அத்தியாயம் 40
அன்பினி ஆசிரியையாகப் பணியாற்றத் தொடங்கி இரண்டு வாரங்கள் கழிந்திருந்தன. கல்லூரி, கற்பிப்பது, சக ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவியர், அந்த ஊர், போக்குவரத்து, தங்குவது எல்லாம் ஒரளவிற்குப் பழக்கத்துக்கு வர ஆரம்பித்திருந்தன. கூடவே அபயனோடு கைப்பேசியில் தினமும் உரையாடுவதும்.
இப்போதும் அபயன் அழைத்தால் இயல்பாக அழைப்பை ஏற்க முடிவதில்லை. நெஞ்சில் ஏதோ ஒன்று வந்து அடைத்துக்கொள்ளும். இல்லை, பழையவற்றை நினைக்கக் கூடாது, அவன் வேண்டுமென்றோ, அவளை ஏமாற்ற வேண்டும் என்கிற நோக்கத்துடனோ எதையும் செய்யவில்லை.
சூழ்நிலையும், எல்லாச் சூழ்நிலையிலும் எல்லோராலும் சரியாக நடக்க முடியாது என்கிற நிதர்சனமும்தான் காரணம், அதனால் இதையெல்லாம் பிடித்துக்கொண்டு தொங்கக் கூடாது என்று நினைத்தாலும், அவன் அழைப்பு இவள் செவிகளை நிறைக்கும் நொடிகளில் அசைவற்று நின்றுவிடுவதை அவளால் தவிர்க்க முடிவதேயில்லை. பின் சமாளித்துக்கொண்டு பேசுவாள்.
ஆனால், இதுவரையில் அவளாக அவனுக்கு அழைத்ததுமில்லை, குறுந்தகவல் அனுப்பியதும் இல்லை.
இன்று வெள்ளிக்கிழமை. பாடசாலை முடிந்து வந்ததுமே ஊருக்குத் தயாராகினாள். வெளியே காட்டிக்கொள்ளவில்லையே தவிர்த்து, முதல் நாள் மாலையில் இருந்தே அவனைப் பார்க்கப் போகிறோம் என்கிற குறுகுறுப்பு அவளுக்குள் உண்டாகியிருந்தது.
அவனும் அன்று கொழும்பிலிருந்து வருவான் என்று தெரியுமாதலால் தந்தையைப் பேருந்துத் தரிப்பிடத்துக்கு வரச்சொல்லிவிட்டு முல்லைத்தீவுக்கு வந்து இறங்கினாள்.
“வீட்டுக்கு வந்திட்டுப் போகலாமே பிள்ளை.” அவளை ஏற்றிக்கொண்டு வரும் வழியில் வினவினார் திருநாவுக்கரசு.
“அங்க போயிட்டே வாறனப்பா.” அவளுக்கும் அன்னை காத்திருப்பார் என்று தெரியும். ஆனாலும் கணவனைப் பார்க்கும் ஆர்வம் முன்னே நின்றதில் கொஞ்சம் தயங்கினாலும் சொன்னாள்.
திருநாவுக்கரசும் ஒன்றும் நினைக்கவில்லை. மகளின் விருப்பம்போல் அவளைக் கொண்டுவந்து அவர்கள் வீட்டு வாசலில் இறக்கிவிட்டார்.
‘உள்ளுக்கு வாங்கப்பா’ என்று சொல்ல முடியாமல் அவரைப் பார்த்தாள் அன்பினி. சின்ன புன்னகையோடு, “நீங்க போங்கோம்மா. அப்பா இப்பிடியே கடைக்குப் போயிடுவன்.” என்றுவிட்டுப் போனார் அவர்.
போகிறவரையே பார்த்து நின்றாள் அன்பினி. பெண்ணெடுத்துப் பெண் கொடுத்த வீடு. ஆனாலும் தெருவோடு திரும்பிவிட்டார். அவரின் மகளாய் இருந்தும், ‘வாங்கப்பா!’ என்று பிடிவாதமாக அழைத்துப்போக முடியா நிலையில் அவள்.
