கேட்பார் இன்றிக் காதல் – 41

அத்தியாயம் 41

அபயனின் தோளிலேயே தளிர் உறங்கியிருந்தாள். ஆனாலும் வீட்டு வாசலுக்கும் கேட்டுக்கும் நடந்துகொண்டே இருந்தான் அபயன். மனத்தின் உளைச்சலுக்கும் தகிப்புக்கும் அந்த நடை அவனுக்குத் தேவையாய் இருந்தது.

கலங்கிய விழிகளால் அவனைப் பார்த்துவிட்டுப் போன அன்பினியே கண்களுக்குள் நின்றாள். அவனைப் பற்றி என்ன நினைத்திருப்பாள்? அவன் கண் முன்னாலேயே அவன் தமக்கை அவளைத் தள்ளிவிட்டபோதிலும் அவளுக்காக அவன் நிற்கவில்லை. நீ இவ்வளவுதான் என்றா? அவன் உதட்டோரம் அழுந்தியது.

வேண்டுமென்று செய்யாதபோதிலும் தமக்கையா அவளா என்று வருகிற ஒவ்வொரு பொழுதுகளிலும் அவன் அவளுக்காக நிற்பதேயில்லை. நிற்பது என்ன உனக்கு நான் இருக்கிறேன் என்று உணர்த்தியது கூட இல்லை.

அதற்குமேல் யோசிக்க முடியாமல் சுபாங்கியின் அறைக்குச் சென்றான். அங்கே அவள் கட்டிலில் படுத்துக்கிடந்து கண்ணீர் உகுத்துக்கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும் எழுந்து அமர்ந்தாள். அவள் புறம் திரும்பாது, தளிரைக் கட்டிலில் கவனமாகக் கிடத்தி, போர்வையையும் போர்த்திவிட்டான்.

அவனின் பாராமுகம் அவள் விழிகளில் கண்ணீரை அரும்ப வைத்தது. அவனையே பார்த்திருந்தாள். அது தெரிந்தாலும் எதுவும் பேசாது திரும்பி நடந்தான் அபயன்.

“நான் எதையும் வேணுமெண்டு செய்யேல்ல அபய்!” என்றாள் உடைந்த குரலில். “அவளோட தேவையில்லாம ஒரு கதைகூட நான் கதைக்கிறேல்ல. உனக்கே தெரியும்.”

திரும்பித் தமக்கையைப் பார்த்தான் அபயன்.

“அவளாத்தான் வந்து தேவையில்லாமக் கதைச்சவள்.”

“இப்ப இதையெல்லாம் ஏன் என்னட்டச் சொல்லுறீங்க அக்கா?” நிதானமாக வினவினான்.

பதிலற்ற திகைப்புடன் அவனைப் பார்த்தாள் சுபாங்கி.

“உங்களில பிழை இல்ல, நீங்க செய்தது சரி எண்டு நினைச்சா நீங்க எனக்கு விளக்கம் சொல்லத் தேவை இல்லையே.”

“அப்ப நான் செய்தது பிழை எண்டு சொல்லுறியா?” என்றாள் கண்ணீரை உள்ளுக்கு இழுத்தபடி.

“அத நீங்கதான் சொல்லோணும்.”

அவனுடைய ஒட்டாத பேச்சு அவள் உள்ளத்தைக் காயப்படுத்தியது. “அபய், இப்பிடி ஆரோ மாதிரிக் கதைக்காத. இப்பிடி ஒவ்வொருத்தரா வெறுத்தா நான் எங்கயடா போவன்?” என்றாள் கண்ணீர் வழிய.

அவளையே பார்த்தான் அபயன். அழுதழுது சிவந்த விழிகளும், கண்ணீர் முகமுமாய் இருந்த தமக்கை அவன் உள்ளத்தையும் பாதித்தாள்.

ஒரு நெடிய மூச்சுடன் வந்து அவளருகில் அமர்ந்தான். அவள் கரம் பற்றி, “உங்களுக்கு என்னக்கா வேணும்? என்ன நடந்தா இந்தச் சினம், கோபம், குமுறல் எல்லாம் இல்லாம நிம்மதியா இருப்பீங்க?” என்று வினவினான்.

