அத்தியாயம் 44
வார்த்தைகளில் வடிக்கமுடியாத ஒரு அழுத்தமான மனநிலையில்தான் அன்பினிக்கு அந்த வாரம் யாழ்ப்பாணத்தில் கழிந்தது.
அன்று அவன் அப்படிச் சொன்னபோது துடித்துப்போனாள். எப்போதுமே என்னைப் பற்றி யோசிக்கவே மாட்டானா என்று கண்ணீர் சிந்தினாள்.
அவளை அணைத்து, முதுகை வருடிக்கொடுத்து, “நீயும் அங்க இருந்து, இப்பிடி அடிக்கடி அக்கா உன்னோட கோவப்பட்டு, நீயும் மனதளவில் காயப்பட்டு, அவாவும் இன்னுமின்னும் மோசமாப் போறதுக்குப் பதிலா, கொஞ்ச நாளைக்கு விலகி இருக்கிறதுதான் நல்லம் அன்பா. அக்கா உன்ன என்ர மனுசியா மட்டும் பாக்கட்டும். அதுக்குப் பிறகு வா.” என்றான் விளக்கமாக.
எல்லாம் புரிந்தாலும் என்னவோ அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்படிச் சொல்லிவிட்டானே என்பதிலேயே அவள் உள்ளம் நின்றது.
அதை உணர்ந்துகொண்டவன் அவள் தாடையைத் தாங்கி, “என்னால என்ர அன்பாக்காக ஒரு வார்த்த கூடக் கதைக்கேலாம இருக்கிறது நெஞ்ச அறுக்குது அன்பா. கதைச்சு அக்கான்ர மனதைக் காயப்படுத்தவும் ஏலாம இருக்கு. என்னை என்ன செய்யச் சொல்லுறாய்?” என்றான் இயலாமையோடு.
புரிகிறது என்பதுபோல் தலையை அசைத்தவளிடம், “சொறி!” என்றபடி அவள் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றினான்.
விழிகளை மூடி, அந்த முத்தம் தந்த இதமான உணர்வை உள்வாங்கினாள் அன்பினி. என்ன மாயமந்திரமோ அவள் இதயத்திலும் மெல்லிய அமைதி படர்ந்தது.
அந்த அமைதியும் இதமான மனநிலையும் அப்போது மட்டும்தான். அவன் அவளை அவள் வீட்டின் முன்னே இறக்கிவிட்டுப் போனதிலிருந்து இதோ இப்போதுவரை அவள் உள்ளத்தில் நிம்மதி இல்லை.
வெள்ளி மாலை புறப்பட்டு முல்லைத்தீவுக்கு வந்தாள். இங்கு வரைக்கும் வந்துவிட்டு எப்படி அவர்கள் வீட்டுக்குப் போகாமல் இருப்பது, மாமாவும் மாமியும் எதுவும் நினைக்கமாட்டார்களா என்கிற கேள்விகள்தான் வந்ததிலிருந்து அவளை அரித்துக்கொண்டே இருந்தன.
வீட்டில் நான் சொல்லிக்கொள்கிறேன் என்று அபயன் சொல்லியிருந்தான். என்றாலும் அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.
ஞாயிறு விடிந்தும் அவள் அசையாமல் இருக்கவும், “அங்க போகேல்லையா?” என்று கேட்டார் திருநாவுக்கரசு.
“அது இவர்தான் அப்பா கொஞ்ச நாளைக்கு அங்க வர வேண்டாம் எண்டவர்.” என்றாள் அவர் பார்வையை எதிர்கொள்ளச் சிரமப்பட்டபடி.
“ஏன், என்னத்துக்கு அப்பிடிச் சொன்னவர்?” உடனேயே வந்தது கேள்வி.
“அது அண்ணியோட கொஞ்சம் வெளிப்படையாக் கதைக்கினம் போல அப்பா. அதால என்னைப் பாத்து, அவாக்கு அண்ணான்ர நினைவு வந்து, என்னோட சண்டைக்கு வந்தாலும் எண்டுதான் சொன்னவர்.”
மகள் முகத்தை ஊன்றிக் கவனித்தார் திருநாவுக்கரசு. அவர் அறியாத ஏதோ ஒன்று இருப்பதாய்த் தோன்றியது. அதற்குமேல் அவளிடம் தூண்டித் துருவாதபோதும் குழந்தைவேலுவுடன் இதைப் பற்றிக் கதைக்க வேண்டுமோ என்று யோசிக்க ஆரம்பித்திருந்தார்.
