அத்தியாயம் 43
இந்துமதி உறங்கிய கொஞ்ச நேரத்தில் அபயன் அழைத்தான். சத்தம் இல்லாமல் எழுந்து, அறைக்குள் வந்து அழைப்பை ஏற்றாள் அன்பினி.
அக்காவோடு எதற்குத் தேவை இல்லாமல் கதைத்தாய் என்று கேட்பானோ என்று உள்ளூரக் கலங்கியபடி அவள் பார்க்க, அவன் வாயெல்லாம் பல்லாக அமர்ந்திருந்தான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்த மனநிலைக்கு எதையும் ஓடிப் பிடிக்கவும் முடியவில்லை.
ஆனால், அவள் முகத்தைப் பார்த்ததும் அவன் புருவங்கள் சுருங்கின. “அழுதனியா?” என்றான் உடனேயே
அந்தக் கேள்வி அன்னையின் நிலையை நினைவூட்டியது. இல்லை என்பதுபோல் தலையசைத்தவளின் நாசி சிவந்து, விழிகள் மீண்டும் கலங்கின.
“மாமிக்கு ஆக ஏலாம இருக்கா? நான் வரவா, ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வருவமா?” என்றான் அவசரமாக.
“இல்ல இல்ல, அம்மாக்கு ஒண்டும் இல்ல. சும்மா சளிதான். இப்ப நித்திரையாகிட்டா.” கணவனின் கனிவும் அக்கறையும் அவள் கட்டுப்பாட்டை உடைக்க முயல்வதை உணர்ந்தபடி சொன்னாள்.
“பேந்து(பிறகு) என்னத்துக்கு அழுறாய்?”
“அது அம்மா… அம்மாக்கு…” என்று ஆரம்பித்தவள், குரல் அடைக்க நடந்தவற்றைச் சொல்லிமுடித்தாள்.
அவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்தப் பெண்மணியின் மனநிலை இவன் நெஞ்சையும் பிசைந்தது.
“இப்ப யோசிக்க நான் யாழ்ப்பாணம் போனது பிழையோ எண்டு இருக்கு.” என்றாள் நனைந்த இமைகளோடு.
“நீ வேண்டாம் எண்டுதான் சொன்னனீ. நான்தான் கேக்காம வேலைக்குப் போட்டனான்…” என்று அவன் நெற்றியைத் தேய்த்துவிட, “எனக்கு விருப்பம் எண்டுதானே போட்டனீங்க. இப்பிடி எல்லாம் அவா யோசிப்பா எண்டு தெரியாதுதானே.” என்றாள் அவள், அவன் தன்னையே நொந்துகொள்வது பிடிக்காமல்.
இமைக்காமல் அவளையே பார்த்தவனின் உதட்டோரம் மெல்லிய சிரிப்பில் துடித்தது.
‘இவனுக்கு விசர் பிடிச்சிட்டுது.’ அவனை வித்தியாசமாகப் பார்த்தாள் அன்பினி.
“ஹல்லோ என்ன, மனதுக்க திட்டுற மாதிரி இருக்கு.”
“பின்ன, இப்பிடிப் பல்லக் காட்டினா திட்டாமக் கொஞ்சோணுமோ?” அவனுக்குக் கேட்கட்டும் என்றே முணுமுணுத்தாள்.
“தாராளமாக் கொஞ்சடி என்ர அன்பா! எங்களுக்கு எண்டு பிள்ளை பிறக்கிற வரைக்கும் நீ கொஞ்ச நான் மட்டும்தானே இருக்கிறன்.” என்றதும் சிவந்துவிட்ட முகத்தை மறைக்க அவனை முறைத்தாள் அன்பினி.
“ஏன் தளிர் இல்லையா?” அவளுக்கு அவனைச் சும்மா விட விருப்பமில்லை.