அவர் மறையும் வரையில் பார்த்திருந்துவிட்டு கேட்டை திறந்து உள்ளே நடந்தாள். அபயனின் கார் ஒரு ஓரமாக நின்றிருந்தது. ‘வந்திட்டான்…’ மனம் ஆர்ப்பரிக்க, அது நடையிலோ முகத்திலோ தெரிந்துவிடாதபடிக்கு வீட்டுக்குள் நுழைந்தாள்.
அவ்வளவு நேரமாக அபயனின் தோளில் ஏறி அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த தளிர், “அத்த!” என்று எப்போதும்போலக் கத்திக்கொண்டு ஓடிவந்தாள்.
கையிலிருந்த பையைக் கீழே வைத்துவிட்டு, தானும் மருமகளை அள்ளிக்கொண்டாள் அன்பினி.
“சொல்லியிருக்க ஏத்த வந்திருப்பனே.” என்ற அபயன், அவள் கொண்டுவந்த பையை எடுத்துக்கொண்டு போய் அவர்களின் அறையில் வைத்துவிட்டு வந்தான்.
“அதுதானேம்மா. அத விட்டுப்போட்டு ஆட்டோல வந்தனீங்களா?” என்றார் பரமேஸ்வரி.
“இல்ல மாமி. அப்பாதான் கொண்டுவந்து விட்டவர்.” என்றதும் பரமேஸ்வரிக்குக் கொஞ்சம் சங்கடமாயிற்று. ‘இவ்வளவு தூரம் வந்தவர் ஏன் வீட்டுக்குள் வராமப் போகிறார்’ என்று கேட்க முடியவில்லை. அவளும் அபயனைப் பார்த்துவிட்டுச் சின்னவளோடு தம் அறைக்கு நடந்தாள்.
யோசனையோடு மனைவியைப் பார்த்தான் அபயன். அன்று காலையில் அவள் பள்ளிக்கூடம் புறப்பட முதல் பேசினான். அப்போது, நீ புறப்படுகையில் சொல்லு, வந்து ஏற்றி வருகிறேன் என்று சொல்லியிருந்தான். அப்படியிருந்தும் ஏன் சொல்லாமல் கொள்ளாமல் வந்து இறங்கியிருக்கிறாள் என்று அவனுக்கு விளங்கவில்லை.
இங்கே அறைக்குள் வந்து, உடை மாற்றி, முகம் கழுவிக்கொண்டு வந்தாள் அன்பினி. எல்லோருக்கும் தேநீரும் சிற்றுண்டியும் பரிமாறினார் பரமேஸ்வரி. அதை முடித்துக்கொண்டு தளிரோடு அறையிலிருந்து விளையாடினாள்.
அபயன் உடனே அறைக்குள் வருவான் என்று அவளும் நினைக்கவில்லை. ஆனால், கொஞ்ச நேரத்திலாவது சாதாரணம்போல் வந்து அவளோடு இரண்டு வார்த்தைகள் பேசுவான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
ஆனால், அவன் வரவேயில்லை. முன்னரும் அப்படித்தான். சுபாங்கி இருந்தால் அறைக்குள் வரமாட்டான். இரவில் கூட எல்லோரும் உறங்கச் செல்லும் வரையில் தொலைக்காட்சி பார்ப்பான், இல்லையோ லேப்டாப்பை எடுத்து வைத்துக்கொண்டு விறாந்தையில் அமர்ந்துவிடுவான். அப்போது அவளுக்கும் அது பிழையாகத் தெரிந்ததில்லை.
குடும்ப வாழ்க்கை வாழ்ந்து, கணவனால் துரோகம் இழைக்கப்பட்டு, தனியாக வந்திருக்கும் தமக்கை, மனைவி, அவளோடான தனிமை என்று அவன் இருப்பதைக் கண்டு எதற்கும் ஏங்கிவிடவோ, வருந்திவிடவோ கூடாது என்று நினைக்கிறான் என்று புரிந்து, அவனை வியந்துதான் பார்த்திருக்கிறாள்.
ஆனால், இப்போது அப்படி இல்லையே!
