கேட்பார் இன்றிக் காதல் – 39

அத்தியாயம் 39

எப்போதும் அர்த்தமற்ற கோபத்தாலும், வீணான வார்த்தைகளாலும் எதிர்வினைகளைக் காட்டுவது அன்பினியின் இயல்பு கிடையாது. எதையும் செயலில் காட்ட வேண்டும் என்று நினைப்பாள்.

அப்படி, இவர்களின் வாய்க்கும் வார்த்தைகளுக்கும் பயந்து, என்னை நானே இரையாக விட்டுவிடக் கூடாது என்கிற பிடிவாதத்தில்தான் வேலைக்குப் போயே தீருவது என்கிற முடிவை எடுத்திருந்தாள்.

ஆனாலும் கூட மனம் ஒருவிதமாக அடிவாங்கிச் சுருண்டு போயிற்று. ஆண், பெண் என்கிற பாகுபாடில்லாமல், யாரை எங்கே வைக்க வேண்டும் என்கிற நியதியோடு, இயல்பாய் எல்லோரையும் எதிர்கொண்டது போய், இனி ஒரு ஆணோடு சாதாரணமாகப் பேசினாலே சுற்றியிருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற பயம் அவளுக்கே வந்துவிடும் போலிருந்தது.

ஒரு வழியாக அவள் யாழ்ப்பாணம் புறப்படும் நாளும் வந்து சேர்ந்தது. பெட்டி படுக்கைகளைக் கட்டிக்கொண்டு, வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு அபயனோடு புறப்பட்டாள்.

வீதியில் கார் வழுக்க ஆரம்பித்தது. அன்றுபோல் அம்மாவும் அப்பாவும் வீதிக்கு வந்து காத்திருப்பார்களோ என்று அவள் யோசிக்க, அபயனின் கார் அன்பினியின் வீட்டுக்குச் செல்லும் பாதையில் திரும்பிற்று.

எப்படி உணர்கிறோம் என்று சொல்லத் தெரியாமல் திரும்பி அவனைப் பார்த்தாள்.

அவள் வீட்டின் முன்னால் நிறுத்தி, “போ, போய்ச் சொல்லிப்போட்டு வா!” என்றான் அபயன் இதமான குரலில்.

அவளுக்குக் காரைத் திறந்து இறங்க முடியும் போலில்லை. அந்தளவில் அவளை உணர்ந்து நடந்தவனின் செய்கை நெகிழ்த்தியிருந்தது. அவனையே பார்த்திருந்தாள்.

“இப்பிடியே பாத்தியோ நேராக் கொழும்புக்கே விட்டுடுவன். போடி இறங்கி!” என்றான் சின்ன சிரிப்புடன்.

“தாங்க்ஸ்!” என்றுவிட்டு அவள் இறங்கப்போக, கரம் பற்றித் தடுத்தான் அவன். திரும்பிப் பார்த்தவளிடம், “இவ்வளவு காலமும் நீ நன்றி சொன்னா எனக்குப் பிடிக்காது. இனி வேற மாதிரிச் சொல்லப் பழகு.” என்றான் கண்கள் சிரிக்க.

ஒருகணம் புரியாமல் திகைத்தாலும் பொய்யாக அவனை முறைத்துவிட்டு, வேகமாகக் காரை விட்டு இறங்கினாள் அன்பினி.

அங்கே அவளின் அன்னை தந்தையும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்துகொண்டிருந்தனர். அதுவே அவள் வருவாள் என்று அபயன் அவர்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறான் என்று சொல்லிவிட, இன்னுமே சந்தோசமாயிற்று.

ஓடிப்போய் இருவரையும் கட்டிக்கொண்டாள். பிரிவை விடவும் அவன் அவர்களோடு மெல்ல மெல்ல இணக்கமாகிறான் என்கிற விடயம்தான் அவளை மகிழ்வித்தது.

“கவனமாப் போகோணும் என்னம்மா. இப்ப அபயன் கொண்டுவந்து விட்டுட்டு வரட்டும். ரெண்டு நாள் கழிச்சு நாங்க வாறம். எல்லாருமே இப்ப வந்திட்டு வந்தா உங்களுக்குத் தனியா இருக்கிற மாதிரி இருக்கும்.” என்றார் திருநாவுக்கரசு மகளின் தலையை வருடியபடி.

அன்றைக்கான பகல் உணவைக் கட்டிக்கொடுத்துவிட்டார் இந்துமதி.

