அத்தியாயம் 47
“என்னடா திடீர் எண்டு வந்து நிக்கிறாய்?” அவனைக் கண்டதும் ஆச்சரியமாய் வினவினாள் சுபாங்கி.
ஒரு கணம் வேறு ஏதாவது சொல்வோமா என்று யோசித்தாலும் அபயனுக்கு மறைக்கப் பிடிக்கவில்லை. அப்படி மறைத்தால் தன் மனைவியோடு இருந்த பொழுதினைத் தானே அசிங்கப்படுத்துவது போலாகிவிடும் என்று விளங்க, “அன்பா கொழும்புக்கு வந்தவள். அதான் அவளைக் கொண்டுவந்து விட்டுட்டு வாறன்.” என்றான்.
“ஓ! அதுக்கு ஏன் நான் கோல் பண்ணின நேரம் நீ எடுக்கேல்ல?”
காரணத்தைச் சொல்ல முடியாத் தடுமாற்றத்துடன் அவன் நிற்க, “மனுசியக் கண்டதும் அக்காவையும் அக்கான்ர பிள்ளையையும் மறந்தாச்சு என்னடா? இல்ல, அவள் சொன்னவளோ எடுக்கக் கூடாது எண்டு.” என்று சினந்தாள் தமக்கை.
சுள் என்று கோபம் வந்தது அவனுக்கு. ஆனாலும் அடக்கி, “போன் சைலன்ட்ல இருந்தது அக்கா. அதுல நான் கவனிக்கேல்ல.” என்றான் சுருக்கமாக.
“போன் சைலண்ட்ல இருந்தது, ஓப்ல இருந்தது எல்லாம் போதும் போதும் எண்டுற அளவுக்கு நான் கேட்டுட்டனடா. புதுசா நீயும் சொல்லாத!” என்றதும் அவனுக்கு முகம் கறுத்தது.
யாரை யாருடன் ஒப்பிடுகிறாள்? கேட்டுச் சண்டை பிடிக்க விருப்பமில்லாமல் வாயை இறுக்கி மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
சுபாங்கிக்கு பொறுக்க முடியவில்லை. தளிர் மாமனோடு தினமும் கதைக்கும் நேரம் அது. அவளுக்காகத்தான் அழைத்திருந்தாள். கடைசியில் சிணுங்கிய அவளைச் சமாளிக்க, அவளோடு அடுத்த தெருவில் இருக்கும் நண்பியின் வீட்டுக்குச் சென்றிருந்தார் பரமேஸ்வரி.
இங்கே அவர்கள் அந்தளவுக்குத் தளிரோடு போராட, அவனானால் அவள் எடுப்பாள் என்பதை மறந்து மனைவியோடு இருந்திருக்கிறான்.
“நீ அவளைக் கட்டின நேரமே இதையெல்லாம் நான் எதிர்பாத்திருக்கோணும் அபய். என்ன இருந்தாலும் என்ர தம்பி என்னை விட்டாலும் என்ர பிள்ளையை விடமாட்டான் எண்டு நினைச்சன். கடைசில…” என்றவள், “பெத்த அப்பனே அவளைப் பற்றி யோசிக்கேல்ல. இதுல உன்னில கோவப்பட எனக்கு என்ன உரிமை இருக்கு?” என்று விரக்தியுடன் சொல்லிவிட்டு உள்ளே நடக்க, ஒரு கணம் அப்படியே அமர்ந்துவிட்டான் அபயன்.
அடுத்த நொடியே வேகமாய் எழுந்து சென்று அவளைத் தடுத்து நிறுத்தினான்.
“நீங்க கதைக்கிறது உங்களுக்கே நியாயமா இருக்கா அக்கா? அப்போத அவனோட என்னை ஒப்பிடுறீங்க. இப்ப இப்பிடிச் சொல்லுறீங்க. அதென்ன உங்கள விட்டாலும்? எப்ப அப்பிடி விட்டனான்? அவளுக்கும் எனக்கும் சின்ன சண்டை. அதால என்னைச் சமாதானம் செய்யத் தனியாக் கொழும்புக்கு வந்தவள். அவளைத் தனியாத் திருப்பி அனுப்ப விருப்பமில்லாமக் கூட்டிக்கொண்டு வந்தனான். இதில ஃபோன் உண்மையாவே சைலண்ட்லதான் இருந்தது. அதிலதான் நான் கவனிக்கேல்ல. ஆனாலும் சொறி. தளிர் தேடுவா எண்டுற நினைவு எனக்கு இருந்திருக்கோணும். அதுக்காக என்னையும் அவளையும் இப்பிடி எல்லாம் கதைப்பீங்களா?” என்றான் அடக்கப்பட்ட சினத்துடன்.
