அத்தியாயம் 46
முதுகுக்கு ஒரு தலையணையைக் கொடுத்து அபயன் கட்டிலில் சாய்ந்திருந்தான். அவன் அணைப்பில் அடங்கியிருந்த அன்பினி, களைப்புடன் விழிகளை மூடியிருந்தாள்.
சுகமான அயர்ச்சி இருவரையும் ஆக்கிரமித்திருந்தது. இருவரின் உள்ளங்களும் நிறைந்து தளும்பிக்கொண்டிருந்தன. எதையும் பேசவோ சொல்லவோ வேண்டும் போலில்லை. ஒருவர் மற்றவரின் அணைப்பிலேயே சுகம் கண்டுகொண்டிருந்தனர்.
அபயன் குனிந்து அவள் முகம் பார்த்தான். அவன் அசைவில் அன்பினியும் இலேசாகத் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். உதட்டில் அரும்பிய குறும்புச் சிரிப்புடன் கண்ணைச் சிமிட்டினான் அபயன்.
அவ்வளவு நேரமாக இல்லாத வெட்கம் அப்போது வந்துவிட, அவன் கையில் ஒரு அடியைப் போட்டுவிட்டு அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் அன்பினி.
அவன் சந்தோசமாக நகைத்தபடி அவளை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.
அவர்களைச் சுற்றி இருப்பது கனத்த சூழ்நிலை. இன்னும் எதுவும் சரியாகவே இல்லை. இனியும் அவன் கொழும்பிலும் அவள் யாழ்ப்பாணத்திலும் என்றுதான் அவர்களின் நாள்கள் நகரப்போகின்றன.
இத்தனைக்கு மத்தியிலும் நடந்தேறிய தாம்பத்யம், ஒருவர் மீதான மற்றவரின் பிரியத்தை மிக அழகாய்ச் சொல்லி, ஒருவரை மற்றவருக்கு எவ்வளவுக்குப் பிடிக்கும் என்றும் காட்டிக்கொடுத்திருந்தது. உள்ளத்தாலும் உணர்வுகளாலும் இன்னுமே நெருங்கியிருந்தனர்.
அந்த உணர்வு தந்த தித்திப்புடன் அவள் முகம் நிமிர்த்தி உதட்டில் ஆழ்ந்து முத்தமிட்டுவிட்டு, அவள் அணிந்திருந்த செயினுக்கும் முத்தமிட்டான் அவன். மீண்டும் மீண்டும் அது நடந்துகொண்டே இருந்தது.
அவனுக்கு அவள் தரும் இந்த மயக்கத்திலிருந்து மீளவே விருப்பமில்லை. இத்தனை நாள்களாய் ஓடிய ஓட்டத்துக்கெல்லாம் ஓய்வு கிடைத்ததுபோலொரு உணர்வு.
அவள் நிலையும் அதேதான். அவளை அவன் ஏதேதோ செய்தான். சுக மயக்கத்தில் ஆழ்த்தினான். அவன் இழுவைக்கு வளைந்துகொடுக்கும் பதுமையாக்கினான். அவளால் தெளிவாய்ச் சிந்திக்க முடியவில்லை. அவன் மீதான கிறக்கத்திலேயே பிடித்து வைத்திருந்தான். இப்போதும் அவன் நெருக்கத்துக்கு இசைகிறவளாக அவனிடம் தன்னைக் கொடுத்துவிட்டு அவன் பிடறிக் கேசம் கோதினாள்.
பொழுது ஓடி மறைந்திருந்தது. வெளியே தலைகாட்ட வெட்கினாள் அன்பினி. அம்மாவின் முகத்தில் எப்படி விழிப்பது என்று யோசித்தாள். அவளையே பார்த்திருந்தவனின் உதட்டில் விசமச் சிரிப்பு. “நானும் வரவா?” என்றான் வேண்டுமென்று. “பெருசா ஒண்டும் நடக்கேல்ல எண்டு நானே மாமிட்டச் சொல்லுறன்!”
“எப்பிடி? கொழும்புக்கு நான் வந்ததைச் சொல்லாதீங்கோ எண்டு சொன்னதைக் கேட்டுச் சொல்லாம இருந்தீங்களே, அப்பிடியா? இதில அவருக்குப் பெருசா ஒண்டும் நடக்கேல்லையாம்!” என்று அவன் கழற்றிப் போட்டிருந்த அவனுடைய டீ சேர்ட்டையே எடுத்து, அவனுக்கு அடித்துவிட்டுப் போனாள்.