கார்ப் பயணம் அமைதியிலேயே கழிய, “என்ன, நன்றி சொல்லுற ஐடியா ஏதும் இல்லையா?” என்று பேச்சுக் கொடுத்தான் அபயன்.

அவளுக்குச் சிரிப்பு வரும் போலிருந்தது. ‘அந்தச் சேட்டக் குணம் இன்னும் அப்பிடியே இருக்கு!’ முகத்தைத் திருப்பி அரும்பிய சிரிப்பை மறைத்துக்கொண்டாள். நிறைய நாள்களுக்குப் பிறகு மனம் இதமான மனநிலையில் இருந்தது.

அதன்பிறகு அவனும் சீண்டவில்லை. சீட்டில் தலை சாய்த்து, நிற்சிந்தையாய் வீதியோரத்தில் பார்வையைப் பதித்திருந்தவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு வாகனமோட்டுவதில் கவனமானான்.

இதமான இசை காரை நிறைத்து நிற்க, கணவனின் அனுசரணை ஒருவிதப் பற்றை மனத்தில் விதைக்க, அப்படியே உறங்கிப்போனாள் அன்பினி.

அவள் உறக்கம் கலையாமல், சிறு சிரிப்புடன் அவள் தலையைப் பற்றி ஆட்டிவிட்டவனின் உள்ளத்திலும் காரணமறியா நிறைவு.

கிட்டத்தட்ட இரண்டேகால் மணி நேரத்தில் அவள் தங்கப்போகும் வீட்டின் முன்னால் காரைக் கொண்டுபோய் நிறுத்தினான் அபயன்.

மத்திய வயதுடைய தம்பதியர் வந்து வரவேற்றனர். இரண்டு பெண் பிள்ளைகளில் மூத்தவள் திருமணமாகி வெளிநாட்டில் வசிக்க, சின்னவள் அன்பினி கற்பிக்கப்போகும் பாடசாலையில் ஒன்பதாம் வகுப்பில் கல்வி பயில்கிறாளாம்.

அந்தப் பெண்ணுடனேயே அன்பினி பள்ளிக்கூடம் சென்று வரலாம் என்பதும், அன்னை தந்தைக்கு ஒப்பாகப் பெரியவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்பதும், மேலே அவளுக்குத் தனி அறை என்பதும் அபயன் அந்த வீட்டைத் தெரிவு செய்யக் காரணமாயிற்று.

அன்றே டவுனுக்குச் சென்று கட்டில், மேசை, நாற்காலி என்று அவளின் அத்தியாவசியத் தேவைகளை வாங்கி வந்தான். அப்படியே, திருநாவுக்கரசு முதலே லொறியில் அனுப்பி வைத்த அன்பினியின் ஸ்கூட்டியையும் இங்கே ஒரு கடையில் போய் எடுத்துக்கொண்டு வந்தான்.

அவர்கள் இவர்களைப் பகல் உணவுக்கு அழைக்க, இந்துமதி கட்டித் தந்ததையும் கொண்டுபோய்க் கலந்து சாப்பிட்டார்கள்.

அந்த வீட்டு உரிமையாளரை உதவிக்கு வைத்துக்கொண்டு அவள் அறையை ஒழுங்கு செய்து, கட்டிலையும் பூட்டினான் அபயன்.

அவர்கள் இருவருக்கும் அருந்துவதற்கு இரண்டு கிளாஸ்களில் பானம் எடுத்துக்கொண்டு மேல வந்தவள் கண்டது, நெற்றியில் வியர்வை வழிய வழிய, ஒற்றை முழங்காலை நிலத்தில் ஊன்றி இருந்து, வெகு சிரத்தையாக அவளின் கட்டிலைப் பூட்டிக்கொண்டிருந்த அபயனைத்தான்.

ஒருமுறை அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, மீண்டும் ஸ்க்ரூடிரைவரால் கட்டில் காலின் நட்டை இறுக்கியபடி, “மேசைல வை, இத முடிச்சிட்டு வந்து குடிக்கிறன்.” என்றான் அவன்.

அவளுக்கு அவன் சொன்னது செவிக்கு வந்து சேரவில்லை. கவர்ச்சியாய், வேலையில் கவனமாய் இருந்தவனிலேயே அவள் கவனம் இருந்தது. திரும்பிப் பார்த்தவனின் விழிகளில் இப்போது சிரிப்பு.

“என்னடி மனுசி, சைட் அடிக்கிறியா?” என்றபடி எழுந்தான்.