கொஞ்ச நஞ்சமாய் இருந்த கட்டுப்பாடுகளும் உடையக் கரகரவென்று கண்ணீர் உகுத்தாள் சுபாங்கி. அவளுக்கு என்ன தேவை? எது இருந்தால் அவள் உள்ளம் அமைதியடையும்? எதனால் அவள் காயங்களை ஆற்ற முடியும்? அவளுக்கே தெரியவில்லை.

“சொல்லுங்க அக்கா. இல்ல நான் என்ன செய்தா உங்களுக்குச் சந்தோசமா இருக்கும்?”

ஒன்றும் சொல்லாமல் அடக்கிய அழுகையோடு அவன் முகம் பார்த்தாள் சுபாங்கி.

“இப்பிடிக் கோவப்பட்டு, ஆத்திரப்பட்டு, கத்தி, அழுது என்ன காணப்போறீங்க? எதுவுமே இல்ல. இது உங்களைத்தான் இன்னுமின்னும் பாதிக்கும். அதுவும் இண்டைக்குத் தளிருக்கு அடிச்சிருக்கிறீங்க. இதெல்லாம் சரி எண்டு நினைக்கிறீங்களா?”

“அது என்னை மீறி நடக்குதடா தம்பி. ஏதோ ஒரு ஆத்திரம், கோவம், குமுறல் என்னை விட்டுப் போகுதே இல்லை. நான் என்ன செய்ய?” அவனிடமே திருப்பிக் கேட்டாள் அவள்.

“ஒண்டுமே செய்ய வேண்டாம். நடந்ததுகளையே நினைச்சுக்கொண்டு இருக்காம, கொஞ்சம் எதிர்காலம் பற்றி யோசிங்க. இனி நீங்க என்ன செய்யோணும் எண்டு பாருங்க. தளிருக்கு என்ன செய்தா சந்தோசமா இருப்பா எண்டு யோசிங்க.” என்று தன்மையாய் எடுத்துச் சொன்னான்.

“நீயும் மறைமுகமா அவளை அங்க விடச் சொல்லுறியா அபய்?” சில கணங்களுக்கு அவன் முகத்தையே இமைக்காது பார்த்துவிட்டு வினவினாள் அவள்.

அவளின் அந்தக் கேள்வி, அவன் இவ்வளவு நேரமாக எடுத்துச் சொன்னதெல்லாம் வீண் என்று உணர்த்த, எப்போதிலிருந்து அவள் இப்படி என்ன சொன்னாலும் புரிந்துகொள்ள முடியாத நிலைக்குப் போனாள் என்று பார்த்தான் அவன். ஆனால், பேச ஆரம்பித்துவிட்டதை இடையில் விட மனமில்லை.

“இத நான் சொன்னா உங்களுக்குப் பிடிக்காது எண்டு தெரியும். ஆனா, எனக்கு என்னவோ நீங்க மனம் நோவீங்க(நோகுதல்) எண்டு நினைச்சு நினைச்சு நாங்க எல்லாரும் இவ்வளவு காலமும் கதைக்காம இருந்ததுதான் பிழையோ எண்டு இருக்கு. அதால சொல்லுறன், நீங்க தளிரை அங்க விடத்தான் வேணும். அவேக்கும் அவவப் பாக்கிற உரிமை இருக்கு. இப்பிடி நீங்க விடாம வச்சிருக்க ஏலாது. அது சரியும் இல்ல. எங்கட அம்மா அப்பாவை மாதிரி வயதான மனுசர். சொந்தப் பேத்தியப் பாக்காம இருங்க எண்டா அதில என்னக்கா நியாயம் இருக்கு?” என்று கனிவுடனேயே வினவினான்.

