கேட்பார் இன்றிக் காதல் – 4

அத்தியாயம் 4

இன்னும் ஒரு வாரத்தில் பல்கலை தொடங்குகிறது எனுமளவுக்கு நாள்கள் நெருங்கியிருந்தன. ஆனால், பல்கலைக்குப் போகப்போகிறோம் என்கிற சந்தோசமே இல்லாமல் நடமாடிக்கொண்டிருந்தாள் அன்பினி.

பல்கலை நடைமுறைகளைச் செய்வது, விடுதியறைக்கான ஏற்பாடு என்று அத்தனைக்கும் உதவியவன் அபயன்தான். அதனாலேயே வீண் அலைச்சல்கள் இவர்களுக்கு இருக்கவில்லை. காந்தனுக்கு அதற்குப் பிறகு அபயன் மீது இன்னுமே பிரத்தியேகமான அன்பு உருவாகியிருந்தது. அந்தளவில் உதவியிருந்தான்.

அன்பினிக்கு மட்டும் அவன்பால் நன்றியுணர்வு உண்டாகவே இல்லை. பல்கலைக்குச் செல்வதைக் குறித்து யோசிக்கிற ஒவ்வொரு முறையும் பலிபீடத்துக்குக் கொண்டு செல்லும் ஆட்டின் தோற்றமே அவளுக்கு வந்து வந்து போனது.

ஒரு வழியாகப் பெட்டி படுக்கைகளோடு வவுனியா வந்து, அவளுக்கான விடுதியறையில் அனைத்தையும் ஒழுங்குபடுத்தி, பரபரப்பும் படபடப்புமாக முதல் நாளினை ஆரம்பித்தாள்.

ஆனால், அவள் உள்ளூரப் பயந்துகொண்டிருந்தது அவசியமற்றது என்று சொல்லும் வகையில் அபயனைக் காணக் கிடைக்கவில்லை.

அவனுடைய பீடம் வேறு, அவளுடையது வேறு. சாதாரணமாக அவர்கள் சந்தித்துக்கொள்ளச் சாத்தியமில்லை. சும்மா மிரட்டியிருக்கிறான் போலும் என்று கொஞ்சம் கொஞ்சமாய்த் தேறி, மெல்ல மெல்ல அவள் பல்கலையில் பொருந்தி, இயல்பாக நடமாட ஆரம்பித்த நாள் ஒன்றில் நண்பர்களோடு எதிர்ப்பட்டான் அபயன்.

ஒரு மரத்தின் கீழ் இன்னும் இரண்டு நண்பர்களோடு நின்றிருந்தான். தூரத்தில் கண்டதும் அவளுக்குத் திக் என்றுதான் இருந்தது.

“நிம்மி, என்ர பக்கம் திரும்பியும் பாக்காம நேரா மட்டும் பாத்து நட!” பல்கலையில் அவளுக்குக் கிடைத்த தோழி நிர்மலாவிடம் எச்சரித்தபடி நடையின் வேகத்தைக் கூட்டினாள்.

அவளுக்காகவே அங்கு வந்து காத்திருந்தவன் அப்படித் தப்பிக்க விடுவானா? “ஓய்!” என்றான் சத்தமாக. அவள் நடை படக்கென்று நின்று போயிற்று. இனி விடமாட்டான் என்று தெரிய, மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.

“சீனியர்ஸ் இங்க நிக்கிறம். கண்ணுக்குத் தெரியேல்லையா?”

இவள் என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்க, “சொறி சீனியர்.” என்று உடனேயே சொன்னாள் நிர்மலா.

அபயன் அன்பினியைத்தான் பார்த்தான். அவள் எதுவும் சொல்வதாக இல்லை என்றதும், “ரெண்டு பேரும் இஞ்ச வாங்க!” என்றான்.

கிடுகிடு என்று அவர்கள் முன்னால் வந்து நின்றனர்.

“என்ன பார்வை? வணக்கம் எல்லாம் சொல்ல மாட்டீங்களா?” என்று அதட்டினான்.