‘வேற வேலை இல்ல!’ பார்வையால் அவனை வெட்டிவிட்டு, ஒரு கிளாஸை அவனிடம் நீட்டினாள்.

“வேலைய முடிச்சிட்டா சும்மா ஒருக்கா இந்த ஊரைப் பாத்துக்கொண்டு வரலாம்.” என்றபடி, அவள் தந்தது என்ன என்று கவனிக்காமலேயே பருகியவன், வியப்புடன் திரும்பி அவளைப் பார்த்தான்.

உதட்டை இலேசாகப் பற்றியபடி வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அன்பினி. ஒரே வாயில் வாய்க்குள் கவிழ்த்துவிட்டு, “நிறைய நாளைக்குப் பிறகு எனக்குப் பிடிச்ச பதத்தில, எனக்குப் பிடிச்சவள் ஊத்தித் தந்த தோடம்பழ ஜூஸ்.” என்றவன் அவளின் கையில் இருந்த மற்ற கிளாஸையும் வாங்கிப் பருகினான்.

“அது அந்த அங்கிளுக்கு.”

“அவருக்கு வேற ஊத்திக்குடு!” இரண்டு வெறும் கிளாஸ்களையும் அவள் கையில் திணித்துவிட்டு விட்ட வேலையைத் தொடர்ந்தான் அவன்.

‘சொந்த வீடு மாதிரியே சொல்லுறான்…’ உள்ளே முறுக்கினாலும் அவனைப் பற்றித் தெரியும் என்பதில் மேலதிகமாக ஊற்றி வைத்துவிட்டுத்தான் வந்திருந்தாள். அதைத் திரும்பவும் இன்னொரு கிளாசில் வார்த்து, வீட்டுக்கார மனிதரைத் தேடிப்போய்க் கொடுத்துவிட்டு வந்தாள்.

அவள் அறையை அவளுக்கு ஏற்றாற்போல் ஒழுங்கு செய்து முடித்து, அவளின் ஸ்கூட்டியில் இருவரும் அந்த ஊரைச் சின்ன வட்டம் அடித்து முடித்து வரவே இரவாகியிருந்தது.

திரும்பவும் அவன் புறப்படவேண்டும்.

அன்று முழுக்க அவனுக்கு ஓய்வே இல்லை. அப்படியிருக்க இருட்டிவிட்ட அந்த நேரத்தில் அவனைத் திருப்பி அனுப்ப அவளுக்குப் பயமாயிருந்தது. “இப்பவே போகோணுமா? நிண்டுட்டு நாளைக்கு விடிய வெளிக்கிடுங்கோவன்.” என்றாள் மெல்ல.

அலுப்புடன் கட்டிலில் குறுக்காக விழுந்து கிடந்தவன், “கட்டில் ஒரு ஆள் படுக்கிற சைஸ்தான். பரவாயில்லையா?” என்றான் ஒற்றைக் கண்ணைச் சிமிட்டியபடி.

“நான் வேணுமெண்டா அவேற்ற ஒரு பாய் கேக்கிறன்.” என்றாள் வேகமாக யோசித்து.

“ஓ! பாயில படுப்பீங்க. ஆனா என்னோட நெருக்கிக்கொண்டு படுக்க மாட்டீங்க. இந்த வாய்க்காகவே இண்டைக்கு இரவு இங்கதான் தங்கப்போறன். அதுவும் ரெண்டு பேரும் கட்டில்லதான்டி படுக்கிறம்.” என்றான் அவன்.

அவள் என்ன சொல்வது என்று தெரியாது நிற்க, எழுந்து அவள் முன்னால் வந்து நின்று, “இந்தக் கட்டில் வாங்கினது எப்பிடியும் வீணாகாது. ஆனா இண்டைக்கு இல்ல. ரெண்டு மணித்தியாலம்தானே. நான் போயிடுவன்.” என்றான் சிரிப்பும் சீண்டலுமாக.

முறைக்க முயன்றாலும் முடியாமல், “நல்லா நேரம் போயிட்டுது.” என்று முணுமுணுத்தாள்.

“இனித்தான் பெருசா வாகனம் இருக்காது அன்பா. நான் டக்கெண்டு போயிடுவன்!”

“ஓவர் ஸ்பீட்லையா?” கண்களில் பயத்துடன் கேட்டாள் அவள்.

“லவ்வ ஓவர் ஸ்பீட்ல கொண்டுபோய் நான் விழுந்து எழும்பினது எல்லாம் காணும். அதால அளவான வேகத்திலதான் போவன். பயாப்பிடாத.”