இரண்டு வாரங்கள் கழித்துப் பார்க்கிற மனைவியோடு பேச, பகிர ஏதாவது இருக்கும் என்று அவன் தமக்கை விளங்கிக்கொள்ள மாட்டாரா என்ன?
வீட்டுக்கு வரச்சொல்லிச் சொன்ன தந்தையின் பேச்சைக் கூடக் கேட்காமல், அவனைப் பார்க்கும் ஆவலில் ஓடி வந்தவளுக்கு இது வேண்டும்தான் என்று நினைத்துக்கொண்டாள்.
அதற்குமேல் அறைக்குள் இருப்பது சரியில்லை என்று எண்ணி, தளிரோடு சமயலறைக்குச் சென்று, பரமேஸ்வரிக்கு இரவுணவுக்கு உதவி செய்தாள்.
அப்போது அழைத்த இந்துமதி, இரவு உணவுக்கு அங்கே வரும்படி சொன்னார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று குரலே சொன்னது.
இதில் அவளோடு கூடவே தொத்திக்கொண்டு திரிந்த தளிர் வேறு, பேசுவது அப்பம்மா என்று தெரிந்து, கைப்பேசியைப் பறித்துத் தானும் பேசி, அங்கே வரப்போகிறேன் என்று அழுதாள்.
இந்துமதியும், “ஏலுமெண்டா சின்னவாவையும் கூட்டிக்கொண்டு வாங்கோம்மா. மனமெல்லாம் ஏங்கிப்போய்க் கிடக்கு.” என்று கெஞ்ச, “பாக்கிறனம்மா.” என்று சொல்லிவிட்டு வைத்தாள்.
அன்றுதான் வந்த அத்தை அப்போதே புறப்படுவதும், அவள் அப்பம்மா வீடு செல்கிறாள் என்று தெரிந்துகொண்டதும் சேர்ந்துகொள்ள, அவளை விட்டு இறங்கவே மாட்டேன் என்று நின்றாள் தளிர்.
அவளை அபயனிடம் கொடுத்துவிட்டுப் போவோம் என்று அவனைத் தேடிக்கொண்டு வந்தாள். அவனும் அவளின் மாமனாரும் தோட்டத்தில் நின்றிருந்தனர். படியால் ஏறி, சறுக்கி விளையாடுவதைத் தளிருக்காகப் பின் தோட்டத்தில் பூட்டிக்கொண்டிருந்தார்கள்.
அவனோடு ஒரு வார்த்தை கூடத் தனியாகக் கதைக்கக் கிடைக்காத ஏமாற்றத்தை முகத்தில் காட்டாமல், “அம்மாக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லயாம். போய்ப் பாத்துக்கொண்டு வரப்போறன்.” என்று சொன்னாள்.
இரவுக்கு வருவாளா என்று கேட்க வாய் வந்தாலும் தந்தையும் இருந்ததில் அடக்கிக்கொண்டு, அவளின் அன்னைக்கு என்ன, ஏது என்று கேட்டுத் தெரிந்துகொண்டான் அபயன்.
“தம்பி, நீ கொண்டுபோய் விட்டுப்போட்டு வா.” என்றார் குழந்தைவேலு.
“இலை மாமா. என்னால வேலை கெட வேண்டாம். அப்பாக்குச் சொன்னா வருவார். நான் போயிடுவன்.”
அவளை ஆழ்ந்து நோக்கினாலும் ஒன்றும் சொல்லாமல், “அவரும் இப்ப கடைலதானே நிப்பார். நீ காரைக் கொண்டு போ. இனி எனக்குத் தேவைப்படாது.” என்றான் அவன்.
சரி என்றுவிட்டுத் தளிரை அவனிடம் கொடுத்தாள்.
அவனிடமும் போகமாட்டேன் என்று நின்றாள் சின்னவள். அவனும் கைகால்களில் அழுக்கோடு நின்றான். வேலையும் இன்னும் மிச்சம் இருந்ததில், “நீ அக்காட்டக் குடுத்திட்டுப் போ!” என்றுவிட்டு வேலையைத் தொடர்ந்தான்.