சின்னதாய் வறண்ட முறுவல் ஒன்று அவள் உதட்டோரத்தில் வழிந்தது. “அவளைக் கட்டினதில இருந்து நீயும் நிறைய மாறிட்டாய் அபய். அவன் எனக்குத் துரோகம் செய்திட்டான் எண்டு சொன்னதும் எதப்பற்றியும் யோசிக்காமப் போய் அவனை அடி வெளுத்தியே அவன்தான் என்ர தம்பி. இப்ப கண்ணுக்கு முன்னால நிக்கிறவன் அன்பினின்ர மனுசன். அதுதான் உனக்கு என்ர மனநிலை விளங்குது இல்ல. அவேக்காகக் கதைக்கிறாய். எனக்கு எண்டு இருக்கிறது அவள் மட்டும்தான். அவளையும் மொத்தமாக் குடுத்துப்போட்டு என்னை என்ன செய்யச் சொல்லுறாய்?” என்ற தமக்கையை அதிர்வுடன் நோக்கினான் அபயன்.

ஆனாலும் தன் பற்றிய பேச்சை வளர்க்காமல், “கிழமைல ஒரு நாள் தளிர் அங்க போய் வாறதால மொத்தமாப் போயிடுவா எண்டு எப்பிடிச் சொல்லுறீங்க? முதல் அவா குழந்தை. நீங்க இல்லாம எப்பிடி இருப்பா?” என்றான் இன்னும் நிதானமாக.

“அது அப்பிடித்தான் ஆரம்பிக்கும். உனக்கு ஒண்டும் தெரியாது. சும்மாவே அவள் அப்பா பைத்தியம். இப்ப நிறைய நாளா அவனைப் பாக்கவே இல்ல. அப்பிடியிருக்க அவனைக் கண்டா என்னை மறந்திடுவாள்.” என்று அடித்துச் சொன்னாள் தமக்கை.

“அந்தாளிட்ட விடச் சொல்லி நான் எங்க சொன்னனான்?”

“உனக்கு விளங்கேல்லையாடா? என்ன இருந்தாலும் அவேக்கு அவன் மகன். அவே எப்பிடியும் அவனை விடப்போறேல்ல. கடைசில அவன் ஆசைப்பட்ட எல்லாம் நடக்கும். நான் எந்தப் பிழையும் செய்யாம, இப்பிடி உங்க எல்லாரிட்டையும் பேச்சுக் கேட்டுக்கொண்டு இருக்கோணும்.”

ஒரு நெடிய மூச்சுடன் எழுந்து நின்று, “உண்மையா எனக்கு என்ன சொல்லுறது எண்டு தெரியேல்ல அக்கா. ஆனா சொத்துப்பத்தை எல்லாம் தளிருக்கு எழுதி வச்சு, தாங்க தனியா இருந்தாலும் பரவாயில்ல எண்டு அவனைச் சேர்க்காம இருக்கிற அந்த மனுசருக்கு நீங்க மருந்துக்கும் நியாயம் செய்யேல்ல எண்டு மட்டும் விளங்குது. தயவு செய்து நிதானமா யோசிங்க. உங்களுக்கே நீங்க செய்றது, கதைக்கிறது எல்லாம் பிழை எண்டு விளங்கும்.” என்றுவிட்டு வெளியே வந்தான்.

உள்ளம் மட்டும் கனத்துப்போய்க் கிடந்தது. அவன் மீதான தமக்கையின் நியாயமில்லாத குற்றச்சாட்டுகளை ஒதுக்க முடியவில்லை.

அவன் விறாந்தைக்கு வந்தபோது என்னவாம் என்பதுபோல் அவன் முகத்தைப் பார்த்தார் குழந்தைவேலு.

“என்ன சொன்னாலும் அவா விளங்கிக்கொள்ளுற மாதிரி இல்லை அப்பா.” என்றான் அவன் மெல்லிய குரலில்.

எழுந்து அவனோடு வெளியே வந்தார் குழந்தைவேலு. இருவரும் பேசாமலேயே கொஞ்ச நேரம் நின்றனர். “எல்லாம் என்னால.” என்றார் குழந்தைவேலு. “இதுக்குப் பேசாமையே இருந்திருக்கலாம். இனி அந்த மனுசனிட்ட என்ன விளக்கம் சொல்லுறது எண்டு தெரியவே இல்ல.” என்று தன் மனத்தை மகனிடம் பகிர்ந்துகொண்டார்.