அவர்களின் கலைப்பிரிவுக்கு வந்து ராக் செய்யும் உரிமையை இவனுக்கு யார் கொடுத்ததாம் என்று மனம் புழுங்கினாலும், “குட் மோர்னிங் சீனியர்!” என்று கோரஸ் பாடினர்.

“அப்பிடியே நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வாவையும் பாடி விடலாமே.” அவன் நக்கலில் பெண்கள் இருவரின் முகங்களும் சிவந்து போயின.

“எத்தின வயசு?” என்றான் அன்பினியைப் பார்த்து.

இவனுக்குத் தெரியாதா? திரும்பப் பழி வாங்கப் போகிறான் என்று விளங்கிவிட, “இருவது.” என்றாள்.

“கலியாணம் முடிஞ்சுதா?” என்றதும் அதிர்ந்து விழித்தாள். என்ன கேள்வி இது?

“உச்சில பொட்டு இல்ல. கழுத்தில தாலி இல்ல. கால்ல மெட்டி இல்ல. அதால நடக்கேல்லப் போல மச்சான்.” என்றான் அவனோடு நின்றவர்களில் ஒருவன்.

“ஆரையாவது விரும்புறீரா?”

“இல்ல.”

“ஆராவது உம்மை விரும்பினமா?”

பார்வை தழைய, அவள் தலை இல்லை என்று ஆடியது.

அவளின் தலையையே உறுத்து விழித்தான் அவன். “இல்லையா?” என்றான் மீண்டும்.

மீண்டும் இல்லை என்று தலையை அசைத்தாள்.

“நாங்க என்ன நிலத்தில படுத்தா கிடக்கிறம்? நிமிந்து நேராப் பாரும்!”

அவன் அதட்டலில் வேகமாக நிமிர்ந்தாள் அவள்.

“இதுவரைக்கும் உம்மை விரும்புறதா ஆரும் சொல்லவே இல்லையா?” அவள் விழிகளையே பார்த்து வினவினான்.

அவளுக்குள் மெல்லிய தடுமாற்றம். ஆனாலும் அவள் தலை மீண்டும் இல்லை என்றுதான் ஆடிற்று.

“மறைமுகமாக் கூட உணர்த்தவே இல்லையா?”

எந்த நிலையில் அவளை நிறுத்தி என்னவெல்லாம் கேட்கிறான்? கலங்கப் பார்த்த விழிகளைத் தடுத்துப் பிடித்தபடி, “இல்ல.” என்று முணுமுணுத்தாள்.

“ஓ!” என்று இழுத்தான் அவன். உள்ளுக்குள் எரிமலையின் குளம்புகள் கொதிக்க ஆரம்பித்தன. “சரி சொல்லும், உம்மட மனதில ஆராவது இருக்கினமா?”

அதற்கும் மறுப்பாய்த் தலையை அசைத்தாள்.

ஒருவித ஏமாற்றமும் கோபமும் படர, “கண்டீனுக்கு போய் ஒரு தேத்தண்ணி வாங்கிக்கொண்டு வாரும்!” என்று அனுப்பிவிட்டான்.

அவனுக்குத் தன்னை நிதானப்படுத்திக்கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது. ஏன் இந்தக் கோபமும் பொருமலும்? அவனுக்குத் தெரியவில்லை. கேசத்தைக் கோதியபடி நிலத்தில் கிடந்த சிறிய கல்லைக் காலால் விசிறி அடித்தான்.

சற்று நேரத்தில் பேப்பர் கப்பில் தேநீர் கொண்டுவந்த அன்பினி அவனிடம் நீட்டினாள். இப்போது அதை வாங்கி அருந்தப் பிடிக்கவில்லை. “நீரே குடியும்! ஆனா நாளைல இருந்து கம்பசுக்கு வரேக்க நீரே தேத்தண்ணி ஊத்தி எடுத்துக்கொண்டு வாறீர்.” என்றான் உத்தரவு போன்று.

“ஆனா இங்க கொண்டு வாறதுக்கிடைல ஆறிடுமே.”