*****
அன்பினி முல்லைத்தீவுக்கு வந்துபோனதை அறிந்துகொண்ட குழந்தைவேலு, உடனேயே மகனுக்கு அழைத்து விசாரித்தார்.
“நான் தானப்பா கொஞ்ச நாளைக்கு வர வேண்டாம் எண்டு சொன்னனான்.” என்று அவளுக்குச் சொன்ன காரணத்தையும் சேர்த்து அபயன் சொல்ல, மனிதருக்கு வாயடைத்துப்போனது.
“ஏனப்பு அப்பிடிச் சொன்னனீ? பாவம் எல்லா அந்தப் பிள்ளை.”
“நானும் வேற என்னப்பா செய்ய?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
“எல்லாம் என்னால. உங்களைத் தனியா வைக்கிறன் எண்டு சொல்லித்தான் இந்தக் கலியாணம் நடந்தது. அதைச் செய்யாம விட்டதாலதான் இவ்வளவும்.”
இது அவனுக்குத் தெரியாது. சின்ன அதிர்ச்சியும் கூட. “நீங்க ஏனப்பா அப்பிடி எல்லாம் சொன்னனீங்க? உங்களை எல்லாம் விட்டுட்டுத் தனியா நான் போவன் எண்டு எப்பிடி நினைச்சீங்க?” என்றான் கோபம் தொனிக்கும் குரலில்.
“அந்தப் பிள்ளை இல்லாத ஒரு வாழ்க்கைய வாழ்ந்திருப்பியா தம்பி நீ?” அவனுக்கு மாறான நிதானத்துடன் வினவினார் அவர்.
சட்டென்று அவன் அமைதியாகிப்போனான். நிச்சயம் வாழ்ந்துதான் இருப்பான். இல்லை, முடியாது என்று உயிரைத் துறக்கவா முடியும்?
ஆனால், அவளை நட்டாற்றில் விட்டதுபோல் விட்டுவிட்டு, இன்னொரு பெண்ணுக்குத் தாலி கட்டியதற்கான தண்டனையாகத்தான் காலம் முழுமைக்கும் அந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்பான். அதை அவரிடம் சொல்ல முடியாமல் நின்றான்.
அவருக்கு அவன் சொல்லும் தேவை இருக்கவில்லை போலும். “அதுதான் தம்பி, நானாப் போய்க் கேட்டு, இந்தக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்தனான். அக்கா பாவம்தான். கடைசிவரைக்கும் இனி அவாக்கு எங்கட துணை தேவைதான். ஆனாலும் நான் உங்க ரெண்டு பேருக்கும் அப்பா. அவாக்காக யோசிக்கிற அதே அளவு உனக்காகவும் யோசிக்கோணும். ஒரு பிள்ளை ரெத்தக் கண்ணீர் வடிக்கிறா எண்டுறதுக்காக மற்றப் பிள்ளையையும் காலம் முழுக்கக் கண்ணீர் வடி எண்டு விடேலாது.” என்றார் அவர்.
“ஆனா ஒண்டு தம்பி, அவேன்ர குடும்பம் அவேன்ர மகன் செய்த பிழைக்காக எந்தளவுக்கு வீட்டுக்குடுத்துப் போகேலுமோ அந்தளவுக்கு விட்டுக்குடுத்து நடக்கினம். உங்கட அக்காக்காக என்ன எல்லாம் செய்யேலுமோ அத்தனையும் செய்யினம். நடந்தது நடந்து முடிஞ்சுது எண்டு மகனைச் சேர்த்திருக்கலாம். உங்களை ஏன் தனியா வைக்கேல்ல எண்டு சண்டைக்கு வந்திருக்கலாம். தளிரைப் பாக்கிற உரிமை எங்களுக்கும் இருக்கு எண்டு பிரச்சினை செய்திருக்கலாம். இது எதையும் செய்யாம, மறைமுகமா சுபாக்கு ஆதரவாத்தான் இருக்கினம். அப்பிடியான மனுசர நீ விட்டுடக் கூடாது. காலத்துக்கும் அக்காவப் பாக்கிற பொறுப்பு உனக்கு எப்பிடி இருக்கோ, அப்பிடித்தான் இனி அந்த வீட்டுக்கும் நீ ஒரு ஆம்பிளைப் பிள்ளையா இருக்கோணும். இல்லையோ எங்களைக் கடவுளே மன்னிக்கமாட்டார்.” என்று சொல்லிவிட்டு வைத்தார் குழந்தைவேலு.
