கேட்பார் இன்றிக் காதல் – 38

அத்தியாயம் 38

அன்பினிக்கு வேலை கிடைத்தது சந்தோசம் என்றாலும் அதற்காய் அவள் யாழ்ப்பாணம் போவதில் இருவீட்டுப் பெரியவர்களுக்கும் உடன்பாடு இல்லை. ஆனால், அபயன் தன் முடிவிலிருந்து மாறவேயில்லை.

அடுத்த வாரத்தில் அவள் வேலையில் சேர வேண்டும் என்கிற நிலையில் அவளோடு முல்லைத்தீவுக்கு வந்தான். பெற்றவர்களோடு இருக்க அன்பினி பிரியப்பட்டதில் அவளை அவர்களின் வீட்டில் விட்டிருந்தான்.

பரமேஸ்வரி அம்மாவுக்கு நடப்பது ஒன்றும் பிடிக்கவேயில்லை. “இந்தப் பெடியனுக்கு விசர். ஒழுங்கா அன்புவோட இருந்து நிம்மதியா வாழுற வழியப் பாக்காம அவா அங்கேயும் இவன் இங்கயும் எண்டு இருக்கப் போறானாம். எடுத்துச் சொன்னாலும் கேக்கிறேல்ல.” என்று புலம்பிக்கொண்டிருந்தார்.

நடப்பவற்றுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல் சுபாங்கி இருக்க, “என்ன பிள்ளை. ஒண்டுமே சொல்லாம இருக்கிறீங்க? நீங்களாவது தம்பிக்கு எடுத்துச் சொல்ல வேண்டாமா?” என்றார் மனம் பொறுக்காமல்.

“நான் சொல்லிக் கேக்கிற காலமெல்லாம் எப்பவோ காணாமப் போயிட்டுது அம்மா.” என்றாள் அவள் வெற்று முறுவல் ஒன்றுடன்.

“ஆனா ஒண்டு, நானும் இப்பிடித்தான் அவனை நம்பி வவுனியாவுக்கு அனுப்பினான். கடைசில எப்பிடி நிக்கிறன் எண்டு பாருங்க. இப்ப அதே பிழையத்தான் அபயனும் செய்றான்.” என்றதும் தாய் வீட்டிலிருந்து நடந்து வந்த அன்பினி அப்படியே நின்றுவிட்டாள்.

நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி. அவளை நம்பவில்லையா அவளின் அண்ணி?

“என்னம்மா இப்பிடிச் சொல்லுறாய்? அன்பு அப்பிடி இல்லை.” பரமேஸ்வரியின் ஆழ்மனத்திலும் ஒரு பயம் இருந்ததில் அவர் மறுப்பில் பெரிய திடமில்லை.

“அவனையும் நான் அப்பிடித்தான் நினைச்சனான்.”

அதற்குமேல் அவர்களின் பேச்சைக் கேட்க முடியாமல் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாள் அன்பினி.

சுபாங்கி அசையாமல் இருக்க, பரமேஸ்வரிக்கு நடுங்கிப் போனது. “என்னம்மா வந்திட்டீங்க? ரெண்டு நாளைக்கு அங்க நிக்கப் போறீங்களாம் எண்டு தம்பி சொன்னானே.” என்றார் சாதாரணமாகப் பேச முயன்றபடி.

“ஓம் மாமி, ஆனா இவர்தான் அங்க யாழ்ப்பாணத்தில தங்க ஒரு இடம் பாத்திருக்கிறாராம். போய்ப் பாத்துக்கொண்டு வருவம் எண்டு, வெளிக்கிட்டு வரச்சொன்னவர்.” என்று பதிலிறுத்துவிட்டு அறைக்கு நடந்தாள். அவள் உள்ளத்தில் எரிமலையின் வெடிப்பு.

அவளை அறியாதவர்கள் தெரியாதவர்கள் பேசுவது வேறு. அவளைப் பற்றி நன்கு அறிந்த இவர்களே இப்படிச் சொன்னால் எப்படி? பிறகு எப்படி அவள் தமையனை வைத்து அவர்கள் வீட்டுப் பெண்ணை யாராவது ஏதாவது சொன்னால் மட்டும் கோபப்படுகிறார்களாம்? மனம் குமுறியது.