“ஓ! உனக்கு அவளச் சொன்னதும் கோவம் வருது.”
மூச்சை இழுத்துவிட்டான் அவன். “அவள் என்ர மனுசி. நியாயம் இல்லாமக் குறை சொல்லக் கூடாதுதானே! அவளை எப்ப நீங்க என்ர மனுசியா மட்டும் பாக்கப் போறீங்க?” கோபத்தை எல்லாம் விட்டுவிட்டுத் தன்மையாகவே வினவினான்.
அவளுக்கு உள்ளே வலித்தது. அவளோடு கூடப்பிறந்தவன் தன் மனைவிக்காக அவளோடு மல்லுக்கு நிற்கிறான். ஆனால், அவளைக் கட்டியவன்? “இனி உன்ர மனுசியப் பற்றி நான் வாயே திறக்கேல்ல, விடு!” என்றுவிட்டுப் போக முயன்றவளை அபயன் விடவில்லை.
இழுத்துவந்து இருக்கையில் இருத்தித் தானும் அமர்ந்து, “அன்பா என்னக்கா பிழை செய்தவள்? அவளில ஏன் உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு?” என்று தன்மையாக வினவினான்.
“அவளைப் பற்றி என்னட்டக் கதைக்காத அபய்!” உடனேயே அவள் முகம் மாறிப்போனது.
“எப்பிடி அக்கா கதைக்காம இருக்கிறது? கட்டாயம் கதைக்கோணும். அவள் என்ர மனுசி. நீங்களும் அவளும் காலத்துக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கோணும் எண்டு நான் ஆசைப்படுறன்.”
“அது நடக்காது!”
“ஏன் நடக்காது?”
“அவள் அவன்ர தங்கச்சி.”
“அது அவளின்ர பிழையா? நீங்களும்தான் அவன்ர மனுசி.”
“டேய்! தேவை இல்லாமக் கதைச்சியோ அறைஞ்சு விட்டுடுவன்!” என்று கையை ஓங்கினாள் அவள்.
அவன் அசையவில்லை. “நீங்க என்னை அடிச்சாலும் அதுதான் உண்மை. தளிரும் அவன்ர மகள்தான்.” என்று விடாமல் சொன்னான்.
“வாய மூடு அபய்! எனக்கு எரிச்சலைக் கிளப்பாத. தளிர் என்ர பிள்ளை மட்டும்தான்.” என்றாள் அழுத்தம் திருத்தமாய்.
“அது உங்கட நினைப்பு. உண்மை அது இல்ல.”
“என்னடா உண்மை அது இல்ல? சொல்லு அவள் என்ர பிள்ளை இல்லையா? சொல்லு!” அவளுக்குக் கோபத்தில் குரல் நடுங்க ஆரம்பித்தது.
“உங்கட பிள்ளை மட்டும் இல்லை.”
அவள் உதட்டில் ஆத்திரச் சிரிப்பொன்று வந்து போனது. “இதுதான்டா நீ. நீ மாறிட்டாய் எண்டு சொன்னா இல்லை எண்டு சொல்லுவியே, இப்ப பாத்தியா அப்பிடியே அந்தப் பக்கம் சாஞ்சிட்டாய்.”
“சாஞ்சு அப்பிடி என்ன செய்திட்டன்?” உள்ளே வலித்தாலும் அவளைப் போல் நிதானத்தை இழக்காமல் வினவினான்.
“இன்னும் என்னடா செய்யோணும். விட்டா நீயே தளிரத் தூக்கி அவனிட்டக் குடுப்ப போல.”
“நான் இல்ல உங்களச் சுத்தி இருக்கிற ஆருமே தளிரை அவனிட்டக் குடுக்க மாட்டம். ஆனா, அவன் சட்டப்படி போனா அது கட்டாயம் நடக்கும். நீங்க அதுக்கும் தயாரா இருக்கோணும். அப்பிடி அவன் போகாம இருக்கிறதுக்கு அன்பாவும் மாமாவும்தான் காரணம். இதையும் விளங்கிக்கொள்ளுங்க. அதை ஏன் அவே செய்யினம் எண்டும் யோசிங்க.” என்றவனை நம்ப முடியாமல் வெறித்தாள் தமக்கை.
“எப்பிடியடா இப்பிடி எல்லாம் கதைக்கிறாய்? எப்பிடி மனம் வந்தது உனக்கு? அவள் உனக்கு மனுசியா இருக்கலாம். அதுக்காக நான் உன்ர அக்கா எண்டுறதையுமா மறக்க வச்சிட்டாள்.” என்றதும் விழிகளை இறுக்கி மூடித் திறந்தான் அபயன்.