“அந்தளவுக்கு உலகம் தெரியாத அப்பாவி நீர்! ஒரு பிளாஸ்க் வாங்கி, அதுல ஊத்திக்கொண்டு வாரும். ஒவ்வொரு நாளும் கொண்டு வரோணும். மறந்தீரோ தெரியும் பிறகு!” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.

இதோடு விட்டுவிடப்போகிறானாக்கும் என்று தலையை வேக வேகமாக ஆட்டினாள் அவள்.

அவனும் விடும் எண்ணத்தில்தான் இருந்தான். அவள் தலையை ஆட்டிய வேகம் விடாதே என்று சொல்லிவிட, “சரி, கலைப்பிரிவு படிக்க வந்திருக்கிறீர். அதுக்கு முதல் ஆனா ஆவன்னா சொல்லும் பாப்பம்.” என்றதும் தன்னை மீறி அவனை முறைத்தாள்.

“என்ன முறைப்பு? சொல்லும்!”

“ஆனா, ஆவன்னா, ஈனா, ஈயன்னா…” என்று அவள் பல்லைக் கடித்தபடி சொல்லிக்கொண்டு போக, “நிப்பாட்டும் நிப்பாட்டும்! என்ன இது உப்புப் புளி இல்லாத சாப்பாடு மாதிரி சும்மா சொல்லிக்கொண்டு போறீர். ஆஆஆ….வன்னா எண்டு சொல்லோணும். எங்க சொல்லும் பாப்பம்?” என்றதும் அவளுக்கு மூச்சே நின்று போயிற்று.

அந்தளவில் அவன் சொன்ன விதம், இரவு நேரத்தில் துணையைத் தேடும் இணையின் குரலாய் அந்த ‘ஆவன்னா’ ஒரு மார்க்கமாய் இருந்தது. அவளுக்கு அவ்வளவு நேரமாகத் தடுத்துப் பிடித்திருந்த கண்ணீர் வந்தேவிட்டிருந்தது.

அவன் விடவில்லை. “என்ன அழுகை? அழவா இங்க வந்தனீர்? திரும்ப திரும்பச் சொல்லித் தரமாட்டன். இதுதான் கடைசித் தரம். எங்க சொல்லும் ஆஆஆஆ… வன்னா.” என்று அவன் இழுத்த இழுவையில் நிர்மலாவுக்கே சிரிப்பு வந்துவிடும் போலிருக்க அவன் நண்பர்கள்?

தரையில் உருண்டு பிரண்டு சிரிக்காத குறையாகச் சிரித்தனர். அதற்குமேல் அவனின் அட்டகாசத்தைப் பொறுக்க முடியாமல், நீ என்ன வேண்டுமானாலும் செய் என்பதுபோல் விறுவிறு என்று அங்கிருந்து நடந்திருந்தாள் அன்பினி.

உள்ளம் மட்டும் குமுறித் தீர்த்தது. சொந்தம் என்று இவன் இருக்கிறான் என்று நம்பி வீட்டில் அனுப்பி வைக்க, என்னவெல்லாம் செய்கிறான்? அன்றைய முதல் வகுப்பைக் கூட அவளால் கவனிக்க இயலாமல் போயிற்று. அவ்வளவு சினமும் சீற்றமும்.

இரண்டாம் வகுப்பும் முடிந்த வேளையில், ஒரு மாதிரியான குரலில், “ஆஆஆ…வன்னா!” என்றாள் நிர்மலா இவள் காதுக்குள் வந்து.

“சேய்க்!” என்றவள் அவனில் இருந்த ஆத்திரத்தையும் சேர்த்து இவளில் இறக்கி இருந்தாள்.

அடுத்தநாள் அவன் சொன்னது போன்று பிளாஸ்க் ஒன்றை வாங்கி, தேநீர் கொண்டுவர அவள் மறக்கவில்லை. அவனும் வந்து காத்திருந்தான்.

அவள் பிளாஸ்க்கை நீட்ட, “ஏன், அதைத் திறந்து ஊத்தித் தர மாட்டீரோ?” என்று கேட்டான்.