அபயனுக்குத் தன்னாலே அன்பினியின் நினைவு வந்தது. அன்று தான் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவள் மனத்தின் சிணுக்கம் முழுமையாகப் போகவில்லை என்று அவனுக்கே தெரியும். ஆனாலும் கோபப்படவில்லை. எப்போதுமே அவன் அன்பா அப்படித்தானே! அந்தக் கணமே அவளைப் பார்த்தே ஆக வேண்டும் போலொரு துடிப்பு வரவும் உடனேயே யாழ்ப்பாணத்துக்குப் புறப்பட்டான்.
*****
அன்று காலையில் எழுந்ததிலிருந்து என்னவோ அன்பினிக்குக் கணவனின் நினைவாகவே இருந்தது. ஒருமுறை ஏதோ பேசிக்கொண்டிருக்கையில் அவர்களின் அலுவலகத்து ‘கஃபே மெஷின்’ பழுதாகிவிட்டது என்று சொல்லியிருந்தான்.
அதனாலேயே தினமும் எதிரில் இருக்கிற கடைக்குப் போய் வருவார்களாம். அவர்கள் தரும் தேநீர் சுவையாக இல்லையாம் என்று அவன் சொன்னதைக் கேட்டதும் பிளாஸ்க்கின் நினைவு அவளுக்குத் தானாக வந்திருந்தது. இவனின் சுவை நரம்புகள்வேறு மிகவும் கூர்மையானவை என்று தெரியுமே!
அதை வாங்குகையில்தான் அதோடு சேர்த்து அந்த ஷேர்ட்டையும் வாங்கியிருந்தாள். அவளால் அவற்றை அவனிடம் நேரடியாகக் கொடுக்க முடியாது. என்னதான் மனம் கணவனையும் அவனின் அருகண்மையையும் ரசிக்க ஆரம்பித்திருந்தாலும், அவனோடு நெருக்கமாகப் பழகினாலும் மனத்தில் இருக்கும் ஊடல் அந்த உரிமையை வழங்க மறுத்தது.
அதில், அவனறியாமல் அவன் பைக்குள் அவற்றை அவள் வைக்க வேண்டும், அவன் கொழும்பு சென்ற பிறகு அதைப் பார்க்க வேண்டும் என்பதுதான் அவள் திட்டமாய் இருந்தது.
அவளின் அடாவடிக் கணவன் அதற்கு முதலே பார்ப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், முகம் முழுக்கப் படர்ந்த சிரிப்புடன் அந்த ஷேர்ட்டை அவன் அணிந்து வந்ததும், ஊற்றி வந்த ‘பிரெஷ் தேத்தண்ணியும்’ இன்னுமே தனிச்சுவையாய் அவள் உள்ளத்தில் நிறைந்து கிடந்தன.
இந்த வார இறுதி வருவானோ என்கிற ஏக்கத்துடன் பாடசாலைக்குச் செல்லச் சேலையை அணிந்து முடித்தபோது அவளின் அறைக்கதவு திறக்கப்பட்டது.
ஒருகணம் திடுக்கிட்டுத் திரும்பியவள் நம்ப முடியா வியப்புடன் விழிகளை விரித்தாள்.
கையோடு கதவைச் சாற்றிவிட்டு, கொண்டு வந்த பையையும் அங்கேயே போட்டுவிட்டு, “பார்றா, கண்ணாலேயே என்னைக் களவெடுக்கிறாள்!” என்றபடி வந்து, அவளை அணைத்துக்கொண்டான் அவன்.
அப்போதும் அவளால் நம்பவே முடியவில்லை. இப்போதுதானே அவனைப் பார்க்க ஏங்கினாள். அவனையே வைத்த கண் எடுக்காது பார்த்தாள்.
“என்னம்மா?” என்றான் அவள் முகம் எங்கும் முத்தமிட்டு. ஒன்றுமில்லை என்பதுபோல் தலை அசைந்தாலும் அவள் பார்வை இன்னும் அவனைவிட்டு அசைய மறுத்தது.
ஒரு கணம் அவளையே பார்த்தவன் அப்படியே அவளோடு கட்டிலில் விழுந்தான்.
“அச்சோ! என்ன செய்றீங்க?எனக்குப் பள்ளிக்கூடத்துக்கு நேரமாகுது.” சேலை கசங்குகிறதே என்கிற பதற்றத்தில் எழுந்துகொள்ள முயன்றாள். அவன் விடவில்லை. “கொஞ்ச நேரம் பேசாம இரு அன்பா!” என்றுவிட்டு அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
அந்தக் குரலின் மாயத்துக்கு அவளும் அடங்கினாள். அவன் அணைப்பில் அவன் மீதே கிடந்தாள். அவன் இதயத்தின் துடிப்பு அவளுக்குள் இசைமீட்டியது. முகத்தை மட்டும் தூக்கி அவன் முகம் பார்த்தாள்.