அவன் குளியலறை சென்று, முகம் கழுவித் தயாராகி வந்தான். மனத்தில் பாரத்துடன் அவனையே பார்த்து நின்றாள் அன்பினி. அவனோடு இருக்கையில் முரண்டிக்கொண்டு நின்றது அவள்தான். அதே அவள்தான் இப்போது தனியாக விட்டுவிட்டு போகப் போகிறானே என்று பரிதவித்தாள்.

“வரட்டா?” என்றபடி நிமிர்ந்தவன் அவள் விழிகளில் தென்பட்ட தவிப்பில் அப்படியே நின்றுவிட்டான். உள்ளே என்னவோ செய்தது. முதல் வேலையாக அறையின் கதவைத் தாளிட்டுவிட்டு வந்து, அவளை இழுத்து அணைத்துக்கொண்டான்.

“தனியா இருக்க ஒரு மாதிரி இருக்கா?”

அவள் விழிகளில் மெலிதாய் நீர் சேர்ந்தது. ஆம் என்று மெதுவாகத் தலையை அசைத்தாள். அந்த விழிகளையே மாறி மாறிப் பார்த்தவன் தன் உதடுகளை அவற்றின் மீது ஒட்டி எடுத்தான். மளுக்கென்று கண்ணீரைத் தள்ளின அவள் விழிகள்.

“என்னடி இது?” என்று அவள் முகத்தைத் துடைத்துவிட்டான். “எல்லாம் முதலே கதைச்சதுதானே அன்பா? புதுசுக்கு கொஞ்சம் ஒரு மாதிரித்தான் இருக்கும். கொழும்பு போன நேரம் எனக்கும் அப்பிடித்தான் இருந்தது. ஆனா இப்ப பார் பழகிட்டுது. அதேதான் உனக்கும். எப்பிடியும் புதன், வியாழன்ல மாமா மாமி வருவினம். சனி ஞாயிறு நீ அங்க வா. எனக்கு இந்தக் கிழமை முல்லைத்தீவு வரக் கிடைக்குமோ தெரியா. நிறைய வேல இருக்கு. அடுத்த கிழமை வரப்பார்க்கிறன்.” எனவும், அவனை இனி இரண்டு வாரங்கள் சென்றுதான் பார்க்க முடியும் என்பதும் சேர்ந்து அவளை இன்னுமே கண்ணீரைச் சொரிய வைத்தது.

பக்கத்தில் இருக்கும் வரை முகத்தைத் திருப்பிக்கொண்டு இருந்துவிட்டு இப்போது அழுகிறவளை ஒன்றும் செய்ய முடியாமல், “நீ இன்னும் அந்த தாங்க்ஸ சொல்லி முடிக்கேல்ல.” என்றான் சிரிப்பைக் காட்டாத குரலில்.

அழுத விழிகளால் அவனை முறைத்துவிட்டு அவள் விலக, அவன் விடவில்லை. ஒற்றைக் கையால் அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்து, மறு கையால் அவள் தாடையை உயர்த்தி, இதழ்களை முற்றுகையிட்டான்.

நொடிகள் சில கடந்தபின் மெல்ல அவளை விடுவித்தவன் அவள் நெற்றி முட்டி நின்றபோது, அன்பினியால் தலையை நிமிர்த்தவே முடியவில்லை.

“வெக்கப்படுறியாடி அன்பா?” அவள் முகச் சிவப்பை ரசித்தபடி அவன் கேட்க, அவன் மார்புக்குள்ளேயே தன் முகத்தை மறைத்துக்கொண்டாள் அவள்.

மனம் நிறைய, ஆசையாய் அவள் கன்னம் வருடி, “எனக்கும் உன்ன விட்டுட்டுப் போக விருப்பமில்லத்தான். ஆனா, உனக்கு இந்த வேலை எவ்வளவு பிடிக்கும் எண்டு தெரியும். அத இப்ப செய்யாம விட்டுட்டு, பிறகு ஒரு காலம் ஆசைப்பட்டதைச் செய்யவே இல்லையே எண்டு அது பெரிய ஏக்கமாவே மனதில நிண்டுடும். அதால உனக்கு விருப்பமான வேலையப் பார். நானும் நீயும் எங்க போகப்போறம்? கற்பனை செய்து பாத்ததை விடவும் இன்னும் சந்தோசமா வாழுவம். சரியா?” என்று விடைபெற்றான் அபயன்.

error: Alert: Content selection is disabled!!