“என்னைக் கொஞ்சுற மாதிரி அவவக் கொஞ்சேலுமா?” என்றதும் வேகமாக அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
அவன் சத்தமாய்ச் சிரிக்கும் சத்தம் அப்போதும் அவளுக்குக் கேட்பது போலிருந்தது. ‘எவளோ ஒருத்திக்குப் பக்கத்தில போய் நிண்டுட்டு வந்தவரைக் கொஞ்சாததுதான் குறை! அந்தக் கை ரெண்டையும் வெட்டிக் காக்காக்குப் போடோணும்.’ அவள் திட்டி முடிப்பதற்குள் அவன் திரும்பவும் அழைத்தான்.
ஏற்பதா வேண்டாமா என்று போராடிவிட்டு அழைப்பை ஏற்றவள், முகம் தெரியாதபடிக்குக் கைப்பேசியைச் சரித்து வைத்தாள்.
திரும்பவும் சத்தமாய்ச் சிரித்தான் அவன். “கலியாணம் கட்டியும் காதலிக்கிற அந்த ஃபீல அனுபவிக்கிற ஆக்கள் நானும் நீயுமாத்தான் இருப்பம் போல.” என்றான் அந்தச் சிரிப்பினூடு.
“இப்பிடியே கதைச்சுக்கொண்டு இருந்தீங்க எண்டா திரும்பவும் கட் பண்ணிடுவன்!” என்று மிரட்டினாள் அவள்.
“சரி சரி சொல்லு, நீ கார்ல வந்ததப் பாத்து மாமா, மாமி என்ன சொன்னவே?”
அவள் இந்துமதியோடு நடந்த கூத்தைச் சொல்ல, அவன் திரும்பவும் வாய்விட்டுச் சிரித்தான்.
அவனையே பார்க்க ஆசையாய் இருந்தது. இப்போதெல்லாம் இப்படித்தான், அவள் உள்ளத்தைத் திரும்பவும் கவர ஆரம்பித்திருந்தான். விடாமல் பார்த்தால் கண்டுகொள்வான் என்று பார்வையை அகற்றிக்கொண்டாள்.
“அடியேய் நடிப்புக்காரி! உன்னை எனக்குத் தெரியுமடி!” என்றான் அவன் அப்போதும் மெல்லிய நகைப்புடன்.
அப்படி என்ன தெரியுமாம்? பார்வையால் அவள் அவனை வெட்ட, அதை ரசிக்கும் முறுவலோடு, “சொறி அன்பா!” என்றான்.
எதற்குச் சொல்கிறான் என்று புரிந்ததில் அவள் ஒன்றும் சொல்லவில்லை.
“அண்ணி இப்ப ஓகேயா?”
“ம்ம், படுத்திட்டா.”
“தளிர்… தளிர் இனி அம்மா அப்பாவைப் பாக்க வரவே ஏலாதா?” அன்னையின் ஏக்கமும் தவிப்பும் அவளை அந்தக் கேள்வியைக் கேட்க வைத்தது.
ஒரு நெடிய மூச்சு ஒன்று தானாய் வெளியேற, “எனக்குத் தெரியேல்ல அன்பா.” என்றான் அவன். “அக்காவா ஓம் எண்டு சொல்லி அனுப்புறதுதான் இதுக்கு நிரந்தரத் தீர்வு. ஆனா அது இப்போதைக்கு நடக்கும் மாதிரி இல்ல. அவாவோட இண்டைக்குக் கொஞ்சம் கதைச்சனான். ஆனா நாங்க நினைக்கிற வேகத்துக்கு ஒண்டும் நடக்காது.”
அவளும் புரிகிறது என்பதுபோல் தலையை அசைத்து, “இண்டைக்கு நடந்த பிரச்சினைல எனக்கும் அது விளங்கினது. அப்பா பிரச்சினையே இல்ல. அம்மாதான்… அண்டைக்கு மாதிரிக் கோயிலுக்குக் கொண்டு வந்து காட்டினாலும் போதுமாம்.” என்றாள் குரலடைக்க.
“இஞ்ச நடந்தது அங்க தெரியுமா?”
இல்லை என்று தலையை அசைத்தாள் அவள். ஒன்றுமே சொல்லாமல் அவளையே பார்த்தான் அபயன். கண்ணைக் கசக்கிக்கொண்டு நடந்ததையெல்லாம் தகப்பனிடம் சொல்ல அவளுக்கு எவ்வளவு நேரமாகும்? ஆனாலும் மிகுந்த பொறுப்பாய் நடந்திருக்கிறாள்.