பல்லைக் கடித்தபடி ஊற்றிக் கொடுத்தாள். அவன் பருகி முடிக்கும் வரையில் அவள் நிற்க வேண்டும். அந்த நேரத்தில் மிரட்டி உருட்டி அவள் வாயைப் பிடுங்குவான். மறுபடியும் ஆவன்னா சொல்லச் சொல்லி அவன் சொல்லாததிலேயே அவளுக்குப் பெருத்த நிம்மதி.

இரண்டு வாரங்கள் இப்படியே கடந்து போயின. இந்த ஒன்றிரண்டு நாள்களாக நிர்மலாவின் பார்வையில் ஏதோ இருப்பதாக அவன் உள்ளுணர்வு உணர்த்திக்கொண்டே இருந்தது. அன்றும் அதை உணர்ந்தவன் தேநீரைப் பருகியபடி, “என்ன?” என்றான் நிர்மலாவிடம்.

இப்படித் தன்னிடம் நேரடியாகக் கேட்பான் என்று எதிர்பாராத நிர்மலா, “இல்ல, ஒண்டும் இல்ல.” என்றாள் வேகமாக.

“இல்லையே. ஏதோ இருக்கே!” என்றபடி அன்பினியைப் பார்க்க அவளிடத்தில் கலவரம். நிர்மலாவிடம் விழிகளால் எதையோ எச்சரிக்க முயல்வது தெரிய, அவன் சந்தேகம் உறுதியாயிற்று.

“என்னவோ இருக்கு. இப்ப நீர் சொல்லோணும். இல்லையோ போட்டிருக்கிற சேர்ட்ட கழட்டித் தருவன். இதுல நிண்டு தோச்சு, காயப்போட்டு, அயர்ன் பண்ணித் தந்திட்டுத்தான் போவீர்.” என்றதும், “ஐயோ இல்ல சீனியர். நீங்க முதல் நாள் சொன்னதில இருந்து இந்த பிளாஷ்க்க அவள் கழுவவே இல்லயாம். உங்களுக்குத் தொண்டைல இல்ல வயித்துக்க இன்பெக்க்ஷனாகி நீங்க சாகோணும் எண்டு சொன்னவள்.” என்றதும் அவனுக்குப் புரையேறிப் போயிற்று.

தன் உச்சியில் தானே தட்டியபடி வாயில் இருந்த தேநீரைத் துப்பினான். அப்போதும் அருவருப்புப் போகமாட்டேன் என்றது. வயிற்றைப் பிராட்டிக்கொண்டு வந்தது. கையில் இருந்த பிளாஸ்க்கின் மூடியோடு சேர்த்துத் தேநீரை விசிறி அடித்தவனுக்கு அவளைக் கொல்லும் வெறி.

ஒரு வழியாக இருமி, தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, “டேய் எல்லாரும் போங்கடா!” என்றான் பார்வையை அவள் மீதே நிலைக்க விட்டு.

“மச்சான்?”

“போங்கடா!”

அவன் நண்பர்கள் நகர்ந்துவிட, “நீரும் போம்!” என்றான் நிர்மலாவிடம்.

“சீனியர்…” தன்னால் பிரச்சனையாகிப் போனதோ என்கிற பயத்தில் இழுத்தாள் நிர்மலா.

ஒன்றும் சொல்லாமல் திரும்பி அவன் பார்த்த பார்வையில் ஓடிப்போனாள்.

இப்போது அவர்கள் இருவர் மட்டும்தான் நின்றிருந்தனர். உள்ளே நடுங்கினாலும் அவள் அசையவில்லை.

“என்னைக் கொன்டுபோட்டு நீர் என்ன செய்வீர்?” என்றான் நிதானமாக.

நடந்த விடயத்தைக் காட்டிலும் அவன் கேள்விதான் அவளை உலுக்கியது. அதிர்வுடன் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

“சொல்லும். நான் இல்லாம நீர் என்ன செய்யப் போறீர்?”

“என்ன கதைக்கிறீங்க?” தடுமாறி வினவியவள் அங்கிருந்து ஓடிவிடத் துடித்தாள்.