மெல்லிய சோர்வு முகத்தில் தெரிய, அளவான தாடி, அடர்ந்த மீசை என்று அவளைக் கவர்ந்தவன் விழிகளை மூடியிருந்தான். ஆனாலும் அவள் பார்வையை உணர்ந்த சின்ன சிரிப்புடன், “என்ன?” என்றான்.
ஒன்றும் சொல்லாமல் அவன் நெற்றி முடிகளைக் கோதிவிட்டாள். அப்படியே அவன் கன்னத்துத் தாடியையும் மிக மிக மென்மையாய் வருடிவிட்டாள்.
அவள் விரல்களின் மாயத்தில் உடலும் உள்ளமும் மயங்க, “கைல ஏதாவது மயக்க மருந்தைப் பூசி வச்சிருக்கிறியா அன்பா?” என்று கிசுகிசுத்தான் அபயன்.
சிறு முறுவலோடு அவன் முகத்தையே ஒருகணம் பார்த்துவிட்டு, “அந்தக் கலியாணம் நடந்திருந்தா இதையெல்லாம் அங்க கேட்டு இருப்பீங்க என்ன?” என்றாள் வருத்தம் இழையோடிய குரலில்.
இனிமையாய் மீட்டிக்கொண்டிருந்த இசை ஒன்று அறுந்த உணர்வுடன் படக்கென்று விழிகளைத் திறந்தான் அபயன். அவளும் இதைக் கேட்க எண்ணியிருக்கவில்லை. கேட்டுவிட்ட அதிர்ச்சியில் அவனையே பார்க்க, விருட்டென்று அவளை அருகில் தள்ளிவிட்டு எழுந்து வெளியே நடந்தான்.
அன்பினிக்கு நாசி சிவந்து கண்கள் கலங்கின. அவனிடம் இதற்கு என்ன விளக்கம் சொல்வது என்று தெரியவேயில்லை. இருந்திருந்து பார்த்துவிட்டு மெதுவாக வந்து அறையின் வெளியே பார்த்தாள். அவனைக் காணவில்லை. கார் நின்றது.
முடிந்தவரையில் நேரம் கடத்திப் பார்த்தவள் அதற்குமேல் முடியாது எனும் நிலையில் பாடசாலைக்குப் புறப்பட்டாள்.
உள்ளத்தில் மட்டும் ஒரு பரிதவிப்பு. ஏன் அப்படிக் கேட்டோம் என்று தன்னையே திரும்ப திரும்ப நொந்துகொண்டாள். அன்று முழுக்க அவளால் மனம் ஒருமித்துப் பாடம் எடுக்க முடியவில்லை.
ஒரு வழியாகப் பாடசாலை முடிந்து அவள் திரும்பி வந்தபோது அவன் கார் அங்கே இல்லை. ஏதோ அவசரமாம் என்று புறப்பட்டுவிட்டானாம் என்று வீட்டுக்கார அம்மா சொன்னார்.
அடுத்த பத்து நாள்களும் பஞ்சத்தில் அடிபட்டவள் போலானாள் அன்பினி. தினமும் காலையும் மாலையும் அழைக்கிறவன் அழைக்கவும் இல்லை.
இப்போது அவள் நெஞ்சே அவளைக் குத்தியது. அவன் செய்தது எல்லாம் அவளுக்கு ஏற்கனவே தெரியும். தெரிந்துதான் திருமணத்துக்குச் சம்மதித்தாள். நடந்தவை பிடிக்கவில்லை என்றால் சம்மதித்திருக்கக் கூடாது.
அதை விட்டுவிட்டு, திருமணத்தையும் முடித்து, அவனும் நடந்ததை எண்ணி வருந்துகிறான் என்று தெரிந்தும் அப்படி ஒரு கேள்வியைக் கேட்டது தவறாகவே பட்டது. அதுவும் அவளைப் பார்ப்பதற்காகவே கொழும்பிலிருந்து இரவிரவாகப் பயணித்து வந்தவனிடம் என்ன கேட்டுவிட்டாள்?
இனி அவனாக அவளைத் தேடி வருவான் என்பதே சந்தேகம்தான். அப்படித் தோன்றியதும் அதற்குமேல் அவளால் அங்கே இருக்க முடியவில்லை. மூன்று நாள்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு கொழும்புக்குப் புறப்பட்டாள்.