சிரித்தபடி புரண்டு படுத்தவனுக்கு உள்ளத்தின் மயக்கம் தீருவதாய் இல்லை. யாழ்ப்பாணத்தில் வைத்து அவள் கேட்டது அவனை மிக ஆழமாய்க் காயப்படுத்தியிருந்தது. கூடவே அவள் அவனுக்குக் கைப்பேசியில் அழைக்காமல் இருந்ததற்குச் சொன்ன காரணம், அவனைச் சில்லுச் சில்லாய் நொறுக்கித்தான் போட்டது.
என்னால் உன்னைப் பழையபடி நம்ப முடியவில்லை என்று கண்ணீருடன் சொன்னவளை தனிமை கிடைத்துவிட்டது என்பதற்காக எப்படி நெருங்குவான்?
அதுவே, கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வரையிலான பயணத்தில் அவனருகில் இருப்பதே போதும் என்பதுபோல் அமைதியாய் வந்தவள் அவன் காயங்களை ஆற்றியிருந்தாள்.
அவன் மீது நம்பிக்கையும் பிரியமும் இல்லாமல் பெற்றவர்களுக்கே சொல்லாமல் கொழும்புவரை தேடி வருவாளா என்ன?
எல்லாவற்றையும் விட அவளின் இந்த அறை அவனுக்குள் மிகப்பெரிய மாயத்தைச் செய்திருந்தது. உள்ளே வந்ததும் இடைப்பட்ட நாள்களில் நடந்தவை எல்லாம் மறக்க, அன்றைய அந்த ஒரு நாள் மட்டுமே அவனுள் மையம் கொண்டிருந்ததில் மையலோடு அவளை அள்ளிக்கொண்டான்.
அவளின் வெட்கங்களும் அதை அவன் தாண்டிய விதங்களும் அதன் பிறகான அவளின் இசைவுகளும் மனக்கண்ணில் வந்துபோயின. தலையணையை இறுக்கி அணைத்தபடி புரண்டவன் கண்டது, குளித்துவிட்டுப் புது மலராய் வாசம் வீசியபடி வந்தவளைத்தான்.
விழிகளால் அவளையே வருடினான்.
அவன் பார்வை தந்த தடுமாற்றத்துடன் அலமாரியைக் கிண்டியவளைப் பின்னிருந்து அணைத்தான் அபயன். அவள் எதிர்பார்த்ததுதான். மனம் நிறைய தலை திருப்பி அவனைப் பார்த்தாள்.
அவள் முகத்தையே பார்த்தவன் என்ன உணர்ந்தானோ, “என்னடா?” என்றபடி அவள் விழிகள் இரண்டிலும் உதடுகளைப் பதித்தெடுத்தான்.
“நீங்க வெளிக்கிடோணும்தானே?”
“ம்!”
“உடுப்பு வேண்டாமா?”
அவன் அணிந்து வந்தவற்றைத் திரும்பிப் பார்த்தான். அவை தரையில் கிடந்தன.
“என்னட்ட வேற இருக்கு.” அவனைப் பாராமல் சொல்லியபடி எடுத்துக்கொடுத்தாள்.
“எப்ப இதெல்லாம் எடுத்தனி?” வாங்கிப் பார்த்தபடி வினவியவனிடம் மெல்லிய வியப்பு.
“போன உங்கட பிறந்தநாளுக்கு.”
இன்பமாய் அதிர்ந்தவன் அவளை முறைத்தான். “இதையெல்லாம் வாங்கி வச்சிட்டாடி என்னைப் பைத்தியக்காரனாக்கினனி?” என்றதும் அவளுக்குச் சிரிப்பு வந்தது.
“பேந்து(பின்ன), உங்களை அவ்வளவு ஈஸியா மன்னிக்கோணுமோ? இதுக்க ‘பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லு அன்பா’வாம்.” என்று, அன்று அவன் சொன்னதைப் போலவே அவள் கண்களை உருட்டிப் பிரட்டிச் சொல்லிக் காட்டவும் அவளை முறைக்க முடியாமல் சத்தமாகச் சிரித்தான் அவன்.