அப்படியே அவளை அள்ளிக்கொள்ள வேண்டும் போலிருக்க, “எனக்கு இப்பவே நீ எனக்குப் பக்கத்தில வேணும் போல இருக்கு அன்பா!” என்றான் ஆழ்ந்த குரலில்.
அவனையே பார்த்தவள் விழிகள் இலேசாய்க் கலங்கின. ஒன்றும் சொல்லாமல் எங்கோ பார்த்தாள்.
“நாளைக்கு ஒன்பது மணிபோல வெளிக்கிட்டு இஞ்ச வா, வெளில போயிட்டு வருவம்.”
அவள் சரி என்று தலையசைக்க, மனமேயில்லாமல் அழைப்பைத் துண்டித்தான்.
*****
அடுத்தநாள் காலை, அவன் சொன்னதுபோல் அவர்கள் வீட்டுத் தெருவுக்கு அவள் காரை விட்டபோது, எதிரில் நடந்து வந்துகொண்டிருந்த அபயனைக் கண்டு, தன்னிச்சையாய் பிரேக்கை அழுத்திக் காரை நிறுத்தியிருந்தாள் அன்பினி.
எப்படி அவனிடம் கொடுப்பது என்கிற தயக்கம் இருந்தாலும் ஆசையை அடக்க முடியாமல், அவள் யாழ்ப்பாணத்திலிருந்து வாங்கி வந்திருந்த, சாம்பல் நிறத்துக்குக் கிடையாக மெல்லிய கறுப்புக் கோடுகள் வரைந்தது போன்ற டிசைனில் இருந்த ஷேர்ட் அணிந்து, அதன் கைகளை முழங்கை வரையிலும் மடித்துவிட்டு, அதற்குப் பொருந்தும் வகையில் கறுப்பு நிற ‘பொடி பிட்’ ஜீன்ஸில், ஷேர்ட்டை இன் பண்ணாமல் அவன் நடந்து வரவும் அவளால் அவனிடமிருந்து விழிகளை அகற்றவே முடியவில்லை.
அவன் முகத்திலும் அவளைப் பந்தாடும் சிரிப்பு.
அவளையே பார்த்தபடி காரை நெருங்கி, “ஹல்லோ மேடம், ஒருத்தரை ஏத்த வந்தா அவருக்குக் கிட்டக் கொண்டு வந்து காரை நிப்பாட்டுறதுதான் மரியாதை. அதைவிட்டுட்டு என்ன இது சின்ன பிள்ளைத்தனமா?” என்றபடி மறுபக்கக் கதவைத் திறந்து ஏறி அமர்ந்தான்.
“எங்க போகோணும்?” அவனைப் பாராமல் வெகு சிரத்தையாய் வினவினாள்.
“தனியா ஒரு ரூமுக்கு.” என்றதும் திரும்பி முறைத்தாள்.
அவனோ தன் பற்களுக்கு விளம்பரம் செய்துகொண்டிருந்தான்.
அவளாகக் கொடுக்காமல் எடுத்து அணிந்துவிட்டுச் சிரிப்பு வேறு!
அப்போது அவன் கை அவள் புறமாய் நீண்டது. “நீ வாங்கிக்கொண்டு வந்த புத்தம் புது பிளாஸ்க்க வடிவாக் கழுவி, நானே இப்ப கொஞ்சத்துக்கு முதல் ஊத்தின பிரெஷ் தேத்தண்ணி!” என்றான் அவன்.
‘பிரெஷ் தேத்தண்ணியாம்! இவன… வாங்கிக்கொண்டு வந்த உன்னச் சொல்லோணுமடி!’ அவளுக்குச் சிரிப்பும் வந்தது. கோபமும் வந்தது.
“உங்களை ஆரு என்ர பாக்கை எல்லாம் பிரிச்சு மேயச் சொன்னது?” கண்களை உருட்டிப் பிரட்டி அதட்ட முயன்றாள் அவள்.
