அத்தியாயம் 37
அன்று அபயனுக்குப் பிறந்தநாள். காலையிலேயே எல்லோரும் எடுத்து வாழ்த்தினார்கள். தளிர் கூடத் தன் மழலையில் மாமனுக்குப் பிறந்தநாள் வாழ்த்தினைச் சொல்லியிருந்தாள்.
இத்தனைக்கும் மத்தியில் அவன் பக்கத்திலேயே இருந்த அன்பினி வாழ்த்தவேயில்லை. அவள் முகத்தை எதிர்பார்ப்புடன் பார்த்துப் பார்த்தே சோர்ந்துபோனான் அபயன்.
இத்தனை நாள்களும் நான் செய்தது பெரும் தவறுதானே என்றிருந்த நிலை மாறி, ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவனை ஏமாற்றுவதை அன்று தொட்டு இன்று வரை அவள் விடவேயில்லை என்று மனம் சுருண்டு போனது.
அலுவலகத்திலும் குட்டி பார்ட்டியே நடந்தது. மனைவியின் ஒதுக்கம் அவனை அதில் முழு மனத்துடன் கலந்துகொள்ள விடவில்லை. தீரா வலியொன்று நெஞ்சுக்குள் இருந்து நமநமத்தது.
அவனுடைய சீனியர் திவாகருக்கு முழுமையாக இல்லாதபோதிலும் ஓரளவுக்கு அவன் குடும்பத்தில் நடக்கும், நடந்துகொண்டிருக்கும் பிரச்சனைகள் தெரியும். அதில், அன்று இரவு உணவுக்குக் கணவன் மனைவி இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்திருந்தான்.
திவாகர், அவன் மனைவி வேதிகா, அவர்களின் ஒற்றைப் பெண் குழந்தை அருவி என்று அவர்களுடையது அழகான குடும்பம். அருவி நன்றாகவே அன்பினியோடு சேர்ந்துகொண்டாள்.
கொழும்பு வந்த புதிதில் அன்பினியை அலுவலகத்துக்கே அழைத்துவந்து அறிமுகம் செய்திருந்தான் அபயன். ஆனாலும் அமைதியான பெண் என்பதைத் தாண்டி அவளைப் பற்றி அவர்களுக்குப் பெரிதாகத் தெரியாது. இன்று குழந்தையோடு இயல்பாக விளையாடும் அன்பினியைத் திவாகர், வேதிகா இருவருக்கும் மிகவுமே பிடித்துப்போனது.
இயல்பான உரையாடலோடு இரவுணவு நல்லபடியாகவே முடிந்தது.
“அப்ப உங்கட அன்பா என்ன கிஃப்ட் தந்தவா அண்ணா?” எதேற்சையாக வினவினாள் வேதிகா.
அன்பினிக்கு இலேசான முகம் மாறியது. அவளை ஒரு பார்வை பார்த்த அபயன், “நீ எனக்குத் தந்த கிஃப்ட் என்ன எண்டு நீயே சொல்லு அன்பா.” என்றான் வேண்டுமென்றே.
அவள் முகம் கறுத்துவிடாமல் இருக்கப் போராடினாள்.
அப்படி அவளை அவர்கள் முன்னே நிற்க வைத்ததும் பிடிக்காமல், “இப்ப நான் போட்டிருக்கிற இந்த உடுப்பும், இன்னொரு செட்டும்.” என்று தானே சமாளித்தான் அபயன்.
உதட்டைப் பற்றியபடி அருவியோடு விளையாடுவதுபோல் பாவனை காட்டினாள் அன்பினி.
அன்று முழுக்க அவன் எதிர்பார்ப்புடன் தன் முகம் பார்ப்பது அவளுக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், ஒரு காலத்தில் அவன் கோபமாக இருக்கிறான் என்று தெரிந்தும்கூட, பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துவிட வேண்டும் என்று அவனைத் தேடிக்கொண்டு போயிருக்கிறாள். அவன் அவமானப்படுத்தியபோதும் கண்ணீருடன் அவனுக்குக் குறுந்தகவல் அனுப்பியிருக்கிறாள்.
ஆனால் இன்று? அவளும் காலையிலிருந்து ஒரு வாழ்த்தைச் சொல்லிவிடுவோம் என்றுதான் நினைக்கிறாள். உதட்டளவில் என்றுமே அவனோடு உரையாடி அறியாதவளால் அது முடியவேயில்லை. கடந்துபோன அவளின் பிறந்தநாளுக்கு மட்டும் அவன் வாழ்த்தினானா என்ன? அப்போது அவர்கள் பிரிந்திருந்தார்கள்தான் என்றாலும் கண்ணீருடன்தானே கடந்தாள்.
அவளின் அந்த பிடிவாத அமைதியே அவன் கோபத்தைக் கிளறிக்கொண்டிருந்தது. வேதிகாவுக்கு எந்த வித்தியாசமும் தெரியாதபோதும் திவாகர் என்னவோ சரியில்லை என்று கண்டுகொண்டான். பல்கலைக் காலத்திலிருந்தே அவனுக்கு அபயனைத் தெரியும். அதில் அவனைத் தனியாக அழைத்துச் சென்று, “என்னடா?” என்று விசாரித்தான்.