அவன் தயாராகி வந்தபோது அன்னை ஊற்றித் தந்த தேநீரும் பலகாரமும் கொண்டுவந்தாள் அன்பினி.
“பிரெஷ்ஷா?” என்றான் கண்கள் சிரிப்பில் பளபளக்க.
“இல்ல, கழுவாத பிளாஸ்க்ல இருந்தது.”
“இப்ப நீ எதத் தந்தாலும் குடிக்கிற நிலமைலதான் இருக்கிறன்.” என்றவன் அவளிடமிருந்து சந்தோசமாகச் சில பல அடிகளை வாங்கிக்கொண்டான்.
அவளை இழுத்துத் தன் மடியில் அமர்த்திக்கொண்டு அந்தச் செயினில் முத்தமிட்டான். அவளுக்கும் அந்தச் செயினுக்குமான பந்தத்தை விடவும் அவனுக்கும் அந்தச் செயினுக்குமான பந்தம் மிக நெருக்கமாய் இருப்பது போலிருக்க, “இதப் போட்டதும் காணும், நீங்க என்னைப் படுத்திற பாடும் காணும்!” என்றாள் பொய் முறைப்புடன்.
உதட்டோரம் மெல்லிய முறுவல் அரும்பினாலும், “உனக்குத் தெரியா அன்பா. இத எங்கட வீட்டு வாசலில கண்ட நேரம் எனக்கு என்னவோ நீயே அந்த இடத்தில அநாதரவாக் கிடந்த மாதிரி இருந்தது. உன்ன நம்பி வந்தவளை தெருவுல விட்டுட்டியேடா எண்டு என்னால நித்திரையே கொல்லேலாமப் போச்சு. அக்காவுக்காக ஆரோ ஒருத்தியக் கட்ட ஓம் எண்டு சொல்லி, உன்னையும் இப்பிடி விட்டு, ஆருக்கடா நீ உண்மையா இருக்கப் போறாய் எண்டு அந்த நேரம் எனக்கு நெஞ்சு வெடிக்காம இருந்ததே பெரிய விசயம். அந்தக் கலியாணம் நிண்டதும் அவ்வளவு சந்தோசம்.” என்றான் அன்றைய நினைவுகளை மீட்டியபடி.
“சொறியடி அன்பா!” என்றான் உண்மையான தவிப்புடன்.
அவள் உள்ளம் கரைந்தே போயிற்று. “பரவாயில்ல விடுங்க. அதெல்லாம் முடிஞ்சு போச்சு. இனிக் காலம் முழுக்க இந்த அபாயமானவன் எனக்குத்தான்.” அவன் கண்கள் இரண்டிலும் முத்தமிட்டுச் சொன்னவள் உதட்டில் சின்னதாய்ச் சிரிப்பு.
“நான் அபாயமானவனாடி?” மீசைக்குள் சிரிப்பை மறைத்தபடி முறைத்தான் அவன்.
“அபாயம் மட்டுமில்ல ஆபத்தானவனும்.”
“அந்தளவுக்கு உன்ன என்ன செய்தனான்? நல்ல பிள்ளையாத்தானே இருக்கிறன்.” அவன் கைகள் எல்லை தாண்ட ஆரம்பித்தன. அன்பினியின் முகம் சிவந்தது. “அபய்!” அவள் எழுந்துகொள்ள முயல அவன் விடவில்லை.
கடைசியில் அவனையே இறுக்கிக் கட்டிக்கொண்டு அவனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முயன்றாள் அவள். சந்தோசமாய்ச் சிரித்தபடி அவளோடு சேர்ந்து கட்டிலில் விழுந்தான் அபயன்.
என்னவோ அவளுக்கு அவனை விட்டு விலக மனமேயில்லை. அப்படியே அவன் மார்பில் தலை சாய்த்துப் படுத்துக்கொண்டாள். அவனும் தன் சேட்டைகளை விட்டுவிட்டு அவளைத் தன் அணைப்பில் வைத்திருந்தபடி அவள் தலையை வருடிக்கொடுத்தான்.
உண்மையில் இன்றைய நாள் மனத்தளவில் அவர்களுக்குத் தரும் இந்த நெருக்கத்தை இதுவரையில் எந்த ஒரு நாளும் தந்ததேயில்லை. இன்றுதான் திருமணம் நடந்து, அனைத்தும் அரங்கேறிய உணர்வு.