“அப்பம்மாக்கு வருத்தம் செல்லம். இப்ப அப்பம்மாவைப் பாக்கப் போனா, பிள்ளைக்கும் அந்த வருத்தம் தொத்திடும். பிறகு ஊசி போடோணும். ஊசி போட்டா எங்கட செல்லத்துக்கு நோகும் எல்லா. அதால இப்ப அத்த மட்டும் போய் அப்பம்மாவைப் பாத்துக்கொண்டு ஓடி வருவனாம். நாளைக்கு முழுக்க அத்தையும் பிள்ளையும்தான் விளையாடப்போறமாம். சரியா? இப்ப அழாம அம்மாட்டப் போகோணும்.” என்று சொல்லியபடி கொண்டு வந்து சுபாங்கியிடம் நீட்டினாள்.
அவளோ மாட்டேன் என்று நின்றாள். அப்பம்மாவைப் பார்க்கப் போகப் போகிறேன் என்றாள். அதைக் கேட்டு அன்பினியை நன்றாக முறைத்தாள் சுபாங்கி.
அதற்கே அன்பினிக்கு உதறியது. காட்டிக்கொள்ளாமல் சின்னவளை வலுக்கட்டாயமாக நீட்டினாள். அவள் போக வேண்டுமே! அன்பினியின் கழுத்தைக் கைகளாலும் இடுப்பைக் கால்களாலும் இறுக்கிக் கட்டிக்கொண்டு, போகமாட்டேன் என்று கிறீச்சிட்டுக் கத்தினாள்.
சுபாங்கிக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. கொஞ்ச நாள்களாக இந்தப் பிடிவாதம் இல்லாமல் போய்விட்டது என்று அவள் நினைத்திருக்க, அப்பம்மா என்று சொல்லி, அவளை மீண்டும் தூண்டிவிட்டதாக எண்ணி அன்பினியைப் பார்வையாலேயே எரித்தாள்.
அன்பினிக்குச் செய்வதறியா நிலை. சின்னவளைப் பார்க்கவும் மிகவும் பாவமாய் இருந்தது. அவளின் நியாயமான இந்த ஆசையை நிறைவேற்றுவதில் என்ன தவறு, அவளை ஏன் இப்படி அழவைக்க வேண்டும் என்று அறிவு கேள்வி எழுப்பியது.
அன்னையும் பேத்தியைப் பார்க்க ஏங்குவதால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “அண்… அது தளிரையும் கூட்டிக்கொண்டு போய்க் காட்டிக்கொண்டு வரட்டா?” என்றாள் தயங்கி.
அவ்வளவுதான். சுபாங்கிக்கு வெறியே பிடித்துக்கொண்டது. தளிரை வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து இழுத்து எடுக்கவும், “ஏன் அண்ணி, இப்பிடிச் செய்றீங்க? அவா குழந்தை. அவாக்கு என்ன தெரியும்? இவ்வளவு காலமும் தன்னைப் பாசமா வளத்த மனுசரத் தேடுறா. அம்மா அப்பாவும் தங்கட பேத்தியப் பாக்க ஆசைப்படுகினம். இதுல என்ன இருக்கு?” என்றாள் அன்பினி.
சுபாங்கிக்கு உள்ளம் கொதித்துப் போனது. “இதுல என்ன இருக்கோ? அந்த நாய் எனக்குச் செய்த துரோகம் காணாது எண்டு என்ர பிள்ளையையும் என்னட்ட இருந்து பறிக்கப் பாக்கிறியா நீ? பேத்தி வேணுமாம் பேத்தி. எல்லாம் கேடுகெட்ட கூட்டங்கள்!” என்றதும் அன்பினிக்குத் தாங்க முடியவில்லை.
“அண்ணாவைப் பற்றி எதுவும் கதைங்க. ஆனா, அம்மா அப்பாவைப் பற்றிப் பிழையாக் கதைக்காதீங்க!” என்றாள் பட்டென்று.