எல்லாம் முடிந்துபோயிற்று என்று ஒதுங்கி இருந்த மனிதர்களிடம் திருமணப் பேச்சை ஆரம்பித்து, அன்பினியை மருமகளாக்கியது அவர். அதில் அந்த வீட்டில் அவளின் நலன் பற்றிய பொறுப்பு அவருக்கும் உண்டு. அந்த வகையில் அவரும் அவளுக்கு நியாயம் செய்யாததாகவே உணர்ந்தார்.

“மாமா பக்குவமான மனுசன் அப்பா. அவருக்கு விளங்கும். இல்லாம தளிரைப் பாக்கிறதுக்கான சகல உரிமையும் அவேக்கு இருக்கு எண்டு தெரிஞ்சும் ஒண்டுமே கதைக்காம, அமைதியா இருப்பாரா?” என்றான் அவன்.

பார்வை மகனில் நிலைக்க, “அந்தப் பொறுமையும் அமைதியும் இன்னும் எவ்வளவு காலத்துக்கு எண்டு தெரியேல்ல தம்பி. காந்தனாலதான் இத்தனையும். அதாலதான் பொறுத்துப் போறார். அதே பொறுமைய அன்பினின்ர விசயத்திலையும் நாங்க எதிர்பாக்கேலாது. அவரும் அப்பிடி இருக்க மாட்டார்.” என்றவரின் பேச்சின் பின்னே இருந்த எச்சரிப்பு அவனுக்கும் விளங்கிற்று.

“நீங்களும் அக்காவோட கதைங்க அப்பா. இப்பிடியே இருந்தா இது எங்க போய் நிக்கும் எண்டே தெரியாம இருக்கு. நான் என்ன சொன்னாலும் அவா கேக்கிற நிலமைல இல்ல. அன்பாக்காகக் கதைக்கிறன் எண்டுதான் நிக்கிறா.”

“கதைக்காம எங்கயப்பு? வெளிப்படையா உடைச்சுக் கதைச்சது இல்லையே தவிர மறைமுகமாச் சொல்லித்தான் இருக்கிறன். நாங்க எல்லாரும் உங்களுக்காக இருக்கிறம் எண்டுற தைரியத்தையும் குடுத்துத்தான் இருக்கிறன். விளங்கிக்கொள்ளவே மாட்டன் எண்டு நிண்டா நானும் என்ன செய்ய?” என்றார் அவர் ஒருவிதமாகத் தளர்ந்த குரலில்.

மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் அவன் அமைதியாய் நிற்க, “அன்புவோட கதைச்சனியாப்பு?” என்றார் கொஞ்சம் தயங்கிய குரலில்.

அவரைப் பாராமல் இல்லை என்று தலையை அசைத்தான் அவன்.

“கதையப்பு. சமாதானப்படுத்து. அந்தப் பிள்ளை அமைதியாப் போனபடியா இந்தளவோட முடிஞ்சிது. அவாவும் சண்டைக்கு வந்திருந்தா இந்த வீடே நரகமாகியிருக்கும்.”

உண்மைதான். ஆனால், மௌனத்தால்தான் அவள் மிகப்பெரிய போரையே புரிவாள் என்று அவரிடம் சொல்லப் போகவில்லை அவன்.

ஒரு பெரிய மூச்சு ஒன்று அவனிடமிருந்து வெளியேறியது. அவன் மனத்தை உணர்ந்தவர் போன்று அவன் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டுப் போனார் அவர்.

வெகு நேரமாய் அங்கேயே நின்றிருந்தான் அபயன்.

*****

அபயன் அறையை விட்டு வெளியேறிய பிறகும் அப்படியே அமர்ந்திருந்தாள் சுபாங்கி. அழுகை நின்றிருந்தது. உள்ளத்தில் நிரந்தரமாய்த் தங்கியிருந்து அவளை அரிக்கும் ரணத்தை மட்டும் மாற்றவே முடியவில்லை.

திரும்பி மகளைப் பார்த்தாள். நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள். அடித்த அடிகள் நினைவுக்கு வர விழிகள் மீண்டும் கலங்கின. அவள் கேசம் கோதி கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டவளுக்கு நெஞ்சு வெடிக்கும் போலிருந்தது.