“உன்னையே…” என்றவன் வார்த்தைகளை விழுங்கி, “ரைட்ஸ் எனக்கு இருக்கு. இதுல பாக்குக்கு கேள்வி கேக்கிறா. பிடியடி!” என்றான் அவனும் சிரிப்பை அடக்க முடியாமல்.
அந்தத் தேநீரும் அதனோடு அவர்களுக்கிடையிலான உறவும் பிரத்தியேகமானதாயிற்றே. அவளால் மறுக்க முடியவில்லை. அந்த நாள்களின் நினைவில் உள்ளம் மயங்க வாங்கிப் பருகினாள்.
சற்று நேரம் அவளையே பார்த்திருந்தவன், “பக்கத்தில இருக்கிறவனுக்கும் குடுத்துக் குடிக்கிற பழக்கம் எல்லாம் இல்ல போல!” என்றுவிட்டு அவள் கரத்திலிருந்ததை வாங்கி அவளைப் பார்த்துக்கொண்டே பருகினான்.
மீண்டும் அவளிடம் நீட்டினான். அவள் விழிகள் விரிந்தன. “ம்!” விழிகளை மட்டும் அசைத்துச் சொன்னான்.
இந்தமுறை முகச் சிவப்பை அவளால் மறைக்கவே முடியாமல் போயிற்று. பார்வையைத் தழைத்தபடி வாங்கி அவள் பருக, அவனுக்கும் அவளுக்குமான அந்த இடைவெளியைப் பெரும் நரகமாய் உணர்ந்தான் அபயன்.
“ஒரே ஒரு தனிமை எங்களுக்கே எங்களுக்கு எண்டு கிடைக்காதா அன்பா?” என்றான் இரண்டு கைகளாலும் தலையைக் கோதியபடி.
அந்த நொடியில் அவளுக்கும் அதுதான் வேண்டும் போலிருந்ததில் ஒன்றும் பேச முடியவில்லை.
“பேசாம யாழ்ப்பாணம், உன்ர ரூமுக்கே போவமா?”
அவள் திகைப்புடன் விழிகளை விரித்தாள்.
“பாத்தியா சொந்தமா ஒண்டுக்கு ரெண்டு வீடு இருக்கு. ஆனா, ஆசைப்படுற நேரம் ஒரு தனிமை கிடைக்காதாம்.”
அதுவரை இருந்த இனிமையான மனநிலை கொஞ்சம் மங்க அவனை ஏறிட்டாள்.
“கோயிலுக்கு விடு அன்பா. என்னவோ எல்லாமே எங்கட கைய மீறிப் போற மாதிரியே இருக்கு. அந்தக் கடவுளாவது ஏதாவது செய்றாரா எண்டு பாப்பம்.”
அருகிலிருந்த கோயிலுக்கு இருவருமாகச் சென்று வணங்கியது உண்மையில் மிக இதமான ஒரு மனநிலையைத் தந்தது. அப்படியே ஒரு சின்ன ஹோட்டலில் காலை உணவை முடித்தனர். அன்பினிக்கு இனி அவள் வீட்டுக்குப் போவதா, இல்லை அவனோடு அவன் வீட்டுக்குப் போவதா என்கிற கேள்வி. ஆனாலும் எதுவுமே கேளாமல் அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தாள்.
இப்போது கார் அவன் கையில் இருந்தது. அவளின் வீட்டுக்குச் சற்று முன்னாலேயே நிறுத்தினான். அவனிடம் ஏதோ ஒரு அழுத்தம். எதையோ சொல்லத் தயங்குகிறான் என்று புரிய, “என்ன?” என்றாள் மெல்லிய பயத்தோடு.
திரும்பி அவள் விழிகளையே பார்த்து, “இனி நீ கொஞ்ச நாளைக்கு அங்க, எங்கட வீட்டுக்கு வராத அன்பா. நானே யாழ்ப்பாணம் வந்து பாக்கிறன்.” என்றான் அவன்.
அவள் விழிகள் வேதனையில் அகன்றன. அவன் கையொன்று நீண்டு வந்து அவள் கரம்பற்றி அழுத்திக் கொடுத்தது.