அப்போது, அறை வாசலில் மெதுவாக வந்து நின்றார் பரமேஸ்வரி. அவள் பார்க்க, “கேக்கிறன் எண்டு குறை நினைக்காதீங்கோ அன்பு. இப்ப இந்த வேலை தேவைதானா?” என்று நயமாய் வினவினார்.

“போதும் போதும் எண்டுற அளவுக்கு எல்லாரின்ர மனதுக்கையும் கவலைகள் நிறைஞ்சு கிடக்கம்மா. நீங்க ரெண்டு பேருமாவது சந்தோசமா வாழோணும் எண்டுதான் ஆசைப்படுறம். இன்னும் கொஞ்சக் காலம் போனபிறகு, ஒரு பிள்ளை வந்த பிறகு வேலைக்குப் போகலாமே. கலியாணம் வேற இப்பதானே நடந்தது.” என்று தன்மையாக எடுத்துச் சொன்னார்.

“என்னச் சந்தேகப்படுறீங்களா மாமி?” அவர் முகத்தை நேராகப் பார்த்து வினவினாள் அன்பினி.

அவர் பதறிப்போனார். “சேச்சே! அப்பிடி எல்லாம் இல்லவே இல்ல.” என்றார் அவசரமாக. மகளும் அவரும் பேசியதைக் கேட்டுவிட்டாளோ என்று மனம் துணுக்குற்றது.

அதைக் காட்டிக்கொள்ளாமல், “இது சந்தேகம் இல்ல. பயம். உங்கட வாழ்க்கைலயும் ஏதும் நடந்திடுமோ எண்டு யோசிக்கவே நெஞ்சு நடுங்குதம்மா. கட்டாயம் வேலைக்குப் போய்த்தான் ஆகோணும் எண்டுற நிலைமை இல்லைதானே?” என்றார் தன்மையாக.

சந்தேகம் இருக்கப்போய்த்தான் அந்தப் பயமே வந்திருக்கிறது என்று இவரிடம் யார் சொல்வது? ஆனால், இன்றைக்கு இந்தப் பேச்சுகளுக்குப் பயந்து ஒடுங்க ஆரம்பித்தால் கடைசியில் அவள், அவள் வாழும் அறையைத் தாண்டியே வெளியே வர முடியாத நிலை வந்துவிடும் என்று புரிந்தது.

அதில், “இல்ல மாமி. எனக்கு டீச்சிங் சின்ன வயதில இருந்தே விருப்பம். அரசாங்க வேலை வேற. அதால விட விருப்பம் இல்ல.” என்று முடித்துக்கொண்டாள் அவள்.

அவருக்கு முகம் ஒரு மாதிரியாகிப் போயிற்று. தான் அவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்கமாட்டேன் என்றுவிட்டாளே. மகன் வந்ததும் பேசினார்.

“அப்பிடி அவா வேலைக்குப் போகத்தான் வேணுமெண்டால் அங்க கொழும்பில பாக்கலாமே தம்பி.”

“நானும் அப்பிடித்தான் நினைச்சனான் அம்மா. கிடைக்கேல்லையே.” உட்பூசல் அறியாதவன் இயல்பாய்ச் சொன்னான்.

“இந்த வேலைக்குத்தான் போகோணும் எண்டு என்ன கட்டாயம்? அங்க கிடைக்கிறதையே பாக்கட்டுமே.”

“அம்மா, அவளுக்குப் படிப்பிக்கத்தான் விருப்பம். தெரிஞ்சும் வேற வேலைக்குப் போகட்டும் எண்டா என்ன அர்த்தம்?” அன்னையின் விடாத கேள்விகள் உண்டாக்கிய மெல்லிய சினத்துடன் திருப்பிக் கேட்டான் அவன்.