அப்போதுதான் வீட்டுக்குள் வந்தார் குழந்தைவேலு. அவருக்கு அன்று முழுக்க நிறைய அலைச்சல். கடையில் வேறு வேலை செய்கிறவர்கள் சிலபல குளறுபடிகளைச் செய்திருந்தனர்.
எல்லாவற்றையும் சமாளித்து முடிக்கையில் தலை விண் விண் என்று வலிக்க ஆரம்பித்திருந்தது. இங்கும் வீட்டுக்குள் வகையிலேயே மகளின் குரல் உயர்ந்து ஒலிக்கவும் ஒரு சலிப்பு.
அதற்குத் தகுந்தாற்போல் அவளும் அவரைக் கண்டதும் நேராக அவர் முன்னால் வந்து நின்றாள்.
“இவன்ர கதையக் கேட்டனீங்களாப்பா? அவன் சட்டப்படி கேட்டாத் தளிர நான் குடுக்கோணுமாம். அந்தாள் இவனுக்கு மாமாவாம். எப்பிடி மாறிட்டான் பாத்தீங்களா?” என்றதும், “போதும் பிள்ளை நிப்பாட்டு!” என்று சீறினார் குழந்தைவேலு.
அதிர்ந்துபோனாள் சுபாங்கி. இதுவரையில் இப்படி ஒரு குரலை அவர் அவளிடம் பயன்படுத்தியதே இல்லை.
“இதுதான் கடைசித்தரம் நீ அவரை மரியாதை இல்லாமக் கதைக்கிறது. அவருக்கு எத்தின வயசு உனக்கு எத்தின வயசு? என்னைவிட வயசு கூடின மனுசன். அவர் அவனுக்கு மாமாதான். மாமாவை மாமா எண்டு சொல்லாம வேற எப்பிடிச் சொல்லுறது?”
சுபாங்கிக்குக் பேச்சே வரவில்லை. தந்தையின் கோபம் அந்தளவில் அதிர வைத்திருந்தது. என்னவோ எல்லோரும் அந்தப் பக்கம் சரிந்துவிட்டது போலிருக்க, அவரை வெறித்தபடி நின்றாள்.
அபயனுக்குத் தமக்கையை அப்படிப் பார்க்க முடியவில்லை. இங்கே மாறவேண்டியவள் அவள்தான் என்று புரிந்தாலும் ஒரு அளவுக்குமேல் அவளிடம் கடுமையைக் காட்ட முடியவில்லை. “விடுங்கப்பா!” என்றான் தகப்பனிடம்.
அவர் அதைக் கருத்தில் கொள்ளவில்லை. என்றோ ஒருநாள் உடையக் காத்திருந்த பொறுமை இன்று வெடித்திருந்தது.
“உனக்கு நடந்தது பெரிய துரோகம்தான். அதுக்காகச் சுத்தி இருக்கிற எல்லாரையும் மோசமா நடத்தக் கூடாது. இனிக் காணும் அழுதது, ஆத்திரப்பட்டது, கத்தினது எல்லாம். மெல்ல மெல்ல வெளில வரப் பாருங்கோ. உங்களை விட்டுட்டுப் போன கழிசடைக்காக உங்களோட இருக்கிற மனுசரை நோகடிக்கிறேல்ல. நீங்களும் நிம்மதியா வாழ்ந்து எங்களையும் நிம்மதியா இருக்க விடோணும் பிள்ளை!” என்றார் பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில்.
அவள் விழிகள் வேதனையில் அகன்றன. அவர்களின் நிம்மதியை அவள் பறிக்கிறாளா? நெஞ்சு வெடித்துக்கொண்டு அழுகை வர, விருட்டென்று சென்று அறைக்குள் புகுந்துகொண்டாள்.
தளிர் வந்த பிறகு, அவளோடு வெளியே சென்றுவிட்டு அபயன் திரும்பி வந்தபோதும் அவள் வெளியில் வந்திருக்கவில்லை. எட்டி அவளின் அறையைப் பார்த்தான். கட்டிலில் படுத்திருந்தாள்.
வாங்கி வந்திருந்த அவளுக்கு விருப்பமான கொத்துரொட்டிப் பார்சலைத் தளிர் கையில் கொடுத்து, “அம்மாவைச் சாப்பிடச் சொல்லுங்கோ. வேண்டாம் எண்டு சொன்னாலும் விடக் கூடாது. நீங்க வேண்டாம் எண்டு சொன்னாலும் அம்மா விடமாட்டா எல்லா.” என்று சொன்னான்.
வெகு சிரத்தையாய் அவன் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்தச் சின்ன வண்டும் வெகு வேகமாய்த் தலையாட்டினாள்.
