். கண்களைத் துடைத்துக்கொண்டு நகரும் தெருவோரத்தில் பார்வையைப் பதித்து அமர்ந்திருந்தாள் அவள். அதுவரையில் அவள் பெற்றோர் பற்றிய யோசனையில் இருந்தவனின் உள்ளம், அவர்கள் இருவருக்குமான வாழ்க்கைப் பக்கம் திரும்பிற்று.

“எனக்கு எப்பவுமே நான் பெரிய இவன் எண்டு ஒரு நினைப்பு இருக்கிறது அன்பா.” திடீரென்று அவன் அப்படிச் சொல்லவும் திகைத்துத் திரும்பிப் பார்த்தாள் அன்பினி.

“நான் வச்சதுதான் சட்டம், என்னை மீறி எதுவும் நடக்காது, எனக்குப் பிடிச்ச மாதிரித்தான் வாழுவன் எண்டு நிறைய…” என்றவனின் உதட்டோரம் கசந்த புன்னகை. “அதெல்லாம் எவ்வளவு முட்டாள்தனமான நினைப்பு எண்டு பட்ட பிறகுதான் தெரியுது.” என்றவனையே இமைக்காது பார்த்தாள் அவள்.

“செய்றதை எல்லாம் செய்துபோட்டு, எனக்கும் உனக்கும் கலியாணம் நடக்கிற வரைக்கும் வெளில சொல்லாத எண்டு அக்காவை மிரட்டி இருக்கிறான். அதைக் கேட்டதில இருந்து கோவம் எண்டுறதை விட வெறியே வந்திருந்தது எனக்கு. என்ன செய்து அவனை அழ வைக்கலாம் எண்டுதான் மண்டைக்குள்ள ஓடிக்கொண்டே இருந்தது. அந்த நேரம் நீ, நான், எங்கட காதல், நான் உனக்குத் தந்த நம்பிக்கை எதுவும் எனக்கு நினைவில இருக்கவே இல்ல. அக்கா அக்கா அக்கா மட்டும்தான். நடுவில பிரச்சினைகள் வராம இருந்திருந்தா நிச்சயம் அந்தக் கலியாணம் நடந்துதான் இருக்கும்.” என்று அவன் சொன்னபோது, வேகமாகப் பார்வையை விலக்கிக்கொண்டவள் கண்களில் கண்ணீர்.

இது அவள் அறிந்த உண்மைதான். ஆனாலும் அவன் வாயால் கேட்கையில் வலித்தது. அவனுக்கும் காரைச் செலுத்த முடியவில்லை போலும். ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அப்படியே அமர்ந்திருந்தான். பின் மௌனமாகவே கண்ணீர் உகுக்கும் அவள் முகம் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தான்.

அன்று விடிந்ததிலிருந்தே அழுதழுது சிவந்துபோயிருந்த அவள் கண்களையே பார்த்து, “எந்தக் காரணத்துக்காகவும் உன்ன மிஸ் பண்ணிடவே கூடாது எண்டு உன்ன விடாமத் துரத்தி துரத்திக் காதலிச்சவன் நான். அப்பிடியான எனக்கும் உன்ன இழக்கிறது ஈஸியா இருக்கேல்ல. எனக்கும் வலிதான், வேதனைதான். என்ன செய்ய? நான் அக்காக்குத் தம்பியாப் போய்ட்டனே. நீ அவனுக்குத் தங்கச்சியாப் போய்ட்டியே. என்ர வலி வேதனையை விட அக்கான்ர நிம்மதி முக்கியமா இருந்தது. அண்டைக்கு அவாக்காக என்னவும் செய்யத் தயாரா இருந்த நான், என்ர காதலையும் துறக்கத் தயாராயிட்டன். ஆனாலும் இன்னொருத்திக்குப் பக்கத்தில நிக்கிறது ஈஸியா இருக்கேல்ல. வலிக்க வலிக்கத்தான் நிண்டனான். அது என்னவோ உனக்குச் செய்ற பாவத்துக்கு எனக்கு இந்தத் தண்டை வேணும் எண்டமாதிரி இருந்தது.” என்றபோது இலேசாகச் சிரித்தாள் அவள்.

அவன் பேச்சை நிறுத்திவிட்டுப் பார்த்தான்.

“அந்த செயினை என்ன சொல்லி என்ர கழுத்தில போட்டு விட்டீங்க?”

“அன்பா?”

“அப்ப நான் ஆர் உங்களுக்கு?”

அவன் பதிலற்று அவளையே பார்த்தான்.

“ஒரு பொம்பிளைப் பிள்ளை, வீட்டில ஆருமே இல்லாத நேரம், ஒரு ஆம்பிளைய அவளின்ர பெட்ரூம் வரைக்கும் அனுமதிக்கிறாள் எண்டா அதின்ர அர்த்தம் என்ன?” கோபப்படாமல், கத்தாமல், குரல் உயர்த்தாமல் அவள் கேட்ட கேள்வி அவனை வாள்கொண்டு அறுத்தது.

அவன் பதிலற்றுப் பார்க்க, “ஏன் இந்த விளக்கமெல்லாம்? நான் கேக்கவே இல்லையே. காரை எடுங்க!” என்றுவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அன்பினி.

error: Alert: Content selection is disabled!!