“அது சரியடா. அதுக்கெண்டு இப்பவே போகோணுமா? அப்ப எப்பதான் நீங்க ரெண்டு பேரும் உங்கட வாழ்க்கையை வாழப்போறீங்க?” என்றவரின் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாமல், மனைவியைத் திரும்பிப் பார்த்தான்.

அங்கே அவள், இங்கே நடக்கும் இந்த வாக்குவாதத்துக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை போன்று தளிரோடு பஸில் அடுக்கிக்கொண்டிருந்தாள்.

அவன் புருவங்கள் சுருங்கின.

இங்கே பரமேஸ்வரி, “தம்பி, அம்மா சொல்லுறதைக் கேளு. அவா தனியா அங்க போய் இருக்க வேண்டாம். அவசரம் ஆபத்துக்குக் கூடப் பக்கத்தில ஒருத்தரும் இல்லாம, எனக்கு உண்மையா இது ஒண்டும் பிடிக்கேல்ல.” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

அவனோ தளிரோடு அறைக்குள் நடந்த அன்பினியைத்தான் இப்போதும் கவனித்துக்கொண்டிருந்தான். அன்னையைச் சமாளித்துவிட்டு அவன் அறைக்கு வந்தபோது, சுவரில் சாய்ந்து, கால்களை நீட்டி அவள் அமர்ந்திருக்க, தளிர் அவள் மடியில் படுத்திருந்து இவளின் கைப்பேசியில் விளையாடிக்கொண்டிருந்தாள்.

அவளின் ஒரு கை, தளிரின் தலையை வருடிவிட்டுக்கொண்டிருந்தாலும் அவளும் அவள் சிந்தனையும் இங்கில்லை என்று தெரிந்தது.

“அன்பா!” என்றான் கேள்வியாக.

நிமிர்ந்து அமர்ந்து, “ஆர் என்ன சொன்னாலும் நான் போகத்தான் போறன்.” என்றாள் அன்பினி நேராக.

அவன் புருவங்கள் மீண்டும் சுருங்கின. போ என்றுதானே அவனும் சொல்லிக்கொண்டிருக்கிறான். அதில், “இதை ஏன் என்னட்டச் சொல்லுறாய்?” என்று கேட்டான்.

“சில நேரம் உங்கட முடிவு மாறலாம். அப்பிடி நீங்க மாறினாலும் இனி நான் மாற மாட்டன் எண்டு சொன்னனான்.”

அவனுக்கு இப்போதும் ஒன்றும் விளங்கவில்லை. அவள் பார்வையும், பேச்சும், பேச்சில் இருந்த நிதானமும் அவனை யோசிக்க வைத்தன. ஒருகணம் அவளையே பார்த்தவன் பேசாமல் வந்து அவளருகில் அமர்ந்தான். ஒருமுறை மாமனைத் திரும்பிப் பார்த்துவிட்டுத் திரும்பவும் விளையாட்டில் கவனத்தைக் குவித்தாள் சின்னவள்.

அன்பினியின் ஒரு கையை எடுத்துத் தன் விரல்களோடு கோத்தபடி, “என்ன நடந்தது?” என்றான் இதமாக.

அவனிடம் எதையும் சொல்லக் கூடாது என்கிற முடிவு உடைய, “உங்கட வீட்டு ஆக்களுக்கு என்னைத் தனியா விட்டா நானும் அண்ணாவை மாதிரி நடந்திடுவன் எண்டு பயம்போல.” என்றாள் அவனைப் பாராது.

அபயனின் நெஞ்சு ஒருமுறை ஆடித்தான் போனது. “ஆர் சொன்னது, அக்காவா?”

அவள் பதில் சொல்லப் போகவில்லை. சில கணங்களுக்கு அவளையே பார்த்தவன் அவள் முகம் பற்றித் தன்னைப் பார்க்க வைத்து, “நானும் கொழும்பில தனியாத்தான் இருந்தனான். இனியும் இருக்கப் போறன். நீ அப்பிடி ஏதும் என்னைப் பற்றி நினைக்கிறியா?” என்று அவள் விழிகளையே பார்த்து வினவினான்.

விழிகளில் நீர் கோத்தாலும், இல்லை என்பதாகத் தலையை அசைத்தாள் அவள்.