அது சுபாங்கியைச் சீண்டி விட்டது. “கதைச்சா என்ன செய்வாய்? அந்த ரெண்டும் மகனை ஒழுங்கா வளத்திருக்க எனக்கு இந்த நிலை வந்திருக்குமா? அவனை ஊர் மேய விட்டு என்ர வாழ்க்கைய நாசமறுத்தது காணாது எண்டு, என்ர பிள்ளையும் வேணுமா இப்ப? இதில உனக்குக் கோவம் வேற வருது.” என்று சீறியவள், “எல்லாம் உன்னால! உனக்கு அப்பம்மா கேக்குதோ? இனி அப்பம்மா ஆட்டுக்குட்டி எண்டு ஆரையும் கேப்பியோ? கேப்பியோடி!” என்று கேட்டு கேட்டு மகளின் முதுகில் படார் படார் என்று போடவும் விக்கித்து நின்ற அன்பினியால் அதற்குமேல் முடியவில்லை.
“விடுங்க! என்ன தாய் நீங்க? குழந்தையை இப்பிடிப் போட்டு அடிக்கிறீங்க!” என்று சினந்தபடி ஓடிப்போய் அவளைத் தடுக்க முயன்றாள்.
“ஏய் போடி தள்ளி. அவள் என்ர மகள். அவளை நான் என்னவும் செய்வன்!” என்று பிடித்து அவளையும் தள்ளிவிட்டாள் சுபாங்கி.
அதுவரையில் தோட்டத்தில் நின்ற மூவரும் திடீரென்று கேட்ட சத்தத்தில் அடித்துப் பிடித்து ஓடி வந்தபோது கண்டது, சுபாங்கி அன்பினியைப் பிடித்துத் தள்ளிவிட, அவள் சுவரில் மோதுண்டு நின்றதைத்தான்.
“அக்கா, என்ன செய்றீங்க?” கோபமாகக் கேட்டபடி ஓடி வந்தான் அபயன்.
“டேய் என்ன? என்னட்டையே குரல் உயத்துவியா? முதல் அவள் என்ன கதைச்சவள் எண்டு அவளைக் கேள்.” என்று அவனையும் அதட்டினாள் சுபாங்கி.
அவன் திரும்பி அன்பினியைப் பார்த்தான். அவமானத்தில் கன்றிச் சிவந்துவிட்ட முகமும், கலங்கிச் சிவந்திருந்த விழிகளுமாக நின்றவள் எதுவும் பேசவில்லை. கார்த் திறப்பை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.
ஒரு நிமிடம் யாருக்கு என்ன சொல்வது என்று தெரியாத நிலை. இன்னொரு பக்கம் தளிர் அடிவாங்கிய வலியில் மாமனைக் கட்டிக்கொண்டு கதறினாள். வேகமாக அவளைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தான் அபயன்.
அவன் மனத்திலோ பெரும் கொதிப்பு. அதை அடக்கிக்கொண்டு, தளிரைத் தோளில் போட்டுச் சமாதானம் செய்தபடி அங்குமிங்குமாக நடக்கத் தொடங்கினான்.
“என்ன பிள்ளை இது? கொஞ்சமாவது நிதானம் வேணும். அன்பு உங்கட தம்பின்ர மனுசி. அவாவை இப்பிடித்தான் தள்ளி விடுவீங்களா” என்று கோபப்பட்டார் குழந்தைவேலு.
“என்னை ஏனப்பா கேக்கிறீங்க? இதுக்கு முதல் என்ர பிள்ளையை நான் எப்பயாவது அடிச்சிருக்கிறனா? தளிரைக் கூட்டிக்கொண்டுபோய் அங்க காட்டப் போறாளாம் எண்டு என்னட்டையே சொல்லுறாள். எவ்வளவு தைரியம் அவளுக்கு? எல்லாம் இவனால. அவளைக் கட்டினதும் இல்லாம, லைசன்ஸ் எல்லாம் எடுத்துக் குடுத்து, அவளுக்குப் பிடிச்ச வேலையும் வாங்கிக் குடுத்து, ராணி மாதிரி வச்சிருந்தா தடிப்புக்கணம் வரும்தானே.” என்றதும் பட்டென்று நடை நிற்க, விழிகளை ஒரு முறை இறுக்கி மூடித் திறந்தான் அபயன்.
அதற்குமேல் அவர்கள் பேச்சுக் காதில் விழுமிடத்தில் அவன் நிற்கவில்லை.