“ஒண்டுமில்லை அண்ணா.” தன் வீட்டு விசயத்தைப் பகிர மனமில்லாமல் சொன்னான் அபயன்.
“என்ன எண்டு சொல்லு அபய். விடுப்பு அறிய நினச்சுக் கேக்கேல்லை. என்னால உனக்கு ஏதும் ஹெல்ப் பண்ணேலுமா எண்டுதான் கேக்கிறன். அன்புவோட ஏதும் சண்டையா?”
எதை எப்படிச் சொல்வது என்று தெரியாமல், இருண்ட வானத்தில் பூத்துக்கிடந்த ஒன்றிரண்டு விண்மீன்கள் மீது அசிரத்தையாய்ப் பார்வையைப் படரவிட்டிருந்தவன் அப்போதும் அமைதியாகவே நின்றான்.
“டேய் என்னடா? அந்தப் பிள்ளை அவ்வளவு அமைதியா இருக்கிறா. நீ ஏதும் அவவின்ர தமையனில இருக்கிற கோவத்தை அவாட்டக் காட்டுறியா? அது கூடாது அபய்!” என்றவனின் பேச்சில்,
“நீங்க வேற அண்ணா. இந்த நாளே முடியப்போகுது. இன்னும் வாயத் திறந்து ஒரு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லேல்ல அவள். அவள் அமைதியா? அந்த அமைதிக்குப் பின்னால பெரிய சுனாமியையே வச்சிருக்கிறாள்.” என்றான் மனம் விட்டுப்போன குரலில்.
“என்னடா சொல்லுறாய்?” உண்மையாகவே திவாகர் இதை எதிர்பார்க்கவில்லை.
சற்று நேரம் அமைதியில் கழிய, “கொஞ்ச நாள் பொறடா. எல்லாம் சரியாகும்.” என்றான் திவாகர் ஆறுதலாக.
அவர்கள் வீடு வந்து சேர்வதற்குப் இரவு பத்து மணியாகியிருந்தது. அப்போதும் உடை மாற்றிக்கொண்டு அவள் அவள்பாட்டில் கட்டிலில் சரியாப்போக, அதற்குமேல் முடியாமல் அவளைப் பிடித்து நிறுத்தி, “எனக்கு விஷ் பண்ணு அன்பா!” என்றான் ஒருவிதப் பிடிவாதத்துடன்.
அவள் மெல்லிய திகைப்புடன் பார்க்க, “எனக்குக் கோவம் வருது அன்பா. உன்னை நோகடிச்சிடுவனோ எண்டு பயமா இருக்கு. ப்ளீஸ், ஒரு வாழ்த்துத்தானே. சொல்லடி.” என்றான் கெஞ்சலாக.
“அபய்…”
அவ்வளவு கேட்டும் அவள் சொல்லவில்லை என்பது அவனைத் தன்னிலை இழக்க வைத்தது. அவளின் பின் கழுத்தில் கையைக் கொடுத்துத் தன்னிடம் இழுத்து, “ஒரு வாழ்த்துச் சொல்லேலாத அளவுக்குத் திமிர் என்னடி உனக்கு! மரியாதையா வாயத் திறந்து சொல்லு!” என்று அவள் முகத்தின் முன்னே சீறினான்.
அவளுக்குப் பயம் பிடித்துக்கொண்டது. பின் கழுத்து வேறு அவன் பிடியில் வலிக்க, “நீங்க முதல் விடுங்க. எனக்கு நோகுது(வலிக்குது)” என்றாள் கண்ணீருடன்.
“நீ முதல் சொல்லு, விடுறன்!”
“எனக்குச் சொல்ல வரேல்லையே. நான் என்ன செய்ய?” என்றாள் கண்ணீர் கன்னத்தில் வழிய.
அப்படியே நின்றுவிட்டான் அவன். “அந்தளவுக்கு மோசமாடி நான்?” என்றான் தளர்ந்துபோய். “வேணுமெண்டு எதையும் செய்யேல்ல அன்பா. ஆனா இப்ப நீ செய்றது எல்லாம்…” என்றவன் அதற்குமேல் எதுவும் பேச முடியாமல் அவளை விட்டு விலகினான்.
அன்பினியின் உள்ளம், நிறைய நாள்களுக்குப் பிறகு அவனுக்காய்த் துடித்தது. “அபய், ஹாப்…” என்றவளின் வாயில் வேகமாகத் தன் விரல்களை வைத்துப் பேசவிடாமல் செய்தான் அபயன்.
“தயவு செய்து இனிச் சொல்லிடாத. சொன்னியோ இன்னும் மோசமா எனக்கு நானே தெரிவன். இனி எனக்கு உன்ர வாழ்த்து வேண்டாம்.” என்றுவிட்டு பால்கனியில் சென்று நின்றுகொண்டான்.
இங்கே அன்பினியும் கட்டிலில் விழுந்து கண்ணீர் உகுத்தாள்.