“அப்பிடி என்ன கதைச்சனான்? என்னைக் கொல்ல பிளான் போட்ட ஆள்தானே நீர்!”

“இல்ல, அது கோவத்துல செய்தது.”

“அதுக்கு இப்பிடித்தான் செய்வீரா?”

“நீங்க மட்டும் ஆவன்னாவ அப்பிடிச் சொல்லச் சொல்லலாமா?” பொறுக்கமுடியாமல் வெடித்தாள் அவள்.

ஒன்றுமே சொல்லாமல் அவளையே பார்த்தான் அவன். அவள் பார்வையை அகற்றிக்கொண்டாள்.

“ஓகே! உமக்கு என்னைக் கொல்லோணும். அவ்வளவுதானே? நாளைக்கும் தேத்தண்ணி கொண்டு வாறீர், அதுவும் கழுவாத பிளாஸ்க்ல!” என்றுவிட்டுப் போனான் அவன்.

அங்கே அவன் வகுப்பில் இவன் வருவதற்காகவே காத்திருந்தவர்கள், “என்ன மச்சான், கடைசில அவா உன்ன ராக் பண்ணிட்டா போல இருக்கு!” என்றதும் அவன் உதட்டிலும் சிரிப்பு.

இத்தனை நாள்களும் கழுவாமல் ஊற்றிக்கொண்டு வர அவளுக்கு மனம் வந்திருக்கிறதே. இதில் அவள் கைத் தேநீர் என்று இவன் ரசித்து ருசித்துப் பருகியிருக்கிறான். இப்போது நினைக்கையிலும் வயிற்றைப் பிரட்டும் உணர்வு.

அவன் மீதிருந்த அத்தனை கோபத்தையும் தீர்க்க முயன்றிருக்கிறாள் என்று விளங்கிற்று. நண்பர்கள் என்ன ஓட்டியும் அது அவன் செவிகளைத் தாண்டி உள்ளே செல்லவே இல்லை.

அடுத்த நாளும் அவன் சொன்னது போன்று கொண்டு வந்தாள். இந்த முறை அவன் மட்டுமே நின்றான். ஒன்றுமே கதைக்காமல் மூடியில் தேநீரை வார்த்து அவனிடம் நீட்டினாள்.

“எனக்கு வேண்டாம். நீரே குடியும்!” என்று சொல்லிவிட்டு நிர்மலாவை நேற்றுப் போலவே அனுப்பி வைத்தான்.

அவள் ஒன்றும் சொல்லாமல் தேநீரைப் பருகினாள். இரண்டு மூன்று மிடறு பருகும் வரையில் பார்த்திருந்தவன் அவள் கையில் இருந்ததை வாங்கித் தான் பருகினான்.

அதிர்ந்து நின்றவள் முகம் சிவக்க விழிகள் கலங்கின.

ஆனாலும் அவளையே பார்த்தபடி நிதானமாய்ப் பருகி முடித்துவிட்டு, “என்ன, பிடிக்கேல்லையா?” என்றான்.

அந்தக் கேள்வி அவன் செய்கைக்கானது மட்டுமில்லை. இத்தனை நாள்களாகச் சொல்லியும் சொல்லாமலும் வைத்திருந்த ஒன்றை அப்பட்டமாகத் தெரிவித்துவிட்டான். நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பிக்க, ஒன்றுமே கதைக்காமல் அங்கிருந்து ஓடிப்போனாள்.

அபயனுக்கும் அவசரப்பட்டுவிட்டோமோ என்று தோன்றாமல் இல்லை. ஆனால், எத்தனை நாள்களுக்குத்தான் அவள் மீதான நேசத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, இப்படிச் சும்மா சும்மா சீண்டிக்கொண்டிருப்பது? அவள் அவனுக்கானவளாக வரும் வரையில் அவனால் இதை நிறுத்த முடியாது. ஆக, எல்லாம் நல்லதற்குத்தான் என்று எண்ணிக்கொண்டு தன் வகுப்பை நோக்கி நடந்தான்.

error: Alert: Content selection is disabled!!