அந்த வலிக்கு மகளின் ஸ்பரிசம் வேண்டும் போலிருக்கப் பக்கத்தில் படுத்துக்கொண்டாள். அவளும் இவளின் தேகச் சூட்டை உணர்ந்து இன்னும் இவளோடு ஒட்டிக்கொண்டாள்.

பிறந்ததிலிருந்து சீராட்டிப் பாராட்டி வளர்த்த குழந்தை. எத்தனை பாசமாக இருப்பான். ‘எப்போதும் தூக்கி வைத்திருந்து உடற்சூடு பழக்காதே, பிறகு என்னை வேலை செய்ய விடமாட்டாள்’ என்று இவள் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டான்.

‘என்ர பிள்ளையைப் பாக்கிறத விட வேற என்ன வேலை உனக்கு?’ என்று சண்டைக்கு வருவான்.

எல்லாம் நடிப்பு. அது உண்மையாய் இருந்திருக்க இப்படியெல்லாம் நடந்திருப்பானா? துரோகி! பெற்ற குழந்தையின் வாழ்க்கைக்கும் சேர்த்து அள்ளிவைத்த மோசக்காரன்! அது தெரியாமல் இந்தக் குழந்தையும் அவனுக்காக ஏங்குகிறாள்.

உன் அப்பா உனக்கும் சேர்த்துத் துரோகமிழைத்துவிட்டான் என்று அவளுக்கு எப்படிப் புரியவைப்பாள்?

அவளுக்கென்று இருக்கும் ஒரே சொந்தம். அவளும் இல்லை என்றால் அவள் வாழ்வதில் அர்த்தமேயில்லை. அவளால் தாய் தந்தையரையோ அபயனையோ தனக்கெனப் பிடித்து வைத்துக்கொள்ள முடியாது.

அதனால்தான் தன் ஒற்றைச் சொந்தமான அவளைத் தன் மார்புக்கூட்டுக்குள்ளேயே பொத்தி வைத்துக்கொள்ள நினைக்கிறாள். அது ஏன் இங்கு யாருக்கும் புரியமாட்டேன் என்கிறது?

கண்ணீர் அதுபாட்டுக்கு வழிய, மகள் முகத்தையே பார்த்தபடி கிடந்தாள்.

இரவானது. பரமேஸ்வரி எல்லோரையும் சாப்பிட அழைத்தார். தமக்கை சாப்பிட்டுவிட்டுச் செல்லும்வரை காத்திருந்து அபயனும் பெயருக்குக் கொறித்துவிட்டு எழுந்தான்.

அவன் அறைக்குள் வந்தபோது அன்பினி கொண்டுவந்த ட்ராவலிங் பாக்கும், அவள் கழற்றிப் போட்டிருந்த உடையும்தான் கண்ணில் பட்டன. மனைவியின் உடையில் முகம் புதைத்தான்.

இரண்டு வாரங்கள் கழித்து வந்தவளிடம் தெரிந்த எதிர்பார்ப்பை அவள் பார்வையில் அவன் படிக்காமல் இல்லை. அந்த இரண்டு வாரங்களாக அவனும்தானே அவளைப் பார்க்கவில்லை.

கடைசியாக யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுகையில் அனுபவித்த நெருக்கம் வேறு அவளை இன்னும் அதிகமாய்த் தேட வைத்திருந்தது. இரவு வரட்டும் என்று காத்திருந்தான். கடைசியில் என்னவெல்லாமோ நடந்து, அவள் அங்கேயும் அவன் இங்கேயும் என்று இருக்கிறார்கள்.

திறந்து கிடந்த அவளின் ட்ராவலிங் பாக்கை எடுத்துப் பார்த்தான். அதற்குள் ஒரு பை. அப்படி என்ன என்று அதை எடுத்து விரித்தவனின் முகத்தில் விரிந்த சிரிப்பு.

அவ்வளவு நேரமாக அனுபவித்த அத்தனை மனப்பாரங்களும் அகல, அவளுக்கு உடனே அழைத்தான்.

error: Alert: Content selection is disabled!!