அவன் கோபத்தை, ஆத்திரத்தை, ஏன் கொஞ்சலைக்கூட அனுபவித்திருக்கிறாள். அவளிடம் உருகும் அபயைக்கூட அவளுக்குத் தெரியும். இப்படித் தளர்ந்து கலங்கியவனை அவள் பார்த்ததேயில்லை.
அன்றைய இரவு இருவருக்குமே உறங்கா இரவாகிப்போனது. அடுத்த நாள் காலை, அவன் அவன் பாட்டுக்குப் புறப்பட்டு அலுவலகத்துக்குச் சென்றிருந்தான்.
அவன் முகத்தைப் பார்த்துவிட்டு என்ன என்று விசாரித்தான் திவாகர்.
“எப்பவும் போலச் சின்ன சண்டை அண்ணா.” என்றான் அபயன்.
அதற்குமேல் விசாரிக்கப் போகாமல், “அவாவை டிரைவிங் பழகச் சேர்த்துவிடு அபய். சிங்கள வகுப்புக்கும் விடு, முடிஞ்சா வேலைக்கு அனுப்படா. பிள்ளை எண்டு வந்திட்டா பிறகு இதெல்லாம் செய்றது ஈஸி இல்ல.” என்று மட்டும் சொல்லிவிட்டுப் போனான் அவன்.
அப்போதுதான் ஆசிரியையாக வேண்டுமென்பது அவள் கனவு என்பது அவனுக்கு நினைவிலேயே வந்தது. அப்போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாளே. இப்போது அதை மறந்துவிட்டாளா என்ன?
அவனும்தானே அவளின் எதிர்காலக் கனவுகளை எல்லாம் மறந்துபோனான். இதில் அவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து வேண்டிக் கிடக்கிறது!
*****
முதல் வேலையாக டிரைவிங் பழகுவதற்கும், சிங்கள வகுப்புக்கும் சேர்த்துவிட்டான். அடுத்ததாகத் திருநாவுக்கரசுடன் பேசி, அவளை வேலைக்கு விண்ணப்பிக்க வைத்தான். கிடைக்கும் என்கிற நம்பிக்கை அவளுக்கு இல்லை. கிடைத்தாலும் எப்படியும் போக முடியாது என்பதில் பெரிதாக மறுப்புச் சொல்லாமல் அவளும் விண்ணப்பித்துவிட்டாள்.
ஆனால், யாருமே எதிர்பாரா வண்ணம் வெகு விரைவிலேயே யாழ்ப்பாணத்தில், ஒரு பின் தங்கிய ஊரில் கிடைத்திருந்தது. அவளை வேலைக்கு அனுப்ப ஆசைப்பட்ட அவனே அவ்வளவு தூரத்துக்கு அனுப்புவதா என்று யோசித்தான். அவன் இங்கு, இரு வீட்டுப் பெற்றோரும் முல்லைத்தீவில், அவள் யாழ்ப்பாணம் என்று இது தேவையா என்று இருந்தது.
அவளுக்கு இன்னும் தெரியாது. திருநாவுக்கரசு இவனுக்குத்தான் அழைத்துச் சொல்லியிருந்தார். அவனுடைய அலுவலக உடைகளை அயர்ன் செய்துகொண்டிருந்தவளிடம் ஒரு நெடிய மூச்சுடன் விடயத்தைச் சொன்னான்.
செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டுவிட்டு, நம்ப முடியா வியப்புடன் அவனைப் பார்த்தாள் அன்பினி. கிடைக்கும் என்றே அவள் எதிர்பார்க்கவில்லை. இதில் இவ்வளவு விரைவாக என்றால்…
“அது ஏதோ புது ஸ்கீம்ல ஆக்களை எடுக்கினமாம்.” என்று தகவல் சொன்னான் அவன்.
அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. கிடைத்த வேலையை விட விருப்பமில்லை. ஆனால், இது சரியான முடிவுதானா என்கிற கேள்வி எழுந்தது.
“சேர்ந்திருந்தா நாங்க சந்தோசமா இருப்பம் எண்டு அம்மா அப்பா நினைச்சினம். எனக்கு என்னவோ கொஞ்சக் காலத்துக்குப் பிரிஞ்சிருந்தா எல்லாம் சரியாகுமோ எண்டு இருக்கு.” என்றான் அவளையே பார்த்து.
பிரிவா? அவள் இதை யோசிக்கவில்லையே. நெஞ்சுக்குள் எதுவோ அடைக்க, “இல்ல, எனக்கு இந்த வேலை வேண்டாம்.” என்றாள்.
“ஏன்?”
“இவ்வளவு நாளும் இல்லாம இப்ப என்னத்துக்கு?”
இது என்ன பதில் என்று பார்த்தான் அவன்.
அவள் அமைதியாய் நிற்க, “நீ போறாய். அதுதான் எல்லாருக்கும் நல்லது. உனக்கும் தெளிவா ஒரு முடிவெடுக்கிற மாதிரி இருக்கும்.” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுப் போனான் அவன்.