“நேரமாச்சு அன்பா.” இதற்குமேல் தாமதிக்க முடியாது எனும் நிலையில் மனமே இல்லாமல் சொன்னான்.
அவளுக்கு நெஞ்சடைக்கும் உணர்வு. காட்டிக்கொள்ளாமல் மெல்ல எழுந்து, அவர்கள் அருந்தி முடித்திருந்த தேநீர்க் கோப்பைகளை எடுத்துக்கொண்டு நடந்தாள்.
அங்கே சமையலறையில் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டிருந்த இந்துமதி, அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “பால்ப் புட்டுச் செய்றன் பிள்ளை. தம்பியச் சாப்பிடச் சொல்லுங்கோ.” என்று சொன்னார்.
“இல்லை அம்மா. அவர் போப்போறாராம்.”
மகளின் மெல்லிய முகச் சிவப்பும், தன் பார்வையை அவள் தவிர்க்கும் விதமும் பல செய்திகளைச் சொல்ல, தானும் சத்தமில்லாமல் சந்தோசப்பட்டுக்கொண்டார் இந்துமதி. இனியாவது மகள் வாழ்க்கை எந்தக் குறையுமில்லாது தழைத்துவிட வேண்டும் என்று அவர் உள்ளம் வேண்டிற்று.
அவள் அறைக்குள் மீண்டும் வந்தபோது, கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தவன் நிமிர்ந்து, “அக்கா ரெண்டு தரம் எடுத்திருக்கிறா.” என்று தகவல் சொன்னான். “நீ நாளைக்குப் பின்னேரம்தானே வெளிக்கிடுறாய்?”
அவள் ஆம் என்று தலையசைத்தாள். அவள் செலவுக்குப் பணம் எடுத்துக் கொடுத்துவிட்டு, “எனக்கு வரேலுமோ தெரியா அன்பா. பஸ்ஸில போயிடுவாய் தானே?” என்றவனுக்குத் தானும் அங்கு நிற்கையில் அவளை அப்படித் தனியாகப் போ என்று சொல்வது கஷ்டமாய் இருந்தது.
“போறதுக்கு என்ன? நீங்க என்னைப் பற்றி யோசிக்காமப் போயிட்டு வாங்க.” என்று புன்னகைத்தாள் அவள்.
இப்படி, அவன் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு, என்ன செய்தாலும் அனுசரித்துப் போகிறவளை இப்படிப் பிரிந்து வாழும் நிலையை அறவே வெறுத்தான் அபயன்.
அவனுக்கே இப்படி என்றால் அவள் நிலை? ஆனாலும் சின்னதாகவேனும் முக வாட்டத்தைக் காட்டவில்லை.
அவள் முகம் நிமிர்த்தி உச்சியில் முத்தமிட்டு, “கோவமா, அங்க வராத எண்டு சொல்லிப்போட்டு இங்க வச்சு இப்பிடி…” என்றவனை மேலே பேச விடாது, தன் விரல்களால் அவன் உதட்டில் விரல்களை வைத்துத் தடுத்தாள் அன்பினி.
“ரெண்டு பேரின்ர முழு விருப்பத்தோடயும் நடந்த ஒண்டு. இண்டைக்குத்தான் இவ்வளவு நாளும் கிடைக்காத ஒரு நிறைவு, திருப்தி, நம்பிக்கை எல்லாம் எனக்குக் கிடைச்சிருக்கு அபய். இன்னுமின்னும் நீங்க என்னட்ட நெருங்கி வந்திட்ட மாதிரி ஒரு ஃபீல். அதை எப்பிடியாவும் கதைக்காதீங்க, ப்ளீஸ்!” என்றாள் கெஞ்சலாக.
அவன் உதட்டில் நிறைவான ஒரு முறுவல். “எனக்கும் அப்பிடித்தான் அன்பா. மனம் முழுக்க நிறைஞ்சு கிடக்கு. என்னவோ இனி என்ன வந்தாலும் சமாளிக்கலாம் மாதிரி.” என்று சொன்னவன் அதன் பிறகு தாமதிக்கவில்லை. புறப்பட்டிருந்தான்.