“அதேதான் எனக்கும். உன்னப்பற்றி எனக்குத் தெரியும். அக்கா கதைக்கிறதை எல்லாம் பெருசா எடுக்காத. அவவுக்குக் கிடைச்ச அனுபவம் அப்பிடி. அவா என்னையே நம்ப ரெடியா இல்ல.” என்று அவளுக்குச் சமாதானம் சொன்னான்.

உள்ளத்தில் மட்டும் அக்கா ஏன் இப்படி நடக்கிறார் என்கிற கேள்வி. அவர் காயம் பெரிதுதான். அதற்கென்று எந்தத் தவறும் செய்யாதவளைத் திரும்ப திரும்ப நோகடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ஏற்கனவே அவனும் அவளுமாய்ச் சேர்ந்து இவளுக்குச் செய்தவை போதாதா என்ன?

கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்துவிட்டு, “இனி யாழ்ப்பாணம் போயிற்று வர லேட்டாகிடும். நாளைக்கு விடியவே போய்ப் பாத்துக்கொண்டு வருவமா?” என்றான்.

அவள் சரி என்று தலையை அசைக்க, “அப்ப நான் அந்த வீட்டுக்காரரிட்டச் சொல்லிப்போட்டு வாறன்.” என்றுவிட்டு எழுந்து வெளியே வந்தான்.

அவனைத் தனியாகப் பிடிப்பதற்காகவே காத்திருந்த பரமேஸ்வரி, “தம்பி, உன்ர வாழ்க்கை இப்பதானப்பு ஆரம்பிச்சே இருக்கு. இந்த நேரம் அன்புவை அங்க அனுப்பாத. நீயும் வாழ்க்கையத் துலச்சுப்போட்டு நிண்டா எங்களால தாங்கேலாதப்பு. அம்மா சொல்லுறதைக் கேளு.” என்று கெஞ்சினார்.

அக்காதான் அப்படி என்றால் அம்மாவுமா என்று திகைத்துப்போனான் அபயன்.

“நீங்க என்ன கதைக்கிறீங்க எண்டு உங்களுக்கு விளங்குதா அம்மா? அவளைக் கேவலப்படுத்துறீங்க.” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“அப்பிடி இல்லை அப்பு. சும்மா இருக்கிற பிள்ளையை அங்க அனுப்பி, நாளைக்கு ஒண்டு எண்ட பிறகு திரும்பவும் எல்லாருமாச் சேந்து அழவேண்டி வந்திடும் தம்பி.”

உள்ளே உள்ளம் கசந்து வழிய, “இத நான் கேக்கக் கூடாதம்மா, ஆனாலும் உங்களுக்கு விளங்கோணும் எண்டுறதுக்காகக் கேக்கிறன், நாளைக்குத் தளிரையும் இப்பிடித்தான் சொல்லுவீங்களா? அவாவையும் வெளில எங்கயும் விடாமத்தான் வளப்பீங்களா?” என்றதும் அவர் பதறிப்போனார்.

“தம்பி, அவா குழந்தை ஐயா, அவாவைப்போய்… என்னய்யா நீ? தாய் மாமனா இருந்துகொண்டு இப்பிடிக் கதைக்கிறியே!” என்றவருக்குக் கண்ணீரே வந்திருந்தது.

“நீங்கதானம்மா பிழையாக் கதைக்கிறீங்க. குழந்தை மட்டும்தான் பாவமா? குமரிக்கு மனம் எண்டுற ஒண்டு இல்லவே இல்லையா? இல்ல அன்பாவ உங்களுக்குத் தெரியாதா?”

“அப்பு…”

“போதும் அம்மா. அவள் என்ர மனுசி. அவளைப் பற்றி எனக்குத் தெரியும். அவளுக்கு என்ன செய்யோணும் எண்டும் எனக்குத் தெரியும். இதில நீங்க தலையிடாதீங்க.” என்றுவிட்டு விறுவிறு என்று அங்கிருந்து நடந்தான்.

error: Alert: Content selection is disabled!!