அரும்பிய முறுவலோடு, “அச்சாக் குட்டி எங்கட செல்லம். அவாக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு. அப்பிடியே மாமா பாவம். அவரோட கோவிக்க வேண்டாமாம், மாமா அழுதுகொண்டு இருக்கிறாராம் எண்டும் சொல்லோணும் சரியா?” என்றதும் அவன் எங்கே அழுகிறான் என்று கூர்ந்து பார்த்தாள் தளிர்.
வேகமாய் உமிழ் நீரைத் தொட்டுக் கண்களுக்குக் கீழே கோடிழுத்தான் அவன். செப்பு இதழ்களில் சிரிப்பு அரும்ப, “நானும் அழவா?” என்று அவன் காதுக்குள் வந்து ரகசியமாகக் கேட்டாள் அவள்.
அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “உங்கட அம்மா என்னோடதானே சண்டை. அதால நான் மட்டும்தான் அழோணும். ஆனா நீங்க மாமா சொன்னதை எல்லாம் மறக்காமச் சொல்லோணும், சரியா?” என்று சொல்லி, அவளை உள்ளே அனுப்பிவிட்டு விறாந்தையிலேயே அமர்ந்துகொண்டான்.
என்னதான் தமக்கையின் பேச்சுகள் நியாயமில்லை என்று தெரிந்தாலும், அவை அவனைக் காயப்படுத்தியிருந்தாலும் அவளை அப்படியே விட அவனால் முடியவில்லை. எப்படியாவது அவள் முகத்தில் சிரிப்பை வரவழைத்துவிடவே ஆசைப்பட்டான்.
கொஞ்ச நேரம் தமக்கை முறுக்குவதும், தளிர் விடாமல் அவளைச் சாப்பிட வைப்பதில் முனைப்பாக இருப்பதும் கேட்டது.
கொஞ்ச நேரத்தில், “உங்கட மாமா அழுறனாமோ? அவன் சரியான கள்ளன்! கதைக்கிறதை எல்லாம் கதைச்சுப்போட்டுக் கொத்துரொட்டி வாங்கி வந்தா நான் சமாதானம் ஆகிடுவனா?” என்று உள்ளே இருந்து சத்தமாகச் சொன்னாள் அவள்.
“ஓகே ஓகே விளங்கிட்டுது!” என்றுவிட்டு எழுந்துபோன அபயனின் முகத்திலிருந்த சிரிப்பு மறையவில்லை.
இதையெல்லாம் மனம் கனியக் கவனித்துக்கொண்டிருந்த பரமேஸ்வரி மெல்ல மகளின் அறைக்குச் சென்றார்.
“நீங்க இப்ப என்னம்மா சொல்லப் போறீங்க?” அவர் அதற்குத்தான் வந்திருக்கிறார் என்று தெரிந்து, மெல்லிய சினம் தெறிக்க வினவினாள் சுபா.
“உங்களுக்குத் தெரியாத என்னத்தப் பிள்ளை நான் சொல்லப் போறன்?” என்றுவிட்டு, “தளிருக்கு ஏதாவது கெட்டது நினைப்பீங்களாம்மா நீங்க?” என்று கேட்டார் அவர்.
“என்னம்மா கதைக்கிறீங்க? நான் வாழுறதே அவளுக்காகத்தான்.”
“அப்பிடித்தானம்மா நாங்களும். உங்களுக்கு எப்பிடித் தளிரோ அப்பிடித்தான் எங்களுக்கு நீங்க. நீங்க நல்லாருக்கோணும் எண்டுதான் நாங்க ஆசைப்படுறோம். அது விளங்கேல்லையா உங்களுக்கு?”
“எனக்கு அப்பிடித் தெரியேல்ல.” பட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னாள் அவள்.
“ஏன் எண்டால் நீங்க இன்னுமே உங்களுக்கு நடந்த துரோகத்திலேயே நிக்கிறீங்க. அது உங்கட மனதையும் உடம்பையும் கெடுக்கிறது உங்களுக்குத் தெரியேல்ல. கொஞ்சம் வெளில வந்து ஒவ்வொரு மனுசரைப் பற்றியும் தனித்தனியா யோசிச்சு பாருங்கோ. அவே உங்களுக்கு என்ன நல்லது செய்தவே, என்ன கெட்டது செய்தவே எண்டு முடிஞ்சா ஒரு பேப்பர்ல எழுதுங்கோ. அப்ப நிறைய விசயம் விளங்கும்.” என்றுவிட்டு அவள் சாப்பிட்டுவிட்டு வைத்த உணவுப் பார்சல் பையை எடுத்துக்கொண்டு நடந்தார்.

